Thursday, March 10, 2011

எழுத்தின் சாரம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

எழுத்தின் சாரம்
குமரி எஸ். நீலகண்டன்

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா மை கொட்டலாம்.
பேனா முனை உடையலாம்.
காகிதங்கள் கிழியலாம்.
எழுதியதைக் கிழித்து
கைக் குழந்தை எறியலாம்.

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் கணிப்பொறியில்
எழுதுபவராக இருந்தால்
தட்டச்சை தட்டிய போது
எழுத்தெல்லாம்
சதுரம் சதுரமாக வரலாம்.
வைரஸ் வந்து
உங்கள் எழுத்துக்களைத்
தின்று போகலாம்.
நினைவுத் தட்டின்
வெட்டுக் காயங்களில்
உங்களின் எழுத்து
உடைபடலாம். அல்லது
உங்கள் எழுத்துக்கு அங்கே
இடமில்லாமலும் இருக்கலாம்.

ஆனாலும்
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
அதில் எப்போதாவது
அபூர்வமாய் ஒளிவட்டத்துடன்
ஒரு நல்ல கவிதை வரலாம்.
அதன் விதையிலிருந்து
ஒரு மரம் வளரலாம்.
அதன் பூவிலிருந்து
ஒரு புதுக் கனி விளையலாம்.
அதைத் தின்ன
ஒரு தேவதை வருவாள். 
அவள் இன்னொரு கவிதையை
உங்களுக்கு தெரியாமலேயே
உங்கள் மனதில்
எழுதிவிட்டுச் செல்வாளாம்.
அந்த கவிதையை
உரக்க நீங்கள்
உச்சரிக்கையில்
பல்லக்கில் ஏற்றி அவள்
உலகமறியாத உன்னத
பரிசொன்றைத் தருவாளாம்.
அதென்ன பரிசு?

அதனை அறிவதற்கு 
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்