Monday, December 26, 2011

ஊனப் பிள்ளையார் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

ஊனப் பிள்ளையார்
குமரி எஸ். நீலகண்டன்

அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி....
பட்டினியாய்... பரிதாபமாய்...

இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதகப் பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.

Tuesday, December 20, 2011

நிலா விசாரணை - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலா விசாரணை
குமரி எஸ். நீலகண்டன்

வெயிலில் வெந்து
தணிந்த கடலில்
குளித்து முகமெங்கும்
மஞ்சள் பூசிய
மகாராணியாய்
வானமேறி வருகிறது
அழகு நிலா...

விரைந்து வருகின்றன
அவளைச் சுற்றி
வெள்ளியாய் மிளிரும்
விண்மீன் படைகள்..

ஓய்ந்துறங்கும் உலகை
உற்று நோக்குகிறாள்.
எல்லாமே
உறங்குவதாய் கருதி
திருடர்கள் மிக
கவனமாய் திருடிக்
கொண்டிருக்கிறார்கள்.

வேட்டை நரிகள்
அப்பாவிகளை
வேட்டையாடிக்
கொண்டிருக்கின்றன.

நாய்கள் குரைத்துக்
கொண்டே இருக்கின்றன.

காற்று கதவுகளைத்
தட்டித் தட்டி
உறங்குபவர்களை
எச்சரித்துக் கொண்டே
இருக்கின்றன.

எல்லாவற்றையும்
புறக்கணித்து விட்டு
அழுக்கு மிதக்கும்
நடைபாதையில்
தன்னந் தனியாய்
மல்லாந்து படுத்து
நிலவைப் பார்த்து
சிரித்தும் அழுதும்
தன் அந்தரங்கக்
கதைகளை சொல்லும்
மனநலமற்ற
இளம் பெண்ணின்
மனக் குறிப்புகளை
கவனமாகக்
கேட்கிறது நிலா...

Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு உண்ணாவிரத மேடையில்
குமரி எஸ். நீலகண்டன்

மரண தண்டனையை
எதிர்த்தும் மனித
உரிமைகளுக்காகவும்
உண்ணாவிரதமிருந்தான்
அவன்.

எந்த உயிரைக்
கொல்வதற்கும்
மனிதனுக்கு உரிமை
இல்லையென்றே
முழங்கினான்.

அவனைக் கடித்துக்
கொண்டே இருந்த
கொசுக்களை
அடித்து அடித்து
இதையெல்லாம்
சொல்ல வேண்டி
இருக்கிறது அவனுக்கு.

Tuesday, December 6, 2011

புள்ளிக் கோலங்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

புள்ளிக் கோலங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

அரைப் புள்ளிகள்
இணைந்த போது
ஒரு புள்ளியின்
கரு உருவானது.

இருட்டில் வளர்ந்து
ஒரு நாள்
வெளிச்சத்திற்கு
வந்த போது
அதற்கெல்லாமே
ஆச்சரியக் குறியாய்
இருந்தது.

கால் நிமிர்ந்தபோது
காற் புள்ளியானது.

கேள்விக் குறிகளோடு
உலகைக் கற்றுக்
கொண்டே வந்தது.

காலங்கள்
செல்லச் செல்ல
காற்புள்ளி
அரைப் புள்ளியாயிற்று.

மேலானவர்களின்
மேற்கோள் குறிகளுடன்
மேலாக வளர்ந்த அது
முக்காற்புள்ளியாய்
முதுமையை எட்டிற்று.

முகமெங்கும்
வரை கோலங்களுடன்
முதுகு வளைந்து
பணிவுடன் ...
முழுப் புள்ளியான
முற்றுப் புள்ளியை
எதிர்நோக்கி
இருக்கிறது
முக்காற்புள்ளி.