Thursday, March 3, 2011

நியூட்டனின் மூன்றாம் விதி - வல்லமை இதழில் வெளியான கவிதை

நியூட்டனின் மூன்றாம் விதி
குமரி எஸ்.நீலகண்டன்

*ஒரு சர்ச்சையின் பின்
நெடுநாட்கள் கழித்து
நண்பர்கள் இருவரும்
வழியில் சந்தித்தனர்.

*தயக்கத்துடன்
அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

எதிர் வினை -
இரண்டாமவரின்
கண்கள் மட்டும்
சிரிக்கலாம்.
கண்களோடு உதடுகளும்
சிரிக்கலாம்.

*வெப்பம் படர்ந்த
அவனது கண்கள்
சிரிக்கவில்லை.
உதடுகள் மட்டும்
சிரித்தன.

எதிர் வினை -
இரண்டாமவரின்
உதடுகள்  மட்டும்
சிரிக்கலாம் அல்லது
உதடுகள் தட்டி
உணர்வுகளை எழுப்பலாம்

*கனிவுடன்
கண்களோடு உதடுகளும்
சிரித்தன.

எதிர் வினை -
பௌர்ணமி நிலவில்
பரந்த வானமாய்
உடல் முழுக்க
பரவசிக்கலாம்.

*மௌனமாய் இருந்தான்

எதிர் வினை -
அங்கொரு குறைந்த
காற்றழுத்த மண்டலம்
உருவாகி அதுவே
பெருத்தப் புயலின்
மையமாகலாம்
மழையும் பெய்யலாம்.
பிழையான மழையால்
மௌனம்
ஒரு மயானத்தையும்
உருவாக்கலாம்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

//அங்கொரு குறைந்த
காற்றழுத்த மண்டலம்
உருவாகி அதுவே
பெருத்தப் புயலின்
மையமாகலாம்//

அருமை.

நிதர்சனத்தை அழுத்தமாகச் சொல்லி முடித்துள்ளீர்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

ராமலக்ஷ்மிக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் தங்கள் பதிவைப் பார்த்தேன்
தொடரத்தக்க தரமான பதிவுகளைக் கண்டேன்
தொடர்ந்து வருகிறேன் தொடர வாழ்த்துக்கள்

குமரி எஸ். நீலகண்டன் said...

ரமணி அவர்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்