நிலவின் வருத்தம்
குமரி எஸ். நீலகண்டன்
இரவைத் துளைத்து
வானத்தைத் தொட்டுக்
கொண்டிருந்த
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மொட்டை மாடியில்
தேங்கிக் கிடந்த
தண்ணீரில்
இரவுக் குளியல்
நடத்தியது ஒரு காகம்.
அதில் அருகே
குளித்துக் கொண்டிருந்தது
பௌர்ணமி நிலா...
நிலா கேட்டது
காகத்திடம்
இந்த நேரத்தில்
இங்கே எப்படி என்று.
கால நேரம் பார்த்தால்
என் தாகமும் தீராது
தேகமும் தகிப்பிலிருந்து
தணியாது என்றது
காகம் தன்
சிறகுகள் அடித்து.
நிலா சொன்னது..
அப்போதெல்லாம்
இந்த இடத்தில்
ஒரு பெரிய
குளம் இருந்தது.
மீன்கள் இருந்தன.
மரங்கள் இருந்தன.
கொக்கும் நாரையும்
குதூகலமாய இருந்தன.
தினமும் குளித்துக்
கொண்டிருந்தேன்..
இப்போது
எப்போதாவது பெய்யும்
தூறலில் மட்டும்
இந்த மொட்டை மாடியில்
தரை பூசிய நீரில்
என் உடலைத் தேய்த்துக்
கொள்கிறேன்...
என்றது மிகுந்த
வருத்தத்துடன்.
அவனுக்கு இல்லாதவை
குமரி எஸ். நீலகண்டன்
ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒரு
இடம் இருக்கிறது.
அதில் ஏதோ
ஒரு காரணத்தால்
உட்கார்ந்து
கொள்கிறார்கள்.
அவனுக்கான
அந்த இடத்தில்
யாரோ ஒருவர்
உட்கார்ந்திருக்கிறார்.
அவன்
இருக்குமிடத்திலிருந்து
அந்த இடம் வெகு
தொலைவிலிருக்கிறது.
அந்த இடத்தை
எட்டும் ஆசையில்
இருக்குமிடத்தையும்
இழந்து விடுவோமோ
என்ற அச்சத்தில்
இருந்த இடத்திலேயே
இருந்து
கொண்டிருக்கிறான்...
அவனுக்கான
அந்த இடத்தைச்
சுற்றிய ஒளிவட்டம்
அவனை பேதலிக்க
வைத்து விட்டது...
அந்த இடத்தைச்
சுற்றியக் கூட்டம்
இரும்புக் கோட்டையாய்
இருக்க இருப்பதற்காய்
மொய்க்கின்றன
ஈக்களின் கூட்டம்.
அவன் பெறாமலேயே
இழந்த இடத்தை
எண்ணி புலம்பிக்
கொண்டிருக்கிறான்
தனக்குள் தன்
தகுதியைக் கூறி
தன்னிடமே
நீதி கேட்டு....
இருக்குமிடத்தை
முதலில் நீ
வெளிச்சமாக்கு
என்கிறது ஏதோ
ஒரு அசரீரி..
குழந்தையின் நிலாப் பயணம்
குமரி எஸ். நீலகண்டன்
பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள்.
ஒரு ராஜகுமாரனின் கதை
குமரி எஸ். நீலகண்டன்

கடவுளின் ராஜ குமாரன்
கம்பீரமாய் குதிரையில்
வந்தான்
அழகான தேசத்தை
அவன் பெருமிதத்துடன்
பார்த்தான்
முதலில் அவனைச் சுற்றி
எல்லாம் சுகமாகவும்
சுறுசுறுப்பாகவுமே இருந்தன.
திருட்டு அவ்வளவாகத்
தென்படவில்லை.
சோம்பேரித்தனமாய் யாரும்
தெரியவில்லை.
அவலங்களும் அதிர்ச்சியும்
மனத்தளர்ச்சியுமாய்
எதுவும் படவில்லை.
அவன் பயணத்தில்
சில காலங்களில்
சில தூரங்கள்
கடந்திருப்பான்.
அதிர்ச்சி ஆரம்பமானது.
பசுமை உடுத்திய தாயின் மடியில்
பரிதாபத்துடன் பல உயிர்கள்
ஆடையில்லாமல்
அழுக்குத் துண்டில்
ஆடிக் கொண்டிருந்தன
பல உயிர்கள்
உலக வரைபடங்களெல்லாம்
நெஞ்சில்
நிதர்சனமாய் தெரிந்தன.
வறுமையில் தோய்ந்து
வழிந்தது துயரம்
முதலில் தனது
தலை கிரீடத்தை
எறிந்தான் ராஜகுமாரன்
தன் மேல் சட்டைகளை
அவிழ்த்து எறிந்தான்
தனது உடமைகளைத் திறந்து
அவர்களாகவே மாறி
அவர்களுக்காக
போரிடத் தொடங்கினான்
பருத்தி மரத்தின்
விதைகளைப் பறித்து
அதைப் பிரித்து
நூல் நூற்று
அவர்களுக்காய் ஆடை
நெய்து கொடுத்தான்
சுற்றியிருக்கும்
இயற்கையுடன்
கை கோர்க்க இனிதேக்
கற்றுக் கொடுத்தான்
அன்னியனின் விலங்குக்குள்
அனைவரும்
முடங்கிக் கிடந்தனர்
அவனிடம் கத்தியில்லை
குண்டூசி கூட இல்லை
நிராயுதனாய் சத்தியத்துடன்
சரித்திரப் போர்
தொடங்கினான்
அகிம்சையெனும்
ஆயுதமே அவனுக்கு
ஆரோக்கியமாய் தெரிந்தது.
கோபத்தை
அண்ட விடவில்லை
அவனின் கொள்கை
சிதையாமல் இருந்தது.
அகிம்சையின் வெப்பத்தில்
உருகினான் அன்னியன்
விலங்குகள் முறிய
வீர முழக்கமிட்டனர்
மக்கள்
ஆனந்தத்தின் உச்சத்தில்
ஆரவாரம் செய்தனர் மக்கள்
உற்சாக கோஷத்தில்
உலகமே அதிர்ந்தது
ராஜகுமாரன்
எச்சரிக்கை உணர்வுடன்
ஏதோ கூறினான்
வெறும் விடுதலை
மயக்கத்தில்
விழிக்கவே இல்லை
பல தலைகள்.
மக்களுக்காக
அறிவுறுத்திக் கொண்டே
இருந்தான் அவர்களின்
ஆரவாரத்தில் அவன் குரல்
அமுங்கிப் போனது
தனித்து விடப் பட்டான்
அவன் விடாமல் தனது
எச்சரிக்கை ஒலிகளை
எழுப்ப எழுப்ப
ஆரவார கூட்டத்திலிருந்து
ஒருவனின்
துப்பாக்கி குண்டுகள்
கோழையாய் அவனை
குதறிச் சிதைத்தன
ரத்தத்தின் கொதிப்பினை
அறிய குண்டுகள்
துளைத்திருக்க கூடும்
அகிம்சை சமாதியானது
ஆரவாரித்த மக்களெல்லாம்
இன்னொருவனுக்கு
அடிமையாயினர்.
ராஜகுமாரனை மறக்காத
அவர்கள் அவன்
பிறந்த நாள் இறந்த நாள்
எல்லாவற்றையும்
கொண்டாடினர்
காலங்காலமாய்
கடிதங்களிலெல்லாம்
தபால் தலையாய் அவன்
தலையைப் பதித்து
தவறாமல் அவனைக்
குத்திக் கொண்டே
இருந்தார்கள்
அவனுக்கு பிடிக்காத
மதுக் கடைகளின்
கல்லாப் பெட்டிகளிலெல்லாம்
மொட்டைத் தலையுடன்
அவன் முகங்களெல்லாம்
கொட்டிக் கிடந்தன
கொலை கொள்ளை
கூலிப்படையென
எல்லோர் கைகளிலும்
அவன் தலைகளையே
கூலிகளாய் பரிமாறினர்
அந்த ராஜகுமாரனைப் பற்றி
எல்லோரும் அவர்களின்
குழந்தைகளைக்கு சொல்லிக்
கொடுக்கிறார்கள் அவனையும்
அவனது வாழ்க்கையையும்
படிக்காமல் தெரியாமல்..
அந்த ராஜ குமாரனின்
பெயர் மகாத்மா என்றார்கள்
வானத்தில் இரண்டு நிலாக்கள்
குமரி எஸ். நீலகண்டன்
கணினித் திரையில்
அடோப் ஃபோட்டோ
ஷாப்பில் ஒரு
அழகான நிலாவை
வரைந்தேன்.
வானத்து நிலா
எனக்கு மாடலாக
இருக்க இன்னும்
வண்ணமயமாக்கினேன்
கணினித் திரையில்..
அந்த லேயரை
நகலெடுத்து
இன்னொரு நிலாவாக
ஒட்டினேன்.
அந்த நிலாவில்
மௌஸை வைத்து
தேர்வு செய்து அதனை
அப்படியே டிராக்
அன்ட் டிராப்பில் இழுத்து
வானத் திரையில்
விட்டேன்.
பூமியில் நன்றாய்
தெரிய தேவைக்கேற்ப
என்லார்ஜ் செய்தேன்.
அடுத்த நாள்
எல்லா செய்தித்
தாள்களிலும்
வானத்தில் இரண்டு
நிலாக்களென்பதே
தலைப்பு செய்தியாக
இருந்தது.
தேநீர் கடைகளில்
தேநீரை விட
சூடாக இருந்தன
நிலாச் செய்தி.
பரபரப்பான ஊழல்
விசாரணைகளும்
பாராளுமன்ற
சலசலப்புகளும்
மக்களுக்கு மறந்தே
போயிற்று.
அலுவலகங்களில்
அன்றாட அலுவல்களை
நிலா கிரகணமாய
மறைத்தது.
நாசா விஞ்ஞானிகளும்
இந்திய விஞ்ஞானிகளும்
விதவிதமாய் விளக்கம்
தெரிவித்தார்கள்.
நான் வரைந்து
வானத்தில் ஒட்டியதை
யார்தான் நம்பப்
போகிறார்கள்.
நிலவும் குட்டி முதலைகளும்
குமரி எஸ். நீலகண்டன்
சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...
குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன.
நிலாவின் அழைப்பு
குமரி எஸ். நீலகண்டன்.
இருளைக் கிழித்து
அடைத்த சன்னலை
இடைவிடாது
தட்டிக் கொண்டே
இருக்கிறது நிலா..
திரைமூடிய
கண்ணாடியின்
சிறு இடைவெளிக்குள்
எட்டியும் பார்க்கிறது.
உறுமும் குளிர்சாதன
அறையில் உறங்கும்
அவர்களின் செவிகளுக்கு
நிலாவின் அழைப்பு
எட்டவே இல்லை.
அறையின் அகத்தில்
உறையும் குளிரில்
உறைந்து நிறைந்து
அறையின் சுவரில்
தன்னை வரைந்த
உறங்கும் குழந்தையை
உற்றுப் பார்த்து
கொண்டே இருக்கிறது
அழகான அந்த
நிலா ஓவியம்.
நிலவும் காகமும்
குமரி எஸ். நீலகண்டன்
அந்த நகரத்தின் நடுவே
ஒற்றை அடையாளமாய்
இருந்த அந்த
பழைய அரசமரமும்
அன்று வெட்டி
சாய்க்கப் பட்டது.
கிளையோடு விழுந்த
கூட்டின் குஞ்சுகளுக்கு
நிலாவைக் காட்டி
நாளை அந்த
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம்.
நிலவும் தவளையும்
குமரி எஸ். நீலகண்டன்.
அலையற்ற நீர்
படுக்கையில் அயர்ந்த
தூக்கத்தில் நிலா.
நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.
இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்
துள்ளலில் வளைந்து
நெளிந்தது நிலா.
நிலாச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்
நாளுக்கு நாள்
கூட்டிக் குறைத்து
சிரித்தாலும்
வாயை அகல
விரித்து சிரித்தாலும்
பிறையாக
வளைத்து சிரித்தாலும்
முகம் முழுக்க
விரிய சிரித்தாலும்
மற்றவர்கள் நம்மோடு
சிரித்தாலும்
சிரிக்காமல்
புறக்கணித்தாலும்
சிரிப்பானது
எல்லோருக்கும்
குளுமையாக்த்தான்
இருக்கிறது.
சதா புன்னகைத்துக்
கொண்டே இருக்கும்
நிலவை பார்த்துத்தான்
சொல்கிறேன்.
நிலாச் சோறு
குமரி எஸ். நீலகண்டன்
பௌர்ணமி இரவில்
வெண்மை பொங்க
விசாலமாய் தெரிந்தது
பால்நிலா.
வெண் சித்திரங்களாய்
சிதறிக் கிடந்தன
நட்சத்திர கூட்டம்.
மொட்டை மாடியில்
சூழ்ந்திருந்த குழந்தை
நட்சத்திரங்களுக்கு
வாய்க்கொன்றாய்
உருண்டை
உருண்டையாய்
சுவையாய் ஊட்டினாள்
நிலாச் சோற்றினை
அற்புதப் பாட்டி.
அவளுக்கு மிகவும்
பிடித்த அந்த
சரவணனிடம் கேட்டாள்.
நிலாச் சோறு
எப்படி என்று.
மிகவும் சுவையாக
இருக்கிறது என்றான்
கண்களில் நிலா
மின்ன பார்வையற்ற
அந்தப் பேரன்.
காற்றும் நிலவும்
குமரி எஸ். நீலகண்டன்
சிதறிக் கிடந்த
கருமேகங்களைக்
கூட்டி அதற்குள்
மறைந்து மறைந்து
போனது நிலா.
காற்று அந்த
கருந்திரையைக்
கலைத்துக் கலைத்து
நிலாவின் முகத்தை
அம்பலமாக்கியது.
கருந்திரை எங்கோ
பறந்து போக
முகம்மூட
ஆடை தேடி
மிதந்து சென்று
கொண்டிருந்தது நிலா.
நிலவுடன் காற்று
காதல் விளையாடிக்
கொண்டிருக்க...
மேகத்தைக் கலைத்து
மழையைக் கொண்டு
சென்று விட்டதாக
காற்றைக் கடுமையாய்
திட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தனர்
பலரும்.
நீரும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.
அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.
நிலா இருந்தது.
கொஞ்சம்
கரைந்துமிருந்தது.
மீண்டும் மூடி
வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.
இன்னும் கரைந்திருந்தது.
நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.
நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக.
பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
அமாவாசையன்று
நிலா நிலா ஓடிவா
என்றது குழந்தை.
வானம் முழுவதும்
தேடியும் நிலாவைக்
காணவில்லை.
இன்னும் பிடிவாதமாய்
நிலாவை அழைத்தது.
வரவே இல்லை.
கோபத்தில் குழந்தை
நிலாவோடு டூ விட்டது.
அடுத்த நாள் நிலா
பிறை வடிவில்
எட்டிப் பார்த்த போது
குழந்தை கண்ணை
அடைத்துக் கொண்டது.
சிறிதாய் நிலா
கண் இமைகளின்
இடைவெளியில்
எம்பி நுழைய
முற்படுகையில்
கண்ணை இன்னும்
இறுக்கிக் கொண்டது.
அப்போதும் நிலா
எப்படியோ கண்ணுக்குள்
காட்சி அளித்தது.
இன்னும் கோபத்தில்
குழந்தை போ.. போவென
புறக்கணித்து
உறங்கிப் போனது.
அப்போதும் நிலா
கனவில் வந்து
குழந்தையின்
இரு கைக்குள்
லாகவகமாய் உட்கார்ந்தது.
குழந்தை அதை
இறுக்கமாய் பிடித்துக்
கொண்டு தூங்கியது.
நிலாக் காவல்
குமரி எஸ். நீலகண்டன்
நடந்து கொண்டே
இருந்தேன். என்னைத்
தொடர்ந்து கொண்டே
இருந்தது நிலா.
இரவின் தனிமை
என்னை
அச்சமூட்டவில்லை...
நடந்த தூரங்கள் முழுக்க
தொடர்ந்து உரையாடிக்
கொண்டே வந்தது நிலா...
நான் நுழைந்த
அந்த வீட்டிற்குள்
மட்டும் நுழையவில்லை
அந்த நிலா..
எவ்வளவு நேரம்
எனக்காக வெளியே
காத்திருந்ததோ
எனக்குத் தெரியவில்லை...
நரியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.
நிலா மொழி
குமரி எஸ். நீலகண்டன்
எனது அம்மாவுடன்
நான் களித்த எனது
அம்புலிப் பருவத்திலிருந்தே
உன்னைக் காண்கிறேன்...
இன்றும் நீ
அப்படியே இருக்கிறாய்
என்றேன் நிலாவைப்
பார்த்து வியந்து...
அதற்கு நிலா சொன்னது
நாற்பது ஆண்டுகளாய்
நானும் உன்னைக்
காண்கிறேன்..
அப்போது போலில்லை
நீ இப்போது.
மிகவும் மாறி
விட்டாய்.. என்று
வருத்தத்துடன்
சொன்னது..
இன்னும் சொன்னது...
நான் மாறி விட்டாயென்று
சொன்னது உன்
உருவத்தை மட்டுமல்ல...
என்றது குறிப்பாய்.
நினைவுகளின் மறுபக்கம்
குமரி எஸ். நீலகண்டன்
நிலாவையே நினைத்துக்
கொண்டிருந்தேன்.
நிமிடங்கள் பறந்து
போயிற்று.
குளிர்ச்சியாய் மனது
குதூகலாமாயிற்று.
என்னைப் போல் அங்கும்
நிலாவிலிருந்து யாரோ
பூமியை நினைத்துக்
கொண்டிருக்கலாம்.
பூமியின் வெப்பம்
அவர்களின் மனதை
வியர்க்க வைக்கலாம்.
மறைந்த பசுமை
அவர்களின் மனதை
உறைய வைக்கலாம்.
சுற்றும் பூமியின்
சிமென்ட் சிரங்குகள்
அவர்களின் மனதினை
அருவருக்க வைக்கலாம்.
மழைவராத பேரிடியும்
இரைச்சலும் மனதை
நெருட வைக்கலாம்.
இப்போதும் நிலாவை
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அங்கே பூமியை நினைத்துக்
கொண்டிருப்பவராய்
நானும் என்னை
நினைத்துக்
கொண்டிருந்தேன்.
நிலவு சூரியனாய்
என்னை தகதகக்க
வைத்தது.
சூர்யப் பார்வை
குமரி எஸ். நீலகண்டன்

சூரியனைப் பார்த்து
நாய் வேகமாய்
குரைத்தது.
சூரியனைப் பார்த்து
ஒரு குயில்
மரத்திலிருந்து
கூவிக் கொண்டே இருந்தது.
சூரியனைப் பார்த்து
கடைக்காரன் கடையின்
விளக்குகளை அணைத்தான்.
சூரியனைப் பார்த்து
பெரியவர்
குடையை விரித்தார்.
சூரியனைப் பார்த்து
முடிசூடான்
தனது மொட்டைத் தலையில்
தொப்பியை வைத்தான்.
சூரியனைப் பார்த்து
கண்ணப்பன் கருப்புக்
கண்ணாடியை கௌரவமாய்
அணிந்தான்.
சூரியனைப் பார்த்து
கந்தன் கைக்குட்டையால்
தலைக்கு மகுடம்
சூட்டினான்.
சூரியனைப் பார்த்து
முனியம்மாள்
தலையை முந்தானையால்
மூடிக் கொண்டாள்.
சூரியனைப் பார்த்து
ஜூலியட் துப்பட்டாவால்
முகத்தையே
மூடிக் கொண்டாள்.
சூரியனைப் பார்த்து
பாட்டி வற்றலைக்
காய வைத்தாள்.
சூரியனைப் பார்த்து
ராமலக்ஷ்மி கேமராவைச்
சொடுக்கினார்.
சூரியனைப் பார்த்து
விவசாயி நெற்களை
நிலத்தில் பரத்தினான்.
சூரியனைப் பார்த்து
பூக்காரி பூக்களில்
தண்ணீரைத் தெளித்தாள்.
சூரியனைப் பார்த்து
மைதானத்தில்
சிறுவர்கள் விளையாட
களம் இறங்கினார்கள்.
சூரியனைப் பார்த்து
அந்தப் பெண்
சன்னல் திரையையும்
சன்னலையும் மூடிக்
கொண்டாள்.
சூரியனைப் பார்த்து
சன்னலோரத்திலிருந்த
ரயில்பயணி
கைத்துண்டால்
கண்களைக் கட்டி
இருளில்
நிலாவைப் பார்த்துக்
குளிர்ந்து கொண்டிருந்தான்.
சூரியனைப் பார்த்து
எங்கோ இன்னமும்
நாய் குரைத்துக்
கொண்டே இருந்தது.
பூனைக்குட்டியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
நிலாவை இதுவரைப்
பார்த்திராத பூனைக்குட்டி
திடீரென நிலாவைப்
பார்த்து பயந்தோடியது..
நிலா துரத்த துரத்த
பூனைக்குட்டி
இன்னும் வேகமாய்
ஓடிப் பின்னால்
மேலேப் பார்த்தது,.
நிலா ஒரு மேகத்துள்
மறைந்திருந்து நோட்டம்
விடுவது போல்
பூனைக்குத் தோன்றிற்று.
பூனை வேகமாய்
ஒரு புதரில் மறைந்து
நிலாவைப் பார்க்க
நிலா மீண்டும்
மேகக் குகையிலிருந்து
வெளியே வந்து துரத்த
பூனைக்குட்டி ஓடிஓடி
ஒரு வீட்டிற்குள்
நுழைந்தது.
சீறும் பூனைக்குட்டியைக்
கண்டு பயந்த
மூன்று வயது குழந்தை
ஓடிப்போய்
அம்மாவின் மடியில்
விழுந்து அழ
அம்மா நிலாவைக்
காட்டி குழந்தையை
சமாதானப் படுத்தினாள்...
நிலாதான் குழந்தையின்
அழுகையின் ஆரம்பமென
அறியாது...