Tuesday, September 28, 2010

தனி மரத்து பூக்கள் - திண்ணையில் வெளியானக் கவிதை

Sunday September 26, 2010

தனிமரத்து பூக்கள்

குமரி எஸ். நீலகண்டன்
கணவனும் குழந்தையும்

ஊரில் இல்லையென்று

தனக்காக சமைக்காத மனைவி.

படிப்பதற்கு யாருமே

இல்லையென்று

தனக்காகவும் கவிதை

படைக்காத கவிஞன் இவர்கள்

இருவருமே சிரித்து சிரித்து

எப்போதும் தனிமையில்

ஆனந்தமாய் அழகழகாய்

படம் வரைந்து

ஆனந்தப்படும் அந்த

மனநிலை பாதிக்கப்பட்டதாக

கூறப்படுகிற வயதான

பாட்டியின் ஓவியங்களை

சிறிது நேரம்

பார்க்க வேண்டும். அல்லது

விளையாட யாருமின்றி

தனிமையில் கரியால்

சுவரில் தீட்டுகிற

குழந்தையின்

கை வண்ணத்தையாவது

காண வேண்டும்.

குமரி எஸ். நீலகண்டன்

Saturday, September 25, 2010

கவிதையின் ஜனனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நவீன விருட்சம்

22.9.10
கவிதையின் ஜனனம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்


படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.

Friday, September 24, 2010

காலத்தின் கால் நீட்சி - வல்லமை இதழில் வெளியானக் கவிதை

காலத்தின் கால் நீட்சி
Posted by editor on September 22, 2010 in கவிதைகள் | 0 Comment

குமரி சு. நீலகண்டன்
நொடி, நிமிடம், மணி,
நாள், வாரம், மாதம்,
ஆண்டு, நூற்றாண்டென
சங்கத் தமிழ்ப் பெண்ணாய்
சீர் நடை நடந்தும்
காலம் தனது கால்களை
நீட்டி நடப்பது போல்
தோன்றுகிறது.
ஓடும் ரயிலின்
ஜன்னல் திரையில்
ஓடும் காட்சிகளின்
வேகத்தில்
காலத்தின் பிம்பங்கள்
கடந்து செல்கின்றன.


காலத்தின் கால்
பதிவு அவ்வப்போது
அலங்காரம் செய்யப்பட்டு
அர்ச்சிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு
இன்னொரு பதிவிற்கு
எப்போதும் தயாராக
இருக்கிறது.
காற்று வீசுகிற
திசைகள் நோக்கி
காலம் இழுக்கப்பட்டு
அலைக்கழிக்கப்படுகிறது.


மிருகங்கள், பறவைகள்…
புழுக்கள்.. பூச்சிகள்..
மரங்கள்… இலைகள்..
செடிகள்… மனிதர்கள்…
மலைகள்…என
எல்லோரின் கோபத்தின்
சாபத்தின் மொழிகளை
கைகளால் ஒதுக்கிக்கொண்டு
வேகமாய்
எதிர் நீச்சலிடுகிறது
காலம்.


காட்சிகள் மாறிக்கொண்டே
இருந்தாலும் சலனமற்ற
சங்கீத ரசிகனாய்
போய்க்கொண்டிருக்கிறது காலம்.
காலத்தைக் கைப்பிடித்து
கடந்து போகாதவர்களைக்
களைந்து விட்டுப்
போய்க்கொண்டிருக்கும் காலம்.
எங்கே போகிறது காலம்?
எது வரைப் போகிறது?
வரம்பற்ற இலக்கோடு
வரலாற்றின் சாட்சியாய்
வளர்கிறது காலம்.

Tuesday, September 21, 2010

தங்கப் பெண் - நவீன விருட்சத்தில் பிரசுரமான கவிதை

தங்கப் பெண்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்


ஃபேன்சி கடையில்
வேலை பார்க்கும் அவள்
அலங்காரமாய் பேசி
கவரிங் நகைகளை
விற்று வீட்டுக்கு
திரும்பும் வழியில்
வழக்கம் போல் அந்த
பெரிய நகை கடையில்
தொங்கும் தங்க
விலைப் பட்டியலைப்
பார்த்தாள். தற்போதெல்லாம்
கிராமின் விலைக்கும்
அவள் எதிர்கால
நம்பிக்கைக்குமான தூரம்
வெகு தொலைவாகி
விட்டதால் அவள்
அந்த கடை வருகிறபோது
குனிந்தே செல்கிறாள்.
அந்த கடையில்
வேலை பார்க்கும்
அந்த பையன்
மிகவும் வருத்தத்தில்
இருக்கிறான் இப்போதெல்லாம்
அவள் தன்னை
பார்ப்பதில்லை என்று.

நவீன விருட்சத்தில் அழகியசிங்கர் அவர்களின் கடிதம்

அன்புள்ள நண்பர்களே,
நவீன விருட்சம் 87-88வது இதழ் தயாராகி விட்டது.

இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம்.

இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நானும் என் எழுத்தும் ஐராவதம்
கையெழுத்து முத்துசாமி பழனியப்பன்
கவிதை நந்தாகுமரன்
யாவரும் கேளீர் அசோகமித்திரன்
துரோகத்தின் கத்தி ஆதி
கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன்
இலா கவிதைகள் 6 இலா
பழம் புத்தகக் கடை விட்டல்ராவ்
விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
யாருக்காக ப மதியழகன்
G ராமசாமி 60+ ன் புலம்பல்
மூன்று கவிதைகள் அய்யப்பன் மாதவன்
அவளா இது மீனு
ஆறு கவிதைகள் அழகியசிங்கர்
இரு கவிதைகள் விநாயக முருகன்
தமிழ்ப் பேசும் ஆங்கில படம் தாஜ்
பெண் கவிதைகள் மொழிபெயர்ப்பு குவளைக்கண்ணன்
அம்மா மாதிரி செல்வராஜ் ஜெகதீசன்
குற்றச்சாட்டு நீலமணி
மொழிபெயர்ப்புக் கதை எம்.ரிஷான் ஷெரீப்
ஐயப்பப் பணிக்கர் கவிதை
சில குறிப்புகள் அழகியசிங்கர்
கழைக்கூத்தாடிச் சிறுவன் ப மதியழகன்
மைனஸ் மாத்ருபூதம் உஷாதீபன்
வரம் யோசிப்பவர்
ஐராவதம் புத்தக விமர்சனம்
அரசியல்வாதியும் அவர் வளர்த்த பூனையும் குமரி எஸ் நீலகண்டன்
ஊழிக்காலம் எம்.ரிஷான் ஷெரீப்
மெய்ப்பொருள் மிருணா
கவிதை நந்தாகுமரன் (2 முறை ஒரே கவிதை பிரசுரமாகிவிட்டது)

Monday, September 13, 2010

கவிதைகளின் காலம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

You are here:Home கவிதைகள் கவிதைகளின் காலம்
கவிதைகளின் காலம்
Posted by editor on September 11, 2010 in கவிதைகள் | 0 Comment

குமரி சு. நீலகண்டன்
Kumari_S_Neelakandan
”மா” பூ பூப்பதுபோல்
கவிதையின் காலங்களும்…


கவிதைகள் சில புளிக்கின்றன
இனிக்கின்றன
சில ஊறுகாயாய்
இலக்கியச் சோற்றுடன்
நாக்கை உரசிச் செல்கின்றன…


காலம் மாறி
பூத்த பூக்களும்
வண்டுகள்
வராத பூக்களும்
காற்றோடு
கரை கடந்த பூக்களும்
தரை விழுந்த பூக்களும்


வாடாத பூக்களுடன்
வாசம் பாடாத
பூக்களென
நிறைந்திருக்கிறது
இலக்கியத் தோட்டம்.

Friday, September 10, 2010

முதுமையெனும் வனம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

Sunday September 5, 2010

முதுமையெனும் வனம்

குமரி எஸ். நீலகண்டன்முடிகளில் மூத்த
தலைமுடியினை முந்தி
மீசையில் நரை
உறைய ஆரம்பித்தது.
வெண்மை நுரை தள்ள
அசை போட்டுக்
கொண்டிருந்தது முதுமை.


தாடியில் நரை
ஓவியம் வரைந்தது.
இளமை ஆசைகள் மீசையில்
கருப்பு வண்ணத்தை
பீய்ச்சி விளையாடும்.


காலத்தின் பரப்பில்
கனிந்த கோலங்கள்
வரையும்.
தளர்ந்த உடலில்
இளமை நினைவுகள் தழுவும்.


தொடரும் நினைவுகளின்
நரம்புகளில்
இளமை முறுக்கேறும்
தாவிப் பாயும்
ஆடிப் பாடும்


உள்ளுக்குள் ஒரு காடு
பற்றி எரியும் அங்கே
முதுமைக்குள்
இளமை குளிர் காயும்


குமரி எஸ். நீலகண்டன்

Tuesday, September 7, 2010

தாத்தா தந்த கடிகாரம் - நவீனவிருட்சத்தில் வெளியானக் கவிதை

நவீன விருட்சம்

This Blog
Linked From Here
The Web

5.9.10
தாத்தா தந்த கடிகாரம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்குமரி எஸ். நீலகண்டன்

எனது தாத்தா

இறக்கும் முன் ஒரு நாள்

அவரது ஓடாத

பழைய கடிகாரத்தை

எனக்கு பரிசாக

தந்துவிட்டு போனார்.

தாத்தாவின் இதயம் துடிக்கும்

அதை நான் மிகவும்

பத்திரமாக பாதுகாத்து

வருகிறேன்.

உலகம் போற்றும்

அந்த சிற்பி

தற்போது புதிதாய்

கவிதை எழுத

துவங்கி இருக்கிறார்

கவிதை பக்கம்

செல்லாதவர்களும்

தற்போது அவரது

கவிதையைப்

புகழ்ந்து போற்றுகின்றனர்.

கவிதையே போடாத

பத்திரிகைகளும் தற்போது

அவரது கவிதைக்காக

ஒரு பக்கம்

ஒதுக்கி உள்ளன.

நான் தற்போது அந்த

கவிதைகளையெல்லாம்

ஒரே ஒரு தடவை மட்டும்

படித்துவிட்டு

தாத்தா தந்த

அந்த கடிகாரத்தின்

அடியில் வைத்து

பாதுகாத்து வருகிறேன்

குமரி எஸ். நீலகண்டன்

Sunday, September 5, 2010

எஜமான விஸ்வாசம் - வல்லமை இணைய இதழில் எனது கவிதை

எஜமான விஸ்வாசம்

Posted on 04 September 2010

குமரி எஸ். நீலகண்டன்

எலியும் பூனையுமாய்
எஜமானனும்
எதிர்வீட்டுக் காரரும்..
சண்டைக்காரன் வீட்டில்
மீனைத் திருடித் தின்றுவிட்டு
பதுங்கி பதுங்கி
பவ்யமாய் வந்த பூனை
எஜமானனை
சந்தேகத்துடன் பார்த்தது
எஜமானனுக்கு தற்போது
தான் எலியா
பூனையா என்று