Tuesday, July 26, 2011

சூர்யப் பார்வை - உயிரோசையில் வெளியான கவிதை

சூர்யப் பார்வை
குமரி எஸ். நீலகண்டன்

சூரியனைப் பார்த்து
நாய் வேகமாய்
குரைத்தது.

சூரியனைப் பார்த்து
ஒரு குயில்
மரத்திலிருந்து
கூவிக் கொண்டே இருந்தது.

சூரியனைப் பார்த்து
கடைக்காரன் கடையின்
விளக்குகளை அணைத்தான்.

சூரியனைப் பார்த்து
பெரியவர்
குடையை விரித்தார்.

சூரியனைப் பார்த்து
முடிசூடான்
தனது மொட்டைத் தலையில்
தொப்பியை வைத்தான்.

சூரியனைப் பார்த்து
கண்ணப்பன் கருப்புக்
கண்ணாடியை கௌரவமாய்
அணிந்தான்.

சூரியனைப் பார்த்து
கந்தன் கைக்குட்டையால்
தலைக்கு மகுடம்
சூட்டினான்.

சூரியனைப் பார்த்து
முனியம்மாள்
தலையை முந்தானையால்
மூடிக் கொண்டாள்.

சூரியனைப் பார்த்து
ஜூலியட் துப்பட்டாவால்
முகத்தையே
மூடிக் கொண்டாள்.

சூரியனைப் பார்த்து
பாட்டி வற்றலைக்
காய வைத்தாள்.

சூரியனைப் பார்த்து
ராமலக்ஷ்மி கேமராவைச்
சொடுக்கினார்.

சூரியனைப் பார்த்து
விவசாயி நெற்களை
நிலத்தில் பரத்தினான்.

சூரியனைப் பார்த்து
பூக்காரி பூக்களில்
தண்ணீரைத் தெளித்தாள்.

சூரியனைப் பார்த்து
மைதானத்தில்
சிறுவர்கள் விளையாட
களம் இறங்கினார்கள்.

சூரியனைப் பார்த்து
அந்தப் பெண்
சன்னல் திரையையும்
சன்னலையும் மூடிக்
கொண்டாள்.

சூரியனைப் பார்த்து
சன்னலோரத்திலிருந்த
ரயில்பயணி
கைத்துண்டால்
கண்களைக் கட்டி
இருளில்
நிலாவைப் பார்த்துக்
குளிர்ந்து கொண்டிருந்தான்.

சூரியனைப் பார்த்து
எங்கோ இன்னமும்
நாய் குரைத்துக்
கொண்டே இருந்தது.

Friday, July 22, 2011

பூனைக் குட்டியும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பூனைக்குட்டியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

நிலாவை இதுவரைப்
பார்த்திராத பூனைக்குட்டி
திடீரென நிலாவைப்
பார்த்து பயந்தோடியது..

நிலா துரத்த துரத்த
பூனைக்குட்டி
இன்னும் வேகமாய்
ஓடிப் பின்னால்
மேலேப் பார்த்தது,.

நிலா ஒரு மேகத்துள்
மறைந்திருந்து நோட்டம்
விடுவது போல்
பூனைக்குத் தோன்றிற்று.

பூனை வேகமாய்
ஒரு புதரில் மறைந்து
நிலாவைப் பார்க்க
நிலா மீண்டும்
மேகக் குகையிலிருந்து
வெளியே வந்து துரத்த
பூனைக்குட்டி ஓடிஓடி
ஒரு வீட்டிற்குள்
நுழைந்தது.

சீறும் பூனைக்குட்டியைக்
கண்டு பயந்த
மூன்று வயது குழந்தை
ஓடிப்போய்
அம்மாவின் மடியில்
விழுந்து அழ
அம்மா நிலாவைக்
காட்டி குழந்தையை
சமாதானப் படுத்தினாள்...
நிலாதான் குழந்தையின்
அழுகையின் ஆரம்பமென
அறியாது...

Monday, July 18, 2011

தேடலின் எல்லைகள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

தேடலின் எல்லைகள்
குமரி எஸ்.நீலகண்டன்

வலை வீசி
தேடிக் கொண்டே
இருக்கிறோம்.

தேடுவதைத் தவிர்த்து
வேறேல்லாம்
அகப்படுகின்றன.
அகப்படுபவையின்
அசுரக்கரங்களில்
அகப்படும் நாம்
அங்கிருந்து புதிதாய்
இன்னொன்றைத்
தேடிக் கொண்டே
இருக்கிறோம்.

புதிய சுரங்கங்களின்
புதையல்களில்
முகம் புதைத்து
புதை முகங்களின்
புதிய நகல்களைத்
தேடிக் கொண்டிருக்கிறோம்.

தேடலின் பாதையில்
தெரியாத இடங்களை
அடைகிறோம்.

வழியில்
திடீரென பாயும்
வெள்ளத்தின் வீச்சில்
எட்ட முடியாத
எல்லைகளில் சிக்கிய பின்
அதிலிருந்து மீள
தேடலின் ஆரம்பத்தையும்
தேடிக் கொண்டிருக்கிறோம்..

இறுதியில் எதைத்
தேடினோம் எதற்காகத்
தேடினோமென
எல்லாவற்றையும் மறந்து
தேடித் தேடி
தன்னைத் தேடிக்
கொண்டிருக்கிறோம்.

Tuesday, July 12, 2011

தூரிகையின் முத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

தூரிகையின் முத்தம்.
குமரி எஸ். நீலகண்டன்

எல்லா ஓவியங்களும்
அழகாகவே இருக்கின்றன.
வரைந்த தூரிகையின்
வலிமையும் பலஹீனமும்
நகைப்பும் திகைப்பும்
ஓவியமெங்கும்
பரவிக் கிடக்கின்றன.

பல இடங்களில்
தூரிகை தொட்டுச்
சென்றிருக்கிறது.
சில இடங்களில்
தூரிகை துள்ளிக்
குதித்திருக்கிறது.

சில இடங்களில்
தூரிகை எல்லை தாண்டி
நடந்திருக்கிறது.

இன்னும் சில இடங்களில்
தூரிகையின் கண்ணீர்
அது விழுந்த
இடத்தைச் சுற்றிலும்
கரைந்த மேகமாய்
மிதந்து நிற்கிறது.

தூரிகையின்
ஆயிரம் விரல்களின்
பேரிசை முழக்கம்
விழுந்த ஓவியத்தில்
எழுந்து கேட்கிறது.
எல்லா ஓவியங்களும்
அழகாகவே இருக்கின்றன.

Thursday, July 7, 2011

மௌனத்தின் முகம் - திண்ணையில் வெளியான கவிதை

மௌனத்தின் முகம்
குமரி எஸ். நீலகண்டன்

எப்போதும் மௌனமாய்
இருப்பதே உசிதமென
இருந்து விட்டேன்.

யாரிடமும் பேசுவதில்லை.
தவிர்க்க முடியாத
தருணங்களில்
ஓரிரு வார்த்தைகளை
தானமாய் விட்டெறிவேன்..

என் கண்களைக் கூட
பேசவிடாது
குனிந்து விடுவேன்.

வெளியே எல்லோரும்
நானிருக்குமிடம்
அமைதியின் உறைவிடமென
உற்சாகமாய்
சொல்லிச் சென்றார்கள்.

நாட்கள் செல்ல
செல்ல என் மௌன
முகத்தின் அகத்துள்
உச்சமாய் கூச்சல்..
சதா சலசலப்பும்
உச்சந்தலையை குத்தும்
உட்கலவரம்.

காதுகளற்ற
அகத்தின் முகத்துள்
கலவரக் காயங்கள்.

இரக்கமின்றி இன்னும்
இறுகி இருக்கிறது
வெளியே மௌனம்.