Saturday, February 5, 2011

என்னுள் ஒருவன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

என்னுள் ஒருவன்
குமரி எஸ். நீலகண்டன்

என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்...

என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.

என்னுள்ளிருந்து
வெளியேறும் நான்
வெகு அருகிலும்..
சில நேரம் விலகியும்
மறைந்தும்
சில நேரம் வெகு
தூரத்திலிருந்தும்
வெகு அருகில் வந்தும்
அச்சுறுத்திக்
கொண்டிருக்கிறது.

என்னை அறியாமல்
என்னுள் புகுந்து
உச்சியிலாடி உட்கலகம்
செய்கிறது..

ஆயிரம் கைகளிலும்
ஆயுதங்கள் தாங்கி
அகத்திலிருந்து
கைகளைச் சுழற்றும்
அதன் ஆர்ப்பாட்டத்தில்
இலக்கு எதிரானாலும்
இழப்பு எனக்கே எனக்கு.

நானின் கையிலுள்ள
நாணின் சுருக்கில்
தலையை ஈர்க்கும்
என்னுள்
நானில்லாத போது
என்னுள் பலருக்கும்
பலருள் எனக்கும்
பட்டாம் பூச்சியாய்
பறக்க இயல்கிறது.

எனக்கே எதிராய்
எப்போதும்
எனது நான்.....

6 comments:

வசந்தா நடேசன் said...

//என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்...//

உண்மைதான்,,

குமரி எஸ். நீலகண்டன் said...

ந்ன்றி வசந்தா அவர்களுக்கு

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.//

அருமையான வரிகள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் ராமலக்ஷ்மி அவர்களுக்கு

கே. பி. ஜனா... said...

கவிதை நல்லாயிருக்கு!

குமரி எஸ். நீலகண்டன் said...

நாகர்கோவிலில் சந்தித்ததைப் போல் இருக்கிறது மகிழ்ச்சி.