Friday, March 18, 2011

அகங்காரப் பலி - பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை

 அகங்காரப் பலி
குமரி எஸ்.நீலகண்டன்..

அவர்களின் காதல் தருணத்தில்
கவிதையாய் வந்தது
அந்தச் செடி
மாடி சன்னலின்
நிழற் கூரையின் கீழ்.

சன்னலின் உள்வந்து
காற்றோடு உற்சாகமாய்
பேசியது அந்தச் செடி.
ஆடியது பாடியது
வேர் கால்களில்
விழுந்த நீர் குளத்தில்
விளையாடியது செடி.

அவர்களின் காதல் மொழிகளில்
கவிதையாய் நெளிந்தது
அந்தச் செடி.
சன்னலின் உள்ளிருந்து
உரமுடன் நீரும்
உற்சாகமாய்
பாய்ந்தது செடிக்கு..

சன்னலின் கம்பிகளுக்கிடையே
பூக்களைக் காட்டி
புன்னகைத்தது அந்தச் செடி.

ஆணவத்தின் அதிரடியால்
அழிக்கப் பட்டது
அவர்களின் காதல்
ஒரே நிமிடத்தில் ....

அகங்காரப் பெண்ணிற்கும்
ஆணவ கணவனுக்கும்
அதிகாரச்சண்டையில்
தண்ணீரின்றி தள்ளாடி
நின்றது அந்தச் செடி..

அவர்களின்
வார்த்தை உரசல்களில்
வளர்ந்த தீயில்
வாடியது
அந்தச் செடி

தண்ணீர் தண்ணீர்
என வளைந்து
கெஞ்சியது...
அவர்களின் கண்களுக்கும்
அகங்காரக் காதுகளிலும
அது படவே இல்லை.

கருத்த வானத்தின்
கருணைப் பார்வைக்காய்
காத்திருந்தது  செடி.

வெளியே மழை பெய்ய
வீட்டிற்குள்
இடி மழையாய்
வாதங்கள்.

வானம் இரங்கியும்
செடி ஜன்னலிலிருந்து
எட்டி எட்டி
தன் கரங்களை ஏந்தியும்
அதனால் பெய்யும் நீரை
எட்டாத அளவில்
சிமென்ட் கூரை தடுத்தது.
கைப்பிடிச் சுவரில்
துள்ளித் தெறிக்கும்
நீர் கூட செடியை
எட்ட இயலாமல்
கண்ணீர் போல் வடிந்தது.

இறுதியில்
மானுட அகங்காரத்திற்கு
மரணமானது
அந்தச் செடி.

6 comments:

ராமலக்ஷ்மி said...

துளிர்க்க முடியாமல் தவித்து மடிந்தது செடி மட்டும்தானா, கவிதையாய் வந்த தளிர்களின் மனங்களுமா எனும் கேள்வியை எழுப்பிச் செல்லுகிறது கவிதை. நன்று.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி... உங்களின் அன்பார்ந்த கருத்துக்களுக்கு..

kulasekaram Lazar said...

திரு குமரி எஸ். நீலகண்டன் அவர்களுக்கு வணக்கம். நாகர்கோவில் வானொலி வழியாக நாள்களுக்கு முன் குமரி காற்றில் கலந்த உங்கள் குரல் இப்போதும் அலைந்து கொண்டிருக்கின்றது.
அலங்கார பலி கவிதை இதயத்தை வலிக்கச் செய்தது. நன்றி.

ஆரணிவிளை லாசர். குலசேகரம்.

குமரி எஸ். நீலகண்டன் said...

இயற்கை ப்ரியரான நண்பர் ஆரணிவிளை லாசர் அவர்களின் அன்பிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...

ஹ ர ணி said...

எதார்த்தத்துயர் மிகுந்த கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஹரணி அவர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி