Thursday, April 21, 2011

சுமை தூக்குபவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

சுமை தூக்குபவன்
குமரி எஸ். நீலகண்டன்

உருவமற்று ஒரு சுமை
ஒட்டிக் கொண்டிருக்கும்
அவனது உச்சந்தலையில்.

காற்று ஏறி ஏறி
வெடிக்கப் போகிற
பலூனாய் தலையில்
பெருத்துக் கொண்டிருப்பதை
அறியாமல் பாவம்
அவன்.

அவனது ஐம்புலன்களும்
அசாதாரணப் பெருமிதமும்
ஆக்கி உருட்டியக்
கருப்புச் சுமை போன்ற
கனவு உருவமது.

குனிந்து விழாமல்
பணிந்து விழுகிற
வெயிலுக்கும் குளிருக்கும்
விலகாமல் உறைந்து
சிரிக்க சிந்திக்க
பேச விடாது
அழுத்தும் பெருஞ்சுமை.

அதி வேகமாய்
சுழலும் மின்விசிறியின் கீழ்
ஒரு டேபிள் வெயிட்டின் கீழ்
அகப்பட்டுக் கொண்ட
இத்துப் போன விரிந்த
பழைய ஒற்றைக்
காகிதமாய் கிழிபட்டுக்
கொண்டிருக்கும் அவன்.