வெயிலில் வெந்து
தணிந்த கடலில்
குளித்து முகமெங்கும்
மஞ்சள் பூசிய
மகாராணியாய்
வானமேறி வருகிறது
அழகு நிலா...
விரைந்து வருகின்றன
அவளைச் சுற்றி
வெள்ளியாய் மிளிரும்
விண்மீன் படைகள்..
ஓய்ந்துறங்கும் உலகை
உற்று நோக்குகிறாள்.
எல்லாமே
உறங்குவதாய் கருதி
திருடர்கள் மிக
கவனமாய் திருடிக்
கொண்டிருக்கிறார்கள்.
வேட்டை நரிகள்
அப்பாவிகளை
வேட்டையாடிக்
கொண்டிருக்கின்றன.
நாய்கள் குரைத்துக்
கொண்டே இருக்கின்றன.
காற்று கதவுகளைத்
தட்டித் தட்டி
உறங்குபவர்களை
எச்சரித்துக் கொண்டே
இருக்கின்றன.
எல்லாவற்றையும்
புறக்கணித்து விட்டு
அழுக்கு மிதக்கும்
நடைபாதையில்
தன்னந் தனியாய்
மல்லாந்து படுத்து
நிலவைப் பார்த்து
சிரித்தும் அழுதும்
தன் அந்தரங்கக்
கதைகளை சொல்லும்
மனநலமற்ற
இளம் பெண்ணின்
மனக் குறிப்புகளை
கவனமாகக்
கேட்கிறது நிலா...