Wednesday, February 2, 2011

மேசை துடைப்பவன் - இந்த வார கல்கியில் வெளியான கவிதை

மேசை துடைப்பவன்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த உணவு விடுதியில்
மேசை துடைக்கும்
அந்தச் சிறுவன்
அவன் முகம்
தெரியத் தெரிய
பளபளவென
அந்த மேசையைத்
துடைத்துக் கொண்டே
இருக்கிறான்.

இருப்பவரைப் பொறுத்து
மேசையில் அவன்
முகத்தின் மேல்
சிதறிய சட்னி... சாம்பார்...
தேநீர்.. காப்பி என
இத்யாதிகள்...

அவனும்
அவன் முகத்தில்
எந்தக் கறையுமின்றி
முகம் தெரியத் தெரியத்
துடைக்கிறான்.
ஒரு தடவை கூட
மேசைக்குள்
அவன் முகம்
அவனைப் பார்த்து
சிரிக்கவே மாட்டேன்
என்கிறது.