Wednesday, August 31, 2011

நிலாச் சோறு - திண்ணையில் வெளியான கவிதை

நிலாச் சோறு
குமரி எஸ். நீலகண்டன்

பௌர்ணமி இரவில்
வெண்மை பொங்க
விசாலமாய் தெரிந்தது
பால்நிலா.

வெண் சித்திரங்களாய்
சிதறிக் கிடந்தன
நட்சத்திர கூட்டம்.

மொட்டை மாடியில்
சூழ்ந்திருந்த குழந்தை
நட்சத்திரங்களுக்கு
வாய்க்கொன்றாய்
உருண்டை
உருண்டையாய்
சுவையாய் ஊட்டினாள்
நிலாச் சோற்றினை
அற்புதப் பாட்டி.

அவளுக்கு மிகவும்
பிடித்த அந்த
சரவணனிடம் கேட்டாள்.
நிலாச் சோறு
எப்படி என்று.

மிகவும் சுவையாக
இருக்கிறது என்றான்
கண்களில் நிலா
மின்ன பார்வையற்ற
அந்தப் பேரன்.

Friday, August 26, 2011

காற்றும் நிலவும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றும் நிலவும்
குமரி எஸ். நீலகண்டன்

சிதறிக் கிடந்த
கருமேகங்களைக்
கூட்டி அதற்குள்
மறைந்து மறைந்து
போனது நிலா.

காற்று அந்த
கருந்திரையைக்
கலைத்துக் கலைத்து
நிலாவின் முகத்தை
அம்பலமாக்கியது.

கருந்திரை எங்கோ
பறந்து போக
முகம்மூட
ஆடை தேடி
மிதந்து சென்று
கொண்டிருந்தது நிலா.

நிலவுடன் காற்று
காதல் விளையாடிக்
கொண்டிருக்க...
மேகத்தைக் கலைத்து
மழையைக் கொண்டு
சென்று விட்டதாக
காற்றைக் கடுமையாய்
திட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தனர்
பலரும்.

Monday, August 22, 2011

நீரும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நீரும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.

அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.
நிலா இருந்தது.
கொஞ்சம்
கரைந்துமிருந்தது.
மீண்டும் மூடி
வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.
இன்னும் கரைந்திருந்தது.

நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.

நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக.

Wednesday, August 17, 2011

பிடிவாதக் குழந்தையும் பிறை நிலாவும் - திண்ணையில் வெளியான கவிதை

பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

அமாவாசையன்று
நிலா நிலா ஓடிவா
என்றது குழந்தை.

வானம் முழுவதும்
தேடியும் நிலாவைக்
காணவில்லை.

இன்னும் பிடிவாதமாய்
நிலாவை அழைத்தது.
வரவே இல்லை.

கோபத்தில் குழந்தை
நிலாவோடு டூ விட்டது.
அடுத்த நாள் நிலா
பிறை வடிவில்
எட்டிப் பார்த்த போது
குழந்தை கண்ணை
அடைத்துக் கொண்டது.

சிறிதாய் நிலா
கண் இமைகளின்
இடைவெளியில்
எம்பி நுழைய
முற்படுகையில்
கண்ணை இன்னும்
இறுக்கிக் கொண்டது.

அப்போதும் நிலா
எப்படியோ கண்ணுக்குள்
காட்சி அளித்தது.

இன்னும் கோபத்தில்
குழந்தை போ.. போவென
புறக்கணித்து
உறங்கிப் போனது.

அப்போதும் நிலா
கனவில் வந்து
குழந்தையின்
இரு கைக்குள்
லாகவகமாய் உட்கார்ந்தது.

குழந்தை அதை
இறுக்கமாய் பிடித்துக்
கொண்டு தூங்கியது.

Saturday, August 13, 2011

நிலாக் காவல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலாக் காவல்
குமரி எஸ். நீலகண்டன்

நடந்து கொண்டே
இருந்தேன். என்னைத்
தொடர்ந்து கொண்டே
இருந்தது நிலா.

இரவின் தனிமை
என்னை
அச்சமூட்டவில்லை...
நடந்த தூரங்கள் முழுக்க
தொடர்ந்து உரையாடிக்
கொண்டே வந்தது நிலா...

நான் நுழைந்த
அந்த வீட்டிற்குள்
மட்டும் நுழையவில்லை
அந்த நிலா..

எவ்வளவு நேரம்
எனக்காக வெளியே
காத்திருந்ததோ
எனக்குத் தெரியவில்லை...

Tuesday, August 9, 2011

நரியும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நரியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.

குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.

பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.

Friday, August 5, 2011

நிலா மொழி - வல்லமை இதழில் வெளியான கவிதை

நிலா மொழி
குமரி எஸ். நீலகண்டன்

எனது அம்மாவுடன்
நான் களித்த எனது
அம்புலிப் பருவத்திலிருந்தே
உன்னைக் காண்கிறேன்...
இன்றும் நீ
அப்படியே இருக்கிறாய்
என்றேன் நிலாவைப்
பார்த்து வியந்து...

அதற்கு நிலா சொன்னது
நாற்பது ஆண்டுகளாய்
நானும் உன்னைக்
காண்கிறேன்..
அப்போது போலில்லை
நீ இப்போது.
மிகவும் மாறி
விட்டாய்.. என்று
வருத்தத்துடன்
சொன்னது..

இன்னும் சொன்னது...
நான் மாறி விட்டாயென்று
சொன்னது உன்
உருவத்தை மட்டுமல்ல...
என்றது குறிப்பாய்.

Monday, August 1, 2011

நினைவுகளின் மறுபக்கம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

நினைவுகளின் மறுபக்கம்
குமரி எஸ். நீலகண்டன்


நிலாவையே நினைத்துக்
கொண்டிருந்தேன்.
நிமிடங்கள் பறந்து
போயிற்று.

குளிர்ச்சியாய் மனது
குதூகலாமாயிற்று.

என்னைப் போல் அங்கும்
நிலாவிலிருந்து யாரோ
பூமியை நினைத்துக்
கொண்டிருக்கலாம்.

பூமியின் வெப்பம்
அவர்களின் மனதை
வியர்க்க வைக்கலாம்.
மறைந்த பசுமை
அவர்களின் மனதை
உறைய வைக்கலாம்.
சுற்றும் பூமியின்
சிமென்ட் சிரங்குகள்
அவர்களின் மனதினை
அருவருக்க வைக்கலாம்.

மழைவராத பேரிடியும்
இரைச்சலும் மனதை
நெருட வைக்கலாம்.

இப்போதும் நிலாவை
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அங்கே பூமியை நினைத்துக்
கொண்டிருப்பவராய்
நானும் என்னை
நினைத்துக்
கொண்டிருந்தேன்.
நிலவு சூரியனாய்
என்னை தகதகக்க
வைத்தது.