Friday, January 21, 2011

ரோஜாவும நானும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

ஒரு ரோஜாவும் நானும்
குமரி எஸ். நீலகண்டன்

ஒரு பெரும்புயலுக்கு
முந்தைய மௌனத்தில்
சிலு சிலுவென சிணுங்கிய
தூறல்களுக்கிடையே நானும்
அன்று பூத்த அந்த
நந்தவனத்து ரோஜாவும்
தன்னந்தனியாய்.

விரிந்த இதழ்களில்
விழுந்த நீர் துளிகளோடு
வாசம் வீசிப் பேசிய
அதன் வண்ண மொழிகள்
எனக்குப் புரியவில்லை.

அதன் ஆர்ப்பரிக்கும் அழகில்
அலையோடிய
என் கவிதைகளும்
அதற்கு புரிந்ததாய்
தெரியவில்லை.

ஆனாலும் குத்தும் குளிரை
விட்டு விலகும் என்னை
தடுக்கும் பாவனையில்
அதன் முகத்தின்
மோக ஜாடை.

மழைக்கு முந்தைய
மௌனத்தில்
சூழ்ந்த முட்களுக்கிடையே
பேரிரைச்சலுடன்
பேரன்புடன்
புரியாத மொழியில்
யாருக்கும் தெரியாமல்
பேசிக் கொண்டிருக்கிறோம்
இருவரும்.