Tuesday, March 20, 2012

பனி நிலா - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பனிநிலா
குமரி எஸ். நீலகண்டன்

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

Saturday, March 10, 2012

காற்றின் கவிதை - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றின் கவிதை
குமரி எஸ். நீலகண்டன்

எழுதாமல் பல
பக்கங்கள் காலியாகவே
இருக்கின்றன.

எழுதுவதற்காக இருந்தவன்
எழுதாமல் போனதால்
பலன் பெற்றனவோ
அந்தப் பக்கங்கள்.

எழுதுபவன் எழுதாததால்
வெள்ளை உள்ளத்துடன்
வெற்றிடம் காட்டி
விரைந்து அழைக்கிறதோ
அந்தக் காகிதப் பக்கங்கள்.

காகிதத்தின் மொழி
அறியாமல் காகிதத்தில்
எழுத முயல்கையில்
எங்கோ இருந்து
வந்தக் காற்று
காகிதத்தை
அடித்துப் போயிற்று.

காற்று அந்தக் காகிதத்தில்
தன் கவிதையைக்
கொட்டி கொட்டி
உரக்கப் பாடியது.

நிச்சயமாக அந்தக்
காகிதம்
காற்றின் கவிதையில்
காலம் முழுவதும்
நிறைந்திருக்கும்.

Friday, March 2, 2012

இருளில் உருளும் மனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

இருளில் உருளும் மனம்
குமரி எஸ். நீலகண்டன்


இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.

வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

Sunday, January 15, 2012

பொங்கல் 2012 - வல்லமை பொங்கல் சிறப்பு மலரில் வெளியான கவிதை

பொங்கல் 2012
குமரி எஸ். நீலகண்டன்

வழக்கம் போல்
பொங்கல் வந்து விட்டது... 
காய்கனிகளோடு
பொங்கல் பானையுடன்
கம்ப்யூட்டர் பத்தி
கமகமக்க
பக்தி மயமாய் பரவசமாய்
பொங்கல்.

குண்டு குண்டாய்
காய்கறிகள் வைக்கப்
பட்டிருக்கின்றன
வாழை இலைக்குப்
பதிலாயிருந்த
பச்சைக் காகித இலையில்.

கரும்பு இருக்கிறது
அதே இனிப்புடன்.
ஆனால் அது
ஆதவனைக் காண
இன்னும் வளர வேண்டும்
பத்து மாடி உயரத்திற்கு.

கத்தரிக்காய் கண்ணைப்
பிய்க்கும் வண்ணத்தில்
காட்சி அளிக்கிறது.
அதன் மேல்
புண்ணிற்கு சிறிய
பிளாஸ்டர் ஒட்டியது போல்
ஒரு ஸ்டிக்கர் வேறு.
பையன் கேட்டான்
அப்பா அது செய்ததா
அல்லது விளைந்ததா என்று.
விளக்குவதற்கு
விளங்கவில்லை எனக்கு.

அந்தக் காலத்தில்
விளக்கின் முன்
நாளி நிறைய
நெல் வைப்பார்கள்
என்றேன் பையனிடம்.
அவன் நெல்லென்றால்
எப்படி இருக்குமென்றான்.
நகரத்தில் தேடிக்
கிடைக்கவில்லை.
இனி கூகுளில் தேடிக்
காட்டிக் கொடுக்க
வேண்டும்.

மங்களமாய் மஞ்சளோடு
டூத் பேஸ்டைப் போல்
இஞ்சிக்குப் பதில்
இருந்தது இஞ்சி பேஸ்ட்
பொங்கலில் மங்கலாய்.

எல்லாவற்றிற்கும் பதிலாய்
ஏதோ ஒன்று இருந்தது.
ஒரு கிராமத்தைப் போல்
குருவி சத்தம் கேட்கிறது
அழைப்பு மணியில்.
எதற்காக எது இருந்தது
என அறியாமல்
எதற்காக நாம்
இருக்கிறோமெனத்
தெரியாமல் பொங்கலோப்
பொங்கலெனக் கூவிக்
கொண்டாடினர் பொங்கலை.

அறுவடை நாளாம் இன்று.
எதை அறுவடை செய்தார்கள்.

Monday, January 9, 2012

குழந்தையின் கோபம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

குழந்தையின் கோபம்
குமரி எஸ். நீலகண்டன்

கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.

குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.

சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது.

Monday, January 2, 2012

மழை துரத்திய இரவில் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மழை துரத்திய இரவில்
குமரி எஸ். நீலகண்டன்

வானத்தில் வந்த
பூகம்பம் போல்
திடீரென இடி முழக்கம்.
விண்மீன்களையெல்லாம்
சுனாமி அடித்துச்
சென்றது போல்
வெறுமையாய்
கருவானம்.

இடை இடையே
வானத்தைக் கீறித்
தெறித்த ரத்தமற்ற
நரம்புகளாய் மின்னல்.

எங்கோப் புறப்படுகிற
மழை என்னை
இங்கேத் துரத்தியது.

தூங்குவதற்கு முன்
சன்னல்களையெல்லாம்
அடைத்து விட்டேன்.
இடிக்கு அஞ்சி கேபிள்
இணைப்புகளையெல்லாம்
திறந்து விட்டேன்.
மொட்டை மாடியில்
தொங்கிய 
துணிகளையெல்லாம்
தூங்கும் அறைக்குள்
தூங்க விட்டேன்.
நானும் தூங்கிப்
போனேன் வருகிற
மழையும் வந்ததாய்..

இடையில்
கொசுக்கள் வந்து
கடித்து எழுப்ப
தொப்பையாய்
நனைந்திருந்தேன்
வியர்வையில்.
நீச்சல் தெரியாத
இன்னொரு கொசு
வியர்வை மழையில்
நனைந்து முங்கிச்
செத்தது.

சன்னலைத் திறந்தேன்.
வழக்கம் போல்
வெறும் வானம்
விண்மீன்களுடன்
ஒரு விளையாட்டுப்
புன்னகையுடன்...

கொசுக்கள்
குதூகலத்துடன்
கைதட்டிப் பறந்தன

விடியும் வரை
விளையாடி ஜெயித்த 
மழையின் வெற்றியில்.

Sunday, January 1, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பும் அமைதியும் பரவட்டும்.... இனியுலகில் இயற்கையைப் பேணி எல்லோரும் மகிழ்ச்சியுடன் நிறைந்த வாழ்வு வாழட்டும். எல்லோருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...