Sunday, January 15, 2012

பொங்கல் 2012 - வல்லமை பொங்கல் சிறப்பு மலரில் வெளியான கவிதை

பொங்கல் 2012
குமரி எஸ். நீலகண்டன்

வழக்கம் போல்
பொங்கல் வந்து விட்டது... 
காய்கனிகளோடு
பொங்கல் பானையுடன்
கம்ப்யூட்டர் பத்தி
கமகமக்க
பக்தி மயமாய் பரவசமாய்
பொங்கல்.

குண்டு குண்டாய்
காய்கறிகள் வைக்கப்
பட்டிருக்கின்றன
வாழை இலைக்குப்
பதிலாயிருந்த
பச்சைக் காகித இலையில்.

கரும்பு இருக்கிறது
அதே இனிப்புடன்.
ஆனால் அது
ஆதவனைக் காண
இன்னும் வளர வேண்டும்
பத்து மாடி உயரத்திற்கு.

கத்தரிக்காய் கண்ணைப்
பிய்க்கும் வண்ணத்தில்
காட்சி அளிக்கிறது.
அதன் மேல்
புண்ணிற்கு சிறிய
பிளாஸ்டர் ஒட்டியது போல்
ஒரு ஸ்டிக்கர் வேறு.
பையன் கேட்டான்
அப்பா அது செய்ததா
அல்லது விளைந்ததா என்று.
விளக்குவதற்கு
விளங்கவில்லை எனக்கு.

அந்தக் காலத்தில்
விளக்கின் முன்
நாளி நிறைய
நெல் வைப்பார்கள்
என்றேன் பையனிடம்.
அவன் நெல்லென்றால்
எப்படி இருக்குமென்றான்.
நகரத்தில் தேடிக்
கிடைக்கவில்லை.
இனி கூகுளில் தேடிக்
காட்டிக் கொடுக்க
வேண்டும்.

மங்களமாய் மஞ்சளோடு
டூத் பேஸ்டைப் போல்
இஞ்சிக்குப் பதில்
இருந்தது இஞ்சி பேஸ்ட்
பொங்கலில் மங்கலாய்.

எல்லாவற்றிற்கும் பதிலாய்
ஏதோ ஒன்று இருந்தது.
ஒரு கிராமத்தைப் போல்
குருவி சத்தம் கேட்கிறது
அழைப்பு மணியில்.
எதற்காக எது இருந்தது
என அறியாமல்
எதற்காக நாம்
இருக்கிறோமெனத்
தெரியாமல் பொங்கலோப்
பொங்கலெனக் கூவிக்
கொண்டாடினர் பொங்கலை.

அறுவடை நாளாம் இன்று.
எதை அறுவடை செய்தார்கள்.

12 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
நிஜம் தான். காலங்கள் மாறி விட்டன.
எங்கள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு நன்றிகளும் பொங்கல் நல் வாழ்த்துக்களும்...

ராமலக்ஷ்மி said...

ஊர் பொங்கலை ஏக்கத்துடன் நினைக்க வைத்தது கவிதை. மிக நன்றி.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்...

ஹ ர ணி said...

மரபைத் தொலைத்துவிட்ட பரிதாபம் தெரிகிறது. எளிமையும் எதார்த்தமும் நிறைந்த கவிதை.தொடர்ந்து வருவேன்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஹரணி அவர்களே! உங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகிறது.

ஸ்ரீராம். said...

கோபமா ஏக்கமா வருத்தமா எது அதிகம் தெரிகிறது கவிதையில்? ஆமாம் எதை அறுவடை செய்திருக்கிறோம்?

குமரி எஸ். நீலகண்டன் said...

கவிதையில் எது தெரிகிறதோ? எனக்கு தெரிந்தது ஏக்கமும் வருத்தமும் நெடு நாளாய் ஸ்ரீராமைக் காணாமல்...

Vetirmagal said...

அருமை.

பொங்கல் மட்டுமா , இன்னும் எத்தனையா, தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம், சிந்திக்க வைத்து விட்டீர்கள்!

குமரி எஸ். நீலகண்டன் said...

வெற்றிமகள் அவர்களின் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... மிக்க நன்றி...

உமா மோகன் said...

எறும்பு பகிரும் வெல்லக்கட்டி

தீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்
குடைகிறது .!
நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்
பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்
பதட்டம்...
பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு
தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்
வாய்ப்பையும் தந்தது.
பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
விருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்
பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
எலிக்கு யோகம்..!
சுந்தர்ஜி -பரிவின் இசை
இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
ஹ ர ணி -ஹரணிபக்கங்கள்
கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்
என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ? என அன்றாடம் மணி
அடிக்கிறது!

ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது

குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
எழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...
அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
எறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
குழந்தைகள் சுவைப்பார்கள்....
அம்மாவும் கூட
காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..

குமரி எஸ். நீலகண்டன் said...

சக்தி மேடம்...உங்கள் வார்த்தைகளில் எனக்கு சக்தி பிறக்குது மூச்சிலும் எழுத்திலும்... உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி...