Monday, August 23, 2010

ஒரு ராஜகுமாரனின் கதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

PRINTER FRIENDLY

EMAIL TO A FRIEND

Sunday August 22, 2010

ஒரு ராஜகுமாரனின் கதை

குமரி எஸ். நீலகண்டன்


கடவுளின் ராஜ குமாரன்

கம்பீரமாய் குதிரையில்

வந்தான்

அழகான தேசத்தை

அவன் பெருமிதத்துடன்

பார்த்தான்

முதலில் அவனைச் சுற்றி

எல்லாம் சுகமாகவும்

சுறுசுறுப்பாகவுமே இருந்தன.

திருட்டு அவ்வளவாகத்

தென்படவில்லை.

சோம்பேரித்தனமாய் யாரும்

தெரியவில்லை.

அவலங்களும் அதிர்ச்சியும்

மனத்தளர்ச்சியுமாய்

எதுவும் படவில்லை.

அவன் பயணத்தில்

சில காலங்களில்

சில தூரங்கள்

கடந்திருப்பான்.

அதிர்ச்சி ஆரம்பமானது.

பசுமை உடுத்திய தாயின் மடியில்

பரிதாபத்துடன் பல உயிர்கள்

ஆடையில்லாமல்

அழுக்குத் துண்டில்

ஆடிக் கொண்டிருந்தன

பல உயிர்கள்

உலக வரைபடங்களெல்லாம்

நெஞ்சில்

நிதர்சனமாய் தெரிந்தன.

வறுமையில் தோய்ந்து

வழிந்தது துயரம்

முதலில் தனது

தலை கிரீடத்தை

எறிந்தான் ராஜகுமாரன்

தன் மேல் சட்டைகளை

அவிழ்த்து எறிந்தான்

தனது உடமைகளைத் திறந்து

அவர்களாகவே மாறி

அவர்களுக்காக

போரிடத் தொடங்கினான்

பருத்தி மரத்தின்

விதைகளைப் பறித்து

அதைப் பிரித்து

நூல் நூற்று

அவர்களுக்காய் ஆடை

நெய்து கொடுத்தான்

சுற்றியிருக்கும்

இயற்கையுடன்

கை கோர்க்க இனிதேக்

கற்றுக் கொடுத்தான்

அன்னியனின் விலங்குக்குள்

அனைவரும்

முடங்கிக் கிடந்தனர்

அவனிடம் கத்தியில்லை

குண்டூசி கூட இல்லை

நிராயுதனாய் சத்தியத்துடன்

சரித்திரப் போர்

தொடங்கினான்

அகிம்சையெனும்

ஆயுதமே அவனுக்கு

ஆரோக்கியமாய் தெரிந்தது.

கோபத்தை

அண்ட விடவில்லை

அவனின் கொள்கை

சிதையாமல் இருந்தது.

அகிம்சையின் வெப்பத்தில்

உருகினான் அன்னியன்

விலங்குகள் முறிய

வீர முழக்கமிட்டனர்

மக்கள்

ஆனந்தத்தின் உச்சத்தில்

ஆரவாரம் செய்தனர் மக்கள்

உற்சாக கோஷத்தில்

உலகமே அதிர்ந்தது

ராஜகுமாரன்

எச்சரிக்கை உணர்வுடன்

ஏதோ கூறினான்

வெறும் விடுதலை

மயக்கத்தில்

விழிக்கவே இல்லை

பல தலைகள்.

மக்களுக்காக

அறிவுறுத்திக் கொண்டே

இருந்தான் அவர்களின்

ஆரவாரத்தில் அவன் குரல்

அமுங்கிப் போனது

தனித்து விடப் பட்டான்

அவன் விடாமல் தனது

எச்சரிக்கை ஒலிகளை

எழுப்ப எழுப்ப

ஆரவார கூட்டத்திலிருந்து

ஒருவனின்

துப்பாக்கி குண்டுகள்

கோழையாய் அவனை

குதறிச் சிதைத்தன

ரத்தத்தின் கொதிப்பினை

அறிய குண்டுகள்

துளைத்திருக்க கூடும்

அகிம்சை சமாதியானது

ஆரவாரித்த மக்களெல்லாம்

இன்னொருவனுக்கு

அடிமையாயினர்.

ராஜகுமாரனை மறக்காத

அவர்கள் அவன்

பிறந்த நாள் இறந்த நாள்

எல்லாவற்றையும்

கொண்டாடினர்

காலங்காலமாய்

கடிதங்களிலெல்லாம்

தபால் தலையாய் அவன்

தலையைப் பதித்து

தவறாமல் அவனைக்

குத்திக் கொண்டே

இருந்தார்கள்

அவனுக்கு பிடிக்காத

மதுக் கடைகளின்

கல்லாப் பெட்டிகளிலெல்லாம்

மொட்டைத் தலையுடன்

அவன் முகங்களெல்லாம்

கொட்டிக் கிடந்தன

கொலை கொள்ளை

கூலிப்படையென

எல்லோர் கைகளிலும்

அவன் தலைகளையே

கூலிகளாய் பரிமாறினர்

அந்த ராஜகுமாரனைப் பற்றி

எல்லோரும் அவர்களின்

குழந்தைகளைக்கு சொல்லிக்

கொடுக்கிறார்கள் அவனையும்

அவனது வாழ்க்கையையும்

படிக்காமல் தெரியாமல்..

அந்த ராஜ குமாரனின்

பெயர் மகாத்மா என்றார்கள்




Copyright:thinnai.com 

Sunday, August 22, 2010

ஏக்கம் - தாமரை இதழில் வெளியான கவிதை

ஏக்கம்

குமரி எஸ்.நீலகண்டன்..

வெறும் கண், காது
மூக்கு மட்டுமல்ல
என் உருவம்.

என் தோற்றத்தைக்
காட்ட முயன்று
தோற்றுப் போகிறேன்
அவர்கள்
அவரவர் கண்களில்
என்னைப் பார்ப்பதால்.

அவர்கள் பார்த்த
என் உருவம்
என்னைப் போலவா
அவர்களைப் போலவா..

வரையச் சொல்லுங்கள்
ஓவியமாய்...
அவற்றில் ஒன்றாவது
என்னைப் போல்
நானாய்.

Thursday, August 19, 2010

தொண்டையின் துயரம் நவீன விருட்சத்தில் வெளியான கவிதை



நவீன விருட்சம்

17.8.10

தொண்டையின் துயரம்

இனிப்பான பலகாரத்திலிருந்து
உப்பில்லா உணவு
கொதிக்கிற தேனீரிலிருந்து
குளிர்ச்சியான ஐஸ் க்ரீம்
எதிர் வீட்டு பால் அப்பம்
எதிரி சுட்ட பணியாரம்
சந்த்ருவின்
பிறந்த நாள் கேக்
ஆஞ்சநேயரின்
வடைமாலையில்
பிரசாதமாய்
எஞ்சிய வடை என
எல்லா உணவு
பதார்த்தங்களையும் தொண்டை
அனுமதித்து விடுகிறது.
திடீரென
வயிற்றில் தள்ளு முள்ளு
கலவரம் அடிதடி என
நடக்கிற போது
வயிற்றிற்காக இரக்கம் காட்டி
கலவரக்காரர்களை
வாய் வழியாக
தண்ணீர் பீய்ச்சி
வெளியேற்றியும் விடுகிறது.

ஆனால் வினோதமாய்
ஒரு உறங்கும்
உண்மை மட்டும்
தொண்டைக்குள் முள்ளாய்
குத்திக் குத்திக் குதறுகிறது
வெளியேற இயலாமல்..

பொய் தவத்தில் புண்ணாய்
தொண்டை நாறிக்
கொண்டிருக்கிறது
பல நேரங்களில்

Wednesday, August 18, 2010

இரண்டும் ஒன்றானால்-வல்லமை இதழில் வெளியான கவிதை

இரண்டு ஒன்றானால்

Posted on 17 August 2010

குமரி எஸ். நீலகண்டன்

திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.

ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.

இடையே பாவம்
இரண்டின் கன்று.

Thursday, August 12, 2010

ஈர்ப்பு - சென்னை ஆன்லைனில் வெளியானக் கவிதை

ஈர்ப்பு

  ஈர்ப்பு

குமரி எஸ். நீலகண்டன்

பற்றுதலுக்குப்
பிடிபடாமல் எல்லாமே
கை நழுவி விடுகிறது.

விழுந்ததில் உடையாத
சிலவற்றை
வழிப்போக்கர்கள்
எடுத்துச் சென்றார்கள்.

உடைந்தவற்றில்
ஒரு பகுதி
குப்பைத் தொட்டிக்குச்
சென்றிருக்க வேண்டும்.

உடைசல்களின்
எஞ்சிய குவியல்களை
ஒன்று சேர்க்கப் பார்க்கிறேன்
கைக்கு லாகவமாய்ப்
பற்றிக் கொள்ள.

பொருளுக்கேற்றாற் போல்
கைகள் வேண்டும்
பற்றிக்கொள்ள.

  ஈர்ப்பு
Jun 23, 2009

சத்திய பிரமாணம் - சென்னை ஆன் லைனில் வெளியானக் கவிதை

சத்திய பிரமாணம்

 சத்திய  பிரமாணம்

குமரி எஸ். நீலகண்டன்

எனக்குச் சுதந்திரம் வேண்டும்.
ஆனால்
எல்லோரும்
நான் சொல்வதையே
கேட்க வேண்டும்.

எல்லோரும் உழைக்க வேண்டும்.
ஆனால்
எனக்கு வியர்வை ஒவ்வாது.

உதவும் மனதே
உலகை உயர்த்தும்.
எல்லோரும் எனக்கு
உதவுங்கள்.

பாவம்! அவனுக்கு
ஏதாவது கொடுங்கள்!
என்னிடம் மட்டும்
எதுவும் கேட்காதீர்கள்.

உனக்காக உயிரையே
கொடுப்பேன்.
உறுதியாக வாக்கு
தருகிறேன்.

என்னிடம் ஒரு பலஹீனம்
வாக்குறுதிகள் மட்டும்
என் நினைவில்
இருப்பதே இல்லை.

 சத்திய  பிரமாணம்
Jul 21, 2009

பீல்டு மார்ஷல் மானெக்சா - விகடன் பிரசுரம்

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா



பிடித்தவை


ஆசிரியர்: குமரி சு.நீலகண்டன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: வாழ்க்கை வரலாறு
ISBN எண்: 978-81-8476-139-9
மொத்த பார்வையாளர்கள்: 125 Views
விலை: ரூ. 45

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

அண்டை நாடுகள் பலவற்றிலும், ராணுவ ஆட்சியும் சர்வாதிகார அடக்குமுறையும் இருந்தாலும், எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாரம்பரியம் மிக்க பாரத நாடு இன்றும் வலுவான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் போக்கும் மக்களாட்சியும் இன்றும் உலக நாடுகள் நம் நாட்டை வியந்து பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைக்குக் காரணமாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள், நம் ராணுவ உயரதிகாரிகள் _ குறிப்பாக மானெக்ஷா போன்றவர்கள்.
பார்ஸி இனத்தைச் சேர்ந்த அமிர்தசரஸில் பிறந்து, நம் தமிழகத்தின் குன்னூரை அதிகம் நேசித்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷாவின் மறைவு, உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு.
இந்தியா சந்தித்த மூன்று போர்களுக்கு சாட்சியாக இருந்தவர் மானெக்ஷா. அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களில் சில சுவாரஸ்யங்கள் இந்த நூலில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்திரா காந்திக்கும் மானெக்ஷாவுக்கும் இடையில் நிலவிய புரிந்துணர்வு, எப்படி நம் நாட்டை வலுவான நாடாகத் திகழ வைத்தது என்பதை இந்த நூலில் அழகாகக் காட்டியுள்ளார் நூலாசிரியர்
குமரி சு.நீலகண்டன். இந்திராகாந்தியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மானெக்ஷா இந்தியாவில் ராணுவ ஆட்சியை நிறுவி விடுவார் என்று புரளி கிளப்பப்பட்ட போது, மானெக்ஷாவிடம் நேரிலேயே அதைக் கேட்டுவிட்டார் இந்திராகாந்தி. அதற்கு மானெக்ஷா சொன்ன பதில், நகைச்சுவையானது மட்டுமல்ல; இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதாகவும் அமைந்தது. அது என்ன என்பதை இந்த நூலில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
நகைச்சுவை உணர்வு மிகுந்த மானெக்ஷா, நெருக்கடியான தருணங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதையும், ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடன் கலந்து பழகிய விதத்தையும் இந்த நூலில் படிக்கும்போது, உண்மையில் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நன்கு அறிய முடியும்.

மெழுகு குலையாத பழங்கள் - தினமணி தலையங்க பக்கத்தில் ஆகஸ்ட் 31,2009 ல் வெளியான கட்டுரை

கட்டுரைகள்
மெழுகு குலையாத பழங்கள்
First Published : 31 Aug 2009 11:44:00 PM IST


வெகு நாட்களுக்கு முன் நாகர்கோவில் செல்லும் வழியில் மணிமேடை சந்திப்பில் காலை வேளையில் அவ் வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருக்கும். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.
அன்று நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.
இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம்.
பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.
ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.
பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.
இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.
மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.
நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.
சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.
பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.
பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.
மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.
அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.
பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.
சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.
ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.
இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.
இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

கருத்துக்கள்

the other bank is always green.though everyone knows this all erring by not realising fault.god gives through nature all what we need in everyones area.if people eat what they get in their ares money,health,nature all will be saved along with their life longevity.

By alexander,kuwait
9/2/2009 9:27:00 AM

கறுப்பு நாய் - சென்னை ஆன் லைனில் வெளியான சிறுகதை

கறுப்பு நாய்

  கறுப்பு நாய்
குமரி எஸ். நீலகண்டன்

கறுப்பு நாய்க்கு முதுகு மிகவும் வலித்தது. முதுகுப் புண் செக்கச் செவேலென்று பார்ப்பவர் கண்களை அருவருக்கச் செய்யும் விதத்தில் இருந்தது. மிளகாய் தூளைப் புண்ணில் தூவியது போலக் காந்தல் எடுத்தது, கறுப்பு நாயின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென்று கொட்டியது. முதுகுப் புண்ணின் வேதனையை விட மனப்புண் வேதனை மிகவும் வருத்தியது.

காரிலிருந்து வெளியே தள்ளப்பட்டதும் காரைத் துரத்தி வீட்டினை அடைய அது எவ்வளவோ முயன்றது. ஒரு காலத்தில் ''திருடனைத் துரத்தும் போலீஸ் மாதிரி எங்க நாய் கம்பீரமாக ஓடும்'' என்று எசமானனால் வர்ணிக்கப்படட அந்தக் கறுப்பு நாயின் கால்களால் காரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

திருவிழாவில் பெற்றோரைத் தவற விட்ட குழந்தையாய்த் திருதிருவென விழித்தது. தூரத்தில் ஒரு கார் விரைவாக வர, அந்தச் சாலையை அது மெதுவான வேகத்தில் கடந்தது. அதன் நடையோடு அதன் மன நிலையான நிழல்கள் விழுந்து விரைந்து சென்றன. 'இந்த டிரைவர் நம்மைக் கொல்ல மாட்டான்' என்ற மனிதனின் மீது கொண்ட அதன் ஆழ்ந்த நம்பிக்கையும், கார் வருவதற்குள் இந்த நடையின் வேகத்தில் சாலையைக் கடந்து விடலாமென்ற நுண்ணிய மனக் கணக்கீட்டையும், மனச்சோர்வில் 'கார் இடித்து விட்டுப் போகட்டும்' என்ற தற்கொலை மனோபாவமும் அந்த நடையில் சித்திரங்களாய்த் தெரிந்தன.

பார்வைக்கு எட்டிய திசைகளில் எல்லாம் ஓடி ஓடி முயன்றது. ஆனால் அதனால் வீட்டை எட்டவே முடியாமல் போனது. அது போகும் தெருக்களில் எல்லாம், அங்குள்ள வெளிநாட்டு வீட்டு நாய்களும், சில சொறி நாய்களும், கறுப்பு நாயை ஒருவித இன வெறியுடன் தீண்டத் தகாததாய்ப் பார்த்தன. அவை இதை ஏதோ அந்நியனாய்ப் பாவித்துக் குரைத்து நிராகரித்தன.

அது சாலை ஓரத்தில் இருந்த மலத்தை நுகர்ந்தது. ஒரு வெறுப்புணர்ச்சியுடன் அதை நிராகரித்து விட்டு மீண்டும் ஒடியது. கழுத்தில் கிடந்த லைசென்சு அதை முனிசிபாலிட்டிகாரர்களிடமிருந்து காப்பாற்றியது. பசி வயிற்றைப் பிய்த்தது. பசியின் கொடுமையால் முதன்முதலாய் அந்த ஹோட்டலின் எச்சில் இலையை நக்கத் துவங்கியது. அந்த எச்சில் சோறு வயிற்றின் உள்ளே செல்ல மிகவும் தயங்கியது.

அது எப்படியெல்லாம் வளர்ந்த நாய். அது பிறந்த இரண்டாவது நாளிலிருந்து, இன்று காலை வரை எசமானன் நஞசப்பன் வீட்டு உணவை மட்டுமே உண்ட நாய், நஞ்சப்பனின் மூன்றாவது குழந்தையாய் வளர்ந்த நாய். ''நஞ்சப்பன் வீடு'' என்று சொல்லாமல், ''கறுப்பு நாய் வீடு'' என நஞ்சப்பன் வீட்டை அறிமுகப்படுத்தும் அளவிற்குத் தெருவிலுள்ள எல்லோரும் அறிந்த நாய்! அது ஒரு முக்கிய அறிவுஜீவி.
பல வருடங்களுக்கு முன்பு நஞ்சப்பன் வங்கியில் கணக்கராக இருந்தபோது அதிக வசதிகளில்லாத ஒரு நடுத்தர வர்க்கத்து இந்தியனாகவே இருந்தார். அவர் கறுப்பு நாய்க்கு மட்டும் எந்தக் குறையும் வைத்தது கிடையாது.

நஞ்சப்பன் வீட்டைக் கறுப்பு நாயும் சிறந்த காவல் வீரனாகக் காத்திருக்கிறது. அது பல திருடர்களைக் குரைத்து விரட்டியிருக்கிறது. ஆனால் அது தன் வாழ்வில் யாரையும் கடித்ததாய்ச் சரித்திரம் இல்லை. நஞ்சப்பன் கூட அந்தக் கறுப்பு நாயைப் பற்றி வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம் ''இதுக்குக் கண் கழுகுக் கண், இதுக்குக் காது பாம்புச் செவியாக்கும, இதுக்கு மூக்கு அபாரமான நுகர்வுத் திறனுள்ளது. திருடனைத் துரத்தும் போலீஸைப் போலக் கம்பீரமாக இது ஓடும்'' என விதவிதமாக, அதன் அங்கங்களை வர்ணிப்பார். நஞ்சப்பனைத் தேடி வரும் பலர் கறுப்பு நாயைப் புகழ்ந்து பேசி அவரை ஐஸ் வைத்துப் பல காரியங்களும் சாதித்திருக்கின்றனர். இந்தக் கறுப்பு நாய் நஞ்சப்பன் வீட்டுக்கு விருந்துக்கு வரும் விருந்தாளிகளின் குழந்தைகளுக்குக் காட்சிப் பொருளாய் அவர்களின் அழுகையை நிறுத்தி எவ்வளவு சேவை செய்திருக்கிறது!

''கடிக்காத நாய்''என்ற அபார நம்பிக்கையில் நஞ்சப்பன் தைரியமாக நாயின் பக்கத்திலேயே குழந்தைகளை விளையாட விடுவார்.

''ஹாய்! நாயைப் பாரு'' என்றதுமே அடம்பிடிக்கும் குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். அந்தக் கறுப்பு நாய் மட்டும் இல்லாவிட்டால், குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கும். 'சீ! குரங்கு அழுகையை நிறுத்தல்லே கொன்னுடுவேன்' எனத் தாயும் மிரட்டி இருக்கலாம். அழுது அழுது குழந்தையின் உடல் நிலை கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

''என்னடி! அப்பதே சொன்னேன்! குழந்தை கேட்டத கொடுன்னு! குழந்தை அடம்பிடிக்கறதே உன்னாலேதான்'' எனக் கணவன் மனைவியிடையே பிரளயம் ஆரம்பித்து அது பூகம்பமாய் வெடித்திருக்கவும் செய்யலாம்.

இப்படிச் சாதாரணமாக நம் சிந்தனைக்கு எட்டாமலேயே, இந்தக் கறுப்பு நாய் பெரிய பெரிய சேவைகளை நஞ்சப்பன் குடும்பத்திற்குச் செய்திருக்கிறது.. அதுவே பலர் இவருக்குக் கடிதம் எழுதும் போது கறுப்பு நாயைப் பற்றி விசாரிக்கவும் வைத்திருக்கிறது.

நஞ்சப்பனும் கறுப்பு நாயை நாள் தவறாமல் குளிப்பாட்டி, குழந்தை போல் வளர்த்தார். அதன் உடம்பில் உண்ணிப் பூச்சிகள் ஒன்றினைக்கூட அண்ட விடமாட்டார்.

பக்கத்து வீட்டுச் சிறுவன், கறுப்பு நாயின் மேல் கல்லை எறிந்ததற்கு அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் நட்பையே முறித்துக்கொண்டார். ஒரு தடவை அது சைக்கிளில் அடிபட்டுக் கால் ஒடிந்து வ்ந்தபோது, நாய் என்று பாராமல், மூலிகைகளைக் கால்களில் வைத்துக் கட்டிக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்தார். குளிர்க் காலங்களில், பல இரவுகளில், நடு இரவில் விழித்து, ''பாவம்! நாய்க்கு குளிரடிக்கும்'' என்று கூறி நாயை அவிழ்த்து, முற்றத்தில் படுக்க வைத்துக் கோணியால் போர்த்தி விடுவார்.

''நாய் தனியாக இருக்கும்'' என்ற காரணத்தினாலேயே அயலூரில் பல உறவினர்கள், நண்பர்களின் திருமண விழாக்களை நஞ்சப்பன் நிராகரித்திருக்கிறார். பல விழாக்களுக்கு மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி இருக்கிறார். நஞ்சப்பன் கவலையோடு ஏதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கையில் 'அது ஊர் சுற்றிவிட்டு, கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் காலம் தாழ்த்திப் பெற்றோருக்குப் பயந்து வரும் ஒரு மகனின் தயங்கிய கால்களைப்' 'போல் தன் கால்களை நகர்த்தி நகர்த்தி வரும். நஞ்சப்பன் அதன் தலையினை அன்பாய்த் தடவித் தடவியே தன் கவலைகளை மறந்து போவார்.
ஆண்டுகள் பல ஓட, நஞ்சப்பன் வசதியும் சிறிது பெருகிக் கொண்டே சென்றது. புதுவீடு கட்டினார். ஸ்கூட்டர், கார் வாங்கும் அளவிற்கு அவர் வசதிகள் பெருகின. புதுப் புது நண்பர்கள் வந்தனர். ஒருநாள் நஞ்சப்பன் வீட்டிற்கு விருந்திற்கு வந்த ஒரு பெண், ''என்னங்க! இந்தச் சொறி நாயைப் போய் வீட்டிலே வளர்க்கறீங்களே? நல்ல பொமரேனியன் குட்டி கிடக்குது! ஒண்ணைத் தர்றோம்!'' என்று நஞ்சப்பன் மனைவியிடம் சொல்ல, அன்றுதான் இந்தக் கறுப்பு நாய்க்குக் கெட்ட காலம் தொடங்கியது.

அடுத்த நாள் வெள்ளை நிற பொமரேனியன் நாய், நஞ்சப்பன் மடியில் கொஞ்சி விளையாடியது. கறுப்பு நாயைக் கண்டதுமே பொமரேனியன் விடாமல் வெறுப்புடன் குரைத்தது. முதல் இரண்டு நாட்கள் கறுப்பு நாயைத் தனியாக பின் வாசலில் கட்டி வைத்தார்கள். ஆனால் பொமரனியனோ இந்த நாயைக் கண்டால் விடாமல் தொண்டை கிழியக் குரைத்தது. சப்தம் தாங்கச் சகிக்காமல் பக்கத்து வீட்டுக்காரர்கள், நஞ்சப்பன் வீட்டாரைத் திட்டத் தொடங்கினர். கறுப்பு நாயின் மீது நஞ்சப்பன் குடும்பத்தாரின் அன்பு சிறிது சிறிதாக விலகத் தொடங்கியது நஞ்சப்பன் முன்பு, பரிதாபமாய் வாலை அசைத்து அன்பிற்காக ஏங்கி நிற்கையில் அடித்து விரட்டப்பட்டது. அது வீட்டு வாசலிலேயே சோகமாய்ப் படுத்துக்கொண்டது.

ஒரு நாள் நஞ்சப்பனின் மனைவி தன் கணவனிடம் ''இதோ பாருங்க. இந்த நாயை நம்ம வீட்டிலே வச்சிருந்தோம்னா நம்ம ஸ்டேட்டஸ் குறைஞ்சிடும்'' என்று சொன்னாள். உடனே கறுப்பு நாய் காரில் பக்கத்து ஊரிலேயே விட்டு வரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அலைந்து வீட்டை மோப்பம் பிடித்து வந்துவிட்டது. நன்றியுடன் நஞ்சப்பனிடம் அன்பிற்காக ஏங்கி வாலை ஆட்டிக் கெஞ்சியது. நேற்று வந்த பொமரேனியன் இதைக் குரைத்து விரட்டியது.

அன்று இரவு கறுப்பு நாயை விரட்ட வேறு வழியில்லாமல் ஒரு நண்பரின் ஆலோசனையின் கீழ் நஞ்சபப்னின் மனைவி விஷத்தை மாமிசத்தில் கலந்து அதன் முன் வைத்து விட்டுச் சென்றாள். சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் இறந்த ரோஸி என்ற தன் சகநாய் வாந்தி எடுத்த எச்சில் சோற்றின் வாடை இதிலும் வீச, கறுப்பு நாய் அந்த விஷச் சோற்றை வெறுப்புடன் நிராகரித்தது.

அன்று நஞ்சப்பனின் வீட்டிற்கு அவரது அக்கா வந்திருந்தாள் அக்காவின் மூன்று வயதுக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து கறுப்பு நாயின் பக்கம் வந்து அந்தச் சோற்றைத் தின்ன முயல, கறுப்பு நாயும் எச்சரிக்கை உணர்வுடன் தன் கால்களால் குழந்தையின் கையைத் தட்டிவிட்டு ஊளையிட்டுக் காப்பாற்றியது. ஆனால் நாயின் கால் நகம் குழந்தையின் கைகளைச் சிறிது கீச்சிப் புண் ஆக்கிவிட, அதன் அழுகையில், நஞ்சப்பன் குடும்பமே ''நாய் கடிச்சிடிச்சு! குழந்தையை நாய் கடிச்சிடிச்சு!'' எனக் கதறியது.
நஞ்சப்பன் அன்புடன் வளர்த்த அந்தக் கறுப்பு நாயை முட்கள் போல் 'சிரா' நிறைந்த விறகுக் கட்டையால் அடித்துக் கொல்ல முயன்றார் 'ஓ' என்று வலியில் கத்தியது. ''சீ! வளர்த்த நாயை அடிக்காதே! எங்கயாவது கொண்டு விட்டுகிட்டு வா!" எனப் பக்கத்தது வீட்டு வயதான அம்மா சொல்ல, கறுப்பு நாய் காரில் பயணமானது. வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் விடப்பட்டது, அது சுற்றி சுற்றி வந்தது. நஞ்சப்பன் வீட்டை அதனால் எட்ட இயலவில்லை. கறுப்பு நாய் நஞ்சப்பன் வீட்டை விட்டு வெளியேறிச் சுமார் ஆறு மாதங்கள் கழிந்துவிடட்ன. இந்த ஆறு மாதங்களில் அது எவருக்கும சொந்தமில்லாமல், கல்லடி, கம்படியென எல்லாத் துயரங்களையும் பெற்றுகொண்டு ''சொறி'' நாயாகச் சந்தை, தெருவென அலைந்து கொண்டிருக்கிறது. எசமானன் நஞ்சப்பனை மட்டும் அடிக்கடி நினைத்துக் கண்ணீர் விடும்.

அன்று தன் எசமானரின் கார் டிரைவரை வைத்துக் காரை அடையாளம் கண்டு கொண்டது. டிரைவர் காரின் கதவைத் திறந்து போட்டு விட்டு, பூக்கடைக்குள் நுழைய இது தந்திரமாய்க் காருக்குள் நுழைந்து, இருக்கையின் அடியில் ஒளிந்து கொண்டது. காரினுள் பூக்கூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. பூவின் வாசம் நாயின் மூக்கை துளைத்தது.

வீட்டின் முன் கார் நின்றது. ஒரே கூட்டம். காரிலிருந்து வேகமாய்த் தாவிக் குதித்துச் சந்தோஷமாய் எசமானனைக் காணும் ஆசையில் வீட்டிற்குள் ஓடியது. ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தன் சக நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

''பாவம்! நஞ்சப்பன் சார்! ஹார்ட் அட்டாக்லே 'பட்'டுன்னு போயிட்டாரு! இந்தக் கறுப்பு நாய் போனதிலேயிருந்து அவங்க குடும்பம் சீரழிஞ்சு போச்சு! இவரு ஒரு பொமரேனியன் வளத்தாரு! அது பக்கத்து வீட்டுப் பொட்டை நாய் கூட எங்கோ ஓடிப் போச்சு! பாவம் இது நன்றியுள்ள நாய்! அடிச்சுத் துரத்தின பிறகும் எவ்வளவு நன்றியா வீடு தேடி வந்திருக்கு! ”

கறுப்பு நாய் எசமானரின் முகத்தைக் காணும் ஆவலில் கண்ணீர் மல்க நின்றது. திடீரென எங்கிருந்தோ அங்கு ஓடி வந்த பொமரேனியன், கறுப்பு நாயின் அருகில் வந்து சோகத்துடன் அதன் கண்ணீரை நக்கிக் கொண்டிருந்தது.

Tuesday, August 10, 2010

இந்த வேம்புகள் கசப்பதில்லை - உயிரோசையில் வெளியான சிறுகதை

இந்த வேம்புகள் கசப்பதில்லை
குமரி எஸ்.நீலகண்டன்
எதிர் வீட்டில் ஒரு உயிர் நாளை வெட்டிக் கொலை செய்யப்படப் போகிறது. நாளை ஒரு கொலை நடக்கப் போகிறது எனத் தெரிந்தும், அதைக் காப்பாற்ற எந்த உரிமையும் இன்றி விஸ்வநாதன் கேவிக் கேவி அழுதார். என்ன செய்வது? எதுவுமே செய்ய முடியாது.விஸ்வநாதனின் பிள்ளைகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் விஸ்வநாதன் சமாதானம் அடையவில்லை.
எதிர்வீட்டுக்காரர் அவர் வீட்டு மரத்தை வெட்டப் போகிறார், அவ்வளவுதான். ஆனால் இந்தச் செய்தி விஸ்வநாதனுள் ஒரு தாங்க முடியாத துயரச்சூழலைப் பரவ விட்டு விட்டது.
மற்றவர்களைப் பொறுத்தவரை, நாளை வெட்டப் போகும் அந்த மரம் கசந்த இலைகளைக் கொண்ட ஒரு சாதாரண வேப்ப மரமாக இருக்கலாம். ஆனால் விஸ்வநாதனுக்கு, அது அவரைப் போல் நரைத்த தலை, மூளை, இதயம், கை, கால், நரம்பு, ரத்தம் கொண்ட ஒரு மாமனிதரின் உயிர். இவர் வீட்டின் முன்பு நீளமாய் விரித்த விரிப்பாக அமைந்தது ஒரு கறுப்பு தார் சாலை. அதைக்கடந்து எதிர் வீட்டு வளாகத்தில் நெடிதாய் வளர்ந்த அந்த வேப்ப மரத்தோடு அன்றாடம் இவர் வீட்டிலிருந்தபடியே பேசிக் கொண்டேதான் இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பரான அப்துல்லா அல்லவா அந்த மரம்
இரட்டைக் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரே மாதிரி சாயலில் ஒரே நிறத்தில் ஒரே நடை அசைவில் பிரித்தறிய இயலாத அளவிற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதே மாதிரிதான் இந்த இரட்டை மரங்களும். விஸ்வநாதன் வீட்டு முன்புள்ள சாலையில் நின்று பார்த்தால் தெரியும். விஸ்வநாதன் வீட்டு வேப்ப மரமும் எதிர்வீட்டு வேப்ப மரமும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையில் செல்லும் மனிதர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு அதனுருவங்களும் அசைவுகளும் ஒத்திருக்கும்.
இரண்டு மரங்களுக்கும் ஒரு மாத வயது வித்தியாசம். விஸ்வநாதனுக்கும், எதிர்வீட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு இருந்த அப்துல்லாவிற்கும் ஒரு மாத வயது வித்தியாசம்.
அப்துல்லா..... விஸ்வநாதன் நட்பு தெய்வீகமானது... 'அனபு' என்னும் கடவுளால் அரவணைக்கப்பட்டது.
அப்துல்லா வீடு தேடி நாகர்கோவில் நகரம் முழுக்க அலைந்து கொண்டிருந்தார். அப்போது நகரத்தின் வெளிப்புறத்தில் ஒரு காலனியில் ஆள் அரவமற்ற பகுதியில் ஒரு 45 வயதுமிக்க மனிதர் மயக்கமுற்றுக் கிடந்தார்.
அப்துல்லா அவசரமாய்த் தன் மிதிவண்டியை மிதித்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றார். உரிய சிகிச்சைக்குப் பின் அவர் நினைவு பெற அவர் 'விஸ்வநாதனா'க அப்துல்லாவுக்கு அறிமுகமானார்.
விஸ்வநாதன் அப்துல்லாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்துல்லா வீடு தேடும் விபரமறிந்த விஸ்வநாதன் தன் எதிர் வீடு காலியாகும் விபரம் கூற அவர் எதிர் வீட்டிலேயே குடி அமர்ந்தார்.
அட! எதிர் வீடு என்றதும் ஏதோ ஒரு நபரின் வீடல்ல அது... அதுவும் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வீடுதான்.
இருவரது எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததால் குறைந்த கால அளவில் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அப்துல்லாவிற்கு விஸ்வநாதன் ஒரு நண்பரென்றால் வேப்பமரம் இன்னொரு நண்பர். "இயற்கை வைத்தியத்தில் எனக்கு பைத்தியம்" என்பார் அப்துல்லா அடிக்கடி. அந்த அளவிற்கு இயற்கை மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு. அதிலும் குறிப்பாக 'வேப்பமரம்' அப்துல்லாவிற்கு மிகவும் பிடித்தமானது. அதன் இலை, தழை, பட்டையென பெரும்பாலான நேரமும் அதைப்பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்.
ஒரு சமயம் விஸ்வநாதனின் பேரக்குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவரின் குழந்தையின் காலில் வந்த சிரங்கு குரங்காய் உடம்பு முழுவதும் தாவிக் கொண்டிருந்தபோது ஆங்கில வைத்தியத்தில் வீட்டில் பல ஆயின்மென்ட் கூடுகள்தான் கூடின. சிரங்கு மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டிருக்க அப்துல்லாவின் வேப்பிலை வைத்தியத்தில் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. விஸ்வநாதன் கொசுத்தொல்லை பற்றிக் கூற 'வேப்பங்காற்றிற்கு கொசு வராது' என அப்துல்லா 'வேப்பம்பா' பாடுவார்.
விஸ்வநாதனின் பிறந்தநாளைத் தெரிந்து கொண்ட அப்துல்லா அன்று அவருடைய பரிசாய் விஸ்வநாதன் வீட்டு முற்றத்தில் வேப்பமரத்திற்கு வித்திட்டார். ஒருமாதம் கழித்து அப்துல்லாவின் பிறந்த நாள் வந்தது. அதேபோல் அவருடைய வீட்டில் விஸ்வநாதனும் இன்னொரு வேப்பமரத்திற்கு வித்திட்டார்.
இரண்டு வேப்பமரங்களும் ஒரு மாத வித்தியாசமிருந்தும் உருவத்தில் அதிக வித்தியாசமின்றி நட்போடு வளர்ந்தன. அந்தப் பக்கமாய் இருக்கும் பெரிய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கெல்லாம் இந்த மரங்களைச் சொல்லி அடையாளம் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றன அவை. வீட்டு வளாகத்தைவிட்டு அதன் கிளைகள் வெளிக்கிளம்பி சாலை பாதசாரிகளுக்கும் நிழல் தந்தன. சாலையில் செல்வோருக்கு எதிர் வீடுகளில் இரண்டு ஒரே மாதிரி மரங்கள் எப்போதும் "சல சல" வெனப் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இந்த இரண்டு மரத்தடிகளில்தான் விஸ்வநாதனும் அப்துல்லாவும் பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு மரங்களின் காற்றுகளிலும் இவர்களது கருத்துகளே நிறைந்திருக்கும்.
விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார்...
"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
இப்படியே அப்துல்லாவும் விஸ்வநாதனும் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி வளர்ந்த இந்த வேப்பமரங்களுக்கு ஒரு தருணத்தில் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்துவிட்டது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'காகங்கள்' என்ற இலக்கியக் கூட்டத்தை இந்த மரத்தடிகளில் நடத்தி இருக்கிறார்.
விஸ்வநாதன் ஒரு பெரிய ஆசாரமான குடும்பத்தின் வாரிசாய் இருந்தும் எல்லோரிடமும் சாதி மத பேதமின்றி பழகுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற ஏழை நோயாளிகளைத் தொட்டு சேவை செய்வார். சாதி, மத பேதமற்ற அவரின் ஸ்பரிசமே அவரை அவர்களுள் ஒரு வித்தியாசமான மனிதராக அடையாளம் காட்டியது.
அப்துல்லா - விஸ்வநாதனின் நட்பு உருவானபின் இந்த சேவை இன்னும் பேறு பெற்றது. இலை, செடி, கொடி, காய், கனி என இயற்கையே கடவுளாக அவர்களுக்குப் பட்டது. எல்லா உயிர்களின் இயக்கமே கலை அம்சமாகத் தெரிந்தது. தடங்கலில்லாது அந்த உயிர்களின் இயக்கத்திற்கு சேவை செய்வதில் தன் நிறைவு கண்டார்கள் அவர்கள்.
உலகமே கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை, சிகப்பு என வண்ணமயமாய் இருந்தாலும் எல்லாம் ஒரே மண்ணிற்குச் சொந்தமானவை. விஸ்வநாதன் - அப்துல்லா உறவு சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை பாசம் மிகுந்ததாகக் கருதப்படும். ஆனால் நிஜத்தில் அது 'பாசம்' என்ற சுயநல கயிற்றால் பிணைக்கப்படாத அதற்கு அப்பாற்பட்ட உயர்வான உறவாகும்.
திடீரென அப்துல்லாவிற்குப் பணி நிமித்தமாக டெல்லிக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. விஸ்வநாதனுக்கும், அப்துல்லாவிற்கும் மிகப்பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. இயல்பான நடைமுறைகளை ஏற்று எதிர்கொள்வதே வாழ்க்கை என்பதில் இருவருக்கும் அதிக நம்பிக்கை உண்டு. அதனால் அப்துல்லா வீட்டைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்தோடு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார்.
ஆனால் விஸ்வநாதனுக்கோ, அவருடைய நினைவுகள் அவர் வீட்டு வளாகத்து வேப்பமரத்தில் இலைகளாய், காய்களாய், கனிகளாய் கனிந்து தொங்கின. வேப்பமரம் அவருக்கு வேப்பமரமாகத் தெரியவில்லை. அரைநரையோடு புன்முறுவல் கொண்ட ஆரோக்கியமான அப்துல்லாவாகவே தெரிந்தது. வீட்டுக்குள் போகாமல் வெளி இடங்கள் சுற்றாமல் தூங்காமல் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும் அப்துல்லாவாகவே தெரிந்தது. காற்றில் மரம் ஆடி அசையும்போது அப்துல்லா கை அசைத்து அசைத்துப் பேசுவதாகவே விஸ்வநாதனுக்குத் தெரிந்தது. அவரின் கொள்கைகள், நடைமுறைகள், அன்பு அனைத்துமே அந்த மரத்துள் ஆழமாய்ப் பதிந்திருந்த்து. அத்தோடு அப்துல்லாவிற்கும் விஸ்வநாதனுக்கும் கடிதத் தொடர்பு அவ்வப்போது இருந்தது.
எதிர்பாராமல் ஒருநாள் அப்துல்லாவின் இறப்புச் செய்தியும் வந்தது.
விஸ்வநாதன் குடும்பத்திற்குப் பெரிய துயரமாகவே இருந்தது. குடும்பமே புதுடெல்லி சென்று வந்தது. ஆனாலும் அப்துல்லா அந்த இரட்டை வேப்பமரங்களில் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார். அப்துல்லாவின் நினைவுதினத்தில் அங்கு சர்வமதப் பாடல்கள் பாடப்பட்டன.
அந்த இரட்டை வேப்பமரங்களில் சில நேரங்களில் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள் கொஞ்சிக் குலாவும்போது விஸ்வநாதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மகளின் திருமணத்தின்போது எதிர்வீட்டுமனையை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விஸ்வநாதனுக்கு வந்தது. அந்த வேப்பமரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்ற நிபந்தனையை வேண்டுதலாய்த் தந்து ஓரு தூரத்து உறவினருக்கே விற்றும் விட்டார். ஆனால் சில மாதங்களுக்குள் எதிர் வீட்டு வேப்பமரம் வெட்டப்படும் செய்தி விஸ்வநாதனை எட்டியது. துடித்தே போய்விட்டார். எதிர்வீட்டு உறவினரிடம் எவ்வளவோ கெஞ்சினார். அவர்களுக்கு அது கேலிக்குரியதாகவே இருந்தது. ''இவருக்கென்ன பைத்தியமா.... ஒரு மரத்தை வெட்டறதுக்கு இவ்வளவு அழறாரு'' என்றார்கள்.
விஸ்வநாதனுக்கு அது ஒரு பேரிழப்பாய் தெரிந்தது. விஸ்வநாதனின் பேத்தி கூட தாத்தாவை சமாதானப்படுத்தினாள். "கவலைப்படாதீங்க தாத்தா! அந்த வெட்டப்போற மரத்திலே இருந்து ஒரு கொட்டையை எடுத்து நம்ம வீட்டிலே நட்டு மரமாக்கிடலாம்."
விஸ்வநாதன் நிதானமிழந்து நிலை குலைந்து நின்றார்.
அன்றிரவு இடிமழையோடு ஒரு பயங்கர சப்தம்...
எதிர்வீட்டுக்காரர்கள் என்னவோ ஏதோவென்று எட்டிக் கதவைத் திறக்க அங்கு 'பிரேக்' இழந்த ஒரு லாரி அதிவேகமாய் வீட்டு வெளிச்சுவரைத் தகர்த்து அந்த மரத்தில் இடித்து நின்றது. அந்தக் குடும்பமே அந்த மரத்தால் காப்பாற்றப்பட்ட நம்பிக்கையில் அந்த மரத்திற்காக எழுதப்பட்ட 'மரண உத்தரவு' தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் அந்தப் பகுதியில் இரட்டை மரங்களின் சலசலப்பு விஸ்வநாதனோடு அளவளாவிக் கொண்டிருந்தது. அதில் விஸ்வநாதனுக்கு அந்தக் குடும்பத்தையும் அப்துல்லாவையும் காப்பாற்றிய மகிழ்ச்சி மணம் பரப்பி நின்றது.
உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com

வல்லமை இணைய இதழில் வெளியான கவிதைகள்

Tag Archive | "குமரி எஸ். நீலகண்டன்"

இருப்பும் இழப்பும்

Tags:


குமரி எஸ்.நீலகண்டன்

இழப்பை இருப்பும்
இருப்பை இழப்பும்
துரத்திக்கொண்டே
இருக்கின்றன.

சிலர் இருப்பது
இழப்பை
ஈடுகட்டவே..

பல இழப்புகளால்
உருவானவையே
சில இருப்புகள்.

இழந்தவை எல்லாம்
எங்கோ
இருந்துகொண்டிருக்கின்றன.

இருப்பவையெல்லாம்
யாரோ இழந்தவையாக
இருக்கலாம்.

இருப்பும் இழப்பும்
சதா இடம் பெயர்ந்துகொண்டே
இருக்கின்றன.

ஒளி
இருட்டை இழப்பதும்
இருட்டு
ஒளியை இழப்பதும்
எதார்த்தம்.

இழந்த ஒளியால்
வீட்டை நிரப்பலாம்
வாசல் திறந்து….

ஹெல்மெட்டின் பாதுகாப்பு - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை

Saturday June 26, 2010

ஹெல்மெட்டின் பாதுகாப்பு

குமரி எஸ். நீலகண்டன்

குப்பைப் பெட்டியின்

அருகே பிளாட்ஃபார்மில்

உடைந்து கிடந்த

அந்த ஹெல்மெட்

ஏதோ ஒன்றை சொல்கிறது..

ஒவ்வொருவரும்

ஒவ்வொரு விதமாய்

புரிந்து கொள்கிறார்கள்.


அதைப் பார்த்த கவிஞன்

மூளை இல்லாத

ஏதோ ஒருவனின் தலையை

இந்த ஹெல்மெட் பாவம்

இத்தனை நாள்

பாதுகாத்திருக்கிறது என்று

சொல்லிப் போனான்.


ஒரு பெரியவர்

பொறுப்பில்லாத மனிதன்

குப்பைப் பெட்டிக்கு

வெளியே போட்டதை

உள்ளே போட்டுச்

செல்லக் கூடாதா

என்று அங்கலாய்த்தார்.


தரமற்ற ஹெல்மெட்

தலை நொறுங்கி கிடக்கிறது.

ஹெல்மெட்டின்

சொந்தக் காரன் தலை

தப்பி இருக்குமோ

என்னவோ என

கவலைப் பட்டுப் போனான்

இன்னொருவன்.


கருமி ஒருவன் வாங்கிய

விலை குறைந்த

ஹெல்மெட் என

இன்னொருவன்

சொல்லிப் போனான்.


அதோ உடைஞ்சு கிடக்குதே

அதே வண்ணத்தில்தான்

நான் உங்களிடம்

சேலை வாங்கச் சொன்னேன்

என்று தர்க்கித்தாள்

அந்த வழியாய் சென்ற

அவனிடம் அவள் மனைவி.


இந்த உடைந்த

ஹெல்மெட்டை

சிலையாய் இங்கே

நிறுவ வேண்டும்.

அப்படி வைத்தால்

வேகப்ரியர்களின்

உயிர் தாகம் அடங்க

எச்சரிக்கையாய்

இருக்கும் என்றார்

ஒரு போலிஸ்காரர்.


பல வருடங்களுக்கு முன்பு

தலை கவசம் அணியாமல்

விபத்தில் சிக்கி

உயிரிழந்த தன்

கணவனின் நினைவில்

கண்களில் பொங்கிய

கண்ணீரை துடைத்து

விட்டுச் சென்றாள்

இன்னொரு பெண்.


ஹெல்மெட் அணிந்தும்

முகமூடி கொள்ளையர்கள்

கொள்ளை அடிக்கிறார்களாம்

என்று பைக்கின்

பின்னால் இருந்தவன்

முன்னால் இருந்தவனிடம்

சொல்லிப் போனான்.


அது வாகன

ஓட்டிகளுக்கு மட்டுமல்ல

திருடர்களுக்கும்

பாது காப்பானது.


சாலையில்

இன்னொரு பக்கம்

கண்ணாடித் துண்டுகள்

சிதறி கிடக்க ஒரு சிறுவன்

அந்த ஹெல்மெட்டை எடுத்து

அதை மூடி வைத்துப் போனான்

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

அமைதிப் பயணம் - திண்ணை இணைய தளத்தில் எனது படைப்புகள்



Saturday August 7, 2010


அமைதிப் பயணம்

குமரி எஸ். நீலகண்டன்

வழியெங்கும் சிதறி

சின்னாபின்னமான

சர வெடியின்

சிகப்பு காகிதச் சிதறல்கள்.

புகழின்

வாசத்தை வசமாக்கியும்,

கால்களில் மிதிபட்டும்

ஆங்காங்கு சிதறிய

மலர்களின் இதழ்கள்.

நடந்து சென்றவர்களின்

காதுகளும் வாய்களும்

ஈனக் குரலில்

எதையோப்

பரிமாறிக் கொண்டன.

சிலர்

இறந்தவனை உயிர்ப்பித்து

துப்பியும் துடைத்தும்

விட்டார்கள்.

இறந்தவனைக் குத்த

கத்தியுடன் திரிந்தவன்

ஆசை தீர குத்தி

மகிழ்ந்தான்.

ஊதுகிற சங்கு

எதையோ ஓதுகிறது

சிந்திய மலர்களிலிருந்து

சிந்தனையைப் பிராண்டும்

ஒரு வாசனை.

இவை

எதையும் பார்க்காமல்,

எதையும் கேட்காமல்,

எதையும் எண்ணாமல்,

எதுவும் கூறாமல்

அமைதியாய் சென்றான்

அந்த ஊர்வலத்தின்

கதா நாயகன்.

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

முகத்தினைத் தேடி - திண்ணை இணைய தளத்தில் எனது படைப்புகள்

Sunday July 18, 2010

முகத்தினைத் தேடி

குமரி எஸ். நீலகண்டன்


நீ பார்க்கும் என் முகம்

என்னுடையது அல்ல.

நீ நேற்று பார்த்த

என் முகமும்

என்னுடையது அல்ல.

நீ பார்த்த

அந்த முகம்

என்னுள் நீ உருவாக்கிய

உன்னுடைய முகம்.

சிரித்தாய் சிரித்தேன்.

அழுதாய் அழுதேன்.

கோபப் பட்டாய்

நானும் கோபப் பட்டேன்

நான் உன்னிடம்

பேசிய வார்த்தைகள்

என்னுள் உன் முகம்

உன்னிடமே பேசியவை.

எங்கோ இருக்கும்

என் முகம்

உனக்குத் தெரிவதில்லை.

எனக்கும் ஒரு சிலருக்குமே

பார்க்க இயன்ற

என் முகத்தை

உனக்குப் பார்க்க

வேண்டுமா?

முதலில்

உன் முகத்தைக்

கண்ணாடியில் பார்.

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

உள்ளே வெளியே - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை

Friday March 19, 2010

உள்ளே வெளியே

குமரி எஸ்.நீலகண்டன்..


சிறைக்கு வெளியே
குற்றத்தின் நாற்றத்தால்
சிறை மூக்கை பிடித்துக் கொண்டு
உள்ளே கைதிகளைப்
பார்த்து பெரு மூச்சு விடுகிறது.
குற்றம் செய்த கரங்களானாலும்
பற்றிக் கொள்ள
உயர்ந்து உறுதியுடன்
துணையாய் நிற்கும்
கம்பிகள் .
சிறைக் கம்பிகளின்
குறுகிய இடைவெளிகளாய்
சிறைக் கதவுகளின்
இருபுறங்களும்
இடைவெளி குறைவாகவே
இருக்கின்றது.
குறுகிய வெளிகளில்
குண்டர்களுக்கே
சிறைக்குள் நுழைய முடிகிறது
பாதுகாப்பாக.
கம்பிகளின் இரு பக்கங்களிலும்
இனங்கள் ஒன்றுதான்.
நிறங்கள் மட்டும் வேறு.
சிறைப் பட்டிருப்பது
கம்பிகள் மட்டும்தான்.
தெருவெங்கும் குப்பை...
குப்பைக் கூடைகள் ஓரளவு
சுத்தமாக இருக்கின்றன.
ஒவ்வொருப் புரிதலும்
பெரும்பாலும்
தடம் மாறா தவறுகளின்
உருவங்களாகவே
உயர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொரு சந்திப்பிலும்
அழுந்தப் பதியாத
ஆயத்தச் சிரிப்புகள்
காகிதப் பூக்களாய்
கர்ஜித்து எரிகின்றன.
கொள்ளை அடிக்கவே
கோபங்கள் குமுறி
எழுகின்றன.
அச்சமும் வெட்கமும்
ஒப்பனைப் பொருட்களாகவே
ஒவ்வொரு முகத்திலும்
ஒய்யாரமாய் தொங்குகின்றன.
மனங்களும் முகங்களும்
திரும்பி நிற்கின்றன.
வறண்ட மனங்களும்
வலிமையற்ற உணர்வுகளும்
தாலாட்டும் உலகத்தில்
தயவோடு ஒரு குழந்தைக்கு
தாயாக பாலூட்டும்
நாய்.
punarthan@yahoo.com



Copyright:thinnai.com 

பூனைக் காவல், மீனுவும் பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதைகள்

19.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் 21

பூனைக் காவல்

குமரி எஸ்.நீலகண்டன்

என்னை அறியாமலேயே
என்னுள்
ஏழெட்டுப் பூனைகள்
உலாவிக் கொண்டிருக்கின்றன.

எலியைக் கண்டதும்
எட்டிப் பாய்ந்தது
அந்தக் கருப்புப் பூனை.
பாலைக் கண்டு
பதுங்கி வந்தது
அந்த பரம
சாதுப் பூனை.
உருட்டுக் கண்களுடன்
உற்றுப் பார்த்தது
அந்த உளவுப் பூனை
என்னுள் எங்கோ
உறு உறுவென்று
உறுமிக் கொண்டே
ஒளிந்திருக்கிறது
இன்னொரு பூனை

என் மீசையை
தன் மீசையாக்கிக்
கொள்கிறது அந்த
தளர்ந்த பூனை
குதித்து குதித்து
குதூகலித்து
கும்மாளமிடுகின்றன
இன்னும் சில
குட்டிப் பூனைகள்
நான் கோபத்தில்
பதுங்கி பதுங்கிப்
பாய்கையில் யாரும்
என்னைக் கண்டு
பயப்படாமல்
காவல் காக்கின்றன
இந்த பூனைகள்
திருட்டு விழிகளுடன்

13.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20





மீனுவும் பூனையும்
குமரி எஸ்.நீலகண்டன்
மீனு அவளது அம்மாவிடம்
அநியாயத்திற்கு
கோபப்படுவாள்.
அம்மாவைப் பற்றியே
அம்மாவைப்
பிடிக்காதவர்களிடம்
ஆயிரம் குசும்பு
சொல்லி இருக்கிறாள்

கணவன் ஏதாவது
சொன்னால் பாம்பாய்
படமெடுப்பாள்
மாமியாரிடம்
மணிக் கணக்கில்
சண்டை போடுவாள்

அவளை யாரும்
குத்தம் சொன்னால்
கொத்துகிற பாம்பாய்
விஷத்தை பீய்ச்சுவாள்

ஆனால் மீனு அவளது
பூனையுடன் மட்டும்
மிகுந்த அன்பு காட்டுவாள்.
அதற்கு நேரம் தவறாமல்
பால் கொடுப்பாள்
அதன் பஞ்சு போன்ற
முதுகைத் தடவிக்
கொடுப்பாள். அதனை
ஷாம்பு போட்டு
நாள் தவறாமல்
குளிப்பாட்டுவாள்.

பூனையோடு கொஞ்சியும்
விளையாடுவாள் பூனையின்
காலில் ஏற்பட்ட
சிறிய காயத்திற்காக
அண்டை அயலாரிடம்
ஐயோ பாவம்
ஐயோ பாவமென
துக்கித்து துவண்டு
போனாள்.

எல்லோரும்
அந்த பூனையை
பதுங்கி பதுங்கி
ஒரு திருட்டுப் பார்வையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

30.5.10


பூனைகள்...........பூனைகள்................பூனைகள்......25





அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும்
அரசியல்வாதி
ஒரு பூனை வளர்த்தார்
அன்றாடம் பாலுடன்
அனுசரணையாய்
வளர்க்கப் பட்டது
அந்தப் பூனை
அவர் மடியில் கிடந்து
மாமிசம் சாப்பிட்ட
பூனை அது.

அரசியல்வாதி
எம். எல். ஏ ஆனார்.
எம். பி ஆனார்.
மத்திய மந்திரியும் ஆனார்
பூனைக் காவல்படையுடன்
சுற்றும் அவர் அருகே
இன்று அந்த பூனையால்
அண்ட இயலவில்லை

அரசியல்வாதியின் மனைவியாய்
நெடுங்காலம் இருந்த பின்
ஒரே நாளில் திடீரென
முதல் மனைவியாய்
பதவி உயர்வு பெற்ற
அந்தப் பெண்ணின்
சமையல் அடுப்பில்
தூங்குகிறது
இன்று அந்த பூனை


குமரி எஸ்.நீலகண்டன்..

ஆறுதல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

30.3.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20




ஆறுதல்

விடுமுறையில்
குழந்தைகளுடன் மனைவி
ஊருக்குச் சென்றுவிட்டாள்
குழந்தையின் பூனைக்கத்தல்,
அவனின் சிரிப்பு,
குறும்பு, குதூகலங்களின்
பின்னணியில்
மிக்ஸியின் காட்டுப் பிளிறல்
சமையலறையில்
பாத்திரங்கள் உருள்கிற
விழுகிற
பின்வாசலில்
வாளிகள் மோதுகிற
சப்தம் எதுவுமின்றி
குக்கர் விசில்,
குழாயில் தண்ணீர்
விழும் சப்தம், என
ஏதுமின்றி ஒரே நிசப்தம்.
தனிமையில் அவன்.
உயிர்களற்ற உலகில்
அவன் மட்டும்
தனிமையில்
உலவுவது போல்
ஒரு உணர்வு அவனுள்.
என்னவோ போல்
இருந்தது.
சமையலறையில் திடீரென
பாத்திரங்கள்
உருளும் சப்தம்.
அதிர்ச்சியில் அங்கே
சென்று பார்த்தான்
ஒரே ஆறுதல்.
சமையலறையில்
பதுங்கி வந்தன
எதிர் வீட்டுப் பூனை
அதன் குட்டிகளுடன்.

திருட்டுப் பூனை - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

பூனைகள் பூனைகள் பூனைகள் 22


திருட்டுப் பூனை

எல்லோருக்கும் உரியது
எல்லாம் என்று
எண்ணி இயங்குகிற
பூனைக்கு கிட்டியப் பெயர்
திருட்டுப் பூனை.

திருடாத பூனைக்கும்
உண்டு இப்பட்டம்.
இன்னொரு இனத்தால்
இடப் பட்ட
ஈனப் பெயர்.

இரையாகிற
எலிகள் கூட
நம்புகிறபோது
இவர்களுக்கு மட்டும்
திருட்டுப் பூனை.

கட்சித்தொண்டனாய்
தீக் குளித்தும்
காட்ட முடியாது அதற்கு
அதன் விசுவாசத்தை.

பாவம் விசுவாச அரிதாரம்
பூசத் தெரியாத
விழிகளுடன்
பதுங்கி பதுங்கி வாழும்
பரம சாதுவாய்
திருட்டுப் பூனை

கிழிசல் சேலை - நவீன விருட்சத்தில் எனது சிறுகதை


5.6.10


கிழிசல் சேலை





கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செயயாதவர்களுக்கான பெட்டியில் பயணம் செய்வது தாயம்மா பாட்டிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. நாகர்கோவிலில் ரயில் ஏறிய போது அந்த பெட்டியில் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை. இருக்கையில் காலை வசதியாக நீட்டி வைக்க முடிந்தது. ரயில் ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வள்ளியூர், என சினன ரயில் நிலையங்களைக் கடந்த போதுகூட பயணிகள் கூட்டம் எல்லா இருக்கைகளையும் நிரபபி விடடது. இருக்க ஓரததில் சிறிது இடம் கேடடவர்கள், சிறிது நேரததில் இடம் தந்தவர்களை இறுக்கி இருக்கையில் சவுகரியமாக உட்கார எததனித்தார்கள். தாயமமா பாடடி தன்னைவிட வயதான ஒருவருக்கும் , ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குமாக இடம் கொடுத்து கடைசியில் தரையிலேயே உட்கார்ந்தாள். தனக்கு துணையாக வந்த அந்த கோட்டாறுக் கடைக்காரப் பையன் பககவாட்டில் உயரததில் சாமான்கள் வைப்பதற்கான அநத குறுகிய இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் பார்த்து தாயம்மா பாட்டிக்கு பயம் கொடுதது விடடது.
'எப்பா விழுந்திராதப்பா|கீழே இறங்கு|' என உட்காரச் சொன்னாள். அவன் படுத்திருக்கும் இடததில் அவன் உடம்பின் கால் பகுதி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. சிறிது கவனமின்றி கண் அயர்ந்தால் கூட கீழே விழ வேண்டியதுதான். கீழே விழுநதால் தலையில் அடி விழுந்து உயரே போய் விடும் ஆபத்து. இபபடி கவலையில் பாட்டி அவனை உரககக் கூப்பிட்டு அச்சுறுத்தினாள். சுற்றி இருககும் சிலருககு அது பொழுது போக்கு களமானது. எல்லோரும் பாட்டியை கிண்டல் செய்தார்கள். உட்கார்ந்தால் தலை தட்டுகிற அந்த குறைந்த உயரத்தில் அவனைப் போல் பலரும் படுத்திருந்தார்கள். அதிலும் அதிசயமாய் ஒருவர் தனது பருத்த தொப்பை ரயிலின் கூரையைத் தட்ட ரயிலுக்கு இணையாய் குறட்டை ஒலியால் கூவிக் கொண்டிருந்தார். அவர் தன் மேல் விழுந்து விடுவாரோ என அஞ்சி கீழே உட்கார்ந்திருந்த ஒருவர் இடம் மாறி சென்று விட்டார். இந்த அதிசயங்களோடு பயணிகளின் அவஸ்தைகளையெல்லாம் சகித்துக் கொண்டு ரயில் உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தது.
ரயிலை விட விரைவாய் பாட்டியின் மன ஓட்டம் இருந்தது. இது கூட அவளுக்கு எதிர்பாராமல் எதிர் கொள்ளும் பயணமாக இருந்தது. செனனையிலுள்ள தனது இளைய மகள் வழி பேத்திக்கு சென்ற வாரம்தான் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். உறவினர்கள் அதிகம் பேர் சொந்த ஊரில் இருந்ததால் அவர்களின் வசதிக்காக திருமணத்தை நாகர்கோவிலிலேயே நடத்தினார்கள். திருமணமென்ற சடங்கின் மூலம் தொலைவிலுள்ள தனது பிள்ளைகளையும் உறவினர்களையும் ஒன்றாகப் பார்க்க இயல்வதில் தாயம்மாவிற்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. தான் தற்போது வசிக்கும் ஊர், அதன் மக்கள், அங்குள்ள சடங்குகள், பிளளைகள், அதன் பள்ளிகள், அவர்களின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் சொநத ஊரில் கூடிப் பகிர்ந்து கொண்டார்கள். இத்தோடு ஒரு சிலரின் பேச்சிலும் சிரிப்பிலும் அவர்கள் பலரிடம் கொண்ட வன்மப் பகையின் சாயல்கள் கொடிய மிருகமாய் பதுங்கி இருந்தன. தாயம்மா பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகம் எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறது. தனது மூத்த மகள் ரமணியையும் இளைய மகள் சுனிதாவையும் இப்போதுதான் பள்ளிக்கு கொண்டு விட்டது போல் இருக்கிறது. அதற்குள் அவர்கள் பெரியவர்களாகி, திருமணமாகி, குழந்தைகளும் பெற்று, அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரியவர்களும் ஆக்கி, அவர்களுக்கும திருமணம் நடந்தாகி விட்டது. பேத்தியின் திருமணம் முடிந்து சென்னையில் நடைபெறும் விருந்து வைபவத்திற்காக, இளைய மகளின் நிர்ப்பந்தத்தில் பாட்டி சென்னைக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறாள்.
தாயம்மா பாட்டிக்கும் சேர்த்துத் தான் மொத்தம் இருபது டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த குடும்பத்தின் மூத்த குடிமகளான அவளுக்கு மட்டும் பதிவு செய்யப் படாத பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. அதுதான் அவளை இந்த நரக வேதனைக்குள்ளாக்கியது.
தான் தனது அம்மா அப்பாவை நேசித்த அளவிற்கு தனது பிள்ளைகள் தன்னை நேசிக்காதது தாயம்மா பாட்டிக்கு வருத்தத்துடன் ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்தாள்... எதுவும் பிடிபடவில்லை. ஆனாலும் அவள் தன் பிள்ளைகளைப் பற்றி மோசமாக யாரிடமும் எதுவும் சொன்னது கிடையாது.
பிள்ளைகள் சிறிதாக இருந்த போது இருவரில் இளைய மகள் சுனிதாவைப் பற்றித்தான் மிகவும் கவலைப் படுவாள். பொறுமையானவள். பிழைக்கத் தெரியாதவள், சூது வாது தெரியாது... எதைச் சொன்னாலும் நம்பி விடுவாள். இன்னொரு வீட்டில் மணமாகி செல்லப் போகிற இவள் எப்படி குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கப் போகிறாள் என்று கவலைப் பட்டு புத்திமதி சொல்வாள். அன்று பல இரவுகள் உறங்காமல் தான் கவலைப் பட்ட அந்த மகளா இன்று இவ்வளவு பெரிய சாமரத்தியசாலி. மிகுந்த ஆச்சரியமாக இருந்த்து அவளுக்கு.
தாயம்மா பாட்டிக்கு எண்பது வயதாகி விட்டது. சில மாதங்களாக முதுமை காரணமாக உடல்நலமின்றி மிகவும் பலவீனமாகவே இருந்தாள். திருமணம் நாகர்கோவிலிலேயே நடந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டாள். தனது உடல் நலனைக் காரணம் காட்டி சென்னைக்கு விருந்துக்கு வர மறுத்தாள். இளைய மகளோ ' அம்மா நீங்க நிச்சயம் வரணும் . மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உங்களை கண்டிப்பா சென்னை விருந்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. அதனாலே நீங்க நிச்சயம் வந்தே ஆகணும். நீங்க வரல்லைண்ணா அவங்க தப்பாதான் எண்ணுவாங்க. இன்னும் உன் இளைய பேத்திக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் வேற இருக்கு. அதுக்கு கருமுத்து செட்டியார்ட்டே நீ வந்து நேரிலே சொன்னாதான் காரியம் நடக்கும். ஒரு வாரம் எங்கக் கூட இருந்திட்டு திருப்பி வந்திடலாம் 'என்று சொன்னாள்.
இளைய மகள் சுனிதா எந்த அளவிற்கு மாறி விட்டாள். திருமணமெல்லாம் முடிந்து சாமான்களையெல்லாம் பத்திரமாக பெட்டிகளாகக் கட்டிக் குவித்த போதே தனது மகளின் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டாள். அவளுடைய நகைகளையும் துணிகளையும் மருமகன் பெரிய பைக்குள் அடைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள் இன்னமும் பாட்டியின் காதுகளில் அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கின்றன.
‘என்னங்க பையிலே துணியை இப்படி யாராவது அடுக்குவாங்களா? கிழிசல் சேலையை பத்திரமா உள்ளே வச்சிகிட்டு நகையை மேலே வச்சிருக்கீங்க| இபபடி வச்சா ஊரு போனா கிழிசல் சேலைதான் கிடைக்கும். முதல்லே நகையை பத்திரமா அடியிலே வச்சுகிட்டு எல்லா துணியையும் வச்ச பின்னாடி அம்மாவுக்க அந்த கிழிசல் சேலையை கடைசியிலே வைங்க .அது தொலைஞ்சு போனாலும் பரவாயில்ல' என்றாள்.
அப்போது தனது மகளுக்கு இவ்வளவு புத்தி வநது விடடதே என சந்தோஷப் பட்டாள். ஆனால் இன்று அந்த வார்த்தைகள் கத்தியாய் அவள் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது போல் இருக்கிறது. தானும் ஒரு கிழிந்த சேலையாய் அவளுக்கு பட்டது. கல்யாண நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும்தான் நடந்தன. சுனிதாவைவிட அவளது சம்பந்தக்காரர்கள் தாயம்மாவை மிகவும் கவனித்து மரியாதை செலுத்தினார்கள். நிச்சயமாக சென்னை விருந்திற்கு வரவேண்டுமென விரும்பி வற்புறுத்தினார்கள். இறுதியில அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாயமமாவும் ரயிலுக்கு முன்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்தாள். சம்பந்தக்காரர்கள் கல்யாணம் முடிந்த மறுநாளே சென்னை திரும்பி விட்டனர். பெண்வீட்டாரோ திருப்பி கொடுக்க வேண்டிய கல்யாண சாமான்கள் பாத்திரங்களையெல்லாம் சரி செய்து விட்டு மூன்றாவது நாள் திரும்பினர்.
துணிமணிகள், கல்யாண அவசியத்திற்காக சென்னையிலிருந்து கொண்டு வந்த பொருட்களென எல்லாவற்றையும் கட்டிப் பெட்டிகளாக்கிய போது ரயில் புறப்படுவதற்கு இன்னமும் ஒரு மணி நேரமே இருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு அவசர அவசரமாக காரைப் பிடித்து ரயில் நிலையம் வந்த போது அரை மணி நேரம் ஆகி இருந்தது. பிளாட் ஃபார்மில் எல்லாப் பொருட்களையும் வைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ரயிலின் வருகைக்காக காத்திருந்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து ரயில் சிறிது கால தாமதமாகவே வந்தது. இவர்கள் ஏற வேண்டிய எஸ்.8 பெட்டியும் அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியே இருந்தது. ரயில் புறப்படுவதற்கு பதினைந்து நிமிடங்களே இருந்தன. தாயம்மா பாட்டியைப் பொருட்களுக்கு காவலாய் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஒவ்வொரு பொருளாக பெட்டிக்கு கொண்டு போனார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பெட்டியில் சேர்க்கவும் ரயிலும் புறப்பட்டு விட ஒரு துணிப்பையுடன் தாயம்மா பாட்டி மட்டும் ரயில் நிலையத்தில் மாட்டிக் கொண்டாள். தாயம்மா பாட்டிக்கு எனன செய்வதென்றேத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவளிடம் மூத்த மகள் வாங்கி கொடுத்த அந்த பழைய செல்ஃபோன் அலறியது. பாட்டி பதட்டத்துடன் செல்ஃபோனை எடுக்கவும் இணைப்பு தடை பட்டது. வீட்டிற்கே திரும்பி விடலாம் என்றால் வீட்டுச் சாவி கூட ரயிலிலுள்ள பையில்தான் இருக்கிறது. அடுத்து வந்த அழைப்புகளிலும் ரயில் நிலையத்திற்கே உரிய ஒலிப் பின்னணியில் எதிர் முனை பேச்சினை அவளால் உள் வாங்க இயலாமல் பக்கத்திலிருந்த ஒரு இளைஞனின் உதவியுடன் ரயிலிலிருந்து அழைத்த மகளுடன் பேசினாள். ஒரு பயனுமில்லாத அசிரத்தையான வருத்தத்தை மகள் தெரிவித்தாள்.
'அம்மா பத்திரமா அதே இருக்கையில் இரு| கோட்டாற்றிலே நம்ம கடைக்கார பையனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறேன். அவன் ஒரு மணி நேரத்திலே வந்திடுவான். அம்மா அடுத்த டிரெயின்லே அவன் கூட வந்திடு' என்றாள்.
அரை மணி நேரத்தில் அந்த கடைக்காரப் பையனும் வந்து டிக்கெட் எடுத்து பாட்டியை பத்திரமாக இருக்கையிலும இருத்தினான். அவனின் பாசம் பாட்டிக்கு சிறிது ஆறுதலைத் தந்தது. அவன் முடிந்த அளவு பாட்டியை சவுகரியமாக உட்கார வைத்தாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கே உரிய அசவுகரியங்களை அவள் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதிலும் கோடை விடுமுறைக் கூட்டம் வேறு. இந்த கூட்டத்தில் யாரும் யாரையும் மிதிக்கலாம். இந்த அசவுகரியத்தில் சமத்துவமும் சகிப்புத் தன்மையும் தானாகவேப் பிறக்கிறது. எந்த வசதியுமற்ற இந்தச் சூழலில் சிலர் குறட்டை விட்டு தூங்குவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கும். வீட்டில் இவர்கள் இவ்வளவு சுகமாகத் தூங்குவார்களா என நினைக்கத் தோன்றும். நாள் முழுக்க உழைத்த அவர்களின் உழைப்பின் களைப்போ என அனுதாபம் ஒருபுறம். மற்றவர்களின் இடங்களை ஆககிரமித்து நீட்டி நிமிர்த்தி படுத்திருக்கும் அவர்களது சுய நலத்தை எண்ணி கோபிக்கும் ஒரு மனம்.
தனது எண்பது வயது வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கண்ட அவள் ரயிலில் இன்னும் புதிய மனிதர்களை சந்தித்தாள். எல்லாவற்றையும் விட தான் பெற்று வளர்த்த மகளே மிகவும் புதிதாகத் தெரிந்தாள்.
தாயம்மா பாட்டியின் அருகில் அழுக்குத் துணிகளும் பொருட்களும் நிறைந்த பையும் குழந்தைகளுமாக ஒரு தம்பதி உட்கார்ந்திருந்தது. கைக் குழந்தை அழுது கொண்டிருக்க இன்னொரு பையன் அவனது அப்பாவின் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அம்மாவோ தலை வலியில் புழுவாய் துடித்துக் கொண்டிருக்க அப்பாவோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். தாயம்மா தலைவலிக்காக பையில் வைத்திருந்த ஹோமியோபதி மருந்தினை எடுத்து அநத பெண்ணிடம் கொடுத்து உதவினாள். சிறிது நேரத்திலேயே அவள் தலைவலியிலிருந்து விடுபட்டு நன்றி சொனனாள். தனது அவஸ்தை மிகுந்த இந்த பயணத்திலும் பாட்டிக்கு ஒரு திருப்தி. இந்தப் பெட்டியில் பயணம் செய்ததால் தானே இந்தப் பெண்ணிற்கு உதவ முடிந்தது என்று.
மணி அதிகாலை மூன்றாகி இருக்கும். பாட்டி உறக்கம் வந்தும் உறங்க முடியாமல் அரைத் தூக்கத்தில் இருந்தாள். அப்பொழுது ஒரு கனவு. ஒரு பெரிய பைக்குள் கீழே பாட்டியின் பிள்ளைகள் படுத்துக் கிடக்க அதன் மேல் பட்டுச் சேலைகள் போர்த்தி இருக்க பாட்டி பையின் மேல் பகுதியில் கிழிசல் சேலையுடன் படுத்து கிடந்தாள். கனவு மயக்கத்தில் களைத்த பாட்டி நிலையத்தில் நின்ற ரயிலின் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு விழித்தாள். பக்கத்தில் இருந்த அந்த ஏழைப் பெண் பாட்டியின் காலைத் தொட்டு நன்றி கூறி விட்டு குடும்பத்துடன் ரயிலை விட்டு இறங்கினாள். அதற்குள் ரயில் புறப்படுவதற்கான ஹாரன் ஒலித்துவிட அநத பெண் கணவனிடம்
' நீங்க முதல்லே குழந்தையை இறக்குங்க. ரயில் புறப்பட்டாச்சு. சீக்கிரம் .... சாமான்ங்க போனாப் பரவாயில்ல கடைசியிலே எடுத்துக்கலாம் சீக்கிரமா குழந்தையை இறக்குங்க ' என்றாள்.


9.4.10


பூனைக் கனவு



பிரசவ அறையின் வெளியே
களைப்புடன் திகைப்புடன்
அரை தூக்கத்தில்
காத்திருந்த என்னுள்
என்னை மீறி
ஒரு கனவு
உளவு பார்த்தது.
அதில் ஒரு பூனை
பதுங்கி பதுங்கி வந்தது.
விழிகளில் ஒளி மிளிர
வீலென்று கத்திற்று
அந்த பூனை.
அதற்குள் சார் உங்களுக்கு
ஆண் குழந்தை
பிறந்திருக்குது என்று
என்னைத் தட்டி
எழுப்பி செய்தி
சொன்னாள் அந்த
மருத்துவமனை தாதி.

22.3.10


அழுகையும் அவனின் நகைச்சுவையும்




நான் இழந்து விட்டேன்.
எல்லாவற்றையும் இனி
இழப்பதற்கு எதுவுமில்லை என
அழுதான் அவன்.

அவனைச் சுற்றிலும்
கல் நெஞ்சைக் காட்டி
கனத்துயர்ந்த மலைகள்.

பூமித் தாய்க்காய்
நீரில் நெய்த
வெள்ளிச் சேலையாய்
வளைந்தோடும் அருவிகள்.

இடைவிடாது காற்றை வீசி
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும்
மரங்கள்.

இளமைத் துடிப்புடன்
அவனோடு
இடறி விளையாடும்
இளந் தாவரங்கள்.

வனப்பான நட்சத்திரங்களுடன்
வளைந்து விரிந்த
வானம்.

அவன் மனதை
விரித்து உலர்த்த
விரிந்த மயானம்.

மனதை ஈரப்படுத்திக்
கொண்டே இருக்கும்
பதமான நீர் துளிகள்.

சுற்றி இருக்கும்
இவை எல்லாவற்றையும்
பார்த்து அழுதான்.

கதறி கதறி
அழுதான்.

'' நான் இழ்ந்து விட்டேன்
எல்லாவற்றையும்.......
இனி இழப்பதற்கு
எதுவுமில்லை '' எனப்
புலம்பி அழுதான்.

சுற்றி இருக்கும் அனைத்தும்
அவனைப் பார்த்து
சிரித்தன.

அந்த சிரிப்பொலி மட்டும்
அவனுக்குக் கேட்கவே
இல்லை.