Tuesday, May 24, 2011

பம்பரக் காதல் - திண்ணை இதழில் வெளியான கவிதை

பம்பரக் காதல்
குமரி எஸ். நீலகண்டன்

கயிறு காதலில்
பம்பரத்தைச்
சுற்றிச் சுற்றி
வந்தது. அதன்
உடலெங்கும்
அழுந்தத் தழுவி
தன்னன்பை
அந்தரங்கமாய் சொன்னது.

எதுவும் சொல்லாமல்
இயல்பாய் இருந்த
பம்பரத்தின் கயிற்றை
இழுத்துப் பிரித்த போது
ஒற்றைக் காலில் பம்பரம்
சுற்றிச் சுற்றி வந்தது
துணையைத் தேடி.

இத்து இத்து கயிறு
செத்துப் போகும்
நிலையிலும் முனை
மழுங்கிய பம்பரம்
முனைந்தது தன்
காதல் சுற்றை
இயன்றவரை.

களித்தனர் தோழர்கள்
கயிற்றோடு பம்பரம்
களித்தக் காதல்
விளையாட்டில்.


சில கவிதைகள் மனதில் ஆழமாய் பம்பரமாய் சுற்றும்... அதன் தடங்களில் கூட இன்னொரு கவிதை உருவமளிக்கும்.. நான் சில மாதங்களுக்கு முன்பு நவீன விருட்சத்தில் படித்த ராமலக்ஷ்மியின்  அழகிய வீரர்கள் கவிதை கூட இந்த கவிதையின் காரணமாக இருக்கலாம்... அந்தக் கவிதையையும் இந்த இணைப்பில் படித்துப் பாருங்கள்... அழகிய வீரர்கள்