Friday, December 31, 2010

மௌனம் - வல்லமை இதழில் வெளியான கவிதை


மௌனம்

குமரி எஸ்.நீலகண்டன்..

பறக்கும் தூள்களுக்கு
இடையே
பரந்து நிற்கும்
மௌனத்தின் வெளி.

மணக்கும் மயக்கும்
மௌனத்தின் நெடி.

அடைத்த செவிகளுக்கும்
அடங்காமல் கேட்கும்
மௌனத்தின் ஒலி.

கால மாற்றத்தில்
புயலின் மையம்
மௌனம்.

புரிவதற்காகவும்
புரியாமல் இருக்கவும்
எழுதப்பட்டும்
ஓரளவு
புரிந்துவிடுகிறது
மௌனம்.

சலசலப்பில்
சல்லாபிக்கும்
மௌனம்.

எதுவும்
முடிந்துவிடுகிறது
உலகில் மௌனத்தில்.

இன்னொன்று
முளைத்தும் விடுகிறது
மௌனத்தில்.

Monday, December 27, 2010

காரணமெனும் ரணம்

காரணமெனும் ரணம்
குமரி எஸ். நீலகண்டன்

ஈருளி வாகனத்தில்
இயங்கிய அவன்
சாலைப் பூசணியில்
சரிந்து விழுந்தான்.
தலையெங்கும்
பூசணிக்குள்
புதைத்த குங்குமமாய்
சிகப்பு சித்திரங்கள்.
ஆஸ்பத்திரியில் அவனின்
அம்மா சொன்னாள்
எல்லாம் அவனுக்கு
திருஷ்டி கழிக்காததால்
நேர்ந்ததென்று.

Thursday, December 23, 2010

கடவுளின் ஆடை - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் ஆடை
குமரி எஸ். நீலகண்டன்
காற்றடைத்து
கடவுள் அளித்த
ஒரே ஆடையில்
கர்ஜிக்கும் முகங்கள்.

ஆடை
அவிழ்கிற போதும்
அசராமல் இருக்கும்
அகங்கார முகங்கள்.

திணித்த ஆசைகளால்
திணறும் மனத்துடன்
ஆடை
அவிழ்வதும் தெரியாமல்
அலையும் விழிகள்.

ஆசை ஆசையாய்
அலைந்து அள்ளியாயிற்று.
கடவுள் தந்த ஆடை
கழன்று போகும் தருணத்தில்
கொள்வதற்கு
கைகளும் இல்லை.
காற்றைச் சுமக்க
பைகளும் இல்லை.

Monday, December 20, 2010

தொலைவின் தூரம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

தொலைவின் தூரம்
குமரி எஸ். நீலகண்டன்



அவனின்
கொல்லும் கோபம்
பிடிக்காமல் அங்கிருந்து
விலகினேன்

அங்கும்
இன்னொருவனின் பொய்
என்னை பொசுக்க
அங்கிருந்தும் விலகினேன்

வந்த இடத்தில்
அங்கொரு
பொறாமைப் பேய்
அச்சுறுத்த
விரைந்து விலகினேன்

சிறிதேத் தொலைவில்
இன்னொருவனின்
சுயநலம்
என்னை அங்கே
அண்டவிடவில்லை

அந்த இடமும்
எனக்கு பாதுகாப்பற்ற
பகுதியாய் உணர்த்தியதால்
அங்கிருந்தும் விலகினேன்

சுற்றிச் சுற்றி
இடைவெளிகள்
விரிந்தாலும் போலிகளும்
அதன் கூலிகளும்
கும்மாளமிட
இன்னும் தொலைவில்
விலகிக் கொண்டே
இருந்தேன்

இன்னும் விலகி விலகி
எல்லையற்ற ஒரு வெளியில்
ஒரு புல்லாய்
நடுங்கி இருந்தேன்

அந்த இடத்தில்
என்னைச் சுற்றி
வெட்ட வெளி.
பொய்யர்கள், சுயநலவாதிகள்
பொறாமைக்காரர்கள்
அகங்காரிகளென
ஏதுமற்ற ஒரு சூன்ய வெளியில்
சூன்யமாகவே இருந்தேன்

உயிரற்ற ஒரு வெளியில்
வெறும் புல்லாக
நான் இருக்க
வந்த வழியறியாது
மந்தமாய் நின்றேன்

சுற்றுமுற்றும் பார்த்தேன்
இந்த நிசப்த வெளியில்
தொலைவில் ஒரு
காய்ந்த பட்டமரம்
என்னருகே வந்து நில் 
என என்னை
அழைத்ததுபோல்
இருந்தது.

Thursday, December 16, 2010

முகமூடிகள் - உயிரோசை இதழில் வெளியான கவிதை

முகமூடிகள்
குமரி எஸ். நீலகண்டன்

சாலையெங்கும்
சராசரி மனிதர்கள்
சஞ்சரிக்க
வியர்க்கிற வெயிலில்
ஈருருளி வாகனத்தில்
இறுக்கி அணைத்து
தோழனின் தோள் பற்றி
துப்பட்டாவில்
முகம் புதைத்து
மோகப் போதையில் அவள்.

அவளின் நெஞ்சைத்
திறந்த தோளாடை
அவளின் முகத்திற்கு
நல்ல பாதுகாப்பாம்
இரு வழிகளில்.....
சூரியக் கண்ணிலிருந்து
சுற்றும் கண்கள் வரை.

மூடிய துப்பட்டாவில்
கூடிய துளி உலகத்தில்
துள்ளி விளையாடியது
அவளது முகம்

Monday, December 13, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday December 12, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம்

குமரி எஸ். நீலகண்டன் 


ஆறு வயதில்
என்னுடன் தொங்கி
விளையாடியத் தோழனாய்
அந்தக்காலக் கதவின்
தாழ் கைப்பிடி. 


அப்பா அம்மா
தங்கையென எல்லோரின்
சந்தோஷ சங்கடங்கள்
கோப தாபமென
மன அழுத்தங்களின்
மின்சார பாய்ச்சல்களுக்கும்
ஈடு கொடுத்து..
இயங்கியது இக்கைப்பிடி.

ஆனந்தத்தில் ஆடாமல்
துயரத்தில் துவளாமல்
அமைதியாய் அசைகிற
அந்தக்காலக் கைப்பிடி.

பளபளக்கிற இதன்
மேனிக்குள் எங்கள்
குடும்ப வரைபடமாய்
எங்கள் எல்லோரின்
கைரேகைகள்.

காலம் கடந்து
மெலிந்த வலிந்த
அழுத்தங்களுக்கும்
தடுமாறாமல்
தடம் மாறாமல்
இளமைத் துடிப்புடன்
இன்றும் இயங்கும்
இந்தக் கைப்பிடி

இன்று எனது
முதுமையைச் சொல்கிறது
கதவைத் திறக்க
முனைந்த எனக்கு
திறக்காமல் பிடிவாதமாய்

Friday, December 10, 2010

சிவப்பு சமிக்ஞை - வல்லமை இதழில் வெளியான கவிதை

சிவப்புச் சமிக்ஞை 

குமரி எஸ்.நீலகண்டன்

Red_signal
சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.


சிமிட்டும் வண்ணங்களை
எப்போதுமே
சிதறடித்துச் செல்லும்
அவனது குதிரை.

விதிகளுக்குக் கட்டுப்படாத
அவனது விதி
அன்று வீதியில்.


கழன்ற காலணி
அவனது கன்னத்தில்.

அவனது கடிகார நேரம்
நின்று விட்டது.
அவனது பச்சை உடம்பில்
கிழிந்த போர்வையாய்
சிவப்பு வண்ணங்கள்.


உடலை உதைத்து
அவன் உயிரும்
எங்கோ போயிருக்க வேண்டும்.


சிவப்பு, பச்சை, மஞ்சளென
கண்களைச் சிமிட்டி,
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தது
சமிக்ஞை விளக்கு.

Wednesday, December 8, 2010

மிதித்தலும் மன்னித்தலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

குமரி எஸ். நீலகண்டன் 


காலை மிதித்தான்.
தெரியாமல்
மிதித்திருப்பானென
மன்னித்தேன்.

மீண்டும்
இன்னொரு தருணத்தில்
தெரியாமலும் தெரிந்ததும்
போலவும் மிதித்தான். 
சகித்தேன்..

சிறிது நேரம் கழித்து
சிரித்தான். மன்னித்தேன்.
காலங்கள் போகப் போக
அவ்வப்போது
 மிதித்தான். மன்னித்தேன்...
மிதித்தான்... மன்னித்தேன்...
மிதித்தான்.. மன்னித்தேன்.

இன்னும் மிதித்தான்...அவன்
எப்போதாவது சகதியிலிருந்து
மீள்வானென்ற நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும்
மன்னித்தேன். அவன்
இன்னும் சக்தியுடன்
சகதியுடன் மிதித்தான்.

மன்னித்து மன்னித்து
நான் என்னை மகானாக
நினைத்துக் கொண்டேன்.
அவன் எண்ணத்தில் நான்
ஒரு பலஹீனமானவனாக
கரைந்து கொண்டிருந்தேன்.

Saturday, December 4, 2010

இருட்டும் தேடலும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday November 28, 2010

இருட்டும் தேடலும்

குமரி எஸ். நீலகண்டன்

 


இருண்ட நீர் பையிலிருந்து
வளைந்து நெளிந்து
வெளியே வந்து
அழுத அவனுக்கு
ஒளி உற்சாகம் கொடுத்தது. 

வெளியின் துகள்கள்
அவன் வேர்களில் ஊருடுவ...
கருப்பு,வெளுப்பு,
அழுக்கு, மணம்,
மேல், கீழ்,
வடக்கு, தெற்கு,
சிறிது, பெரிது
உயர்ந்தது, தாழ்ந்தது,
நல்லது, கெட்டது,
அழகானது, அழகற்றது,
பலமானது, பலவீனமானது,
நிறம், திறமென ஒன்றாய்
இருந்தவற்றையெல்லாம்
பிரித்து பிரித்து
எல்லாவற்றையும் அவன்
ஒழுங்கீனம் செய்த போது.....

இறுதியில் இருள்
அவனை உள்வாங்கிக்
கொண்டது... 

இருட்டிலிருந்து வந்தவன்
இப்போது இருட்டில்
தேடுகிறான் ஒளியையும்
ஒளிக்கு பின்னால்
ஒளிந்து போனவைகளையும்.

Wednesday, December 1, 2010

இலையின் எல்லைக்கு அப்பால் - வல்லமை இதழில் வெளியான கவிதை

ஒரு வாரமாக நாகர்கோவில், திருவனந்தபுரம், கோட்டயமென பயணம்....அதனாலேயே தவிர்க்க முடியாமல் இடுகைகளில் சில விடுகைகள்...

இலையின் எல்லைக்கு அப்பால்

குமரி எஸ்.நீலகண்டன்
கங்காருவின் வயிற்றிலிருந்து
கங்காருக் குட்டிபோல்
இலைகள் துளிர்களாய்
விதைகளிலிருந்து
எட்டிப் பார்க்கின்றன.

கூடி விளையாட
கொம்புகளில் இலைகள்
வளர்ந்த போதும்
விரிந்த போதும்
காற்றின் தாளத்திற்குக்
கவிதைகள் படிக்கின்றன
இலைகள்.

காற்று இலைகளின் மேல்
மண்ணை வீசி
எறிந்த போதும்
கோபம் இல்லை இலைக்கு.

அடியில் புழுக்கள்
கூடு கட்டி
இலைகளைக் கீழே
தொங்கி இழுத்த போதும்
வருத்தமில்லை இலைக்கு.

பறவையாய்ப் பறந்த
பட்டாம் பூச்சி கீழே
மழை நீரில் தோய்ந்து
துவண்டு படபடத்த போது
இலையின் மேல்
விழுந்த நீர்த் துளிகளெல்லாம்
கண்ணீராய் சொட்டின.