Tuesday, November 29, 2011

மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மரம் பெய்யும் மழை
குமரி எஸ். நீலகண்டன்

மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை...

மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.

பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்..

Monday, November 21, 2011

நிலவும் குதிரையும் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நிலாவும் குதிரையும்
குமரி எஸ். நீலகண்டன்
பரந்த பசும் வெளியில்
பாய்ந்து சென்றது
ஒரு குதிரை
தன்னந்தனியாய்.

ஆடுகள் மாடுகள்
ஆங்காங்கு மேய்ந்திருக்க
இறுமாப்புடன்
வானம் நோக்கியது.

வட்ட நிலாவைக் கண்டு
அழகிய இளவரசி
தன்மேல்
சவாரி செய்வதாய்
நினைத்துக் கொண்டது.

முதுகில் இருப்பதாய்
கூடத் தெரியவில்லை...
எவ்வளவு
மெல்லிய உடலுடன்
என் மேல் சவாரி
செய்கிறாளென
இன்னும் குதூகலமாய்
குதித்து குதித்து
பறந்தது.

அங்கே ஒரு அழகிய
தாமரைக் குளம் வந்தது.
குளத்தில் நிலாவைக்
கண்டதும்
அதிர்ந்து போனது.

தான் துள்ளிக்
குதித்ததில்
இளவரசி குளத்தில்
விழுந்ததாய் எண்ணி
சோகமாய் குனிந்து
நிலாவைக் கரையேற்ற
இயன்றவரை முயன்றும்
இயலாமல் சோகமாய்
குனிந்து மெதுவாய்
ஒரு மேடு
நோக்கி நடந்தது.

திடீரென வானத்தைப்
பார்த்த போது
நிலாவைப் பார்த்து
இளவரசி மீண்டும்
முதுகில் ஏறி
விட்டதாய் எண்ணி
இனி விழாத
அதிக சிரத்தையுடன்
ஆடி அசைந்து
இன்னும் இறுமாப்பாய்
பயணித்து
கொண்டிருந்தது
பரவசக் குதிரை.

Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நிலா அதிசயங்கள்
குமரி எஸ். நீலகண்டன்
அலை கடலில்
நீராடி வானமேறியது
வண்ண நிலா.

மங்கலப் பெண்ணாய்
மஞ்சள் முகத்தில்
ஆயிரமாயிரம்
வெள்ளிக் கரங்களால்
அழகழகான மலர்களை
அணு அணுவாய்
தொட்டு நுகர்ந்தது.

தாமரை மலர்களை
எல்லாம் தடவித்
தடவி தடாகங்களில்
மிதந்து களித்தது.

பழங்களையெல்லாம்
மரத்திலிருந்து
பறிக்காமல் சுவைத்தது.

நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை.
மணங்களை மலர்கள்
இழக்கவில்லை.

நிலவு சுட்டப்
பழங்கள் நிறம்
மாறவில்லை.
கோடி கோடி
மைல்களென
அன்றாடம் அலையும்
நிலாவிற்கு அணுவளவும்
களைப்பில்லை.

Tuesday, November 8, 2011

காணாமல் போனவர்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


காணாமல் போனவர்கள்
குமரி எஸ். நீலகண்டன்
மரத்தில்
தன்னந்தனியாய்
அழகான
ஒரு பறவையைப்
பார்த்தேன்.
முகமலர அதோடு
ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்த
நிலவையும் பார்த்தேன்.


எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க...


பேரிடி முழங்கியது.
பெருமழை பெய்தது.
பேசிக் கொண்டிருந்த
பறவையையும்
காணவில்லை.
நிலவையும்
காணவில்லை.
எங்கே போனதோ
அவைகள்.