Sunday, November 21, 2010

அதிசயக் குளியல் - வல்லமை இதழில் வெளியான கவிதை

அதிசயக் குளியல்

குமரி எஸ்.நீலகண்டன்

குளத்தில் சூரியன்
தினமும் குளிக்கிறது.
அதன் சூடு மட்டும்
குறைந்த பாடில்லை.

சேற்றுத் தண்ணீரில்
ஒவ்வொரு நாளும்
சந்திரனும் குளிக்கிறது.
அதன்மேல்
சிறிதும் ஒட்டுவதில்லை சேறு.

இரவில்
குளத்தில் நீந்தும் விண்மீன்கள்
காலையில் எங்கே
ஒளிந்து விடுகின்றன?

Friday, November 19, 2010

மேன்மக்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

மேன்மக்கள்
குமரி எஸ். நீலகண்டன்.


எல்லோரும் உடம்பின்
வியர்வை ஊற்றுக்
கண்களிலெல்லாம்
வாசனைத் திரவமூற்றி
காற்றில் போதையேற்றி
சற்றே முகமெங்கும்
வெள்ளை அடித்து
வீதிக்கு வருகிறார்கள்.
அவர்களின் ஒரு கையில்
பெரிய பூதக் கண்ணாடியும்
இன்னொரு கையில்
தார் சட்டியும்.
பூதக்கண்ணாடியால்
ஒவ்வொருவரையும்
கூர்ந்து பார்த்துவிட்டு
அவர்கள் முகத்தில்
சிறிது கரும்புள்ளி
தென்பட்டால் கூட
உடனடியாக அவருடைய
உருவம் வரைந்து
அதில் தார் பூசி
எல்லோருக்கும் காட்டி
இளித்து இன்பமடையும்
மக்கள்.

Monday, November 15, 2010

மாயவலை - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday November 14, 2010

மாயவலை

குமரி எஸ். நீலகண்டன்

எல்லோருடைய
காதிலும் அலைபேசிகள்.
வார்த்தைகள் வாயிலிருந்து
நூலாய் வளர்ந்தும்
பாம்பாய் வளைந்தும்
வானவெளியில் மிதந்து
விரல் தட்டுகிற இலக்கில்
சரியாய் விழுந்து விடுகிறது.

வார்த்தைகளோடு
பூக்களும் அம்புகளுமாய்
பின்னிப் பிணைந்து
வான்வெளியெங்கும்
போர்க்களம்.

வெளி எங்கும்
நூல்கள் வலைகளாய்
விரிய அதில் சிக்கி
சிதைந்து போனவை
சிட்டுக் குருவிகள்....

காணாத குருவிகளை எண்ணி
மனம் கதறிய போது
காதுகளில் குதூகலமாய்
குருவிகளின்
கீச் கீச் சப்தம்..

ஒருகணம் மந்திர உலகில்
வந்தது போல் ஆச்சரியமாய்
பால்ய நினைவுகளின்
ஈரத்துடன் ஒலியின்
திசை தேடி வீட்டின்
சாளரத்தின் உயரே
உற்று நோக்கினேன். 

காணாத குருவிகளின்
சப்தம் இன்னும்
அதிக வீச்சுடன்.....

வாசலைக் கடந்து
வீட்டிற்குள்.... தேடிய
கண்களுக்கு தெரியவே
இல்லைக் குருவிகள்.

காதுகளுக்கு தெரிந்தது
அதுவும் வந்த நண்பரின்
கைபேசியின்
ரிங் டோன் என்று..

உங்கள் குரலையும்
அழகாக பதிவு செய்து
வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குரலை
ரிங் டோனாக
நாளைய உலகம் கேட்பதற்கு
உங்களுக்கும் அதை
வைத்துக் கொள்பவருக்கும்
அதிர்ஷ்டம் வேண்டும் போலும்.

Saturday, November 13, 2010

கடவுளின் சங்கடம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் சங்கடம்

குமரி எஸ். நீலகண்டன்

சண்டையே விரும்பாத
அவனுக்காகவே
சண்டை இட்டார்கள் இருவர்.
சங்கடத்தில் கடவுள்.

கடவுள் காட்சி கொடுத்தார்
இருவருக்கும் தனித் தனியாய்.
அன்பின் மகத்துவத்தை
அறிவுபூர்வமாகச் சொன்னார்.

அட! நீ என் கடவுளே
இல்லையென
அவரிடமும்
சண்டை போட்டு
அவரவர் கடவுளுக்காக
அடித்துக் கொண்டனர்
இருவரும்….

பாவம்,
சலனமின்றி
சங்கடத்தில்
கண்களை மூடி,
யாருமில்லாத
ஆள் அரவமற்ற
அடர்ந்த வனத்தில்
தவத்தில் தியானத்தில்
கடவுள்.

Wednesday, November 10, 2010

ஜில்புயல் எச்சரிக்கை - வல்லமையில் வெளியான கவிதை

ஜில் புயல் எச்சரிக்கை

குமரி எஸ். நீலகண்டன்
cyclone
ஒரு நீடித்த மௌனம்
நெடும்புயலாகிறது.

வீறுகொண்ட
அதன் விழிகளுக்குத்
திசைகள் இல்லை.


காலத்தின் பசிக்
கால்களால் அதன்
வயிற்றை நசுக்கும்போது
அசைவப் பிரியனாய்
புயல் இழுத்துக்கொள்ளும்
அதன் வயிற்றில்
ஆயிரமாயிரம் உயிர்களையும்
குடில்களோடு கூடவே
அதனுள் பசித்த
குடல்களையும்
அசையாத பசும்
மரங்களையும்…
இன்னும் அதைச் சீரணிக்க
வானக் கலயம்
வார்க்கும் நீரையும்.


ஜில்லெனப் பெயர் வைத்து
ஜல்லென அழைத்து

நில்லெனச் சொன்னாலும்
நில்லாது செல்கிறது
அசுரப் புயல்.


காற்றடிக்கட்டும்
கடலைத் தின்னட்டும்
மழையைக் கக்கட்டும்
பாவம்..
உயிர்களை மட்டும்
விட்டு விடட்டும்
.

Sunday, November 7, 2010

அப்பாவின் குடை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

6.11.10


அப்பாவின் குடை
மூட்டெலும்புகள் உடைந்து
மடங்காமல் முடங்கியது
அப்பாவின் குடை.
சிகிச்சைக்கு
வழக்கமான
இடத்திற்கேச் சென்றேன்.
அப்படியே இருந்தான்
அப்பாவின் குடைக்காரன்
அதே இளமையுடன்
அதே இடத்தில்.

சரி செய்ய முடியுமா என்று
குடைக்காரனிடம் கேட்டேன்.
சரி செய்து விடலாம்
என்றவன் சரி செய்து
கொண்டே அப்பா
எப்படி இருக்கிறார் என்றான்.
அப்பாவைக் காப்பாற்ற
முடியவில்லை என்றேன்
வருத்தத்துடன்.
அப்படியா....அதான்
அப்பாவைக் காணவில்லை...
என்றவன் சரி செய்த
குடையை விரித்தான்.
விரித்த கருங்குடைக்குள்
அப்பாவிற்கே உரிய
சிரிப்பு மழை
இடி முழக்கமாய்.....

Friday, November 5, 2010

தீபாவளி சிந்தனைகள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

தீபாவளிச் சிந்தனைகள்

குமரி எஸ். நீலகண்டன்

வருடந்தோறும்
வருகிறது தீபாவளி.

வெடிகளைக் கொண்டு
ஆடுகிறார்கள்.
விழாக் கொண்டாடுகிறார்கள்

ஓலை வெடி, குருவி வெடி,
குத்து வெடி, லக்ஷ்மி வெடி,
அணு குண்டு, ராக்கெட்டென
ஆகாயம் அதிர இடியாக
ஒளி முழக்கம்.

முழங்கும் ஒலியில்
முகம் தெரியாமல்
சில முனங்கல்கள்.

வானத்தில் அதிரும்
வெடிகளைப் பார்த்து
பறவைகள் தமது
குஞ்சுகளிடம்
என்ன சொல்லும்?

தெருவில் வெடிக்கும்
வெடிகுண்டுகளுக்குப் பயந்து
ஒளிந்துகொள்ளும் நாய்கள்
மனத்தில் என்ன
நினைத்துகொள்ளும்?

அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு
வாழ்த்துகள் எழுதும் போது
என்ன நினைத்துக்கொண்டு
எழுதி இருப்பார்கள்?

கரிந்து போன
வெடிகளைப் பொதிந்த
பாலகர்களின் கரங்கள்
எப்படி இருக்கின்றன?

Thursday, November 4, 2010

காலமும் இடமும் - உயிர்மை உயிரோசையில் வெளியான கவிதை

காலமும் இடமும்
குமரி எஸ். நீலகண்டன்

இடங்கள் இடங்களாகவே
இருக்கின்றன. அதில்
இருப்பவர்களும்
அடையாளங்களும்
மாறிக் கொண்டிருக்கின்றன.
இடம் தன் அடையாளத்தை
இழந்த போதும்
இருந்தவர்களிடமெல்லாம்
எப்போதும்
பேசிக்கொண்டே இருக்கிறது
இருந்த அடையாளத்துடன்.
ஒவ்வொரு இடத்திலும்
பலர் வருவார்கள்..
இருப்பார்கள்...
போவார்கள்
ஆனால் இருந்த
காலத்தின் இடம்
இருந்தவர்களுக்கானது.

Wednesday, November 3, 2010

கடவுளின் அடையாளங்கள் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் அடையாளங்கள்

குமரி எஸ்.நீலகண்டன்
கடவுளின்-அடையாளங்கள்
கடவுள் யார்
எப்படிப் பட்டவர் எனத்
தெரியாமல்
கடவுளோடு கடவுளாய்
மக்கள்.

அவனவன் இயல்புடன்
அவனவன் கடவுள்.

அவனுக்குக் கடவுள்
கோபக்காரன்.
அவனுக்கு கடவுள்
வஞ்சம் நிறைந்தவன்.

ஒருவனுக்கோ கடவுள்
அமைதி ஸ்வரூபி.
இன்னொருவனுக்கு
கடவுள்
இதயமில்லாதவன்.

அவனுக்குக் கடவுள்
ஆள வந்தான்.
இன்னொருவனுக்கு
கடவுள் கருணைப் பிடாரன்.
அவனுக்குக் கடவுள்
காணிக்கை கொடைக்குக்
கருணை காட்டுபவன்.

எங்கும் கடவுளாய்
கடவுள் நிறைந்த உலகம்.
எங்கெங்கினாதபடி எங்கும்
இறைவன் இருக்க
கடவுள் யார்
எப்படிப்பட்டவர் எனத்
தெரியாமல்
கடவுளோடு கடவுளாய்
மக்கள்.

Tuesday, November 2, 2010

சில நிமிடங்கள் சில சந்தோஷங்கள் - வல்லமை இதழில் வெளியான சிறுகதை

சில நிமிடங்கள்! சில சந்தோஷங்கள்!

குமரி எஸ். நீலகண்டன்

அவனால் நம்ப இயலவில்லை… சூம்பிப் போன அவனது கால்கள்  சிறகுகளாய் வளர்ந்து வானத்தில் பறப்பது போல் உணர்ந்தான். சில நம்ப இயலாத நிகழ்வுகளே நிஜத்தில் நிகழ்ந்து விடுவதில் நம்பிக்கை கொண்டான். அவனது கலைத் திறனுக்கு விலையாக, உலகில் யாருக்கும் கிடைக்காத மிக உயர்ந்த பரிசு தனக்குக் கிடைத்ததாகப் பெருமிதம் கொண்டான்.
அன்று ‘கிறீச்’ என்ற ஒலியுடன் இரண்டு காவல் துறை வாகனங்கள் அங்கு வந்து நின்றபோது அவன் மிகவும் பயந்துபோனான். வழக்கம்போல் தன்னை அந்த இடத்திலிருந்து விரட்டத்தான் வருகிறார்களோ என முதலில் அஞ்சி நடுங்கினான். ஆனால் எதிர்பாராத விதமாக அவனுக்கு அங்கு ஒரு ராஜ வரவேற்பு.
அவனது உடைமைகளைக் காவல் துறையினரே பத்திரமாக ஒரு பெட்டிக்குள் பூட்டினர். அவனை மிகுந்த
மரியாதையுடன் வாகனத்துள் ஏற்றினர். மறுநாள் எல்லாச் செய்தித் தாள்களின்  தலைப்புச் செய்தியானான் கணேசன்.  ‘பிளாட்ஃபார்ம் ஓவியர் கணேசனுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில்  சிறப்பு விருந்து’. வானொலி, தொலைக்காட்சிகளோடு எல்லாச் செய்தித் தாள்களிலும் கணேசன் சிறப்புச் செய்தியானான்.
அவனது இருப்பிடமான அந்த பிளாட்ஃபார்மினை சுற்றியுள்ள கடைகள், அலுவலகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்தவர்களெல்லாம் ‘கணேசனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு நிறைய உதவி இருக்கிறேன்’ என்ற தொனியில் பெருமிதமாகப் பேசிக்கொண்டார்கள். கணேசன்  ஒரு சாதாரண பிளாட்ஃபார்ம் பிரஜை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கை. போராட்டங்களையும் பிரச்சனைகளையும் அன்றாட அலுவல்களாகப் பழகிப் போனவன்.  பிளாட்ஃபார்முக்கு முந்தைய அவனது வாழ்க்கை  மிகவும் சுருக்கமானது. அவனது அப்பாவின் ஐம்பதாவது வயதில் பதினொன்றாவது குழந்தையாகப் பிறந்து, பிளாட்ஃபார்மில் பத்தோடு பதினொன்றானான். வீட்டின் கொடிய வறுமையும், இளம்பிள்ளை வாதத்தால் அவனது உடல் ஊனமும் எட்டாவது வயதிலேயே அவனை ஏற்பாரின்றித் தவிக்கவைத்தது.
எல்லாத் தொழில்களிலும் ஓரளவு ஆரம்பப் பாடம் படித்திருக்கிறான். தையற்கடையில் காஜா தைத்திருக்கிறான். ஓட்டலில் பாத்திரம் கழுவி இருக்கிறான். செருப்பு தைத்திருக்கிறான். கடலை விற்றிருக்கிறான். ஏதோ ஒரு காரணங்களால் எல்லாத் தொழில்களுமே அவனைக் கை விட்டுவிட்டன. ஆனால் அவனுள் பதுங்கியிருந்த ஓவியக் கலை ஆர்வம் மட்டும் அவனை விடாது பிடித்துக்கொண்டது. கடலை விற்றபோது நல்ல ஓவியங்கள் உள்ள காகிதங்களைப் பத்திரப்படுத்தினான். ஹோட்டல் வேலை கிடைத்தபோது சமையலறைக் கரியில் ஓவியங்கள் வரையக் கற்றான். ஹோட்டலில் முதலாளியின் தலைக்கு மேல் பூக்களுடன் தொங்கும் சாமிப் படங்களை வரையக் கற்றுக்கொண்டான். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமுமே அவனுள் ஆயிரக்கணக்கான ஓவியங்களாய்ப் பரந்து விரிந்து கிடந்தன. ஒவ்வோர் ஓவியத்தினுள்ளும் ஒவ்வோர் ஆசிரியர் நின்று பாடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
அந்த விருதுபெறாத, உருவமற்ற நல்லாசிரியர்களால்தான் கணேசன், இன்று மிக உயர்ந்த கலைஞனாய், மனிதனாய் இருக்கிறான்.  அவனுள்  எந்த எதிர்பார்ப்பும் இல்லாவிட்டாலும்   ஓவியங்கள் வழி தனது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதிகம் பேசமாட்டான். கரிகளிலும் சாக்பீசுகளிலும் அவனது உணர்வுகளை, அனுபவ வெளிப்பாடுகளைக் கொட்டித் தீர்த்தான். அவனது ஓவியங்களில் சில நேரங்களில் பயம் பரவிக் கிடந்தது. அபூர்வமாய் சந்தோஷம் துள்ளிக் குதித்தது. துக்கம் சிந்திக் கிடந்தது. காதல் கனிவுடன் பார்த்தது. பலரின் நம்பிக்கைகளுக்கும் தன் ஓவியத்தால் மரியாதை செய்தான்.
பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் பல பெற்றவர்களில் பலர் அவனது  ஓவியத்தின்  மொழியறியாது இரக்கமென்ற பெயரில் சில காசுகளை எறிந்துவிட்டுச் சென்றனர். பலரும் அவன் வரைவதெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்கெனக் கருதினர். ஆனால் ஓவியத்தை வரைந்துவிட்டு அவன் யாரிடமும் காசிற்காக கையேந்தவில்லை. விழும் காசுகளில் ஒரு பகுதியால் வயிற்றை நிரப்பினான். அவன் வயிற்றிற்கு இடும் உணவின் ஒரு பகுதி அங்குச்  சுற்றி வரும் நாய்களுக்கும் உண்டு. வரும் காசுகளில் இன்னொரு பகுதியில் மிட்டாய்கள் வாங்கி, பக்கத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் ஏழைச் சிறுவர்களுக்குக் கொடுத்தான்.
அந்தச் சக்கரப் பலகையின் மேல் உட்கார்ந்துகொண்டு இரு கைகளால் கரடுமுரடான சாலையில் உந்தி உந்தி ஊர்வதில்தான் எத்தனை கடினங்கள்! எத்தனை அவமானங்கள்! பல நேரங்களில் சாலையில் மிக வேகமாய்ச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மிக மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டுச் செல்வார்கள். சில சமயம் சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பித் துண்டுகள் கொஞ்சமும் கருணையில்லாது, காய்த்துப் போன கைகளுக்குள்ளும் ஏறி நிற்கும். கைக்குச் செருப்பணிந்தாலும் பலரின் வாய்கழிவுகள் அவன் கை மேல் ஒட்டத் தவறுவதில்லை.
கடந்த பத்து வருடங்களாய் அந்தப் பள்ளிக்கூடத்தின் அருகில் நிரந்தரமாய் அவன் குடியேறிவிட்டான். பல தடங்கல்களுக்கு பின்பும் கணேசன் அந்த இடத்தை நிரந்தரமாய்த் தக்க வைத்துக் கொண்டான். அவன் தற்போது தன் உணர்வுகளை ஓவியங்களாக்கும் அந்த இடமே இவனால்தான் புனிதப்பட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு அந்தச் சாலையின் அனைத்துக் குப்பைகளும் குவிக்கப்பட்டிருந்த இடம், அது. எப்போதும் இறந்து அழுகிய நாய்கள், பூனைகளின் துர் வாசம் வீசும் இடம் அது.
பள்ளிக்கூட நிர்வாகம் எவ்வளவோ முயன்றும் அந்தக் குப்பைக் கிடங்கை அங்கிருந்து அகற்ற இயலவில்லை. எத்தனையோ புகார்களுக்கு பின்பும் நகராட்சி நிர்வாகம் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறியே நாட்களை நகர்த்தியது. சுகாதாரக் கேட்டினால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கணேசன் அஞ்சினான். அவனது உள்ள உறுதிக்கு முன்னே அவனது ஊனமான கால்கள் அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.
கணேசனே எல்லாக் குப்பைகளையும் அகற்றினான். கணேசனின் முயற்சியில் உற்சாகமடைந்த பலரும் அந்தச் சுகாதாரச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டனர். சில மணி நேரங்களில் அந்த இடம் சுத்தமான பூமியாக மாறியது. நகராட்சி நிர்வாகமே  பள்ளிக்கு வெகு தொலைவில்  ஒரு பெரிய குப்பைத் தொட்டியை மிகப் பாதுகாப்பாய் வைத்தது. கணேசன் தான் சுத்தம் செய்த இடத்தில் அழகிய ஓவியங்களை வரையத் தொடங்கினான். பள்ளி நிர்வாகம் கணேசனின் சேவைத் திறனையும் மன உறுதியையும் வியந்து பாராட்டியது. ஓரிரு தினங்களில் அந்த சுவர் யாராலோ வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. கணேசுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அடுத்த நாளில் அந்த ஆச்சரியம், அதிர்ச்சியாக மாறியது. பல்வேறு கட்சி சின்னங்கள் அந்தச் சுவரை போட்டி போட்டு ஆக்கிரமித்திருந்தன. குப்பைகள் சாய்ந்து கிடந்த இடத்தில் கட்சி சின்னங்கள் வாக்குறுதிகளோடு குவிந்து கிடந்தன. பல கடைக்காரர்கள் கணேசனைத் துரத்தி அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர்.
ஆனாலும் கணேசன் அந்த இடத்தை விட்டு விடவில்லை. அன்றாடம் அழகழகான வண்ண ஓவியங்களால் அந்த இடத்தை அலங்கரித்தான். கட்டம் கட்டமாக அமைந்திருக்கும் அந்த பிளாட்ஃபார்ம் கல் பாளங்கள்  கூட மனித உருவங்களின் ஒவ்வோர் உறுப்பையும் சரியான விகிதத்தில் வரைய அவனுக்கு மிகவும் வசதியாகவே இருந்தது. உண்மையான ஆபரணங்களுக்கு ஒப்பாக அழகிய ஆபரணங்களை வரைந்து கடவுளரை அழகுபடுத்தினான். அவனின் தூய இதயத்தினுள் பரவி இருக்கும் கடவுளின் எல்லா உருவங்களும் அவனின் மந்திர விரலின் மாயத்தால் பூமியில் புன்னகையோடு காட்சி தந்தன. அதைக் கண்டு பலரும் அடையும் ஆனந்தத்திலேயே அவனின் ஆத்ம திருப்தி இருக்கிறது. பணங்களுக்காக அவன் மயங்கியதில்லை.
பல தருணங்களில் பல கட்சியினரும் பெரிய பேனர்கள் வரைய அழைத்தபோது பலவந்தமாக மறுத்தான். பல கசப்பான முன் அனுபவங்களால் அவனுக்கு அரசியல் கட்சிகளின் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் எதற்காகவும் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. அவனைப் பார்க்கும் பலருக்கும் அவன் ஒரு சாதரண பிளாட்ஃபார்ம் பிரஜையாகத் தோற்றமளித்தாலும் அவனுள் ஒளிந்திருக்கும் நல்லியல்புகள் மிக அசாதாரணமானவை. அவன் பார்க்கும் அனைத்தையும் விரல்களில் படைக்கும் பிரம்மனாகவே இருந்தான். அன்று அவனுள் ஒரு பயம் கவ்விக்கொண்டது.
ஒரு கட்சி சார்புடைய கடைக்காரன், ஒரு முரட்டு போலிஸ்காரரோடு வந்தான். இரண்டு தினங்களில் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டுமென எச்சரித்துப் போனான். அதற்குள் ஒளிந்திருக்கும் நியாய, அநியாயங்கள் அவனுக்குத் தெரியும்தான். அந்த இடத்திற்குத் தான் உரிமை கொண்டாட இயலாது என்பதும் அதில் எந்த நியாயமும் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனாலும் பொதுமக்களுக்குத் தொல்லை தரக்கூடிய இன்னொரு ஆக்கிரமிப்பிற்காக தான் அப்புறப்படுத்தப்படுவதாகக் கருதினான். இன்னும் அவன் யாருக்கும் தொல்லை தராத அளவிலேயே அந்த இடத்தைப் பயன்படுத்தினான். ஆனாலும் இந்தத் தடவை மிரட்டல்கள் தொடர்ந்தன.
காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வேறு, பைக்கில் வந்து மிரட்டிவிட்டுப் போனார். பல குழந்தைகளைச் சந்தோஷப்படுத்திய அந்தத் திறந்தவெளி ஓவியக் கூடம் அவனை விட்டுப் போகப் போகிறது. பெற்றோர், உற்றார் உறவின் அன்பை அறியாத அவன் ஓவியங்களின் புன்னகைகளிலும், அன்புப் பார்வைகளிலும், அதைக் கண்டு களிக்கும் பக்கத்துப் பள்ளிக் குழந்தைகளின் சந்தோஷங்களிலும், மன நிறைவு கொண்டான். ஏற்கெனவே  உடலால் ஊனமுற்ற அவன் அன்று மிகவும் நொறுங்கிப் போனான். தன் எண்ணங்களை, உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் அந்த ஒப்பற்ற இடம், தன்னைவிட்டு போகப்போகிறது…
அதற்குள் நம்ப இயலாத அந்த நிகழ்வு. குடியரசுத்தலைவரின் மாளிகையில் சிறப்பு விருந்து. புத்தம் புதிய ஆடைகளில் புதுதில்லிக்குப் பறந்தான்.
பெரிய பெரிய அதிகாரிகள், பணக்காரர்கள் நுழைய முடியாத இடத்தில் தான் சிறப்புச் செய்யப்படுவதில் மிகவும் பெருமிதம் அடைந்தான். குடியரசுத் தலைவர் மாளிகையின் காவலர்களும் அதிகாரிகளும் அவனை மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். குடியரசுத் தலைவர் அன்போடு வரவேற்றார். அவனைச் சிறு வயதிலேயே குடியரசுத் தலைவருக்கு நன்றாகத் தெரியும் என்றார். பக்கத்து பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கும் போது பிளாட்ஃபாரத்தில் ஊனமுற்ற கால்களோடு நின்று மரியாதை செய்யும் கணேசனின் தேசப் பற்றை, அவர் பக்கத்தில் பணி செய்த கல்லூரியிலிருந்து பார்த்திருக்கிறாராம். அவனது கலைத் திறனுக்காக உயர்ந்த அங்கீகாரம் அளிக்கப் போவதாகக் குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார். உயர்தரமான தமிழ்நாட்டு உணவுடன் கூடிய உபசரிப்பு கிடைத்தது. இந்தியாவின் மிக உயர்ந்த மனிதரின் அன்பில், உபசரிப்பில் கணேசன் திக்குமுக்காடிப் போனான். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே தங்க வைக்கப்பட்டான். மிதக்கும் மேகம்போல் இருந்த அந்த பஞ்சு மெத்தையில் கணேசன் மிதந்தான்.
உறங்கிக் கோண்டிருந்த கணேசனின் நெஞ்சின் மேல் ஈரம் பாய்ந்த உணர்வு. திடுக்கிட்டு விழித்தான். அவன் வழக்கமாய் உணவளிக்கும் நாய் அவன் மார்பில் நேசமுடன் நக்கிக்கொண்டிருந்தது. தொலைவில் பைக்கின் ஒலி அவன் நெஞ்சை இடித்துக்கொண்டிருந்தது. அவனது உறக்கத்தில் அவனைப் பரவசப்படுத்திய அந்த ஓவியங்கள் அவன் கண் திறந்ததும் காணாமல் போயின.

Popularity: 21% [?]

2 Comments For This Post

 1. kargil jay says:
  June 5th, 2010 at 7:43 pm
  hmm.. sudden end… yes.. in dreams only these things could happen.
 2. மதுரபாரதி says:
  July 7th, 2010 at 12:15 pm
  // ஒவ்வோர் ஓவியத்தினுள்ளும் ஒவ்வோர் ஆசிரியர் நின்று பாடம் சொல்லிக்கொண்டிருந்தனர். //
  நல்ல கதை. அதில் இது ஒரு கருத்துச் செறிவுள்ள வரி.