Monday, January 31, 2011

மேகத்தின் பன்முகங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மேகத்தின் பன்முகங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

காற்றில் மிதக்கும்
பஞ்சாய்
வானில் மேகம்.

பயணிக்கும் பறவைகளின்
சீரிய சிறகசைவில்
சிலிர்த்து வியந்து...

மலையரசனின் தலையில்
மகுடமாய் ....

நிலத்திற்கும் கடலுக்கும்
விரிந்த
வெண்குடையாய்

கிழித்தெறிந்த பஞ்சில்
கிளர்ந்தெழுந்த வேகத்துடன்
மேகம்.

வானம் அழுகையில்
கருங்கூந்தலை விரித்து
இடியாய் கர்ஜிக்கிற
இறுமாப்புடன் மேகம்.

Thursday, January 27, 2011

அவனைத் தின்ற புழு - உயிரோசையில் வெளியான கவிதை

அவனைத் தின்ற புழு
குமரி எஸ். நீலகண்டன்

அவன் புத்தகத்தை
பக்கம் பக்கமாய் சாப்பிட்டு
வண்ணச் சிறகுகளுடன்
பட்டாம் பூச்சியாய்
பறந்து கொண்டிருந்தான்.

அவனது அந்தக்
குறிப்பிட்ட புத்தகத்தை
நாலைந்து புழுக்கள்
நாலே வாரங்களில்
ஒவ்வொரு எழுத்தாய்
தின்று தீர்த்து
அடுத்த புத்தகத்துள்
கன்னமிட்டு
அவனையும் முந்தி
அள்ளித் தின்னத்
தொடங்கின.

புழுக்களின்
அத்து மீறியக் குடியிருப்பை
அங்கேக் கண்ட
அவனின் தலைக்குள்
ஆயிரமாயிரமாய் புழுக்கள்
அவன் தலையையும்
தின்னத் தொடங்கி இருந்தன.

Tuesday, January 25, 2011

உடைகிறக் கோப்பைக்குள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


உடைகிறக் கோப்பைக்குள்
குமரி எஸ். நீலகண்டன்

அவனுக்கும்
எனக்குமாய் இருந்த
அழகான இனிய
கோப்பை அது.

ஒளித் தடையில்லாத
தெள்ளந் தெளிந்த
பளிச்செனப் பளபளக்கும்
பகட்டானக் கோப்பை அது.

எங்கள் அன்பைக் கரைத்த
அதி உன்னத பானத்துடன்
நுரை பொங்கி நிறைந்த
கோப்பை அது.

ஊடுருவி உரையாடிக்
கொண்டிருக்கும்
எங்கள் உள்ளங்களின்
ஒளி பெருக்கியாய்
அந்த கண்ணாடிக் கோப்பை..

நான் என் நண்பனிடம்
ஒன்றைச் சொல்லப்
போகிறேன்.. அப்போது
அந்த கோப்பை
என் நண்பனின் கைகளின்
பிடி விலகலால்
உடைக்கப் படலாம்.

உடையக் கூடாதென
அந்த கோப்பைக்காக
உருகிக் கொண்டிருக்கும்
எனக்கு நான்
சொல்ல வேண்டியதை
சொல்லாமலும் முடியாது.

Friday, January 21, 2011

ரோஜாவும நானும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

ஒரு ரோஜாவும் நானும்
குமரி எஸ். நீலகண்டன்

ஒரு பெரும்புயலுக்கு
முந்தைய மௌனத்தில்
சிலு சிலுவென சிணுங்கிய
தூறல்களுக்கிடையே நானும்
அன்று பூத்த அந்த
நந்தவனத்து ரோஜாவும்
தன்னந்தனியாய்.

விரிந்த இதழ்களில்
விழுந்த நீர் துளிகளோடு
வாசம் வீசிப் பேசிய
அதன் வண்ண மொழிகள்
எனக்குப் புரியவில்லை.

அதன் ஆர்ப்பரிக்கும் அழகில்
அலையோடிய
என் கவிதைகளும்
அதற்கு புரிந்ததாய்
தெரியவில்லை.

ஆனாலும் குத்தும் குளிரை
விட்டு விலகும் என்னை
தடுக்கும் பாவனையில்
அதன் முகத்தின்
மோக ஜாடை.

மழைக்கு முந்தைய
மௌனத்தில்
சூழ்ந்த முட்களுக்கிடையே
பேரிரைச்சலுடன்
பேரன்புடன்
புரியாத மொழியில்
யாருக்கும் தெரியாமல்
பேசிக் கொண்டிருக்கிறோம்
இருவரும்.

Tuesday, January 18, 2011

நெருப்பு மலர் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நெருப்பு மலர்
குமரி எஸ். நீலகண்டன்
எரியும் காகிதத்தில்
அசையும் இதழ்களுடன்
அழகாக
ஆடியதொரு சிகப்புப் பூ..
கருப்பு வாசம். 


தொட இயலவில்லை
தோட்டமெதுவும் இல்லை
வண்டு மொய்க்கவில்லை
இதழ்கள் உதிரவில்லை
இறுதியில் மண்ணில்
கருப்பு மகரந்தங்கள்

Saturday, January 15, 2011

போகியும் பொங்கலும்

எல்லோருக்கும் என் உளம்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

போகியும் பொங்கலும்
குமரி எஸ். நீலகண்டன்

பழைய துணி...
பழைய பாத்திரம்,
அரிவாள் மணை, கத்தி,
பழைய தலையணை,
விளையாட்டுப் பொருட்கள்,
கிரிக்கெட் மட்டை,
காகிதங்களென  அத்தோடு
பழைய நட்பு பகையென
பயன்படாதவைகளெயெல்லாம்
பழையதென
எரிந்தும் எறிந்தும் 


புது பாத்திரங்களுடன்
புதிய பொருட்களுடன்
புதுப் புது நண்பர்களுடன் ....
வாழ்த்துக்களுடன்
பொங்கலொ பொங்கலென்று
பொங்கிய பொங்கலின் புகையில்
பழைய நண்பரின்
கண்களில் நீர் ததும்ப
ல்

Monday, January 10, 2011

தாத்தாவும் பேரனும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

தாத்தாவும் பேரனும்
குமரி எஸ். நீலகண்டன்

தாத்தாவின் பிள்ளைக்கு
குழந்தை பிறந்திருக்கிறது.
கொஞ்ச நாளாய்
தாத்தாவிற்கு பேச
எந்த தோழர்களும்
தேவையில்லை...

தாத்தாவும் பேரனும்
ஏதேதோ பேசிக்
கொள்கிறார்கள்..
யாருக்கும் புரியவில்லை
அவர்களின் ரகசியங்கள்.

அழுகிறப் பேரனிடம்
தாத்தாய் அழகழகாய்
ஏதோ சொல்லிக்
கொடுக்கிறார்...

வாயில் பாட்டும்
கையில் கிலுக்குமாய்
கல கலப்பாய்
தாத்தாவின் ஆட்டம்.

குழந்தை கையை
அசைக்கிற போதும்
கால்களை ஆட்டி
இசைக்கிற போதும்
சாடையாய் கூடி நிற்கிற
முகத்தின் ஓசையில்
தாத்தா இப்போது
அவரது தாத்தாவின்
மடியினில்
கைகளையும் கால்களையும்
அசைத்து அசைத்து
ஏதோ சொல்லிக்
கொண்டிருக்கிறார்.


உலகம் திரும்பி
சுற்றிக் கொண்டிருக்கிறது.

Saturday, January 8, 2011

பல்லியின் சாபம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

பல்லியின் சாபம்
குமரி எஸ். நீலகண்டன்

சன்னலை அடைத்த போது
அந்த சப்தத்தில்
அச்சமுற்ற பல்லி
தப்பிக்க நினைத்து
இடுக்கின் இடையேத்
தலையை விட்டது.

குற்றுயிரில்
சபித்த பல்லியை
அடித்துக் கொன்றேன்
அதன் வலியற்ற
மரணத்திற்காக..

சபித்த பல்லிக்கு
எங்கேத்
தெரியப் போகிறது
என் சங்கடம்

Wednesday, January 5, 2011

வினோதக் காலை

வினோதக் காலை
குமரி எஸ். நீலகண்டன்



காலை என்பது
கடவுளின் வினோதம்.

இரவில் விதைத்த
நட்சத்திரங்கள்
வெளிச்சமாய் விரிகிற
வினோதம்.

இரவின் ரகசியங்கள்
இன்னும் ரகசியமாய்
பகலறியா பதுங்கு குழியில்
பாய்ந்து மறைகிற
வினோதம்.

கனவுகளில் குளித்து
வெளிச்சத்தில் உலர்த்த
விரிகிற காட்சிகளின்
விளையாட்டின் வினோதம்.

ஒட்டிய அழுக்குகளைத்
தட்டிக் கொள்ள
காலை அனுப்பும்
ஒளி ஓலையென
காலை என்பது
கடவுளின் வினோதம்.

Saturday, January 1, 2011

ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011 ம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011ம்
குமரி எஸ். நீலகண்டன்
வருடங்கள் வளர வளர
வளர்ந்து கொண்டே
இருக்கிறோம்.  
உடலெங்கும் மின் ஒளியில்
பகட்டாய் பறக்கிறது பூமி.

காங்கிரீட் காடுகளில்
வாடாத பூக்களுடன்
பிளாஸ்டிக் தாவரங்கள்...

உயிர்களை உன்னதமாய்
காக்கிறோம்...
கொசுக்கள்.. வைரஸ்..
பாக்டீரியாக்களை
புதிது புதிதாய்
உருவாக்கியும் வளர்த்தும்...

வீட்டினுள் குளிரூட்டி
வெளியே அக்னி
வளர்க்கிறோம் .

பூமியின் அழுக்கான
கைகளின் வழி பணங்கள்
அவமானத்துடன்
அலைகின்றன

கட்டை பஞ்சாயத்தை
இன்னுமொரு கட்டை
பஞ்சாயத்தே தட்டி தனக்காய்
தீர்ப்பு சொல்கிறது.

ஆயிரம் வருடத்தில் பிறந்த
அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
மிகுந்த சலிப்புடன்
குழப்பங்களின் குழைவினுள்
குதூகலமாய் வரும்
குழந்தை2011 ப்  பார்க்கிறது
பரிதாபமாய்.....