சிதறிக் கிடந்த
கருமேகங்களைக்
கூட்டி அதற்குள்
மறைந்து மறைந்து
போனது நிலா.
காற்று அந்த
கருந்திரையைக்
கலைத்துக் கலைத்து
நிலாவின் முகத்தை
அம்பலமாக்கியது.
கருந்திரை எங்கோ
பறந்து போக
முகம்மூட
ஆடை தேடி
மிதந்து சென்று
கொண்டிருந்தது நிலா.
நிலவுடன் காற்று
காதல் விளையாடிக்
கொண்டிருக்க...
மேகத்தைக் கலைத்து
மழையைக் கொண்டு
சென்று விட்டதாக
காற்றைக் கடுமையாய்
திட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தனர்
பலரும்.
பித்தளை குட்டுவத்தின்
நீரில் நிலா மிதக்க
ஐந்து வயது சிறுவன்
ஒரு தட்டால் நிலாவை
சிறை வைத்தான்.
அடுத்த நாள்
மூடியை பத்திரமாக
திறந்து பார்த்தான்.
நிலா இருந்தது.
கொஞ்சம்
கரைந்துமிருந்தது.
மீண்டும் மூடி
வைத்து விட்டு
அடுத்த நாள் பார்த்தான்.
இன்னும் கரைந்திருந்தது.
நாட்கள் செல்லச்
செல்ல முழுவதும்
கரைந்திருந்தது.
நிலா முழுவதும்
நீரில் கரைந்து
விட்டதாக எண்ணி
மூடியைத் திறந்தே
வைத்திருந்தான்.
நீர் ஆவியாகி
வானத்தில் நிலாவாகப்
படியத் தொடங்கியது.
நீர் ஆவியாக
ஆவியாக
நாட்கள் செல்லச்
செல்ல வானத்தில்
நிலாப் படிமம்
வளரத் தொடங்கியது
முழு நிலாவாக.
பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.
நிலாவையே நினைத்துக்
கொண்டிருந்தேன்.
நிமிடங்கள் பறந்து
போயிற்று.
குளிர்ச்சியாய் மனது
குதூகலாமாயிற்று.
என்னைப் போல் அங்கும்
நிலாவிலிருந்து யாரோ
பூமியை நினைத்துக்
கொண்டிருக்கலாம்.
பூமியின் வெப்பம்
அவர்களின் மனதை
வியர்க்க வைக்கலாம்.
மறைந்த பசுமை
அவர்களின் மனதை
உறைய வைக்கலாம்.
சுற்றும் பூமியின்
சிமென்ட் சிரங்குகள்
அவர்களின் மனதினை
அருவருக்க வைக்கலாம்.
மழைவராத பேரிடியும்
இரைச்சலும் மனதை
நெருட வைக்கலாம்.
இப்போதும் நிலாவை
நினைத்துக் கொண்டிருந்தேன்.
அங்கே பூமியை நினைத்துக்
கொண்டிருப்பவராய்
நானும் என்னை
நினைத்துக்
கொண்டிருந்தேன்.
நிலவு சூரியனாய்
என்னை தகதகக்க
வைத்தது.