Friday, April 29, 2011

அவனின் தேடல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அவனின் தேடல்
குமரி எஸ். நீலகண்டன்

சில்லென உடையும்
உன் சிரிப்பில்
அரசியல்வாதியின் சில்லரை
சப்தம் கேட்கிறது..

பகட்டான உன் வாசம்
என்னை பயமுறுத்துகிறது..

உன் உபச்சாரத்தை
பலரும்
விபச்சாரம் என்கின்றனர்.

உன்னில் விழும்
வார்த்தைகளில்
விதவிதமான ஆயுதங்கள்.

உன் பேச்சின் முடிச்சுக்களில்
பரிதாபமாய் இறுகித்
துடிக்கும் பலரின்
இளங் கழுத்துக்கள்

ஒண்ணும் வேண்டாம்
எனக்கு...
ஒண்ணுமில்லாத
வெறும் இதயம்
ஒன்று போதும்
என் மனசாட்சியை
வைப்பதற்கு.

Monday, April 25, 2011

பரிவின் குருவாய் பாயும் ஒளி - 2011 ஏப்ரல் 24 அன்று காலை 0740 மணி அளவில் முக்தி அடைந்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா

பரிவின் குருவாய் பாயும் ஒளி
குமரி எஸ். நீலகண்டன்

அண்ட வெளியின் ஒளியின்
ஒவ்வொரு துளியிலும்
உன் கருணை விழிகள்.

உயிர் துளிகளைத் துளிர்க்கும்
காற்றின் கீற்றுகள்
பேசும் உன்
அன்பின் மொழி...

மதமற்ற மனிதத்தின்
மகோன்னத ஒளியுடன்
உலகிற்கு ஒளியூட்டும்
உலகாளும் சூரியன் நீ. 

தகிக்கும் வாழ்வில்
தாகம் தீர்ப்பவனாய்
வெள்ளமாய் பாய்கிற
விரிந்த கடல் நீ.

உடல் விட்ட
உன் ஆன்மாவை இனி
உலகின் ஒளியிலும்
ஏழையின் விழியிலும்
அகலாத அன்பிலும்
அன்றாடம் காண்போம்.

சேவையால் அன்பை
சேமித்த கடலே|
அகிலமே உன் அன்பால்
அடையட்டும் அமைதியே...
சாய் ராம்.....

Thursday, April 21, 2011

சுமை தூக்குபவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

சுமை தூக்குபவன்
குமரி எஸ். நீலகண்டன்

உருவமற்று ஒரு சுமை
ஒட்டிக் கொண்டிருக்கும்
அவனது உச்சந்தலையில்.

காற்று ஏறி ஏறி
வெடிக்கப் போகிற
பலூனாய் தலையில்
பெருத்துக் கொண்டிருப்பதை
அறியாமல் பாவம்
அவன்.

அவனது ஐம்புலன்களும்
அசாதாரணப் பெருமிதமும்
ஆக்கி உருட்டியக்
கருப்புச் சுமை போன்ற
கனவு உருவமது.

குனிந்து விழாமல்
பணிந்து விழுகிற
வெயிலுக்கும் குளிருக்கும்
விலகாமல் உறைந்து
சிரிக்க சிந்திக்க
பேச விடாது
அழுத்தும் பெருஞ்சுமை.

அதி வேகமாய்
சுழலும் மின்விசிறியின் கீழ்
ஒரு டேபிள் வெயிட்டின் கீழ்
அகப்பட்டுக் கொண்ட
இத்துப் போன விரிந்த
பழைய ஒற்றைக்
காகிதமாய் கிழிபட்டுக்
கொண்டிருக்கும் அவன்.

Monday, April 18, 2011

மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்

பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.

எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.

Thursday, April 14, 2011

பேப்பர்காரன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

பேப்பர்காரன்
குமரி எஸ். நீலகண்டன்

அழுத்தும் அரசியல்
அசிங்கங்கள் அத்தனையும்
அனாவசியமாய் பின்னால்
சுமந்து கொண்டு காலையில்
தெருத் தெருவாய்
சுறுசுறுப்பாய் சாலையின்
குறுக்கு நெடுக்காய்
வாகனங்களுக்கிடையே
மிதி வண்டியில் திரிகிற
பத்து பதினைந்து வயது
பையன்கள் எல்லோரும்
ஒரே சாயலில்
அண்ணன் தம்பிகள் போல்....

எரிகிற வயிற்றிற்காய்
எறிகிறார்கள் அவர்கள்
ஒவ்வொரு வீட்டு
வாசலிலும் பேப்பரை...
எல்லா அசிங்கங்களும்
எல்லோர் வீட்டு வாசலிலும்...
அந்த அசிங்கத்தை அள்ள
வாசலிலேயேக் காத்திருக்கும்
வீட்டுக்காரர்கள்

ஆனாலும் சுமைகளோடு
சுழலும் அவர்கள்
எல்லோர் முகத்தின்
மையத்தில்
ஒரு அசாதாரணப்
பேரொளி தெரிகிறது..
அவர்களில் யார்
நாளைக்கு ஜனாதிபதி...
ஆற்றல் மிகுந்த விஞ்ஞானி...
அகில உலகை ஆளுகிற
ஆன்ம குருவென்று மட்டும்
தெரியவே இல்லை. 

Monday, April 11, 2011

இரவும் பகலும் - நவீன விருட்சம் இதழில் வெளியான கவிதை

இரவும் பகலும்
குமரி எஸ். நீலகண்டன்

ஏழு வண்ணங்களோடும்
களித்து களைத்த
ஏழு கடல்களும்
பகலை பரந்து
உள் வாங்கிக் கொண்டன.

இருளின் மயக்கத்தில்
இமைகள் மூடின.
பலரின் வீட்டிற்கும்
பலரும் வந்தார்கள்.
காந்தி வந்தார்.
ஒபாமா வந்தார்.
கலாம் வந்தார்.
கிளின்டன் வந்தார்.
எம்.ஜி.ஆர் வந்தார்.
சுந்தர ராமசாமி வந்தார்.
க.நா.சு வந்தார்.
பழைய பேப்பர்காரன்
வந்தான்.

வீரப்பன் வந்தான்.
திருடர்கள் வந்தார்கள்.
இவர்களோடு கடவுளும்
வந்தார்.

உயிரோடு இருப்பவர்கள்,
உயிரோடு இல்லாதவர்கள்
சிங்கங்கள், புலிகள் என
எல்லாமே
யாருக்கும் தெரியாமல்
அவரவர் உலகத்துள்
வந்து போயினர்.

இருண்ட ரகசியங்களோடு
இமைகள் புதைந்திருக்க
பரந்த வானத்தின்
இருளைத் துடைத்தெடுத்த
பகல் காத்திருக்கிறது
சிறிய இமைகளின்
வெளியே வேட்டை நாயாய்
மூடிய இமைகளுக்குள்
முடங்கிய இருண்ட உலகின்
இருளைத் துடைத்தெடுக்க.

Friday, April 8, 2011

பவளமல்லியின் பட்டு சிரிப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

பவளமல்லியின் பட்டுச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்

நான் ஒவ்வொரு முறை
செல்கிற போதும்
அந்த பவளமல்லி மரம்
பழுப்பு வண்ணச் சேலையுடன்
குலுங்கி குலுங்கிச்
சிரிக்கிறது.
அதன் சிரிப்பலைகள்
மரத்திலிருந்து சிந்திச் சிதற
அதன் முகமும்
வெள்ளைச் சிரிப்பும்
பவளமணிகளாய் பரந்து
தரை முழுக்க.......

விரிந்த தரையில்
விழுந்த சிரிப்பில்
பெருமிதமாய் முகம்
பார்க்கிறது
அந்த செந்தரை.

Monday, April 4, 2011

இருட்டிலிருந்து இருட்டு வரை - வடக்கு வாசல் இதழில் வெளியான கவிதை

இருட்டிலிருந்து இருட்டு வரை
குமரி எஸ். நீலகண்டன்

வெதுவெதுப்பான நீர் சூழ்ந்த
ஒளியே இல்லாத
இருண்ட உலகத்திலிருந்து
அழுது கொண்டே
வெளியே வந்தவன்
ஒளிகளின் வழி
ஊடுருவி
காலப் பயணத்தில்
முட்செடிகளில் உள் நுழைந்து
ரோஜாக்களையும்
மல்லிகைகளையும் நுகர்ந்து
தும்மி துடைத்து
முதுகில் முட்காயங்களுடன்
மழைகளிலும் மயானங்களிலும்
உருண்டு புரண்டு சகதியுடன்
சதைகளை ஆற்றிலும்
சாக்கடையிலும் அடித்து
துவைத்து வெயிலில்
உலர்த்தி உலவி
வெந்து  நைந்து
மீண்டும்
இருளில் புகுந்தான். 

Friday, April 1, 2011

மரத்தின் கௌரவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரத்தின் கௌரவம்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த கொழுத்த
மரத்திலிருந்து ஒவ்வொரு
பழுத்த இலையும்
சருகுகளோடு
கீழே விழுகிற போதும்
மரத்தின் பிரிவின்
துக்கத்தின் துளிகள்
சில இலைகளோடு
ஒட்டி இருக்கும்.

மஞ்சளாய் பழுத்த
அந்த இலை
காற்றில் மிதந்து
மிதந்து தரையைத்
தொட்ட போது
அலகுகளால் காகம்
அந்த இலைகளை எடுத்து
அடுத்த மரத்தின்
கிளைகளில் வைத்த போதும்....

அடுக்கடுக்காய் சருகுகள்
இலைகளோடு காகத்தின்
கூடான போதும்...

கொழுத்த மரத்தின்
கழுத்து கொஞ்சம்
கௌரவமாய்
உயர்ந்து நிற்கும்.