Thursday, February 10, 2011

சுயநலத்தின் சுற்றுப்பாதை - வல்லமை இதழில் வெளியான கவிதை

சுய நலத்தின் சுற்றுப் பாதை
குமரி எஸ். நீலகண்டன்

 ஓடும் பேருந்தில்
தொங்கியும் சாய்ந்தும்
சரிந்தும் வியர்த்தும்
காற்றைப் பிழிந்து
வியர்வை மிதந்த
கனத்தக் கூட்டத்தில்
இருக்கையை விட்டு
எழுவதுபோல் எத்தனிக்கும்
அவனைச் சுற்றி
மந்தையாய் குவியும்
சுயநலம்.

அந்த இடத்தைப் பிடிக்க
கைகள் கம்பிகளைப் பற்ற
வாள்களாக
சண்டையிடும்.

அவனின் பாவனை அசைவில்
நிற்பவர்களின் ரத்தம்
ஒடுங்கிய ஓடைகளில்
உயர் அழுத்தத்தில் பாயும்.

அவன் எழாத போது
பெய்யா மழையால்
பொய்யாய் கலையும்
கரு மேகமாய்
அலைபாயும் அடுத்த
இடத்திற்காய் சுயநலம்.