Tuesday, August 10, 2010

உள்ளே வெளியே - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை

Friday March 19, 2010

உள்ளே வெளியே

குமரி எஸ்.நீலகண்டன்..


சிறைக்கு வெளியே
குற்றத்தின் நாற்றத்தால்
சிறை மூக்கை பிடித்துக் கொண்டு
உள்ளே கைதிகளைப்
பார்த்து பெரு மூச்சு விடுகிறது.
குற்றம் செய்த கரங்களானாலும்
பற்றிக் கொள்ள
உயர்ந்து உறுதியுடன்
துணையாய் நிற்கும்
கம்பிகள் .
சிறைக் கம்பிகளின்
குறுகிய இடைவெளிகளாய்
சிறைக் கதவுகளின்
இருபுறங்களும்
இடைவெளி குறைவாகவே
இருக்கின்றது.
குறுகிய வெளிகளில்
குண்டர்களுக்கே
சிறைக்குள் நுழைய முடிகிறது
பாதுகாப்பாக.
கம்பிகளின் இரு பக்கங்களிலும்
இனங்கள் ஒன்றுதான்.
நிறங்கள் மட்டும் வேறு.
சிறைப் பட்டிருப்பது
கம்பிகள் மட்டும்தான்.
தெருவெங்கும் குப்பை...
குப்பைக் கூடைகள் ஓரளவு
சுத்தமாக இருக்கின்றன.
ஒவ்வொருப் புரிதலும்
பெரும்பாலும்
தடம் மாறா தவறுகளின்
உருவங்களாகவே
உயர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொரு சந்திப்பிலும்
அழுந்தப் பதியாத
ஆயத்தச் சிரிப்புகள்
காகிதப் பூக்களாய்
கர்ஜித்து எரிகின்றன.
கொள்ளை அடிக்கவே
கோபங்கள் குமுறி
எழுகின்றன.
அச்சமும் வெட்கமும்
ஒப்பனைப் பொருட்களாகவே
ஒவ்வொரு முகத்திலும்
ஒய்யாரமாய் தொங்குகின்றன.
மனங்களும் முகங்களும்
திரும்பி நிற்கின்றன.
வறண்ட மனங்களும்
வலிமையற்ற உணர்வுகளும்
தாலாட்டும் உலகத்தில்
தயவோடு ஒரு குழந்தைக்கு
தாயாக பாலூட்டும்
நாய்.
punarthan@yahoo.com



Copyright:thinnai.com 

No comments: