Tuesday, August 10, 2010

ஹெல்மெட்டின் பாதுகாப்பு - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை

Saturday June 26, 2010

ஹெல்மெட்டின் பாதுகாப்பு

குமரி எஸ். நீலகண்டன்

குப்பைப் பெட்டியின்

அருகே பிளாட்ஃபார்மில்

உடைந்து கிடந்த

அந்த ஹெல்மெட்

ஏதோ ஒன்றை சொல்கிறது..

ஒவ்வொருவரும்

ஒவ்வொரு விதமாய்

புரிந்து கொள்கிறார்கள்.


அதைப் பார்த்த கவிஞன்

மூளை இல்லாத

ஏதோ ஒருவனின் தலையை

இந்த ஹெல்மெட் பாவம்

இத்தனை நாள்

பாதுகாத்திருக்கிறது என்று

சொல்லிப் போனான்.


ஒரு பெரியவர்

பொறுப்பில்லாத மனிதன்

குப்பைப் பெட்டிக்கு

வெளியே போட்டதை

உள்ளே போட்டுச்

செல்லக் கூடாதா

என்று அங்கலாய்த்தார்.


தரமற்ற ஹெல்மெட்

தலை நொறுங்கி கிடக்கிறது.

ஹெல்மெட்டின்

சொந்தக் காரன் தலை

தப்பி இருக்குமோ

என்னவோ என

கவலைப் பட்டுப் போனான்

இன்னொருவன்.


கருமி ஒருவன் வாங்கிய

விலை குறைந்த

ஹெல்மெட் என

இன்னொருவன்

சொல்லிப் போனான்.


அதோ உடைஞ்சு கிடக்குதே

அதே வண்ணத்தில்தான்

நான் உங்களிடம்

சேலை வாங்கச் சொன்னேன்

என்று தர்க்கித்தாள்

அந்த வழியாய் சென்ற

அவனிடம் அவள் மனைவி.


இந்த உடைந்த

ஹெல்மெட்டை

சிலையாய் இங்கே

நிறுவ வேண்டும்.

அப்படி வைத்தால்

வேகப்ரியர்களின்

உயிர் தாகம் அடங்க

எச்சரிக்கையாய்

இருக்கும் என்றார்

ஒரு போலிஸ்காரர்.


பல வருடங்களுக்கு முன்பு

தலை கவசம் அணியாமல்

விபத்தில் சிக்கி

உயிரிழந்த தன்

கணவனின் நினைவில்

கண்களில் பொங்கிய

கண்ணீரை துடைத்து

விட்டுச் சென்றாள்

இன்னொரு பெண்.


ஹெல்மெட் அணிந்தும்

முகமூடி கொள்ளையர்கள்

கொள்ளை அடிக்கிறார்களாம்

என்று பைக்கின்

பின்னால் இருந்தவன்

முன்னால் இருந்தவனிடம்

சொல்லிப் போனான்.


அது வாகன

ஓட்டிகளுக்கு மட்டுமல்ல

திருடர்களுக்கும்

பாது காப்பானது.


சாலையில்

இன்னொரு பக்கம்

கண்ணாடித் துண்டுகள்

சிதறி கிடக்க ஒரு சிறுவன்

அந்த ஹெல்மெட்டை எடுத்து

அதை மூடி வைத்துப் போனான்

குமரி எஸ். நீலகண்டன்




Copyright:thinnai.com 

No comments: