Monday, December 13, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday December 12, 2010

ஒரு கைப் பிடியின் பிடிவாதம்

குமரி எஸ். நீலகண்டன் 


ஆறு வயதில்
என்னுடன் தொங்கி
விளையாடியத் தோழனாய்
அந்தக்காலக் கதவின்
தாழ் கைப்பிடி. 


அப்பா அம்மா
தங்கையென எல்லோரின்
சந்தோஷ சங்கடங்கள்
கோப தாபமென
மன அழுத்தங்களின்
மின்சார பாய்ச்சல்களுக்கும்
ஈடு கொடுத்து..
இயங்கியது இக்கைப்பிடி.

ஆனந்தத்தில் ஆடாமல்
துயரத்தில் துவளாமல்
அமைதியாய் அசைகிற
அந்தக்காலக் கைப்பிடி.

பளபளக்கிற இதன்
மேனிக்குள் எங்கள்
குடும்ப வரைபடமாய்
எங்கள் எல்லோரின்
கைரேகைகள்.

காலம் கடந்து
மெலிந்த வலிந்த
அழுத்தங்களுக்கும்
தடுமாறாமல்
தடம் மாறாமல்
இளமைத் துடிப்புடன்
இன்றும் இயங்கும்
இந்தக் கைப்பிடி

இன்று எனது
முதுமையைச் சொல்கிறது
கதவைத் திறக்க
முனைந்த எனக்கு
திறக்காமல் பிடிவாதமாய்