Friday, September 30, 2011

வானத்தில் இரண்டு நிலாக்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

வானத்தில் இரண்டு நிலாக்கள்
குமரி எஸ். நீலகண்டன்

கணினித் திரையில்
அடோப் ஃபோட்டோ
ஷாப்பில் ஒரு
அழகான நிலாவை
வரைந்தேன்.
வானத்து நிலா
எனக்கு மாடலாக
இருக்க இன்னும்
வண்ணமயமாக்கினேன்
கணினித் திரையில்..

அந்த லேயரை
நகலெடுத்து
இன்னொரு நிலாவாக
ஒட்டினேன்.
அந்த நிலாவில்
மௌஸை வைத்து
தேர்வு செய்து அதனை
அப்படியே டிராக்
அன்ட் டிராப்பில் இழுத்து
வானத் திரையில்
விட்டேன்.
பூமியில் நன்றாய்
தெரிய தேவைக்கேற்ப
என்லார்ஜ் செய்தேன்.

அடுத்த நாள்
எல்லா செய்தித்
தாள்களிலும்
வானத்தில் இரண்டு
நிலாக்களென்பதே
தலைப்பு செய்தியாக
இருந்தது.

தேநீர் கடைகளில்
தேநீரை விட
சூடாக இருந்தன
நிலாச் செய்தி.

பரபரப்பான ஊழல்
விசாரணைகளும்
பாராளுமன்ற
சலசலப்புகளும்
மக்களுக்கு மறந்தே
போயிற்று.

அலுவலகங்களில்
அன்றாட அலுவல்களை
நிலா கிரகணமாய
மறைத்தது.
நாசா விஞ்ஞானிகளும்
இந்திய விஞ்ஞானிகளும்
விதவிதமாய் விளக்கம்
தெரிவித்தார்கள்.

நான் வரைந்து
வானத்தில் ஒட்டியதை
யார்தான் நம்பப்
போகிறார்கள்.

Friday, September 23, 2011

நிலாவும் முதலையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் குட்டி முதலைகளும்
குமரி எஸ். நீலகண்டன்

சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...


குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன.

Monday, September 19, 2011

நிலாவின் அழைப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

நிலாவின் அழைப்பு
குமரி எஸ். நீலகண்டன்.

இருளைக் கிழித்து
அடைத்த சன்னலை
இடைவிடாது
தட்டிக் கொண்டே
இருக்கிறது நிலா..

திரைமூடிய
கண்ணாடியின்
சிறு இடைவெளிக்குள்
எட்டியும் பார்க்கிறது.

உறுமும் குளிர்சாதன
அறையில் உறங்கும்
அவர்களின் செவிகளுக்கு
நிலாவின் அழைப்பு
எட்டவே இல்லை.

அறையின் அகத்தில்
உறையும் குளிரில்
உறைந்து நிறைந்து
அறையின் சுவரில்
தன்னை வரைந்த
உறங்கும் குழந்தையை
உற்றுப் பார்த்து
கொண்டே இருக்கிறது
அழகான அந்த
நிலா ஓவியம்.

Wednesday, September 14, 2011

நிலவும் காகமும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் காகமும்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த நகரத்தின் நடுவே
ஒற்றை அடையாளமாய்
இருந்த அந்த
பழைய அரசமரமும்
அன்று வெட்டி
சாய்க்கப் பட்டது.

கிளையோடு விழுந்த
கூட்டின் குஞ்சுகளுக்கு
நிலாவைக் காட்டி
நாளை அந்த
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம்.

Friday, September 9, 2011

நிலவும் தவளையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் தவளையும்
குமரி எஸ். நீலகண்டன்.

அலையற்ற நீர்
படுக்கையில் அயர்ந்த
தூக்கத்தில் நிலா.

நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.

இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்
துள்ளலில் வளைந்து
நெளிந்தது நிலா
.

Monday, September 5, 2011

நிலாச் சிரிப்பு - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலாச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்

நாளுக்கு நாள்
கூட்டிக் குறைத்து
சிரித்தாலும் 


வாயை அகல
விரித்து சிரித்தாலும்
பிறையாக
வளைத்து சிரித்தாலும்


முகம் முழுக்க
விரிய சிரித்தாலும் 


மற்றவர்கள் நம்மோடு
சிரித்தாலும்
சிரிக்காமல்
புறக்கணித்தாலும்


சிரிப்பானது
எல்லோருக்கும்
குளுமையாக்த்தான்
இருக்கிறது.

சதா புன்னகைத்துக்
கொண்டே இருக்கும்
நிலவை பார்த்துத்தான்
சொல்கிறேன்.