Tuesday, August 10, 2010

இந்த வேம்புகள் கசப்பதில்லை - உயிரோசையில் வெளியான சிறுகதை

இந்த வேம்புகள் கசப்பதில்லை
குமரி எஸ்.நீலகண்டன்
எதிர் வீட்டில் ஒரு உயிர் நாளை வெட்டிக் கொலை செய்யப்படப் போகிறது. நாளை ஒரு கொலை நடக்கப் போகிறது எனத் தெரிந்தும், அதைக் காப்பாற்ற எந்த உரிமையும் இன்றி விஸ்வநாதன் கேவிக் கேவி அழுதார். என்ன செய்வது? எதுவுமே செய்ய முடியாது.விஸ்வநாதனின் பிள்ளைகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் விஸ்வநாதன் சமாதானம் அடையவில்லை.
எதிர்வீட்டுக்காரர் அவர் வீட்டு மரத்தை வெட்டப் போகிறார், அவ்வளவுதான். ஆனால் இந்தச் செய்தி விஸ்வநாதனுள் ஒரு தாங்க முடியாத துயரச்சூழலைப் பரவ விட்டு விட்டது.
மற்றவர்களைப் பொறுத்தவரை, நாளை வெட்டப் போகும் அந்த மரம் கசந்த இலைகளைக் கொண்ட ஒரு சாதாரண வேப்ப மரமாக இருக்கலாம். ஆனால் விஸ்வநாதனுக்கு, அது அவரைப் போல் நரைத்த தலை, மூளை, இதயம், கை, கால், நரம்பு, ரத்தம் கொண்ட ஒரு மாமனிதரின் உயிர். இவர் வீட்டின் முன்பு நீளமாய் விரித்த விரிப்பாக அமைந்தது ஒரு கறுப்பு தார் சாலை. அதைக்கடந்து எதிர் வீட்டு வளாகத்தில் நெடிதாய் வளர்ந்த அந்த வேப்ப மரத்தோடு அன்றாடம் இவர் வீட்டிலிருந்தபடியே பேசிக் கொண்டேதான் இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பரான அப்துல்லா அல்லவா அந்த மரம்
இரட்டைக் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரே மாதிரி சாயலில் ஒரே நிறத்தில் ஒரே நடை அசைவில் பிரித்தறிய இயலாத அளவிற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதே மாதிரிதான் இந்த இரட்டை மரங்களும். விஸ்வநாதன் வீட்டு முன்புள்ள சாலையில் நின்று பார்த்தால் தெரியும். விஸ்வநாதன் வீட்டு வேப்ப மரமும் எதிர்வீட்டு வேப்ப மரமும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையில் செல்லும் மனிதர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு அதனுருவங்களும் அசைவுகளும் ஒத்திருக்கும்.
இரண்டு மரங்களுக்கும் ஒரு மாத வயது வித்தியாசம். விஸ்வநாதனுக்கும், எதிர்வீட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு இருந்த அப்துல்லாவிற்கும் ஒரு மாத வயது வித்தியாசம்.
அப்துல்லா..... விஸ்வநாதன் நட்பு தெய்வீகமானது... 'அனபு' என்னும் கடவுளால் அரவணைக்கப்பட்டது.
அப்துல்லா வீடு தேடி நாகர்கோவில் நகரம் முழுக்க அலைந்து கொண்டிருந்தார். அப்போது நகரத்தின் வெளிப்புறத்தில் ஒரு காலனியில் ஆள் அரவமற்ற பகுதியில் ஒரு 45 வயதுமிக்க மனிதர் மயக்கமுற்றுக் கிடந்தார்.
அப்துல்லா அவசரமாய்த் தன் மிதிவண்டியை மிதித்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றார். உரிய சிகிச்சைக்குப் பின் அவர் நினைவு பெற அவர் 'விஸ்வநாதனா'க அப்துல்லாவுக்கு அறிமுகமானார்.
விஸ்வநாதன் அப்துல்லாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்துல்லா வீடு தேடும் விபரமறிந்த விஸ்வநாதன் தன் எதிர் வீடு காலியாகும் விபரம் கூற அவர் எதிர் வீட்டிலேயே குடி அமர்ந்தார்.
அட! எதிர் வீடு என்றதும் ஏதோ ஒரு நபரின் வீடல்ல அது... அதுவும் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வீடுதான்.
இருவரது எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததால் குறைந்த கால அளவில் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அப்துல்லாவிற்கு விஸ்வநாதன் ஒரு நண்பரென்றால் வேப்பமரம் இன்னொரு நண்பர். "இயற்கை வைத்தியத்தில் எனக்கு பைத்தியம்" என்பார் அப்துல்லா அடிக்கடி. அந்த அளவிற்கு இயற்கை மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு. அதிலும் குறிப்பாக 'வேப்பமரம்' அப்துல்லாவிற்கு மிகவும் பிடித்தமானது. அதன் இலை, தழை, பட்டையென பெரும்பாலான நேரமும் அதைப்பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்.
ஒரு சமயம் விஸ்வநாதனின் பேரக்குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவரின் குழந்தையின் காலில் வந்த சிரங்கு குரங்காய் உடம்பு முழுவதும் தாவிக் கொண்டிருந்தபோது ஆங்கில வைத்தியத்தில் வீட்டில் பல ஆயின்மென்ட் கூடுகள்தான் கூடின. சிரங்கு மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டிருக்க அப்துல்லாவின் வேப்பிலை வைத்தியத்தில் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. விஸ்வநாதன் கொசுத்தொல்லை பற்றிக் கூற 'வேப்பங்காற்றிற்கு கொசு வராது' என அப்துல்லா 'வேப்பம்பா' பாடுவார்.
விஸ்வநாதனின் பிறந்தநாளைத் தெரிந்து கொண்ட அப்துல்லா அன்று அவருடைய பரிசாய் விஸ்வநாதன் வீட்டு முற்றத்தில் வேப்பமரத்திற்கு வித்திட்டார். ஒருமாதம் கழித்து அப்துல்லாவின் பிறந்த நாள் வந்தது. அதேபோல் அவருடைய வீட்டில் விஸ்வநாதனும் இன்னொரு வேப்பமரத்திற்கு வித்திட்டார்.
இரண்டு வேப்பமரங்களும் ஒரு மாத வித்தியாசமிருந்தும் உருவத்தில் அதிக வித்தியாசமின்றி நட்போடு வளர்ந்தன. அந்தப் பக்கமாய் இருக்கும் பெரிய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கெல்லாம் இந்த மரங்களைச் சொல்லி அடையாளம் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றன அவை. வீட்டு வளாகத்தைவிட்டு அதன் கிளைகள் வெளிக்கிளம்பி சாலை பாதசாரிகளுக்கும் நிழல் தந்தன. சாலையில் செல்வோருக்கு எதிர் வீடுகளில் இரண்டு ஒரே மாதிரி மரங்கள் எப்போதும் "சல சல" வெனப் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இந்த இரண்டு மரத்தடிகளில்தான் விஸ்வநாதனும் அப்துல்லாவும் பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு மரங்களின் காற்றுகளிலும் இவர்களது கருத்துகளே நிறைந்திருக்கும்.
விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார்...
"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
இப்படியே அப்துல்லாவும் விஸ்வநாதனும் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி வளர்ந்த இந்த வேப்பமரங்களுக்கு ஒரு தருணத்தில் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்துவிட்டது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'காகங்கள்' என்ற இலக்கியக் கூட்டத்தை இந்த மரத்தடிகளில் நடத்தி இருக்கிறார்.
விஸ்வநாதன் ஒரு பெரிய ஆசாரமான குடும்பத்தின் வாரிசாய் இருந்தும் எல்லோரிடமும் சாதி மத பேதமின்றி பழகுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற ஏழை நோயாளிகளைத் தொட்டு சேவை செய்வார். சாதி, மத பேதமற்ற அவரின் ஸ்பரிசமே அவரை அவர்களுள் ஒரு வித்தியாசமான மனிதராக அடையாளம் காட்டியது.
அப்துல்லா - விஸ்வநாதனின் நட்பு உருவானபின் இந்த சேவை இன்னும் பேறு பெற்றது. இலை, செடி, கொடி, காய், கனி என இயற்கையே கடவுளாக அவர்களுக்குப் பட்டது. எல்லா உயிர்களின் இயக்கமே கலை அம்சமாகத் தெரிந்தது. தடங்கலில்லாது அந்த உயிர்களின் இயக்கத்திற்கு சேவை செய்வதில் தன் நிறைவு கண்டார்கள் அவர்கள்.
உலகமே கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை, சிகப்பு என வண்ணமயமாய் இருந்தாலும் எல்லாம் ஒரே மண்ணிற்குச் சொந்தமானவை. விஸ்வநாதன் - அப்துல்லா உறவு சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை பாசம் மிகுந்ததாகக் கருதப்படும். ஆனால் நிஜத்தில் அது 'பாசம்' என்ற சுயநல கயிற்றால் பிணைக்கப்படாத அதற்கு அப்பாற்பட்ட உயர்வான உறவாகும்.
திடீரென அப்துல்லாவிற்குப் பணி நிமித்தமாக டெல்லிக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. விஸ்வநாதனுக்கும், அப்துல்லாவிற்கும் மிகப்பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. இயல்பான நடைமுறைகளை ஏற்று எதிர்கொள்வதே வாழ்க்கை என்பதில் இருவருக்கும் அதிக நம்பிக்கை உண்டு. அதனால் அப்துல்லா வீட்டைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்தோடு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார்.
ஆனால் விஸ்வநாதனுக்கோ, அவருடைய நினைவுகள் அவர் வீட்டு வளாகத்து வேப்பமரத்தில் இலைகளாய், காய்களாய், கனிகளாய் கனிந்து தொங்கின. வேப்பமரம் அவருக்கு வேப்பமரமாகத் தெரியவில்லை. அரைநரையோடு புன்முறுவல் கொண்ட ஆரோக்கியமான அப்துல்லாவாகவே தெரிந்தது. வீட்டுக்குள் போகாமல் வெளி இடங்கள் சுற்றாமல் தூங்காமல் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும் அப்துல்லாவாகவே தெரிந்தது. காற்றில் மரம் ஆடி அசையும்போது அப்துல்லா கை அசைத்து அசைத்துப் பேசுவதாகவே விஸ்வநாதனுக்குத் தெரிந்தது. அவரின் கொள்கைகள், நடைமுறைகள், அன்பு அனைத்துமே அந்த மரத்துள் ஆழமாய்ப் பதிந்திருந்த்து. அத்தோடு அப்துல்லாவிற்கும் விஸ்வநாதனுக்கும் கடிதத் தொடர்பு அவ்வப்போது இருந்தது.
எதிர்பாராமல் ஒருநாள் அப்துல்லாவின் இறப்புச் செய்தியும் வந்தது.
விஸ்வநாதன் குடும்பத்திற்குப் பெரிய துயரமாகவே இருந்தது. குடும்பமே புதுடெல்லி சென்று வந்தது. ஆனாலும் அப்துல்லா அந்த இரட்டை வேப்பமரங்களில் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார். அப்துல்லாவின் நினைவுதினத்தில் அங்கு சர்வமதப் பாடல்கள் பாடப்பட்டன.
அந்த இரட்டை வேப்பமரங்களில் சில நேரங்களில் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள் கொஞ்சிக் குலாவும்போது விஸ்வநாதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மகளின் திருமணத்தின்போது எதிர்வீட்டுமனையை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விஸ்வநாதனுக்கு வந்தது. அந்த வேப்பமரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்ற நிபந்தனையை வேண்டுதலாய்த் தந்து ஓரு தூரத்து உறவினருக்கே விற்றும் விட்டார். ஆனால் சில மாதங்களுக்குள் எதிர் வீட்டு வேப்பமரம் வெட்டப்படும் செய்தி விஸ்வநாதனை எட்டியது. துடித்தே போய்விட்டார். எதிர்வீட்டு உறவினரிடம் எவ்வளவோ கெஞ்சினார். அவர்களுக்கு அது கேலிக்குரியதாகவே இருந்தது. ''இவருக்கென்ன பைத்தியமா.... ஒரு மரத்தை வெட்டறதுக்கு இவ்வளவு அழறாரு'' என்றார்கள்.
விஸ்வநாதனுக்கு அது ஒரு பேரிழப்பாய் தெரிந்தது. விஸ்வநாதனின் பேத்தி கூட தாத்தாவை சமாதானப்படுத்தினாள். "கவலைப்படாதீங்க தாத்தா! அந்த வெட்டப்போற மரத்திலே இருந்து ஒரு கொட்டையை எடுத்து நம்ம வீட்டிலே நட்டு மரமாக்கிடலாம்."
விஸ்வநாதன் நிதானமிழந்து நிலை குலைந்து நின்றார்.
அன்றிரவு இடிமழையோடு ஒரு பயங்கர சப்தம்...
எதிர்வீட்டுக்காரர்கள் என்னவோ ஏதோவென்று எட்டிக் கதவைத் திறக்க அங்கு 'பிரேக்' இழந்த ஒரு லாரி அதிவேகமாய் வீட்டு வெளிச்சுவரைத் தகர்த்து அந்த மரத்தில் இடித்து நின்றது. அந்தக் குடும்பமே அந்த மரத்தால் காப்பாற்றப்பட்ட நம்பிக்கையில் அந்த மரத்திற்காக எழுதப்பட்ட 'மரண உத்தரவு' தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் அந்தப் பகுதியில் இரட்டை மரங்களின் சலசலப்பு விஸ்வநாதனோடு அளவளாவிக் கொண்டிருந்தது. அதில் விஸ்வநாதனுக்கு அந்தக் குடும்பத்தையும் அப்துல்லாவையும் காப்பாற்றிய மகிழ்ச்சி மணம் பரப்பி நின்றது.
உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com

No comments: