Saturday, October 30, 2010

செய்தியும் கவிதையும் - ஆணுறையில் நவரத்தினங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

செய்தியும் கவிதையும்


ஆணுறைக்குள் நவரத்தினங்கள்

குமரி எஸ். நீலகண்டன்

(நவரத்தினக் கற்களை ஆணுறைக்குள் வைத்து விழுங்கி, கடத்திய இலங்கை வாலிபர் சென்னையில் கைது என்ற செய்தியின் எதிரொலியாக எழுந்த படைப்பு)

நவரத்தினங்கள்

நவதானியங்களுக்குப் பதில்
நவரத்தினங்களை
உண்ணும் குருவிகள்.


நவரத்தினம் உண்ணும்
நாகராஜர்.


ஆணுறை இவருக்கு
மட்டுமல்ல இவரின்
நவரத்தினங்களுக்கும்
பாதுகாப்பாம்.


அவரோடு அவரின்
நவரத்தினங்கள்
வந்த வழியும் தனிவழி.


கழிவுகளை நோக்கி
கழிவுகளோடு வந்த
நவரத்தினங்கள்.

Thursday, October 28, 2010

சில எதிர்பார்ப்புகள் - உயிர்மை உயிரோசையில் வெளியானக் கவிதை

சில எதிர்பார்ப்புகள்
குமரி எஸ். நீலகண்டன்

எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர்வரவின் கொடுந்தீயில்
பார்வைகள் பொசுங்காமல்...
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவு
அதி வலிமையுடன்
ஆயுத பலத்துடன்
உள உறுதியுடனும்
இருக்கலாம். 
எதிர்பாராமல் இருக்கலாம்.
அகத்துள் ஒரு யுத்தமும்
ஆயுதப் பிரளயமும்
தவிர்க்கலாம். 
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவில்
பூக்களின் வாசத்துடன்
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பில் அதன்
இறகுகளின் பூக்கள்
இருபுறமும் விரிய
காற்றின் வாத்தியத்துடன்
கவிதைகள் பூக்கலாம். 
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவிலேயே
செலவும் செய்யலாம்.

எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர் வரவு எதிரியின்
வருகையாய்
இடம் கொடாமல்..... 
எதிர்பாராமல் இருக்கலாம்.
கண்களை மூடி
கதவுகளில் ஒளிந்து
கவலைகளில் கரையாமல்.
எதிர்பாராமல் இருக்கலாம்.
எதிர்வரவே வாழ்க்கையின்
வரைபடமாதலால்....
உயிரின் உறைவிடமாதலால்
வருபவை வரட்டுமென்று
வாசலைத் திறந்து வைத்து

Tuesday, October 26, 2010

மழையின் மொழி - திண்ணை இதழில் வெளியானக் கவிதை

Sunday October 24, 2010

மழையின் மொழி

குமரி எஸ். நீலகண்டன்



அழுக்கான புழுக்கத்தில்
நினைவுகள் அடங்கி நான்
நித்திரையில் கிடக்கையில்
சோவென்று பெய்த மழை
என்னை எழுப்பியது...

நான் அரை விழிப்பில்
நித்திரைக்குள் மீண்டும்
நுழைய முற்படுகையில்
அது தன் ராக ஆலாபனையில்
என் முகத்தை நீரால்
கழுவியது....

கனவுகளெல்லாம் புழுக்கத்தில்
புதைந்து போக
அழுது அழுது அது தன்
வானச்சுமையை நீராய்
கரைத்தாயிற்று... 
நாற்றங்களை பொசுக்க 
வழியில் ஒரு
ரோஜாப் பூவையும் 
பறித்தாயிற்று.

குப்பைகளைக் கூட்டி
குழிகளில் தள்ளி
செடிகொடிகளின் கால் கழுவி
அழுக்கானத் தரைகளை மெழுகி
வழிபோக்கர்கள் இன்னொருமுறை
சிறுநீர் கோலமிடவும்
துப்பல் ஓவியங்கள் வரையவும்
பாதைகளைக் கழுவித்
தயார் செய்து விட்டு
சொட்டிச் சொட்டி
தரையைத் தட்டித் தட்டி
என்னிடம் விடைபெற்றுச்
சென்றது மழை.

punarthan@yahoo.com

Monday, October 25, 2010

மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம் - திண்ணையில் வெளியான இலக்கியக் கட்டுரை

Sunday October 24, 2010

மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்

குமரி எஸ். நீலகண்டன்





பிரபல மலையாளக் கவிஞர் ஏ. அய்யப்பன் தனது 61 வது வயதில் சென்ற 21ம் தேதி காலமானார். அவரது மரணமானது இறந்த தினத்தின் மறுநாளே மக்களுக்குத் தெரிந்தது. அய்யப்பன் சென்ற வியாழக்கிழமை திருவனந்தபுரம் தம்பானூரில் ரயில் நிலையம் அருகில் மக்கள் கூட்டம் மிகுந்த ஒரு தெருவில் நினைவற்ற நிலையில் கிடந்தார்.காவல் துறையும் மக்களும் சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சில மணி நேரங்களில் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப் பட்டு அவர் அடையாளம் காணப்படாமல் பிணவறையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான சோதனை வருகையின் போது ஒரு மருத்துவரால் அவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே அதிக குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புக்குள்ளான அவர் சென்ற மாதம் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வந்தவர். மலையாள இலக்கியத்தின் மிகப் பிரபலமான விருதான குமாரன் ஆசான் விருதினைப் பெறுவதற்கு 23 ஆம் தேதி சென்னைக்கு வரவிருந்தவர். மாலமில்லாத பாம்பு, ஓணக்காழ்சகள், புத்தனும் ஆண்குட்டியும், வெயில், சுமங்கலி ஆகியன அவரது முக்கியமான படைப்புக்களாகும். 1999ல் கேரள சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர். பள்ளிப்பருவத்திலேயே கவிதைகளை எழுதத் துவங்கியவர் இருபது தொகுதிகளாக இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதி உள்ளார். தனது தத்துவார்த்தமான கவிதைகளால் இளைய தலைமுறையினரின் இதயத்தைக் கவர்ந்து இனிதே நேசிக்கப்பட்டவர். 1949 ல் திருவனந்தபுரம் அருகே பாலராம புரத்தில் பிறந்த அவர் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அதன் கருத்து முழக்கமான ஜனயுகத்தில் சில காலம் பணியாற்றினார். சோகமயமானது அவரது இளமைக் காலம். அவரது ஒரு வயதில் பொற்கலைஞரான அவரது தந்தை விஷமருந்தி தற்கொலை செய்தார். அவரது பதினைந்தாவது வயதில் அம்மாவும் தற்கொலை செய்தார். நேமத்திலுள்ள அவரது சகோதரி சுபலக்ஷ்மி தம்பதியரின் துணையுடன் வாழ்ந்து வந்தார். தனிமை விரும்பியான அவர் சொந்த வீடின்றி சகோதரி வீடு நண்பர்கள் வீடென சுற்றித் திரிந்தார். நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் அதிகம் காணக் கிடைத்தார். மலையாளத்தின் முக்கிய திரைப்பட தயாரிப்பாளரான ஜான் ஆப்ரகாமின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரது நண்பர்களில் ஒருவரான சத்யன் என்பவர் அய்யப்பனைக் குறித்து ஒரு குறும்படம் செய்த போது அதை நிறைவேற்ற அவருக்கு இரண்டு வருடமாயிற்று. காரணம் கவிஞர் பல நேரங்களில் காமிராவின் எல்லைக்கு அப்பால் ஏதோ ஒரு தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார். நாடோடியாக அலைந்து திரிந்து வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர்.சமூகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட வாழ்க்கையும் எழுத்தையும் விரும்பாத அவர் சுதந்திரமாக எழுதினார். சுதந்திரமாக வாழ்ந்தார். பெரும்பாலானத் தருணங்களில் தெருவே அவருக்கு வீடாக இருந்தது. வீடோ அவரின் கவிதை மொழிக்கு சாதகமற்று இருந்தது. 70 களில் அட்சரம் என்ற இலக்கிய இதழை கொண்டு வந்தார். அதுவே அவரது இன்றைய நவீன இலக்கிய படைப்பாற்றலுக்கு உந்து சக்தியாக இருந்தது. அவருடைய மரணமும் அவருடைய வாழ்க்கையைப் போலவே நிகழ்ந்தது. அவரது மரணத்தின் போது அவரது சட்டைப் பையில் அவர் இறுதியில் எழுதிய மரணத்தின் வாசம் கொண்ட ஒரு கவிதையுடன் ஒரு துண்டு காகிதமும் வெறும் 375 ரூபாயும் மட்டுமே இருந்தது. அவர் முன்பு எழுதிய ஒரு கவிதையானது...

ரத்தம் தோய்ந்த விபத்தில்
இறந்த அவனைச் சுற்றி
மக்கள் கூட்டம்.
என் கண்கள் இறந்தவனின்
சட்டைப் பைக்குள்
ஒட்டி இருக்கும்
ஐந்து ரூபாயின் மேல்.

அவரது கவிதையைப் போலவே அவரது மரணமும் தெருவில் நிகழ்ந்தது. தனது தத்துவார்த்த கவிதைகளால் என்றும் மலையாள இலக்கிய உலகில் மறக்க இயலாத மாபெரும் கவிஞர் ஐயப்பன். 
shri uthamanarayanan is a very good translator... and dedicated writer in english. he has translated this article in english and has published in his blog.
for reading its english translation please follow this link

punarthan@yahoo.com

Wednesday, October 20, 2010

காமன்வெல்த் 2010 - வல்லமை இதழில் வெளியானக் கவிதை

காமன்வெல்த் 2010

குமரி எஸ். நீலகண்டன்
Commonwealth2010
கோடிகளுடன் கொண்டாடியாச்சு
காமன்வெல்த் 2010.


சேர்த்தவர்கள் சேர்த்த
செல்வங்கள் போக

எஞ்சியவை சேறுகளாய்
வீதியில் மிதக்க


தேசியக் கொடி உயர்த்தி
ஒட்டிய வயிறுடன்

உலக வரைபடங்கள்
உள் நெஞ்சினில் தெரிய


வெற்றி…. வெற்றியெனக்
கூக்குரலிட்டான்


விளையாட்டரங்கின்
வெகு அருகில்
வீதியொன்றில் சிறுவன்…..

Monday, October 18, 2010

கொலு 2010 - வல்லமை இதழில் வெளியான கவிதை

கொலு 2010

குமரி எஸ். நீலகண்டன்


கொலுவில் இந்தத் தடவை
பாரதியாரின் அருகில்
காந்தி இருந்தார்.


அவர்களைச் சுற்றிலும்
ஐ.டி. கட்டடங்கள்..
மேம்பாலங்கள்.

நாடாளுமன்றம் உட்பட…

இன்றைய இந்திய
நகரமும்

அதற்குப் போட்டியாய்
நகர மிதப்பில்
கிராமத்துக் காட்சியும்…

பிளாஸ்டிக் பூக்களோடு
பிளாஸ்டிக் மரங்களும்…


நிலா மின்வெப்பத்தில்
தகித்துக்கொண்டிருக்கிறது..


காந்தி மௌன
விரதமாகவே இருக்கிறார்.

காந்தியின் அருகே
ஒரு ஐபாட்..


பாரதியாரின் கண்களில்
அக்னிக் குழம்பாக
ஏதோ ஒரு கொந்தளிப்பு

கவிதை மின்னலாக
வெட்டிக்கொண்டிருக்கிறது.


இருவரும் பூஜை
எடுக்கிற நாளில்
பேசிக்கொள்வார்களென
நினைக்கிறேன்.

Sunday, October 17, 2010

பூனையின் பிடிவாதம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

15.10.10

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...




பூனையின் பிடிவாதம்


எழுத எழுத…
எழுத மறுத்தப்
பேனா முனை
காகிதப் பாதையில்
எங்கோத் தட்டிற்று.
ஓடும் மோட்டார் சக்கரத்தில்
சிக்கிய சேலைத் துண்டாய்
பேனா முனையின்
இரு கம்பீர
கம்பங்களைப் பிளந்து
அதற்குள் ஒரு
காகிதத் துணுக்கு.
ஜீரணிக்க இயலாமல்
கக்கிய மைக்குள்
மிதந்து வந்த
ஒரு பூனை
பிடிவாதமாய்
வரைமுறையின்றி கத்திற்று
ஒரு எலியினை
வரை வரை என்று.



குமரி எஸ். நீலகண்டன்

Wednesday, October 13, 2010

காதலுக்கான காலி இடங்கள் - வல்லமை இதழில் வெளியானக் கவிதை

காதலுக்கான காலி இடங்கள்

குமரி சு. நீலகண்டன்




ஈருடல் ஓருள்ளம்,
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்.. காதல்.. கனவு
எல்லாமே கல்யாணமாகி
ஆறே மாதத்தில்
போயே போச்சு.

அடுத்து அகத்துள் துயில்கிற
அசுரன் தலைக்குள் ஏறி
காதலைப் பிய்த்துத் தின்று
கர்ஜிக்கக் காட்டுப் போர்…..
மங்களமாய் விவாகரத்து…

அன்பு செய்ய
இங்கொரு இடம்
காலியாக இருக்கிறது.
காதலெனும் கவரி வீச
தகுதி உடையவர்கள்
யாரும் விண்ணப்பிக்கலாம்.

Tuesday, October 12, 2010

தேடாமல் வந்தது - திண்ணை இதழில் வெளியானக் கவிதை

Sunday October 10, 2010

தேடாமல் வந்தது.

குமரி எஸ். நீலகண்டன் 

 

இருண்ட பையிலிருந்து
எழுந்து வந்ததும்
எதுவும் இல்லாமல்
இருட்டைத் தேடி
ஒளியை அறிந்து
முகங்களை அறிந்து
சிரிப்பினை அறிந்து
ஓசைகளை அறிந்து
அவற்றையெல்லாம் தேடி
தவழ்ந்து தடுமாறி
கைவண்டியின் கைப்பிடியைத்
தேடிப் பிடித்து
நின்று.. நிமிர்ந்து
அம்மாவின் கைகளைத் தேடி
தவழ்ந்து முத்தங்கள் பொழிந்து
பொம்மைகள் தேடி
பொழுதுகள் தேடி
பள்ளி பருவமும் வந்தது.

புத்தகங்கள்.. பேனா...
பென்சில்.. நண்பர்கள்..
கிரிக்கெட் மட்டை
கில்லி கம்பு எனத்
தேடித் தேடி
வெளியூர் பயணத்தில்
அவ்வப்போது
அப்பா.. அம்மாவையும் தேடி
அறிவின் தேடலில்
யாஹூ... கூகிளென
அகலத் தேடி
மண் தேடி
பெண் தேடி மணந்த பின்
மக்களைப் பெற்று
கோவில் விழாவில்
குழந்தையைத் தேடி
பள்ளி தேடி
படிக்க வைத்து .....

குடும்பம்.. குதூகலம்..
பணம்... அலுவலகமென
அனைத்திற்குமாய் தேடி
முதுமை வந்தபோது
இளமையைத் தேடி
குனிந்த முதுகிற்கு
கூடவே துணையாய்
கைக் கம்பு தேடி
புத்தகங்கள்.. மருந்துகள்
எங்கோ தவறவிட்ட
கண்ணாடியின்றியே
கண்ணாடியைத் தேடி.... 

இப்படி இன்னும் சில
தேடி...தேடி...
அன்பிற்காய் கண்களை
அகல விரித்துத்
தேடிய போது
தேடாமல் வந்தது
மரணம்..... 

punarthan@yahoo.com



Monday, October 11, 2010

33 நிமிடத்தில் 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை - செய்தியும் கவிதையும்

காஷ்மீரில் 33 நிமிடத்தில், 50 ஆயிரத்து 33 மரக்கன்றுகளை நட்டு, நேற்று கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. 


வெட்டும் மரங்களின்
சாதனைகளோடு 
நட்ட மரங்கள்
நடுங்கி புதைந்தன....
நட்டவர்கள் பெயர்கள்
சாதனையில்.
கன்றுகளின்  நாட்கள்
எண்ணிக்கையில்.....


குமரி எஸ். நீலகண்டன்

Sunday, October 10, 2010

உலகிலேயே மிகப்பெரிய டீ கப் - செய்தியும் கவிதையும்

உலகிலேயே மிகப்பெரிய டீ கப்பை தயாரித்துள்ளது இலங்கை


இலங்''கை''யில் உலக
சாதனைக் கோப்பையாம். 
தீ கோப்பையைச் 
சுமந்தவர்கள் கையில் 
ஆவி பறக்கும் 
அசுர உருவில்....
தேனீர் கோப்பை... 
அசையாமல் தேனீரை
அழகாக குடியுங்கள்..
அடியில் 
ஆயிரம் ஆயிரம்
மக்கள்....
கோப்பைக்குள் இருப்பது
தேநீரா அல்லது
எரிந்தவர்களின் நீறா...


குமரி எஸ். நீலகண்டன்

Saturday, October 9, 2010

சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - செய்தியும் கவிதையும்

சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு....
சீன அரசு எதிர்ப்பாளரும், ஆட்சியைக் கவிழ்க்க போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவருமான லியூ ஷியோபோ (54) 2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குமரி எஸ். நீலகண்டன்

அமைதி பொதிந்த
பரிசுக்குள்
அமுங்கி இருப்பவை
சிதறுவதற்காய் சிறுக
இறுக்கப் பட்டிருக்கும்
சீரிய ஆன்மாக்கள்.
சுழற்றி அடிப்பதற்காய்
சுருங்கப் பொதிந்த
சுனாமி அலைகள்.
அழுதழுது
ஆவியாகிப் போன
அற்புத உயிர்கள்.

Friday, October 8, 2010

பிரபுதேவா நயன்தாரா ரகசிய திருமணம் - செய்தியும் கவிதையும்

பிரபு தேவா – நயன்தாரா ரகசிய திருமணம்!

 

ஆறுதலாய் தீண்ட
செஞ்சுடராய் அங்கு
படர்ந்து எரிந்தது
இன்னுமொரு
காதல் தீ.
சுட்டுக் கொண்டது
பழைய காதலும்
பழகிய மரபும்
பரிதாபமாய் குழந்தைகளும்...
இது காதல் தீயா....
குப்பைகளின் நெருப்பா


குமரி எஸ். நீலகண்டன்

Thursday, October 7, 2010

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் - செய்தியும் கவிதையும்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு



ஆழ்ந்த அறிவால்
அறிவியல் ஆய்வால்
புத்துலகங்கள்
கண்களில் பூக்க
வக்கிரப் பார்வையுடன்
வர்த்தக அசுரர்கள்
எரியும் விழிகளில்
சருகான பசுமை...
குமரி எஸ். நீலகண்டன்

Wednesday, October 6, 2010

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை - செய்திக் கவிதை

மின் திருட்டைத் தடுக்க ஆலைகளில் சோதனை: முதல்வர் உத்தரவு

 மின் திருட்டைத் தடுக்க
ஆலைகளில் சோதனையாம்
சோதனையைத் தடுக்க
ஆலையைச் சுற்றிலும்
மின் வேலியாம்
திருடும் மின்சாரத்திற்கு
உருட்டு கட்டைகள்
உட் பாதுகாப்பு.

குமரி எஸ். நீலகண்டன்

Tuesday, October 5, 2010

செய்தியும் கவிதையும்- காவலர் தேர்வில் தில்லுமுல்லு

     
காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் சரட்டை வைத்து வாலிபர் "தில்லுமுல்லு'
சேலம் : சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான உடல் திறன் தேர்வில், உயரத்துக்காக தலையில் தேங்காய் சரட்டை வைத்து, "தில்லுமுல்லு' செய்த வாலிபர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.




காவல் பணியில்
காதல் அவருக்கு ....
உடற் தகுதிக்கான
உயரம் போதவில்லை.
உயர்மட்ட ஆலோசனைக்குபின்
பொய்முடிக்குள்
கொப்பரை வைத்து
உயரம் கூட்டினான்.
மூளை வளர்ச்சி
போதவில்லையென்று
சிறையில் அடைத்தனர்
அவனை அதிகாரிகள்.
தலையில் தேங்காய்
வைத்தால் தென்னை
மரமாக இயலுமா...

குமரி எஸ். நீலகண்டன்

Monday, October 4, 2010

குடையும் நானும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

This Blog
Linked From Here
The Web
This Blog
 
 
 
 
Linked From Here
 
 
 

The Web
 
 
 

3.10.10

குடையும் நானும்




அலுவலக பயணமாக
நான் சென்ற அந்த ஊர்
எனக்குப் புதிது.
வேலைகளில்
ஒடுங்கிப் போன
என் கண்களுக்கு
அந்த ஊரில்
எதுவுமே தெரியவில்லை.
ஊருக்கு திரும்பும் நேரம்
பெய்த மழையில்
குடையினை விரித்தேன்.
சிதறிய மணலில் நீரின்
சிருங்கார ஆட்டம்
என் கால்களை
கிளுகிளுக்க வைத்தது.
சுற்றிலும் பன்னீரைச்
சொரிந்தது போல்
குடையருவியின் குதூகலம்.

கார் மேக குடையில்
கண்ணாடி மாளிகைக்குள்
கனிந்த மழை ரசத்தில்
களித்த நான்
ரயில் நிலையத்தை
நெருங்கிய போது
கையில் குடை இல்லை.

மழை விட்ட போது
தேநீருக்காக ஒதுங்கிய
கடையில் குடையையும்
விட்டிருக்கிறேன்.
அவசர அவசரமாக
குடைக்காக அந்த
வழியில் திரும்பிய
என் நடையின்
வேகத்தை கண்கள்
கால்களில் கயிறுகளைக்
கட்டி இழுத்தன.
நான் வந்த பாதையில்
உண்மையில் களைந்தது
விரிந்த குடைக்கு அப்பால்
மிதந்த மஞ்சள் மலர்
கூட்டங்கள்.
சில்லென்ற மழையில்
சிலிர்த்துப் பறந்த
சிட்டுக் குருவிகள்..
பதமான மழையில்
மிதமாகப் பறந்த
பட்டாம் பூச்சிகள்.
முரட்டு மீசையுடன்
மயிர்கள் நிறைந்த
உடம்போடு
அரக்கன் போல்
காட்சி அளித்த
தொலைவில் இருக்கும்
அந்த அசுர மலையும்தான்.
களைந்த குடைக்குள்
விரிந்த உலகத்தில்
விளைந்தன கோடானு கோடி
குதூகலங்கள்.