Thursday, April 21, 2011

சுமை தூக்குபவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

சுமை தூக்குபவன்
குமரி எஸ். நீலகண்டன்

உருவமற்று ஒரு சுமை
ஒட்டிக் கொண்டிருக்கும்
அவனது உச்சந்தலையில்.

காற்று ஏறி ஏறி
வெடிக்கப் போகிற
பலூனாய் தலையில்
பெருத்துக் கொண்டிருப்பதை
அறியாமல் பாவம்
அவன்.

அவனது ஐம்புலன்களும்
அசாதாரணப் பெருமிதமும்
ஆக்கி உருட்டியக்
கருப்புச் சுமை போன்ற
கனவு உருவமது.

குனிந்து விழாமல்
பணிந்து விழுகிற
வெயிலுக்கும் குளிருக்கும்
விலகாமல் உறைந்து
சிரிக்க சிந்திக்க
பேச விடாது
அழுத்தும் பெருஞ்சுமை.

அதி வேகமாய்
சுழலும் மின்விசிறியின் கீழ்
ஒரு டேபிள் வெயிட்டின் கீழ்
அகப்பட்டுக் கொண்ட
இத்துப் போன விரிந்த
பழைய ஒற்றைக்
காகிதமாய் கிழிபட்டுக்
கொண்டிருக்கும் அவன்.

5 comments:

Anonymous said...

நல்ல கவிதை!

ராமலக்ஷ்மி said...

டேபிள் வெயிட்டின் கீழ் படபடக்கும் தாளைப் போலவே சுமை தூக்கிக்காக படபடக்கிற மனது வரிகளில் தெரிகிறது.

//உருவமற்று ஒரு சுமை
ஒட்டிக் கொண்டிருக்கும்
அவனது உச்சந்தலையில்.//

கவிஞருக்குள் இருக்கும் ஓவியர் காட்சியை அற்புதமாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

குமரி எஸ். நீலகண்டன் said...

சூர்யனுக்கும் ராமலக்ஷ்மிக்கும் என் அன்பு நன்றிகள்

ஸ்ரீராம். said...

வாழ்க்கையை ரசிக்க முடியாத பெருஞ்சுமையும் கிழிந்த காகித உவமையும் டாப்.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்..