Monday, April 18, 2011

மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்

பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.

எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.

Thursday, April 14, 2011

பேப்பர்காரன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

பேப்பர்காரன்
குமரி எஸ். நீலகண்டன்

அழுத்தும் அரசியல்
அசிங்கங்கள் அத்தனையும்
அனாவசியமாய் பின்னால்
சுமந்து கொண்டு காலையில்
தெருத் தெருவாய்
சுறுசுறுப்பாய் சாலையின்
குறுக்கு நெடுக்காய்
வாகனங்களுக்கிடையே
மிதி வண்டியில் திரிகிற
பத்து பதினைந்து வயது
பையன்கள் எல்லோரும்
ஒரே சாயலில்
அண்ணன் தம்பிகள் போல்....

எரிகிற வயிற்றிற்காய்
எறிகிறார்கள் அவர்கள்
ஒவ்வொரு வீட்டு
வாசலிலும் பேப்பரை...
எல்லா அசிங்கங்களும்
எல்லோர் வீட்டு வாசலிலும்...
அந்த அசிங்கத்தை அள்ள
வாசலிலேயேக் காத்திருக்கும்
வீட்டுக்காரர்கள்

ஆனாலும் சுமைகளோடு
சுழலும் அவர்கள்
எல்லோர் முகத்தின்
மையத்தில்
ஒரு அசாதாரணப்
பேரொளி தெரிகிறது..
அவர்களில் யார்
நாளைக்கு ஜனாதிபதி...
ஆற்றல் மிகுந்த விஞ்ஞானி...
அகில உலகை ஆளுகிற
ஆன்ம குருவென்று மட்டும்
தெரியவே இல்லை. 

Monday, April 11, 2011

இரவும் பகலும் - நவீன விருட்சம் இதழில் வெளியான கவிதை

இரவும் பகலும்
குமரி எஸ். நீலகண்டன்

ஏழு வண்ணங்களோடும்
களித்து களைத்த
ஏழு கடல்களும்
பகலை பரந்து
உள் வாங்கிக் கொண்டன.

இருளின் மயக்கத்தில்
இமைகள் மூடின.
பலரின் வீட்டிற்கும்
பலரும் வந்தார்கள்.
காந்தி வந்தார்.
ஒபாமா வந்தார்.
கலாம் வந்தார்.
கிளின்டன் வந்தார்.
எம்.ஜி.ஆர் வந்தார்.
சுந்தர ராமசாமி வந்தார்.
க.நா.சு வந்தார்.
பழைய பேப்பர்காரன்
வந்தான்.

வீரப்பன் வந்தான்.
திருடர்கள் வந்தார்கள்.
இவர்களோடு கடவுளும்
வந்தார்.

உயிரோடு இருப்பவர்கள்,
உயிரோடு இல்லாதவர்கள்
சிங்கங்கள், புலிகள் என
எல்லாமே
யாருக்கும் தெரியாமல்
அவரவர் உலகத்துள்
வந்து போயினர்.

இருண்ட ரகசியங்களோடு
இமைகள் புதைந்திருக்க
பரந்த வானத்தின்
இருளைத் துடைத்தெடுத்த
பகல் காத்திருக்கிறது
சிறிய இமைகளின்
வெளியே வேட்டை நாயாய்
மூடிய இமைகளுக்குள்
முடங்கிய இருண்ட உலகின்
இருளைத் துடைத்தெடுக்க.

Friday, April 8, 2011

பவளமல்லியின் பட்டு சிரிப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

பவளமல்லியின் பட்டுச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்

நான் ஒவ்வொரு முறை
செல்கிற போதும்
அந்த பவளமல்லி மரம்
பழுப்பு வண்ணச் சேலையுடன்
குலுங்கி குலுங்கிச்
சிரிக்கிறது.
அதன் சிரிப்பலைகள்
மரத்திலிருந்து சிந்திச் சிதற
அதன் முகமும்
வெள்ளைச் சிரிப்பும்
பவளமணிகளாய் பரந்து
தரை முழுக்க.......

விரிந்த தரையில்
விழுந்த சிரிப்பில்
பெருமிதமாய் முகம்
பார்க்கிறது
அந்த செந்தரை.

Monday, April 4, 2011

இருட்டிலிருந்து இருட்டு வரை - வடக்கு வாசல் இதழில் வெளியான கவிதை

இருட்டிலிருந்து இருட்டு வரை
குமரி எஸ். நீலகண்டன்

வெதுவெதுப்பான நீர் சூழ்ந்த
ஒளியே இல்லாத
இருண்ட உலகத்திலிருந்து
அழுது கொண்டே
வெளியே வந்தவன்
ஒளிகளின் வழி
ஊடுருவி
காலப் பயணத்தில்
முட்செடிகளில் உள் நுழைந்து
ரோஜாக்களையும்
மல்லிகைகளையும் நுகர்ந்து
தும்மி துடைத்து
முதுகில் முட்காயங்களுடன்
மழைகளிலும் மயானங்களிலும்
உருண்டு புரண்டு சகதியுடன்
சதைகளை ஆற்றிலும்
சாக்கடையிலும் அடித்து
துவைத்து வெயிலில்
உலர்த்தி உலவி
வெந்து  நைந்து
மீண்டும்
இருளில் புகுந்தான். 

Friday, April 1, 2011

மரத்தின் கௌரவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரத்தின் கௌரவம்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த கொழுத்த
மரத்திலிருந்து ஒவ்வொரு
பழுத்த இலையும்
சருகுகளோடு
கீழே விழுகிற போதும்
மரத்தின் பிரிவின்
துக்கத்தின் துளிகள்
சில இலைகளோடு
ஒட்டி இருக்கும்.

மஞ்சளாய் பழுத்த
அந்த இலை
காற்றில் மிதந்து
மிதந்து தரையைத்
தொட்ட போது
அலகுகளால் காகம்
அந்த இலைகளை எடுத்து
அடுத்த மரத்தின்
கிளைகளில் வைத்த போதும்....

அடுக்கடுக்காய் சருகுகள்
இலைகளோடு காகத்தின்
கூடான போதும்...

கொழுத்த மரத்தின்
கழுத்து கொஞ்சம்
கௌரவமாய்
உயர்ந்து நிற்கும்.

Monday, March 28, 2011

கடவுளும் சில சந்தேகங்களும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளும் சில சந்தேகங்களும்
குமரி எஸ். நீலகண்டன்

கடவுள் என்று
ஒருவர் இருக்கிறாரா
என்று கேட்டேன்
நண்பனிடம். அவன்
இல்லவே இல்லை
என்றான் அழுத்தமாக...

அடுத்து நான்
தொடர்ந்தேன்
சில கேள்விகளோடு...

உலகில் எறும்புகளின்
வாயில் தேள்
கொடுக்கு இருந்தால்..

வானில் பறவைகளாக
முதலைகள் பறந்தால்..

கொசுக்கள் மூலமாக
எய்ட்ஸ் பரவும் என்றால்...

காற்றின் வழியாக
மின்சாரம் கடந்து
செல்லுமானால்...

பல்லிகளின் வாயில்
பாம்பின் விஷமிருந்தால்...

நாம் நினைப்பதெல்லாம்
மற்றவர்களின் காதில்
கேட்குமென்றால்...

நிலத்தினடியில்
நீருக்குப் பதில்
பெட்ரோலே இருந்தால்..

இப்படி நான்
கேள்விகளைத்
தொடரத் தொடர அவர்
விடுங்க சாமி...
கடவுள் இருக்கிறார்
இருக்கிறார் என்று
கூறிவிட்டு ஓடி விட்டார்.
எனது கேள்வி
அவரது பதிலினுள்
கடவுள் இருக்கிறாரா
என்பதுதான்.

Friday, March 25, 2011

இரவின் தியானம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

இரவின் தியானம்
குமரி எஸ். நீலகண்டன்

உறங்கிக் கொண்டிருக்கும்
இரவிற்கு உலகம்
தெரியவில்லை.

அழகான நட்சத்திரங்களையும்
பால் நிலாவையும்
பகல் கபளீகரம்
செய்யுமென்ற
பயமில்லை இரவிற்கு.

காற்றோடு
கடலின் அலைகள்
அளவளாவும் ஆர்ப்பரிப்பு
இரவின் உறக்கத்தை
கலைக்கவில்லை.

நிலாவைக் காட்டி
நிறைகிற வயிறுகள்
இரவுக்கு தெரிவதில்லை.

குடித்து விட்டு
குரலுயர்த்தி சப்தமிடும்
குடிகாரர்களின் சப்தங்களும்
கும்மாளங்களும்
இரவின் தியான
உறக்கத்தில்
மயானமாகி விடுகின்றன.

எல்லோருக்குமே
இரவு இரவாக
இருக்க விரும்பி
எதையும் அறியாது
கருப்புப் போர்வையைப்
போர்த்திக் கொண்டு
உறங்குகிறது இரவு.

நேற்று பகல்
தந்தவற்றையெல்லாம்
பத்திரமாய் பகலோடு
கொடுத்துவிட்டு
பறந்து செல்கிறது
இரவு இன்றிரவு
வருகிறேன் என்று.

Tuesday, March 22, 2011

குருவிக் கூடு - உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி திண்ணை இதழில் வெளியான சிறுகதை

குருவிக் கூடு
குமரி எஸ். நீலகண்டன்

    திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம்? அதிர்ச்சியில் எனக்கும் என் மனைவிக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.

    இந்த வீட்டில் என்னோட அப்பா நாகர்கோவிலிலே ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது வந்தது. மாதம் முப்பது ரூபாய் வாடகையிலும் 200 ரூபாய் அட்வான்ஸிலும் அப்போது அவர் எடுத்த வீடு. இன்றோடு 40 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த வீட்டில்தான். இந்த வீட்டில் என் அப்பாவின் மரணத்தைத் தவிர்த்துப் பல நல்லகாரியங்களே நடந்துள்ளன. எந்தவித திருட்டுப் பயமும் இல்லாத பாதுகாப்பான பழைய வடிவில் வசதி மிகுந்த வீடு. விலைவாசிக்கேற்ப இந்த 40 வருடங்களில் அவ்வப்போது வீட்டுக்காரர் ஏற்றும் வாடகைகளுக்கு நாங்கள் ஈடு கொடுத்திருக்கிறோம். நான் வீட்டைக் காலி பண்ண மறுப்பதற்கு இதுவரை சொன்னதெல்லாம் முக்கிய காரணங்கள் இல்லை.


    என் ஒரே பிள்ளையோடு பிள்ளையாய் வீட்டின் முன் அறையில் மேலே வடகிழக்கு மூலையில் கூடு கட்டி வாழும் குருவிகளைப் பிரிந்து எப்படி நாங்கள் வேறு வீட்டிற்குச் செல்ல முடியும். இதுவே நான் வீட்டைக்காலி பண்ண மறுக்கும் ஒரே காரணம். நான் இந்தக் காரணத்தை வீட்டுக்காரரிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவருக்கு அன்பின் மேன்மை பற்றி என்ன தெரியும்? இந்தக் காரணத்தைச் சொன்னால், வேண்டுமென்றால் அவர் செல்லும் வீடுகளிலெல்லாம் 'கெக்கக்கே'' என்று சிரிப்பார்.


    எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையின் வசந்தமே அந்தக் குருவிகள்தான். பல தலைமுறைகளாய் அந்தக் குருவிகள் அதே இடத்தில் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அந்த கூடுகள் பல சிறிய இன்னல்களுக்கு உள்ளானாலும் அவை மீண்டும் மீண்டும் குருவிகளால் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் நிலை நிறுத்தப் பட்டிருக்கின்றன. அந்த கூட்டின் பல தலைமுறைக் குருவிகளை நாங்கள் பல செல்லப் பெயர்களில் அழைத்து மகிழ்ந்திருக்கிறோம். எங்கள் உற்றார் உறவினர்கள் எங்கள் வீட்டின் சுக துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்தவை அந்தக் குருவிகள். நாங்கள் இதே கூட்டில் இன்று வாழும் இந்தக் குருவியின் முந்தைய மூத்த பல தலைமுறைகளோடு ஒட்டி வாழ்ந்திருக்கிறோம். நான் இதன் தாத்தாக் குருவியிலிருந்து பேரன் அல்லது பேத்திக்குருவி வரை எந்த குருவியையும் நானாகத் தொட்டதில்லை. அதற்குக் காரணம் உண்டு.


    நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது என்னோடு ராஜன் படித்துக் கொண்டிருந்தான். அவன் எப்போதும் கவணைக் கையில் வைத்துக்கொண்டே திரிவான். கால்சட்டைப் பாக்கெட்டில் 'பங்சர்' ஆன சைக்கிள் ட்யூபை பட்டை பட்டையாகக் கிழித்து வைத்திருப்பான். சட்டைப் பாக்கெட்டில் பளிங்கு போன்ற சின்னக் கற்கள் பத்துப் பதினைந்து இருக்கும்.


கவணில் கல்லை வைத்துக் கொண்டு குருவி முதல் குயில் வரை குறி தவறாமல் அடிப்பான். கவணில் பட்டை அறுபட்டுப் போனால் சில நிமிடங்களில் பாக்கெட்டிலிருக்கும் டயர் பட்டையைக் கிழித்துக் கவணில் மாட்டி மீண்டும் பறவை வேட்டைக்குத் தயாராகி விடுவான். அதிலும் விசித்திரம், புதிதான கவணென்றால் முதலில் அந்தக் கவணால் ஒரு ஓணானைக் கொன்று அதன் ரத்ததைக் கவணில் தடவினால் தான் நிறைய பறவைகளைக் குறிதவறாமல் வேட்டையாட முடியுமாம். அப்படி அவனில் ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை இருக்கும் அவனிடம் ''பறவைகளைக் கல்லால் அடிப்பது பாவம்'' என்ற நம்பிக்கை இல்லை.


    அவன் ஒவ்வொரு பறவையையும் கவணால் வேட்டையாடும்போது என் நெஞ்சு பரிதவிக்கும். நான் பலதடவை அவனிடம் கூறியும் அவன் செவி சாய்க்காமலேயே பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவன் என் வீட்டிற்கு வந்தபோது, அப்பா சிறிது கண்டிப்புடன் இந்த வேட்டையாடும் விளையாட்டு விஷயமாகச் சொன்னதில் அத்ன்பின் எங்கள் வீட்டுப்பக்கமே தலை காட்ட மாட்டான்.


    ஒரு தடவை அவன் வேட்டையாடும்போது வயிற்றில் அடிபட்டு ஒரு குருவி கீழே விழுந்தது. நான் அவனுக்கு என்னிடம் இருந்த ஒரு புது அயல்நாட்டு அழி ரப்பரைக் கொடுத்து அந்தக் குருவியை வாங்கினேன். வீட்டில் குருவி வளர்ப்பதற்கு ஏராளமான எதிர்ப்பு. ராஜன் போன்ற நண்பர்களிடம் நட்புக் கொள்ளக்கூடாதென மிகவும் கண்டித்தார்கள். எப்படியோ? அந்த மாதததில் பிராகிரஸ் ரிப்போர்ட்டில் நான் வாங்கிய ராங்கும், அன்று நான் நடத்திய 'அன்பு'ப் போராட்டமும் குருவியை வளர்க்க அப்பாவிடம் அனுமதி கிடைக்க உதவின.


உடனடியாக முந்தைய வருடத்துப் பழைய நோட்டின் பருமனான அட்டைகளைக் கிழித்து ஒரு கூடு செய்தேன். குருவி பழகும் வரை பறந்து போகாமல் இருக்க ஏற்கனவே ராஜன் அதன் சிறகுகளை வெட்டியே தந்திருந்தான். அது துள்ளித் துள்ளி வந்ததில் அப்பாவிற்குக்கூடக் குருவி வளர்க்கும் ஆசை அன்று வந்திருக்கவேண்டும். அவரும் என்னோடு சேர்ந்து நான் செய்த கூட்டின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தார். கூட்டிற்குள் இருக்கும் குருவியைப்பார்க்க தென்னைங்குச்சிகளால் கூட்டிற்கேற்ற ஜன்னலும் செய்தார். பழைய மத்தாப்புக் கம்பியினை 'ப' வடிவில் வளைத்துக் குருவி ஆட ஒரு ஊஞ்சல் செய்து கூட்டின் உள்ளே தொங்கப் போட்டார்.


    குருவியைத் தொட்டுப் பார்த்தேன். அதுவரை பறவைகளைத் தூர நின்று பார்த்து ரசித்திருந்தாலும், அன்றுதான் தொட்டு ரசித்ததில் என் நெடுநாள் ஆசை 'நிஜம்' பெற்றது. என் உள்ளங்கையில் இருந்த அடிவயிற்றுச்சூடு என் உள்ளத்திற்கே இதமாய் இருந்தது. சின்னக் குருவியின் முத்துப்போன்ற கண்களும்,அலகும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தன. அதன் சிறகுகளில் மிகவும் சீரான அளவுடன் அழகுறத் தெளிக்கப்பட்டிருக்கும் வண்ணங்களின் பொருத்தத்தில் நான் அடிக்கடி குதூகலப்படுவதுண்டு.


    கடவுள் எவ்வளவு பெரிய கலைஞன்! யானைக்குப் பெரிய கால்! பெரிய காது! அதே போல்க் குருவிக்குச் சின்ன கால், சின்ன கண்..காது.... மூளை..... யானைக்கு உடம்பில் பலம், குருவிக்குச சிறகுகளில் பலம். எனக்கு மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.


    குருவிக்குக் கூடு தயாரான பின் குருவியின் உணவு விவரங்களை அப்பாவிட்ம் கேட்டறிந்தேன். நெல் மணிகள் கொடுத்தேன். அது எட்டிப்பார்க்கவில்லை. பின் பொரி, பழம், தண்ணீரெனக் கொடுத்தும் எவற்றையும் தன் அலகினால் தொட்டுப் பார்க்கவில்லை. அதற்கு என் மேல் கோபமாய் இருக்கவேண்டும்.


    எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அப்பாவிடம் வருந்தினேன். ''நாமிருந்தால் சாப்பிடாது! கூட்டுக்குள் பழத்தையும் நெல்மணியையும் போட்டுக் குருவியை உள்ளே விட்டுவிட்டு நீ பாடத்தைப்படி! அது தானே சாப்பிடும்'' என்றார்.


    நான் அப்பா சொன்னபடி செய்தேன். ஒவ்வொரு கேள்வியையும் படித்துவிட்டு விடையைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு இடைவேளியில் அந்தக் கூட்டின் ஜன்னல் வழியே குருவியை எட்டிப் பார்த்தேன். அது உண்ணாவிரதம் இருந்தது.

எனக்கு அழுகை வந்தது.
 அன்று இரவு தூங்கவே இல்லை.
 ''இதற்குதான் குருவியெல்லாம் வீட்டிற்குக்கொண்டு வராதேன்னேன். படிப்பு கவன்ம் சிதறிப்போகும்'' எனத் திட்டினார் அப்பா.
 அது அடுத்தநாளும் சாப்பிட மறுத்தது.
 நான் அதை உள்ளங்கையில் வைத்துப் பிடிவாதமாய் அழுத்தி வைத்திருந்த அலகுகளை, விரல்களால் குறுக்காக அழுத்தி, பலவந்தமாகப் பழச்சாற்றினை வாயில் விட்டேன். அது 'கடகட'வென விழுங்கியது.
 எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஊட்டினாதான் பிள்ளை சாப்பிடுவாயா?''எனச் சொல்லிக்கொண்டு பழச்சாறு முழுவதையும் வாயில் ஊட்டினேன்.
அது சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.
 ''நேற்று சாப்பிடாத பசி! நிறைய சாப்பிடுகிறது!''
''நிறைய சாப்பிட்டா குருவி இன்னும் குண்டாகும்!'' என அதன் வாயில் திணித்துக்கொண்டே இருந்தேன். ''குருவி ஒரு வேளைக்கு இவ்வளவு உணவு சாப்பிடுமா?'' என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அது பயத்தில் மிகவும் விறைத்துப்போய் இருந்தது. அதைக் கூட்டில் அடைத்து அம்மாவிடம் அடிக்கடி கவனிக்கச் சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றேன்.


    மாலையில் வீட்டிற்கு வந்தபோது குருவி கூட்டில் செத்துக்கிடந்தது. நான் மனம் ஒடிந்து போனேன். 


 காலையில் அது நிறைய சாப்பிட்டது என் நிர்ப்பந்தத்தின் பயத்தில்தான் என்று என் அப்பா சொல்லி அறிந்தேன். அப்போதுதான் எனக்குப்புரிந்தது, பறவைகளும் விலங்குகளும், அவற்றின் சொந்தச் சூழ்நிலைகளில் சுதந்திரமாய்ச் சுற்றி உழைத்துச் சாப்பிடுவதில்தான் மகிழ்ச்சி அடைய முடியும் என்று.


    அன்றிலிருந்து எந்தப் பறவைகளையும் விலங்குகளையும் தொட்டுக்கூடத் தொல்லை கொடுப்பதில்லை. பள்ளியில் ராஜனிடம் எவ்வளவு அறிவுரை கூறியும் அவன் கேட்காததால் அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஒரு தடவை அவன் கவண் எறிந்து ஒரு பையன் மீது கல் பட்டுவிட, ரத்தம் பீறிட்டு அவன் மயங்கியே விழுந்து விட்டான். அப்போது எங்கள் பள்ளித்தலைமை ஆசிரியர் கொடுத்த கடும் தண்டனையில்தான் ராஜனுக்குப் புத்தி வந்தது. அதன் பின் ராஜனின் அப்பா வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனதால் அவன் பள்ளியில் டி.சி. வாங்கிவிட்டுச் சென்றுவிட்டான். 


    நான் சிறுவயதிலேயே சின்னப்பிராணிகளின் உயிருக்குக் கூட மனித உயிரின் அளவிற்கு மதிப்பளிப்பேன். ஒரு தடவை ஒரு எறும்பு எங்கள் வீட்டுப் பின்வாசலில் ஊர்ந்து கொண்டிருந்தது. திடீரென மழைத்தூறல் வந்தது. மழையில் அது இறந்து விடுமென அதைப்பிடித்து வீட்டிற்குள் விட்டேன்.  பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஏகப்பட்ட சந்தோஷம். பிராணிகளின் மீது நான் காட்டும் அன்பை அடிக்கடி வாய்ப்பேற்படும் போதெல்லாம் அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள். அந்த வார்த்தைகளில்தான் நான் அனிச்சையாய்க் காட்டும் என்னுள் உள்ள பரிவை உணரத் துவங்கினேன். 


    எந்தக் கொடூரமான பிராணிகளும்கூட மனிதன் துன்புறுத்தாதவரை அவனைத் துன்புறுத்துவதில்லை. என் வீட்டில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் குருவிகளில் எதையும் நானாகத் தொட்டுகூடத் துன்புறுத்தியதில்லை. ஆனால் அவை எங்களோடு ஓன்றாக உரிமையுடன் நெருக்கமாக வசிக்கின்றன.


    புது குஞ்சுகள் வரவர எங்கள் வீட்டில் பல இடங்களில் அவை கூட்டை மாற்றிக் கொண்டே இருக்கும். நாங்கள் வீட்டை அடைத்துவிட்டு வெளியூர் சென்ற இரண்டு நாட்களில், வீட்டின் வென்டிலேட்டர் வழியே தேங்காய்ச் சவுரிகளையும், வைக்கோல் கதிர்களையும், காகிதக் கிழிசல்களையும் கொண்டுவந்து, அது இந்த இடத்தில் ஒரு அழகிய கூட்டைக் கட்டிக் கிரஹப்பிரவேசம் நடத்திவிட்டது.


    மனிதனின் ஆயுளில் ஒரு வீடு கட்டுவதில் உள்ள சிரமம், அந்தக் குருவியின் ஆயுளுக்கு அந்த இரண்டு நாள் ஈடாகவே இருந்திருக்க வேண்டும். வெளியூர் போய்விட்டு வீட்டிற்கு வந்து கதவைத் திறந்ததும், உள்ளே குதுகலம் செய்த குருவிகள் பயந்து வெளியே சென்றன. நான் பின்வாசலுக்குச் சென்றபோது ஒன்று மட்டும் தன் பயத்தை அடகு வைத்துக் கூட்டை எட்டிப்பார்த்துச் சென்றது.
  உள்ளே முட்டை இருந்திருக்கவேண்டும். 'தாய்மை' அதன் அச்சத்திற்கு விலங்கு மாட்டியிருக்க வேண்டும்.
   நானும் என் மனைவியும் அதன் பயத்தைப் போக்க ஒரு வாரத்திற்கு முன்வாசலுக்கு வருவதையே தவிர்த்தோம். சில நாட்களில் அதற்கு எங்கள் மீது 'நம்பிக்கை' துளிர்விடத்தொடங்கியது. நான் முன்அறையில் இருக்கும்போதும் கூட்டிற்கு வந்து சென்றது.


 சில நாட்களில் பையப்பைய என் பக்கத்தில் வந்தது. நான் தொட்டுப் பார்க்கவில்லை. அது என் தோளைத் தொட்டுப் பார்த்தது. நான் சாப்பிடும்போது சில சோற்றுப் பருக்கைகளைப் போடுவேன். அது என்னுடன் வேளைக்கு வேளை சமபந்தி போஜனம் நடத்தும். அப்படி அது என் சாப்பாட்டு வேளையை நிர்ணயித்தது. நான் அதற்காகச் சரியான நேரத்தில் சாப்பிட்டேன். என் மனைவிக்கும், குழந்தைக்கும் அந்தக் குருவி மேல் என்னைப்போல் ஏகப்பிரியம்.


    அது 'சிர்' ரென்ற ஒலியுடன் சிறகுகளை அடித்துப் பறந்து வீசும் காற்றில், என் மனத்தின் வேதனையில் படரும் வியர்வைகள்கூட ஆவியாகிப் போகும். ஏதாவது காரணத்தால் என் மனைவியுடன் சின்ன சண்டை போட்டு 'உம்' மென்று இருப்போம். சாப்பிடாமலேயே இருப்போம். உணவு வேளைகளில், மேஜையில் நின்று அது உரக்கக் கத்தும். உம்மென்றிருந்த நாங்கள் உரக்கச் சிரிப்போம் அப்படி இந்தக் குருவி எங்கள் ஒற்றுமையின் சின்னம்.     எனக்கு அதைப் பார்க்கும்போது, கோள் சொல்லத் தெரியாத குதூகலப் பந்தில் சிறகுகளென அர்த்தமில்லாதது போல் ஒரு கவிதை வரும்.


    அவ்வப்போது என் மனைவி மேஜையைச் சுத்தம் செய்து விட்டுப் போவாள். அது வெள்ளை வெள்ளையாய்ச் சிறு எச்சத்தைப் பெய்து என் மனைவியுடன் விளையாடும், இந்தக் குருவியைப் பிரிந்து நான் எப்படி வீட்டைக் காலி செய்ய முடியும்?


    என் வீட்டுக் குட்டி நாய் இதைத் துரத்தி விளையாடும், பாயும். இது துள்ளித்துள்ளிப் போகும். இறுதியில் நாயின் முதுகிலேறிச் செல்லமாய் மிதித்துவிட்டுக் கூட்டுக்குப் பறந்து போய் எட்டிப்பார்த்து எள்ளல் செய்யும். அப்படி அந்த நாய்க்கும் குருவிக்கும் அதீதமான நட்பு.
இப்படி இந்தக் கூட்டில் பிறக்கும் ஒவ்வொரு குருவியும் தான் சந்ததிக்கும் நண்பர் குருவிகளுக்கும் இதே அளவில் நம்பிக்கையையும் பாசத்தையும் கற்பித்துவிடும். அப்படித் தான் இந்தக் குருவியும் இன்று என் தோள் மேல் நின்று டி. வி. பார்க்கிறது.


 வீட்டு முதலாளி வந்தார். மிகவும் கண்டிப்பாகச் சொன்னார். ''சார்! நாங்க இந்த வீட்டை இடிச்சு புதுசா கட்டப்போறோம்; ஒரே வாரத்தில் நீங்க காலி பண்ணலேண்ணா நடக்கிறதே வேறே?''- மிரட்டினார். எனக்கு வேதனையாக இருந்தது. நான் சாதுவான பேர்வழி. நாற்பது வருடங்களுக்கும் மேலாக வாடகைக்கு இருந்தும் இந்த வீட்டிற்கு உரிமை கொண்டாடவில்லை. ஆனால் நாங்கள் இன்று இந்த வீட்டை விட்டுக்கொடுப்பதில் என் குழந்தையைப் பிரிவதைப் போல் எங்களில் ஒரு சோகம். அதிலும் இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி. வீட்டை இடிக்கப் போகிறார்களாம்! சின்னக் குழந்தை தன் அலகுகளால் ஒவ்வொரு வைக்கோலாய்ச் சேகரித்துக்கட்டிய நேர்த்தியான அந்த வைக்கோல் மாளிகையுமல்லவா இடிக்கப்படும்!.
    ''ஐயா! ஒரு ஆறுமாதம் பொறுத்துக்குங்க! வாடகை வேணா கொஞ்சம் கூட்டித் தர்றேன்! வீடு உறுதியாத்தானே இருக்கு! ஏன் இடிக்கிறீங்க!'' கெஞ்சினேன்.


    சிறிது காலம் பொறுத்தால் நான்கூட உங்களுக்கு கட்டுப்படியாகிற விலைக்கு இந்த வீட்டை வாங்க முயற்சி பண்றேன்.. கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க என்றேன்.
 ''ஒரு வாரத்தில் வீட்டைக் காலி பண்ணலேண்ணா நடக்கிறதே வேறே''.
     வீட்டுக்காரர் வைத்த கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.
     பாவம்! குருவிக்கென்ன தெரியும்! அது வழக்கம்போல் எங்களோடு விளையாடிக் கொண்டு இருந்தது. புது மனிதர் யாராவது வீட்டுக்கு வந்தால் பக்கத்தில் செல்லாது நான் இருந்தால், நான் இருக்கும் தைரியத்தில் பக்கத்தில் வரும்.


 நான் ஒரு 'உயிரியல்' தெரிந்த நண்பரிடம்,''குருவியையும், குருவிக்கூட்டையும், அப்படியே நான் செல்லும் இன்னொரு வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியுமா?''எனக் கேட்டேன். அவர் 'ஒரு பகுதியிலுள்ள குருவிகள், புதிதாய் வரும் குருவிகளை ஏற்றுக் கொள்வதில்லை''என்றார்.


    வீட்டுக்காரருக்கும், எனக்கும் வாக்கு வாதம் வந்தது. அந்தக் கூட்டு ஜோடிக்குருவி இரண்டும் துள்ளித் துள்ளி வந்தன. வீட்டுக்காரரின் பிடிவாதத்தில் வேறொரு வீடும் பார்த்து விட்டேன். சாமான்கள் ஒதுக்கப்பட்டன. எல்லா சாமான்களும் வண்டி ஏறிய போது வீடு வெறும் கூடாய் தோற்றமளித்தது. குருவிகள் இரண்டும் தனியாய் கத்திக் கொண்டிருந்தன. நான் சாமான்களை மாற்றிய பின் அன்று மாலை ஒரு எலக்டிரீஷியனை அழைத்துக் கொண்டு மின் விசிறியை கழற்றுவதற்காக அந்த வீட்டிற்கு மீண்டும் வந்தேன். கதவைத் திறந்ததும் கேட்ட அந்தக் குருவிகளின் சப்தம் என்னுள் இனம் புரியாத ஒரு வருத்தத்தை விதைத்தது. நல்ல வெப்பமாக இருந்ததால் சிறிது நேரம் மின்விசிறி காற்றில் ஓய்வெடுத்து விட்டு படுக்கை அறை மின் விசிறியை கழற்றச் சென்றோம். அந்த அறைகளில் அலைந்து கொண்டிருந்த நான் முன்னறைக்கு வந்த போது கண்ட காட்சியில் என் இதயம் நின்று விடுவது போல் இருந்தது.


    சாதாரணமாக ஃபேனின் சிறகுகளுக்குப் பலியாகாமல் கவனமாய்ப் பறக்கும் அந்தச் சின்னக்குருவிகள் இரண்டும்  தன் கவனத்தை என் பாசத்திற்குப் பலிகொடுத்துக் கீழே விழுந்து கிடந்தன. கீழே இரத்தத்தில் தோய்ந்து துடித்த அந்தச் சின்ன உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியது போல், பூக்களாய் அந்தச் சாம்பல் சிறகுகள் காற்றில் பறந்து சொரிந்தன. அந்தச் சிதைந்து போன சிறகுகள் மின் விசிறியின் காற்றின் திசையின் அலைந்து கொண்டிருந்தன. சக குருவிகளின் 'கீச்! கீச்' ஒலிகள் பெரிய கதறுதலாய் எங்கள் காதுகளையும் மனத்தையும் கிழித்தன.

Friday, March 18, 2011

அகங்காரப் பலி - பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை

 அகங்காரப் பலி
குமரி எஸ்.நீலகண்டன்..

அவர்களின் காதல் தருணத்தில்
கவிதையாய் வந்தது
அந்தச் செடி
மாடி சன்னலின்
நிழற் கூரையின் கீழ்.

சன்னலின் உள்வந்து
காற்றோடு உற்சாகமாய்
பேசியது அந்தச் செடி.
ஆடியது பாடியது
வேர் கால்களில்
விழுந்த நீர் குளத்தில்
விளையாடியது செடி.

அவர்களின் காதல் மொழிகளில்
கவிதையாய் நெளிந்தது
அந்தச் செடி.
சன்னலின் உள்ளிருந்து
உரமுடன் நீரும்
உற்சாகமாய்
பாய்ந்தது செடிக்கு..

சன்னலின் கம்பிகளுக்கிடையே
பூக்களைக் காட்டி
புன்னகைத்தது அந்தச் செடி.

ஆணவத்தின் அதிரடியால்
அழிக்கப் பட்டது
அவர்களின் காதல்
ஒரே நிமிடத்தில் ....

அகங்காரப் பெண்ணிற்கும்
ஆணவ கணவனுக்கும்
அதிகாரச்சண்டையில்
தண்ணீரின்றி தள்ளாடி
நின்றது அந்தச் செடி..

அவர்களின்
வார்த்தை உரசல்களில்
வளர்ந்த தீயில்
வாடியது
அந்தச் செடி

தண்ணீர் தண்ணீர்
என வளைந்து
கெஞ்சியது...
அவர்களின் கண்களுக்கும்
அகங்காரக் காதுகளிலும
அது படவே இல்லை.

கருத்த வானத்தின்
கருணைப் பார்வைக்காய்
காத்திருந்தது  செடி.

வெளியே மழை பெய்ய
வீட்டிற்குள்
இடி மழையாய்
வாதங்கள்.

வானம் இரங்கியும்
செடி ஜன்னலிலிருந்து
எட்டி எட்டி
தன் கரங்களை ஏந்தியும்
அதனால் பெய்யும் நீரை
எட்டாத அளவில்
சிமென்ட் கூரை தடுத்தது.
கைப்பிடிச் சுவரில்
துள்ளித் தெறிக்கும்
நீர் கூட செடியை
எட்ட இயலாமல்
கண்ணீர் போல் வடிந்தது.

இறுதியில்
மானுட அகங்காரத்திற்கு
மரணமானது
அந்தச் செடி.

Wednesday, March 16, 2011

வரிசையின் முகம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

வரிசையின் முகம்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த நெடிய வரிசை
எங்கேப் போகிறதென்று
தெரியாத அளவிற்கு
நெடியதாய் இருந்தது.
வளைந்து வளைந்து அது
நாடு எல்லைகளைக் கடந்து
எங்கோப் போய்
கொண்டிருந்தது.

அது இலவசங்களுக்கான
வரிசையாகவும் தெரியவில்லை.
காரணம் அதில்
பல நாட்டினர்,
பல மதத்தவர், சாதியினர்,
ஆண்கள், பெண்கள்,
சிறியவர், பெரியவர்,
வயதானவர்கள், அதிகாரிகள்,
மருத்துவர்கள்,
பணக்காரர்கள், ஏழைகள்,
அரசியலவாதிகள், சாமியார்கள்,
பிச்சைக்காரர்கள், ரவுடிகள்,
பித்து பிடித்தவர்களென
பேதமின்றி எல்லோருமே
நின்று கொண்டிருந்தனர்.

பின்னால் நின்ற
எல்லோருமே அது
எதற்கான வரிசையென்று
தெரியாமலேயே
நின்று கொண்டிருந்தனர்.
முந்த முயலாத
முட்டல் மோதலில்லாத
முழு வரிசையாக
இருந்தது அது.

யாரும் யாரிடமும் அது
எதற்கான வரிசையென்று
கேட்டுக் கொள்ளாத அளவில்
இயல்பாக இருந்தது
அந்த வரிசை.

வரிசையின் ஆரம்பத்தை
நெருங்கும் வேளையில்
பலருக்கும் பதட்டம்
இருந்தது. பலரும்
பிந்திவர முந்தினர்.
பலரும் தயக்கத்துடன்
பின் வாங்கினர்.

நோயுற்றப் பலரையே
முன்னால் காண
இயன்றது.
முன்னால் நெருங்க
நெருங்க கடவுளின்
கோஷங்கள் நிறையக்
கேட்டன.
சிலர் வலி தாங்காமல்
வாயிலுக்குள் வேகமாய்
ஓடினர்.

வெகு சிலரே
மகிழ்ச்சியுடன்
அந்த வாயிலைக்
கடந்து போனார்கள்.
அது மரண வாயிலுக்குள்
நுழைகிற மக்களின்
வரிசையாக இருந்தது.

Sunday, March 13, 2011

அதிரடித் தீர்ப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

அதிரடித் தீர்ப்பு
குமரி எஸ். நீலகண்டன்

விவாகரத்து கேட்டு
வந்தனர் இருவரும்..
ஒரே வழக்கறிஞரிடம்.
இயல்பினில் இருவரும்
இரண்டு திசைளென்றனர்.

நீ இந்தப் பக்கமாகவும்
நீ அந்த பக்கமாகவும்
சென்று விடுங்களென்றார்
கடுமையாய் வழக்கறிஞர்.

சிறிது வளைந்தும்
செல்லுங்கள் உங்கள்
பாதையில் என்றார்
கொஞ்சம் குழைவாக.

உங்கள் வளைவுகள்
ஒரு வட்டமானால்
வாருங்கள் இங்கே
விருந்து வைக்கிறேன்
என்றார் வழக்கறிஞர்.

Thursday, March 10, 2011

எழுத்தின் சாரம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

எழுத்தின் சாரம்
குமரி எஸ். நீலகண்டன்

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா மை கொட்டலாம்.
பேனா முனை உடையலாம்.
காகிதங்கள் கிழியலாம்.
எழுதியதைக் கிழித்து
கைக் குழந்தை எறியலாம்.

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் கணிப்பொறியில்
எழுதுபவராக இருந்தால்
தட்டச்சை தட்டிய போது
எழுத்தெல்லாம்
சதுரம் சதுரமாக வரலாம்.
வைரஸ் வந்து
உங்கள் எழுத்துக்களைத்
தின்று போகலாம்.
நினைவுத் தட்டின்
வெட்டுக் காயங்களில்
உங்களின் எழுத்து
உடைபடலாம். அல்லது
உங்கள் எழுத்துக்கு அங்கே
இடமில்லாமலும் இருக்கலாம்.

ஆனாலும்
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
அதில் எப்போதாவது
அபூர்வமாய் ஒளிவட்டத்துடன்
ஒரு நல்ல கவிதை வரலாம்.
அதன் விதையிலிருந்து
ஒரு மரம் வளரலாம்.
அதன் பூவிலிருந்து
ஒரு புதுக் கனி விளையலாம்.
அதைத் தின்ன
ஒரு தேவதை வருவாள். 
அவள் இன்னொரு கவிதையை
உங்களுக்கு தெரியாமலேயே
உங்கள் மனதில்
எழுதிவிட்டுச் செல்வாளாம்.
அந்த கவிதையை
உரக்க நீங்கள்
உச்சரிக்கையில்
பல்லக்கில் ஏற்றி அவள்
உலகமறியாத உன்னத
பரிசொன்றைத் தருவாளாம்.
அதென்ன பரிசு?

அதனை அறிவதற்கு 
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்

Monday, March 7, 2011

பிழையாகும மழை - திண்ணையில் வெளியான கவிதை

பிழையாகும் மழை
குமரி எஸ். நீலகண்டன்

இடி மின்னலென
வானத்தில் யானையின்
போர் பிளிறல்.
ஒலியும் ஒளியுமென
வெளியெங்கும்
வளரும் மழைக்கான
ஆயத்தங்கள்.
மண்ணிலிருந்து சீறிப்
பாயும் மழை வாசம்.

குடையும்
ரெயின் கோட்டுமாய்
பிளாஸ்டிக் பைகள்
பொதிந்த கோப்புகளுமாய்
மழைக்கு ஒளிந்து
பயணித்த சில தூரங்களில்
மேலிருந்து கெக்கெ
கெக்கேயென சிரிக்கும்
வெயிலின் எச்சிலொளியின்
எக்காளத்தில்
என்னால் எதுவும்
செய்ய இயலவில்லை
வெயிலையும் வெறுமனே
வேறெங்கோ சல்லாபிக்கும்
மழையையும்.

Thursday, March 3, 2011

நியூட்டனின் மூன்றாம் விதி - வல்லமை இதழில் வெளியான கவிதை

நியூட்டனின் மூன்றாம் விதி
குமரி எஸ்.நீலகண்டன்

*ஒரு சர்ச்சையின் பின்
நெடுநாட்கள் கழித்து
நண்பர்கள் இருவரும்
வழியில் சந்தித்தனர்.

*தயக்கத்துடன்
அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

எதிர் வினை -
இரண்டாமவரின்
கண்கள் மட்டும்
சிரிக்கலாம்.
கண்களோடு உதடுகளும்
சிரிக்கலாம்.

*வெப்பம் படர்ந்த
அவனது கண்கள்
சிரிக்கவில்லை.
உதடுகள் மட்டும்
சிரித்தன.

எதிர் வினை -
இரண்டாமவரின்
உதடுகள்  மட்டும்
சிரிக்கலாம் அல்லது
உதடுகள் தட்டி
உணர்வுகளை எழுப்பலாம்

*கனிவுடன்
கண்களோடு உதடுகளும்
சிரித்தன.

எதிர் வினை -
பௌர்ணமி நிலவில்
பரந்த வானமாய்
உடல் முழுக்க
பரவசிக்கலாம்.

*மௌனமாய் இருந்தான்

எதிர் வினை -
அங்கொரு குறைந்த
காற்றழுத்த மண்டலம்
உருவாகி அதுவே
பெருத்தப் புயலின்
மையமாகலாம்
மழையும் பெய்யலாம்.
பிழையான மழையால்
மௌனம்
ஒரு மயானத்தையும்
உருவாக்கலாம்.

Tuesday, March 1, 2011

அனுதாபத்திற்குரிய அவன் - திண்ணையில் வெளியான கவிதை

அனுதாபத்திற்குரிய அவன்
குமரி எஸ். நீலகண்டன்

அவனின் தலைக்குள்
ஒரு சிலருக்கே இருக்கும்
ஒரு சிறப்பு சுரப்பி
வெளியேத் தெரியாமல்.

அவன் பெருமையில்
திளைக்கும் போது
அதில் அவனுக்கு
அமிர்தம் சுரப்பதாய்
ஒரு பிரமை..

பெருமையானது
அவன் உடலை
அழுத்தும் போது
தலையின் உச்சியிலிருந்து
பீய்ச்சி அடிக்கும்
அந்த அசிங்கத்தை
அமிர்தமாய் எண்ணி
அவனும் 
தலைக்குள் மூளையைச்
சுருக்கி அந்த இடத்தில்
அதைப் பெருக்கி
பாதுகாப்பாய்
தலைப் பைக்குள் அழுத்தி
சுமந்து கொண்டிருக்கிறான்.

சுரக்க சுரக்க
நாளுக்கு நாள்
அசிங்கத்தின் சுமைகள்
இன்னும் அதிகமாய்

அதன் எடை கூடிக் கூடி
தலையில் இடமின்றி
முகம் வழியாக
வழிகிறது
கண்களினிடையே
கண்களினுள்ளே
மூக்கின் நுனி
முகத்தின் பள்ளங்களென...

வடிகிற அந்த 
அசிங்கத்தின் நாற்றம்
அவன் மூக்கின் நரம்புகளைத்
தொட்டதாய் தெரியவில்லை..
அந்த அசிங்கத்தின் காட்சிகளை
அவன் கண்ணாடிகளைப்
பார்க்கிற போது பார்த்ததாய்
தெரியவில்லை. 

அதைப் பார்த்தவர்களும்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
சென்றதையும் அவன்
கண்டுணர்ந்தானெனத்
தெரியவில்லை.

நாற்றத்தை சகித்துக் கொண்டு
நாராசமாய் சிரித்துச் செல்லும்
பலரின் உள்மனதை
அவன் உணர்ந்ததாகவும்
தெரியவில்லை.

எந்த மருத்துவத்தால்
அவனுள் சுரக்கும்
அந்த அவனது
அமிர்த சுரப்பியை
அறுத்தெடுப்பதென்பது
எனக்கும் தெரியவில்லை
அசிங்கத்தைச் சுமக்கும்
அவனுக்காக
அனுதாபப்படுவதைத் தவிர...

Saturday, February 26, 2011

ஒரு கவிதானுபவம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு கவிதானுபவம்
குமரி எஸ். நீலகண்டன்

எல்லாக் கவிதைகளிலும்
எங்கோப் பார்த்த முகம்
கேட்ட எள்ளல்
உணர்ந்த கோபம்
சுட்ட நெருப்பு
சுருக்கென்று குத்துகிற ஊசி
பரவசித்தப் பசுமை
திகட்டியத் தென்றல்
நகர்த்திய நடையென
கவிதைகளின் அணிவகுப்பில்  
சாயலின் சங்கமத்தில்
சந்திக்காத ஒரு கவிதையை
நான் தேடிக்
கொண்டிருந்த போது
நான் இதுவரை சந்திக்காத
அந்தப் புதியவன்
என்னைத் தட்டி
உங்களை எங்கோப்
பார்த்த மாதிரி
இருக்கிறதென்று
என்னைக் கலைத்துவிட்டுப்
போனான்.

Tuesday, February 22, 2011

கடவுளின் பெருமிதம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளின் பெருமிதம்
குமரி எஸ். நீலகண்டன்


தொடர்ச்சியான
அநியாயங்களின்
சாட்சியான அவன்
கடவுளைத் திட்டிக்
கொண்டிருந்தான்.

உலகில்
கடவுளே இல்லை.
அப்படிக் கடவுள் இருந்தால்
அவன் திருடன்.
கொள்ளைக் காரன்,
அயோக்கியன்..
பித்தலாட்டக்காரன்.
ஏமாற்றுப் பேர்வழி...

நிறைய பேர்
கடவுளின் நாமம் சொல்லி
பூஜை செய்து கொண்டிருக்க
சோர்ந்திருந்த கடவுள்
நம்பிக்கை இழந்து திட்டிய
அவனை மட்டும் பார்த்து
நம்பிக்கையும்
பெருமிதமும் கொண்டார்.

Saturday, February 19, 2011

மரப்பாச்சியின் கண்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை

மரப்பாச்சியின் கண்கள்
குமரி எஸ். நீலகண்டன்

கோடியைக் கொட்டி
புதிய வீட்டைக் கட்டி
பால் காய்ச்சி
பளபளக்கும் வீட்டில்
பவுசாக குடி
வந்தாகி விட்டது.

பழைய மேசை... நாற்காலி,
கடிகாரம், பக்கெட்,
மரப் பொருட்களென
பழையப் பழையப்
பொருட்களெல்லாம்
புதிய வீட்டைப்
பார்க்காமலேயே
வேலைக்காரி,
குப்பைப் பெட்டி,
பேப்பர்காரனென
பல திசைகளிலும்
பறந்து போய் விட்டன.

புத்தம் புதியப் பொருட்களுடன்
புத்தொளி வீசியப் புதிய வீட்டில்
ஐந்து வயது சுனந்தாவின்
அழகான அயல் நாட்டுப்
பைக்குள்ளிருந்து
ஒரு சிறு வெளி வழியாக
யாருக்கும் தெரியாமல்
மறைந்து பார்த்துக்
கொண்டிருந்தன
அந்த அழகான
பழைய மரப்பாச்சிப்
பொம்மையின்
திருட்டு விழிகள்
சுனந்தாவின் விழிகளோடு
போட்டி போட்டுக் கொண்டு.

Wednesday, February 16, 2011

என்னுள் ஒருவன் கவிதை குறித்து...

என்னுள் ஒருவன் கவிதை  குறித்து நண்பர் திரு.டோக்ரா அவர்களின் விமர்சனம்
எனது என்னுள் ஒருவன் என்ற கவிதையின் விமர்சனத்தோடு அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் நண்பர் திரு. டோக்ரா அவர்கள் அவரது கவிதை விமர்சனம் என்ற வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மீண்டும். அதற்கான இணைப்பு இதோ

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2

நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


நீலகண்டன் எழுதிய கவிதை “என்னுள் ஒருவன்” வார்த்தைகளுடன் அழகாக விளையாடி நம்மைப் பற்றியே நாம் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதால் நாம் மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்க்க இயலாமல் போய்விடுவதை எடுத்துரைக்கிறது.

மனித மனம் அதன் எல்லை விளிம்புகளைத் தாண்டி விரிவாக வாய்ப்புகள் இருந்தும், நம்முடனான நமது ஈடுபாடு நம்மை மற்றவர்களைப் பற்றி சிந்திக்க அனுமதிப்பதில்லை. நமது மனம் விரிவு பெற நாம் சற்று நேரம் நம்மை மறந்து உலகத்தை மற்றவர்கள் கண்ணோட்டத்துடன் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் மனத்தில் வசிக்கும் “நான்” என்பவன் மனமாகிய இல்லத்தை விட்டுச் சென்று அங்கே இன்னொருவர் வந்து வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் “நான்” என்பவரின் தலையீட்டு இல்லாமல் இன்னொரு கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்ப்பது சாத்தியமாகும். மேலதிகாரிக்குத் தனக்குக் கீழ் பணிபுரிபவரின் கஷடங்கள் புரியும்; கீழ் பணி புரிபவருக்கு மேலதிகாரியின் கவலைகள் தெரியும். மாணவன் ஏன் படிப்பில் அக்கறை காட்டவில்லை என்பதை ஆசிரியர் புரிந்து கொள்வார்; தான் நன்றாகப் படிக்காததால் ஆசிரியர் ஏன் கோபப்படுகிறார் என்பது மாணவனுக்குப் புரிந்துவிடும்.
இந்தச் சிறந்த கவிதை தமிழ் மொழி தெரியாதவர்களுக்குப் போய்ச் சேர இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளேன். இதோ அந்த கவிதை:

என்னுள் நானும்
உன்னுள்
நீயுமில்லாத போது
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாவகாசமாய்
உரையாடுகிறோம்…


என்னுள் நானில்லாத போது
பலருள் எனக்கும்
என்னுள் பலருக்கும்
இடமிருக்கிறது.


என்னுள்ளிருந்து
வெளியேறும் நான்
வெகு அருகிலும்..
சில நேரம் விலகியும்
மறைந்தும்
சில நேரம் வெகு
தூரத்திலிருந்தும்
வெகு அருகில் வந்தும்
அச்சுறுத்திக்
கொண்டிருக்கிறது.


என்னை அறியாமல்
என்னுள் புகுந்து
உச்சியிலாடி உட்கலகம்
செய்கிறது..


ஆயிரம் கைகளிலும்
ஆயுதங்கள் தாங்கி
அகத்திலிருந்து
கைகளைச் சுழற்றும்
அதன் ஆர்ப்பாட்டத்தில்
இலக்கு எதிரானாலும்
இழப்பு எனக்கே எனக்கு.


நானின் கையிலுள்ள
நாணின் சுருக்கில்
தலையை ஈர்க்கும்
என்னுள்
நானில்லாத போது
என்னுள் பலருக்கும்
பலருள் எனக்கும்
பட்டாம் பூச்சியாய்
பறக்க இயல்கிறது.


எனக்கே எதிராய்
எப்போதும்
எனது நான்…..


Here is a translation of the above poem in English:

When I am not
Within me
And you are not
Within your self
Then
I within you
And you within me
Are able to relax and talk.


When we do not
Occupy our selves
Then our self
Is able to accommodate many
And expand. 


Whenever I leave my self
I constantly threaten
To come back
Whether from afar
Or close
And disturb others
Who occupy me then. 


I become
Like a demon
Threatening to come back
Carrying weapons in all hands
Jutting out from my Ego —
Weapons that
While they are aimed at others
Cause me damage.


When the string
That pulls me within my self
Is let loose
And I do not occupy my self
Then
I within others
And others within me
Flutter around
Like colourful butterflies. 


The one who hinders me always
Is my “I – ness”.


3 Responses to நீலகண்டன் கவிதைகள் விமர்சனம் -2


  • Dr.k.S.J.Wilson says:
    Really It is a very loveable Poem. As others says every body in the world should read it and understand themselves. The lines reflect that the poet as a genius person. It is the most essential one in todays life style. I wish to give more poems like this



  • dogrask says:
    Thanks Dr. Wilson. This blog is intended to popularise good Tamil poetry. That is why I have nick-named it “தமிழ் கவிதைக்கு என் தொண்டு”.
    I appreciate your valuable comment.



  • //என்னுள் நானில்லாத போது
    பலருள் எனக்கும்
    என்னுள் பலருக்கும்
    இடமிருக்கிறது.//
    இந்த நான்கு வரிகளுக்குள் எல்லாமே அடங்கியுள்ளன.
    நல்லதொரு கவிதைக்கு சிறப்பான அங்கீகாரம் தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.




  •