Wednesday, March 16, 2011

வரிசையின் முகம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

வரிசையின் முகம்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த நெடிய வரிசை
எங்கேப் போகிறதென்று
தெரியாத அளவிற்கு
நெடியதாய் இருந்தது.
வளைந்து வளைந்து அது
நாடு எல்லைகளைக் கடந்து
எங்கோப் போய்
கொண்டிருந்தது.

அது இலவசங்களுக்கான
வரிசையாகவும் தெரியவில்லை.
காரணம் அதில்
பல நாட்டினர்,
பல மதத்தவர், சாதியினர்,
ஆண்கள், பெண்கள்,
சிறியவர், பெரியவர்,
வயதானவர்கள், அதிகாரிகள்,
மருத்துவர்கள்,
பணக்காரர்கள், ஏழைகள்,
அரசியலவாதிகள், சாமியார்கள்,
பிச்சைக்காரர்கள், ரவுடிகள்,
பித்து பிடித்தவர்களென
பேதமின்றி எல்லோருமே
நின்று கொண்டிருந்தனர்.

பின்னால் நின்ற
எல்லோருமே அது
எதற்கான வரிசையென்று
தெரியாமலேயே
நின்று கொண்டிருந்தனர்.
முந்த முயலாத
முட்டல் மோதலில்லாத
முழு வரிசையாக
இருந்தது அது.

யாரும் யாரிடமும் அது
எதற்கான வரிசையென்று
கேட்டுக் கொள்ளாத அளவில்
இயல்பாக இருந்தது
அந்த வரிசை.

வரிசையின் ஆரம்பத்தை
நெருங்கும் வேளையில்
பலருக்கும் பதட்டம்
இருந்தது. பலரும்
பிந்திவர முந்தினர்.
பலரும் தயக்கத்துடன்
பின் வாங்கினர்.

நோயுற்றப் பலரையே
முன்னால் காண
இயன்றது.
முன்னால் நெருங்க
நெருங்க கடவுளின்
கோஷங்கள் நிறையக்
கேட்டன.
சிலர் வலி தாங்காமல்
வாயிலுக்குள் வேகமாய்
ஓடினர்.

வெகு சிலரே
மகிழ்ச்சியுடன்
அந்த வாயிலைக்
கடந்து போனார்கள்.
அது மரண வாயிலுக்குள்
நுழைகிற மக்களின்
வரிசையாக இருந்தது.

11 comments:

ராமலக்ஷ்மி said...

// பலரும்
பிந்திவர முந்தினர்.//

இந்த வரி வந்த போது பிடிபட்டு விட்டது வரிசை எதற்கானதென்பது.

நிதர்சனம் பேசும் கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

வேடந்தாங்கல் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி

குமரி எஸ். நீலகண்டன் said...

ராமலக்ஷ்மி| மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

தவிர்க்க முடியாத, தவிக்க வைக்கும் வரிசை!

குமரி எஸ். நீலகண்டன் said...

இங்கு கூட சிலர் வரிசையை மீறி நுழைந்து விடுகிறார்கள் தற்கொலைகள் மூலமாக... ;நன்றி ஸ்ரீராம்...

Yaathoramani.blogspot.com said...

யாரும் தவிர்க்க இயலாத
முட்டல் மோதல் இல்லாத "அந்த"வரிசை குறித்த
தங்க படைப்பு மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

தற்கொலை இந்த வரிசையில் வராது அல்லவா....அது தட்கால் வரிசை!!

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம்... நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான்

குமரி எஸ். நீலகண்டன் said...

ரமணி அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அது மரண வாயிலுக்குள்
நுழைகிற மக்களின்
வரிசையாக இருந்தது//

இந்த வரிகள் இல்லாமல் கூட இருந்திருக்கலாம்.. வாழ்த்துகள்

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் உழவன்... நீங்கள் கூறியது போல் அந்த வரிகள் இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் கவிதை புரியாமல் போய் விடுமோவென்ற ஒரு சாதாரண கவிஞனின் பலஹீனமான அச்சம்தான் அந்த வரிகளுக்கான காரணம்..அது சில நேரங்களில் கவித்துவத்தை இழக்கச் செய்தும் விடுகிறது.