Sunday, October 2, 2011

ஒரு ராஜகுமாரனின் கதை - காந்தி டுடே இணையத் தளத்தில் அக்டோபர் ஐந்தன்று வெளியான கவிதை

ஒரு ராஜகுமாரனின் கதை
குமரி எஸ். நீலகண்டன்

கடவுளின் ராஜ குமாரன்
கம்பீரமாய் குதிரையில்
வந்தான்
அழகான தேசத்தை
அவன் பெருமிதத்துடன்
பார்த்தான்

முதலில் அவனைச் சுற்றி
எல்லாம் சுகமாகவும்
சுறுசுறுப்பாகவுமே இருந்தன.
திருட்டு அவ்வளவாகத்
தென்படவில்லை.
சோம்பேரித்தனமாய் யாரும்
தெரியவில்லை.
அவலங்களும் அதிர்ச்சியும்
மனத்தளர்ச்சியுமாய்
எதுவும் படவில்லை.

அவன் பயணத்தில்
சில காலங்களில்
சில தூரங்கள்
கடந்திருப்பான்.

அதிர்ச்சி ஆரம்பமானது.
பசுமை உடுத்திய தாயின் மடியில்
பரிதாபத்துடன் பல உயிர்கள்

ஆடையில்லாமல்
அழுக்குத் துண்டில்
ஆடிக் கொண்டிருந்தன
பல உயிர்கள்
உலக வரைபடங்களெல்லாம்
நெஞ்சில்
நிதர்சனமாய் தெரிந்தன.
வறுமையில் தோய்ந்து
வழிந்தது துயரம்

முதலில் தனது
தலை கிரீடத்தை
எறிந்தான் ராஜகுமாரன்
தன் மேல் சட்டைகளை
அவிழ்த்து எறிந்தான்
தனது உடமைகளைத் திறந்து
அவர்களாகவே மாறி
அவர்களுக்காக
போரிடத் தொடங்கினான்

பருத்தி மரத்தின்
விதைகளைப் பறித்து
அதைப் பிரித்து
நூல் நூற்று
அவர்களுக்காய் ஆடை
நெய்து கொடுத்தான்
சுற்றியிருக்கும்
இயற்கையுடன்
கை கோர்க்க இனிதேக்
கற்றுக் கொடுத்தான்

அன்னியனின் விலங்குக்குள்
அனைவரும்
முடங்கிக் கிடந்தனர்
அவனிடம் கத்தியில்லை
குண்டூசி கூட இல்லை
நிராயுதனாய் சத்தியத்துடன்
சரித்திரப் போர்
தொடங்கினான்

அகிம்சையெனும்
ஆயுதமே அவனுக்கு
ஆரோக்கியமாய் தெரிந்தது.
கோபத்தை
அண்ட விடவில்லை
அவனின் கொள்கை
சிதையாமல் இருந்தது.

அகிம்சையின் வெப்பத்தில்
உருகினான் அன்னியன்
விலங்குகள் முறிய
வீர முழக்கமிட்டனர்
மக்கள்
ஆனந்தத்தின் உச்சத்தில்
ஆரவாரம் செய்தனர் மக்கள்
உற்சாக கோஷத்தில்
உலகமே அதிர்ந்தது


ராஜகுமாரன்
எச்சரிக்கை உணர்வுடன்
ஏதோ கூறினான்
வெறும் விடுதலை
மயக்கத்தில்
விழிக்கவே இல்லை
பல தலைகள்.

மக்களுக்காக
அறிவுறுத்திக் கொண்டே
இருந்தான் அவர்களின்
ஆரவாரத்தில் அவன் குரல்
அமுங்கிப் போனது

தனித்து விடப் பட்டான்
அவன் விடாமல் தனது
எச்சரிக்கை ஒலிகளை
எழுப்ப எழுப்ப
ஆரவார கூட்டத்திலிருந்து
ஒருவனின்
துப்பாக்கி குண்டுகள்
கோழையாய் அவனை
குதறிச் சிதைத்தன

ரத்தத்தின் கொதிப்பினை
அறிய குண்டுகள்
துளைத்திருக்க கூடும்
அகிம்சை சமாதியானது
ஆரவாரித்த மக்களெல்லாம்
இன்னொருவனுக்கு
அடிமையாயினர்.

ராஜகுமாரனை மறக்காத
அவர்கள் அவன்
பிறந்த நாள் இறந்த நாள்
எல்லாவற்றையும்
கொண்டாடினர்
காலங்காலமாய்
கடிதங்களிலெல்லாம்
தபால் தலையாய் அவன்
தலையைப் பதித்து
தவறாமல் அவனைக்
குத்திக் கொண்டே
இருந்தார்கள்

அவனுக்கு பிடிக்காத
மதுக் கடைகளின்
கல்லாப் பெட்டிகளிலெல்லாம்
மொட்டைத் தலையுடன்
அவன் முகங்களெல்லாம்
கொட்டிக் கிடந்தன
கொலை கொள்ளை
கூலிப்படையென
எல்லோர் கைகளிலும்
அவன் தலைகளையே
கூலிகளாய் பரிமாறினர்

அந்த ராஜகுமாரனைப் பற்றி
எல்லோரும் அவர்களின்
குழந்தைகளைக்கு சொல்லிக்
கொடுக்கிறார்கள் அவனையும்
அவனது வாழ்க்கையையும்
படிக்காமல் தெரியாமல்..
   
அந்த ராஜ குமாரனின்
பெயர் மகாத்மா என்றார்கள்

7 comments:

Rathnavel said...

அருமை

ராமலக்ஷ்மி said...

//கடிதங்களிலெல்லாம்
தபால் தலையாய் அவன்
தலையைப் பதித்து
தவறாமல் அவனைக்
குத்திக் கொண்டே
இருந்தார்கள்

அவனுக்கு பிடிக்காத
மதுக் கடைகளின்
கல்லாப் பெட்டிகளிலெல்லாம்
மொட்டைத் தலையுடன்
அவன் முகங்களெல்லாம்
கொட்டிக் கிடந்தன//

வருத்தும் உண்மை வரிகளில் வலிமையாக. கவிதை மிக நன்று.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

ஸ்ரீராம். said...

சிறிது தூரம் படித்து வந்த பின்தான் புரிந்தது, கவிதை எதைப் பற்றி என்று. வெறும் புகழ் பாடாமல் ஆதங்கம் சொல்லியுள்ளீர்கள். நிலா விட்டு இறங்கியாச்சா..

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம்... இன்னும் இருக்கு நிலா வரிசை...

நம்பிக்கைபாண்டியன் said...

<<>>>, சமூக அவலங்களை சுட்டும் நல்ல வரிகள்

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி நம்பிக்கை பாண்டியன் உங்கள் வருகைக்கும் அன்பிற்கும்