Sunday, February 13, 2011

எனது கவிதை குறித்து ......

 எனது கவிதை குறித்து நண்பரின் விமர்சனம்

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் திரு. டோக்ரா அவர்கள்  அவரது என் கவிதை விமர்சனம் வலைப்பூவில் சுயநலத்தின் சுற்றுப்பாதை கவிதை குறித்து ஒரு இடுகையாக விமர்சனம் எழுதி உள்ளார். அதைப் படிக்க இதோ உங்களுக்காக அதன் இணைப்பு... 

நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

நீலகண்டன் என் நெருங்கிய நண்பர். அவரது கவிதைகளை http://neelakandans.blogspot.com/ என்னும் அவரது வலைப்பூவில் அடிக்கடி படிக்கிறேன். கவிதைகளில் அவர் பொதுவாகவே விஷயத்தை நேரிடையாகச் சொல்லாமல் ஒரு சூழ்நிலையை விவரிப்பதன் வாயிலாகத் தெரிவிப்பார். அந்தச் சூழ்நிலை நமக்கு விஷயத்தைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும்.
“சுய நலத்தின் சுற்றுப் பாதை” என்ற கவிதையையே பாருங்கள். வாழ்க்கையின் ஒரு மிகச் சாதாரணமான, அன்றாடம் பல பேருந்துகளில் நடைபெறும் சங்கதி. ஆனாலும், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் நடக்கின்ற போட்டி மனப்பான்மையையும், அதன் பின்னணியாக இருக்கும் “எல்லாம் எனக்கே கிடைக்கட்டும், மற்றவர்கள் என்ன ஆனார்களோ எனக்கு கவலை இல்லை” என்று தன் மையச் சிந்தனை முறையையும் படிமங்கள் மூலம் காட்டுகிறது. அத்துடன் “கூட்டத்தில் மோதிக் கொண்டிருப்பவர்கள் என்னத்தான் செய்ய முடியும்? பாவம்!” என்று பரிதாப உணர்வையும் உருவாக்குகிறது.
சங்கதி மிக சாதாரணமானதாக இருந்தாலும், அதை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இச்சூழ்நிலையைத் தங்கள் உயிருக்காகவும், ஒரு பெரிய லட்சியத்துக்காகவும் போர் களத்தில் இறங்கியிருக்கும் வீரர்களுடன் சொல்லாமலேயே ஒப்பிடுகிறது:

அந்த இடத்தைப் பிடிக்க
கைகள் கம்பிகளைப் பற்ற
வாள்களாக
சண்டையிடும்.

இந்த வரிகளில் மட்டும் இல்லாமல், கவிதை முழுக்க குறைவான வசதிகளுக்காக கூட்டம் கூட்டமாக மக்கள் போட்டியிடும் நம் தற்காலச் சமுதாயத்தின் உண்மை நிலை வெளிபடுகிறது:

தொங்கியும் சாய்ந்தும்
சரிந்தும் வியர்த்தும்
காற்றைப் பிழிந்து
வியர்வை மிதந்த
கனத்தக் கூட்டத்தில்

பயணம் செய்யும் மக்கள் பேருந்தில் மட்டும் அல்ல வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் இதே போல மோதி, முட்டி “இருக்கையைப் பிடிக்கும்” சவாலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேக நிலை மன அழுத்தத்தைத் தருகிறது:

அவனின் பாவனை அசைவில்
நிற்பவர்களின் ரத்தம்
ஒடுங்கிய ஓடைகளில்
உயர் அழுத்தத்தில் பாயும்.

கிடைக்காத போது ஏற்படும் ஏமாற்றம் நகைச்சுவையாக அமைவதால் அவர்களது ஏக்கத்தை இன்னும் பலமாக சுட்டிக்காட்டுகிறது:

அவன் எழாத போது
பெய்யா மழையால்
பொய்யாய் கலையும்
கரு மேகமாய் …..

கவிதை ஒரு புறம் மக்களின் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் “சுய நலத்தின் சுற்றுப் பாதை”யைப் பற்றிப் பேசினாலும், இன்னொரு புறம் ஒரு பேருந்து இருக்கைக்காக “உயர் அழுத்தத்தில் பாயும்” ரத்தத்துடன் “வியர்வை மிதந்த” மக்களின் பரிதாப நிலையையும் படம் போட்டுக் காட்டுவதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் போட்டியும் போராட்டமும் சந்திக்க வேண்டிய இன்றைய உலகத்தின் உண்மை நிலையையும் சுட்டிக்காட்டுகிறது.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நீலா!

3 Responses to நீலகண்டன் கவிதைகள் — ஒரு விமர்சனம் -1

  1. வல்லமையில் வாசித்த அன்றே வியந்து கருத்தளித்திருந்தேன். பகிர்வுக்கு நன்றி.
  2. dogrask says:
    திரு ராமலக்‌ஷ்மி அவர்களே, விமர்சனம் படித்ததற்கு நன்றி. நீங்கள் மிக நன்றாக கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று நீலகண்டன் சொல்கிறார்.

 


திரு டோக்ரா அவர்களுக்கு என் அன்பு நிறைந்த நன்றிகள்.

குமரி எஸ். நீலகண்டன்

No comments: