Wednesday, October 19, 2011

நிலவின் வருத்தம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலவின் வருத்தம்
குமரி எஸ். நீலகண்டன்

இரவைத் துளைத்து
வானத்தைத் தொட்டுக்
கொண்டிருந்த
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மொட்டை மாடியில்
தேங்கிக் கிடந்த
தண்ணீரில்
இரவுக் குளியல்
நடத்தியது ஒரு காகம்.

அதில் அருகே
குளித்துக் கொண்டிருந்தது
பௌர்ணமி நிலா...

நிலா கேட்டது
காகத்திடம்
இந்த நேரத்தில்
இங்கே எப்படி என்று.

கால நேரம் பார்த்தால்
என் தாகமும் தீராது
தேகமும் தகிப்பிலிருந்து
தணியாது என்றது
காகம் தன்
சிறகுகள் அடித்து.

நிலா சொன்னது..
அப்போதெல்லாம்
இந்த இடத்தில்
ஒரு பெரிய
குளம் இருந்தது.
மீன்கள் இருந்தன.
மரங்கள் இருந்தன.
கொக்கும் நாரையும்
குதூகலமாய இருந்தன.
தினமும் குளித்துக்
கொண்டிருந்தேன்..
இப்போது
எப்போதாவது பெய்யும்
தூறலில் மட்டும்
இந்த மொட்டை மாடியில்
தரை பூசிய நீரில்
என் உடலைத் தேய்த்துக்
கொள்கிறேன்...
 என்றது மிகுந்த
வருத்தத்துடன்.

13 comments:

ராமலக்ஷ்மி said...

இழந்தவற்றை எண்ணி வருத்தப்படக் கூட நேரமில்லாமல் மனிதர்கள்:(!

நிலவின் நியாயமான வருத்தத்தைச் சுமந்தபடி கவிதை...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி அருள் உங்கள் வருகைக்கும் உங்களின் இணையத் தள அறிமுகத்திற்கும்...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி... உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும்

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_20.html

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

ஸ்ரீராம். said...

மனிதன் இழந்தவற்றை மனிதன் சிந்திக்க மறந்ததை நிலா தன் பார்வையில் வருந்தி மனிதனுக்கு உணர்த்துகிறது! ஆமாம்...காகம் இரவில் குளிக்குமோ..? (மனிதன் எது அவசியமோ அதைச் சிந்திப்பது இல்லை என்பதற்கு உதாரணமாய் ஒரு கேள்வி!!)

ராமலக்ஷ்மி said...

//ஆமாம்...காகம் இரவில் குளிக்குமோ..? (மனிதன் எது அவசியமோ அதைச் சிந்திப்பது இல்லை என்பதற்கு உதாரணமாய் ஒரு கேள்வி!!)//

இரசித்தேன் ஸ்ரீராம்:)!

குமரி எஸ். நீலகண்டன் said...

காகம் நிச்சயம் இரவில் குளிப்பதில்லை.. இயல்புக்கு மாறான மனிதர்கள் போல் பகல் போன்ற பௌர்ணமி வெளிச்சத்தில் ஏதோ ஒரு காகம் இரவில் குளித்திருக்கிறது. நிலவுடன் காகமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை... கவிதையில் பேசி இருக்கிறது... இந்த சிந்தனையில் இந்த கவிதை தவறில்லையென நான் கருதி எழுதி இருக்கிறேன்... சில நேரம் அந்தக் கருத்து தவறாகவும் இருக்கலாம். கவிதையை உள்ளார்ந்து கிரகித்து அன்புடன் கருத்து தெரிவித்த ஸ்ரீராம் மற்றும் ராமலக்ஷ்மி இருவருக்கும் என் அன்பு நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளித்திருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.

//நிலவுடன் காகமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை... //

அதேதான். கவிஞரின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லையே. நிலவைப் பற்றி நாம் கற்பனை கலந்து எழுதும் போது காகம் இரவில் குளிக்கலாமே. நான் ரசித்தது அடைப்புக் குறிக்குள் அவர் சொல்லிச் சென்ற தத்துவத்தைதான். தொடருங்கள் உங்கள் நிலவுக் கவிதைகளை. காத்திருக்கிறோம் உங்கள் கற்பனைகளை வியந்து ரசிக்க.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம்... ராமலக்ஷ்மி... இருவரையும் அவர்கள் எழுத்தால் அறிவேன்... அவர்கள் எழுதிய கருத்துக்களை தவறாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே இல்லை.. ஸ்ரீராம் சுதந்திரமாக அவரது வேடிக்கை வெடிகளை வெடிக்கலாம்... நான் மகிழ்வேன்.. ஏற்புடைய எல்லாவற்றையும் பணிவன்புடன் ஏற்றுக் கொள்வேன்.

ராமலக்ஷ்மி said...

புரிதலுக்கும் அன்புக்கும் நன்றி:)!

Anonymous said...

நல்ல கவிதை

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா