குருவிக் கூடு
குமரி எஸ். நீலகண்டன்
திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம்? அதிர்ச்சியில் எனக்கும் என் மனைவிக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது.
இந்த வீட்டில் என்னோட அப்பா நாகர்கோவிலிலே ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது வந்தது. மாதம் முப்பது ரூபாய் வாடகையிலும் 200 ரூபாய் அட்வான்ஸிலும் அப்போது அவர் எடுத்த வீடு. இன்றோடு 40 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த வீட்டில்தான். இந்த வீட்டில் என் அப்பாவின் மரணத்தைத் தவிர்த்துப் பல நல்லகாரியங்களே நடந்துள்ளன. எந்தவித திருட்டுப் பயமும் இல்லாத பாதுகாப்பான பழைய வடிவில் வசதி மிகுந்த வீடு. விலைவாசிக்கேற்ப இந்த 40 வருடங்களில் அவ்வப்போது வீட்டுக்காரர் ஏற்றும் வாடகைகளுக்கு நாங்கள் ஈடு கொடுத்திருக்கிறோம். நான் வீட்டைக் காலி பண்ண மறுப்பதற்கு இதுவரை சொன்னதெல்லாம் முக்கிய காரணங்கள் இல்லை.
என் ஒரே பிள்ளையோடு பிள்ளையாய் வீட்டின் முன் அறையில் மேலே வடகிழக்கு மூலையில் கூடு கட்டி வாழும் குருவிகளைப் பிரிந்து எப்படி நாங்கள் வேறு வீட்டிற்குச் செல்ல முடியும். இதுவே நான் வீட்டைக்காலி பண்ண மறுக்கும் ஒரே காரணம். நான் இந்தக் காரணத்தை வீட்டுக்காரரிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவருக்கு அன்பின் மேன்மை பற்றி என்ன தெரியும்? இந்தக் காரணத்தைச் சொன்னால், வேண்டுமென்றால் அவர் செல்லும் வீடுகளிலெல்லாம் 'கெக்கக்கே'' என்று சிரிப்பார்.
எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையின் வசந்தமே அந்தக் குருவிகள்தான். பல தலைமுறைகளாய் அந்தக் குருவிகள் அதே இடத்தில் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அந்த கூடுகள் பல சிறிய இன்னல்களுக்கு உள்ளானாலும் அவை மீண்டும் மீண்டும் குருவிகளால் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் நிலை நிறுத்தப் பட்டிருக்கின்றன. அந்த கூட்டின் பல தலைமுறைக் குருவிகளை நாங்கள் பல செல்லப் பெயர்களில் அழைத்து மகிழ்ந்திருக்கிறோம். எங்கள் உற்றார் உறவினர்கள் எங்கள் வீட்டின் சுக துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்தவை அந்தக் குருவிகள். நாங்கள் இதே கூட்டில் இன்று வாழும் இந்தக் குருவியின் முந்தைய மூத்த பல தலைமுறைகளோடு ஒட்டி வாழ்ந்திருக்கிறோம். நான் இதன் தாத்தாக் குருவியிலிருந்து பேரன் அல்லது பேத்திக்குருவி வரை எந்த குருவியையும் நானாகத் தொட்டதில்லை. அதற்குக் காரணம் உண்டு.
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது என்னோடு ராஜன் படித்துக் கொண்டிருந்தான். அவன் எப்போதும் கவணைக் கையில் வைத்துக்கொண்டே திரிவான். கால்சட்டைப் பாக்கெட்டில் 'பங்சர்' ஆன சைக்கிள் ட்யூபை பட்டை பட்டையாகக் கிழித்து வைத்திருப்பான். சட்டைப் பாக்கெட்டில் பளிங்கு போன்ற சின்னக் கற்கள் பத்துப் பதினைந்து இருக்கும்.
கவணில் கல்லை வைத்துக் கொண்டு குருவி முதல் குயில் வரை குறி தவறாமல் அடிப்பான். கவணில் பட்டை அறுபட்டுப் போனால் சில நிமிடங்களில் பாக்கெட்டிலிருக்கும் டயர் பட்டையைக் கிழித்துக் கவணில் மாட்டி மீண்டும் பறவை வேட்டைக்குத் தயாராகி விடுவான். அதிலும் விசித்திரம், புதிதான கவணென்றால் முதலில் அந்தக் கவணால் ஒரு ஓணானைக் கொன்று அதன் ரத்ததைக் கவணில் தடவினால் தான் நிறைய பறவைகளைக் குறிதவறாமல் வேட்டையாட முடியுமாம். அப்படி அவனில் ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை இருக்கும் அவனிடம் ''பறவைகளைக் கல்லால் அடிப்பது பாவம்'' என்ற நம்பிக்கை இல்லை.
அவன் ஒவ்வொரு பறவையையும் கவணால் வேட்டையாடும்போது என் நெஞ்சு பரிதவிக்கும். நான் பலதடவை அவனிடம் கூறியும் அவன் செவி சாய்க்காமலேயே பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவன் என் வீட்டிற்கு வந்தபோது, அப்பா சிறிது கண்டிப்புடன் இந்த வேட்டையாடும் விளையாட்டு விஷயமாகச் சொன்னதில் அத்ன்பின் எங்கள் வீட்டுப்பக்கமே தலை காட்ட மாட்டான்.
ஒரு தடவை அவன் வேட்டையாடும்போது வயிற்றில் அடிபட்டு ஒரு குருவி கீழே விழுந்தது. நான் அவனுக்கு என்னிடம் இருந்த ஒரு புது அயல்நாட்டு அழி ரப்பரைக் கொடுத்து அந்தக் குருவியை வாங்கினேன். வீட்டில் குருவி வளர்ப்பதற்கு ஏராளமான எதிர்ப்பு. ராஜன் போன்ற நண்பர்களிடம் நட்புக் கொள்ளக்கூடாதென மிகவும் கண்டித்தார்கள். எப்படியோ? அந்த மாதததில் பிராகிரஸ் ரிப்போர்ட்டில் நான் வாங்கிய ராங்கும், அன்று நான் நடத்திய 'அன்பு'ப் போராட்டமும் குருவியை வளர்க்க அப்பாவிடம் அனுமதி கிடைக்க உதவின.
உடனடியாக முந்தைய வருடத்துப் பழைய நோட்டின் பருமனான அட்டைகளைக் கிழித்து ஒரு கூடு செய்தேன். குருவி பழகும் வரை பறந்து போகாமல் இருக்க ஏற்கனவே ராஜன் அதன் சிறகுகளை வெட்டியே தந்திருந்தான். அது துள்ளித் துள்ளி வந்ததில் அப்பாவிற்குக்கூடக் குருவி வளர்க்கும் ஆசை அன்று வந்திருக்கவேண்டும். அவரும் என்னோடு சேர்ந்து நான் செய்த கூட்டின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தார். கூட்டிற்குள் இருக்கும் குருவியைப்பார்க்க தென்னைங்குச்சிகளால் கூட்டிற்கேற்ற ஜன்னலும் செய்தார். பழைய மத்தாப்புக் கம்பியினை 'ப' வடிவில் வளைத்துக் குருவி ஆட ஒரு ஊஞ்சல் செய்து கூட்டின் உள்ளே தொங்கப் போட்டார்.
குருவியைத் தொட்டுப் பார்த்தேன். அதுவரை பறவைகளைத் தூர நின்று பார்த்து ரசித்திருந்தாலும், அன்றுதான் தொட்டு ரசித்ததில் என் நெடுநாள் ஆசை 'நிஜம்' பெற்றது. என் உள்ளங்கையில் இருந்த அடிவயிற்றுச்சூடு என் உள்ளத்திற்கே இதமாய் இருந்தது. சின்னக் குருவியின் முத்துப்போன்ற கண்களும்,அலகும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தன. அதன் சிறகுகளில் மிகவும் சீரான அளவுடன் அழகுறத் தெளிக்கப்பட்டிருக்கும் வண்ணங்களின் பொருத்தத்தில் நான் அடிக்கடி குதூகலப்படுவதுண்டு.
கடவுள் எவ்வளவு பெரிய கலைஞன்! யானைக்குப் பெரிய கால்! பெரிய காது! அதே போல்க் குருவிக்குச் சின்ன கால், சின்ன கண்..காது.... மூளை..... யானைக்கு உடம்பில் பலம், குருவிக்குச சிறகுகளில் பலம். எனக்கு மிகுந்த ஆச்சரியமாகவே இருந்தது.
குருவிக்குக் கூடு தயாரான பின் குருவியின் உணவு விவரங்களை அப்பாவிட்ம் கேட்டறிந்தேன். நெல் மணிகள் கொடுத்தேன். அது எட்டிப்பார்க்கவில்லை. பின் பொரி, பழம், தண்ணீரெனக் கொடுத்தும் எவற்றையும் தன் அலகினால் தொட்டுப் பார்க்கவில்லை. அதற்கு என் மேல் கோபமாய் இருக்கவேண்டும்.
எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அப்பாவிடம் வருந்தினேன். ''நாமிருந்தால் சாப்பிடாது! கூட்டுக்குள் பழத்தையும் நெல்மணியையும் போட்டுக் குருவியை உள்ளே விட்டுவிட்டு நீ பாடத்தைப்படி! அது தானே சாப்பிடும்'' என்றார்.
நான் அப்பா சொன்னபடி செய்தேன். ஒவ்வொரு கேள்வியையும் படித்துவிட்டு விடையைச் சொல்லிப் பார்த்துக் கொண்டு இடைவேளியில் அந்தக் கூட்டின் ஜன்னல் வழியே குருவியை எட்டிப் பார்த்தேன். அது உண்ணாவிரதம் இருந்தது.
எனக்கு அழுகை வந்தது.
அன்று இரவு தூங்கவே இல்லை.
''இதற்குதான் குருவியெல்லாம் வீட்டிற்குக்கொண்டு வராதேன்னேன். படிப்பு கவன்ம் சிதறிப்போகும்'' எனத் திட்டினார் அப்பா.
அது அடுத்தநாளும் சாப்பிட மறுத்தது.
நான் அதை உள்ளங்கையில் வைத்துப் பிடிவாதமாய் அழுத்தி வைத்திருந்த அலகுகளை, விரல்களால் குறுக்காக அழுத்தி, பலவந்தமாகப் பழச்சாற்றினை வாயில் விட்டேன். அது 'கடகட'வென விழுங்கியது.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஊட்டினாதான் பிள்ளை சாப்பிடுவாயா?''எனச் சொல்லிக்கொண்டு பழச்சாறு முழுவதையும் வாயில் ஊட்டினேன்.
அது சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.
''நேற்று சாப்பிடாத பசி! நிறைய சாப்பிடுகிறது!''
''நிறைய சாப்பிட்டா குருவி இன்னும் குண்டாகும்!'' என அதன் வாயில் திணித்துக்கொண்டே இருந்தேன். ''குருவி ஒரு வேளைக்கு இவ்வளவு உணவு சாப்பிடுமா?'' என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அது பயத்தில் மிகவும் விறைத்துப்போய் இருந்தது. அதைக் கூட்டில் அடைத்து அம்மாவிடம் அடிக்கடி கவனிக்கச் சொல்லிவிட்டுப் பள்ளிக்குச் சென்றேன்.
மாலையில் வீட்டிற்கு வந்தபோது குருவி கூட்டில் செத்துக்கிடந்தது. நான் மனம் ஒடிந்து போனேன்.
காலையில் அது நிறைய சாப்பிட்டது என் நிர்ப்பந்தத்தின் பயத்தில்தான் என்று என் அப்பா சொல்லி அறிந்தேன். அப்போதுதான் எனக்குப்புரிந்தது, பறவைகளும் விலங்குகளும், அவற்றின் சொந்தச் சூழ்நிலைகளில் சுதந்திரமாய்ச் சுற்றி உழைத்துச் சாப்பிடுவதில்தான் மகிழ்ச்சி அடைய முடியும் என்று.
அன்றிலிருந்து எந்தப் பறவைகளையும் விலங்குகளையும் தொட்டுக்கூடத் தொல்லை கொடுப்பதில்லை. பள்ளியில் ராஜனிடம் எவ்வளவு அறிவுரை கூறியும் அவன் கேட்காததால் அவனிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஒரு தடவை அவன் கவண் எறிந்து ஒரு பையன் மீது கல் பட்டுவிட, ரத்தம் பீறிட்டு அவன் மயங்கியே விழுந்து விட்டான். அப்போது எங்கள் பள்ளித்தலைமை ஆசிரியர் கொடுத்த கடும் தண்டனையில்தான் ராஜனுக்குப் புத்தி வந்தது. அதன் பின் ராஜனின் அப்பா வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனதால் அவன் பள்ளியில் டி.சி. வாங்கிவிட்டுச் சென்றுவிட்டான்.
நான் சிறுவயதிலேயே சின்னப்பிராணிகளின் உயிருக்குக் கூட மனித உயிரின் அளவிற்கு மதிப்பளிப்பேன். ஒரு தடவை ஒரு எறும்பு எங்கள் வீட்டுப் பின்வாசலில் ஊர்ந்து கொண்டிருந்தது. திடீரென மழைத்தூறல் வந்தது. மழையில் அது இறந்து விடுமென அதைப்பிடித்து வீட்டிற்குள் விட்டேன். பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஏகப்பட்ட சந்தோஷம். பிராணிகளின் மீது நான் காட்டும் அன்பை அடிக்கடி வாய்ப்பேற்படும் போதெல்லாம் அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள். அந்த வார்த்தைகளில்தான் நான் அனிச்சையாய்க் காட்டும் என்னுள் உள்ள பரிவை உணரத் துவங்கினேன்.
எந்தக் கொடூரமான பிராணிகளும்கூட மனிதன் துன்புறுத்தாதவரை அவனைத் துன்புறுத்துவதில்லை. என் வீட்டில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் குருவிகளில் எதையும் நானாகத் தொட்டுகூடத் துன்புறுத்தியதில்லை. ஆனால் அவை எங்களோடு ஓன்றாக உரிமையுடன் நெருக்கமாக வசிக்கின்றன.
புது குஞ்சுகள் வரவர எங்கள் வீட்டில் பல இடங்களில் அவை கூட்டை மாற்றிக் கொண்டே இருக்கும். நாங்கள் வீட்டை அடைத்துவிட்டு வெளியூர் சென்ற இரண்டு நாட்களில், வீட்டின் வென்டிலேட்டர் வழியே தேங்காய்ச் சவுரிகளையும், வைக்கோல் கதிர்களையும், காகிதக் கிழிசல்களையும் கொண்டுவந்து, அது இந்த இடத்தில் ஒரு அழகிய கூட்டைக் கட்டிக் கிரஹப்பிரவேசம் நடத்திவிட்டது.
மனிதனின் ஆயுளில் ஒரு வீடு கட்டுவதில் உள்ள சிரமம், அந்தக் குருவியின் ஆயுளுக்கு அந்த இரண்டு நாள் ஈடாகவே இருந்திருக்க வேண்டும். வெளியூர் போய்விட்டு வீட்டிற்கு வந்து கதவைத் திறந்ததும், உள்ளே குதுகலம் செய்த குருவிகள் பயந்து வெளியே சென்றன. நான் பின்வாசலுக்குச் சென்றபோது ஒன்று மட்டும் தன் பயத்தை அடகு வைத்துக் கூட்டை எட்டிப்பார்த்துச் சென்றது.
உள்ளே முட்டை இருந்திருக்கவேண்டும். 'தாய்மை' அதன் அச்சத்திற்கு விலங்கு மாட்டியிருக்க வேண்டும்.
நானும் என் மனைவியும் அதன் பயத்தைப் போக்க ஒரு வாரத்திற்கு முன்வாசலுக்கு வருவதையே தவிர்த்தோம். சில நாட்களில் அதற்கு எங்கள் மீது 'நம்பிக்கை' துளிர்விடத்தொடங்கியது. நான் முன்அறையில் இருக்கும்போதும் கூட்டிற்கு வந்து சென்றது.
சில நாட்களில் பையப்பைய என் பக்கத்தில் வந்தது. நான் தொட்டுப் பார்க்கவில்லை. அது என் தோளைத் தொட்டுப் பார்த்தது. நான் சாப்பிடும்போது சில சோற்றுப் பருக்கைகளைப் போடுவேன். அது என்னுடன் வேளைக்கு வேளை சமபந்தி போஜனம் நடத்தும். அப்படி அது என் சாப்பாட்டு வேளையை நிர்ணயித்தது. நான் அதற்காகச் சரியான நேரத்தில் சாப்பிட்டேன். என் மனைவிக்கும், குழந்தைக்கும் அந்தக் குருவி மேல் என்னைப்போல் ஏகப்பிரியம்.
அது 'சிர்' ரென்ற ஒலியுடன் சிறகுகளை அடித்துப் பறந்து வீசும் காற்றில், என் மனத்தின் வேதனையில் படரும் வியர்வைகள்கூட ஆவியாகிப் போகும். ஏதாவது காரணத்தால் என் மனைவியுடன் சின்ன சண்டை போட்டு 'உம்' மென்று இருப்போம். சாப்பிடாமலேயே இருப்போம். உணவு வேளைகளில், மேஜையில் நின்று அது உரக்கக் கத்தும். உம்மென்றிருந்த நாங்கள் உரக்கச் சிரிப்போம் அப்படி இந்தக் குருவி எங்கள் ஒற்றுமையின் சின்னம். எனக்கு அதைப் பார்க்கும்போது, கோள் சொல்லத் தெரியாத குதூகலப் பந்தில் சிறகுகளென அர்த்தமில்லாதது போல் ஒரு கவிதை வரும்.
அவ்வப்போது என் மனைவி மேஜையைச் சுத்தம் செய்து விட்டுப் போவாள். அது வெள்ளை வெள்ளையாய்ச் சிறு எச்சத்தைப் பெய்து என் மனைவியுடன் விளையாடும், இந்தக் குருவியைப் பிரிந்து நான் எப்படி வீட்டைக் காலி செய்ய முடியும்?
என் வீட்டுக் குட்டி நாய் இதைத் துரத்தி விளையாடும், பாயும். இது துள்ளித்துள்ளிப் போகும். இறுதியில் நாயின் முதுகிலேறிச் செல்லமாய் மிதித்துவிட்டுக் கூட்டுக்குப் பறந்து போய் எட்டிப்பார்த்து எள்ளல் செய்யும். அப்படி அந்த நாய்க்கும் குருவிக்கும் அதீதமான நட்பு.
இப்படி இந்தக் கூட்டில் பிறக்கும் ஒவ்வொரு குருவியும் தான் சந்ததிக்கும் நண்பர் குருவிகளுக்கும் இதே அளவில் நம்பிக்கையையும் பாசத்தையும் கற்பித்துவிடும். அப்படித் தான் இந்தக் குருவியும் இன்று என் தோள் மேல் நின்று டி. வி. பார்க்கிறது.
வீட்டு முதலாளி வந்தார். மிகவும் கண்டிப்பாகச் சொன்னார். ''சார்! நாங்க இந்த வீட்டை இடிச்சு புதுசா கட்டப்போறோம்; ஒரே வாரத்தில் நீங்க காலி பண்ணலேண்ணா நடக்கிறதே வேறே?''- மிரட்டினார். எனக்கு வேதனையாக இருந்தது. நான் சாதுவான பேர்வழி. நாற்பது வருடங்களுக்கும் மேலாக வாடகைக்கு இருந்தும் இந்த வீட்டிற்கு உரிமை கொண்டாடவில்லை. ஆனால் நாங்கள் இன்று இந்த வீட்டை விட்டுக்கொடுப்பதில் என் குழந்தையைப் பிரிவதைப் போல் எங்களில் ஒரு சோகம். அதிலும் இன்னும் அதிர்ச்சி தரும் செய்தி. வீட்டை இடிக்கப் போகிறார்களாம்! சின்னக் குழந்தை தன் அலகுகளால் ஒவ்வொரு வைக்கோலாய்ச் சேகரித்துக்கட்டிய நேர்த்தியான அந்த வைக்கோல் மாளிகையுமல்லவா இடிக்கப்படும்!.
''ஐயா! ஒரு ஆறுமாதம் பொறுத்துக்குங்க! வாடகை வேணா கொஞ்சம் கூட்டித் தர்றேன்! வீடு உறுதியாத்தானே இருக்கு! ஏன் இடிக்கிறீங்க!'' கெஞ்சினேன்.
சிறிது காலம் பொறுத்தால் நான்கூட உங்களுக்கு கட்டுப்படியாகிற விலைக்கு இந்த வீட்டை வாங்க முயற்சி பண்றேன்.. கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க என்றேன்.
''ஒரு வாரத்தில் வீட்டைக் காலி பண்ணலேண்ணா நடக்கிறதே வேறே''.
வீட்டுக்காரர் வைத்த கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.
பாவம்! குருவிக்கென்ன தெரியும்! அது வழக்கம்போல் எங்களோடு விளையாடிக் கொண்டு இருந்தது. புது மனிதர் யாராவது வீட்டுக்கு வந்தால் பக்கத்தில் செல்லாது நான் இருந்தால், நான் இருக்கும் தைரியத்தில் பக்கத்தில் வரும்.
நான் ஒரு 'உயிரியல்' தெரிந்த நண்பரிடம்,''குருவியையும், குருவிக்கூட்டையும், அப்படியே நான் செல்லும் இன்னொரு வீட்டிற்குக் கொண்டு செல்ல முடியுமா?''எனக் கேட்டேன். அவர் 'ஒரு பகுதியிலுள்ள குருவிகள், புதிதாய் வரும் குருவிகளை ஏற்றுக் கொள்வதில்லை''என்றார்.
வீட்டுக்காரருக்கும், எனக்கும் வாக்கு வாதம் வந்தது. அந்தக் கூட்டு ஜோடிக்குருவி இரண்டும் துள்ளித் துள்ளி வந்தன. வீட்டுக்காரரின் பிடிவாதத்தில் வேறொரு வீடும் பார்த்து விட்டேன். சாமான்கள் ஒதுக்கப்பட்டன. எல்லா சாமான்களும் வண்டி ஏறிய போது வீடு வெறும் கூடாய் தோற்றமளித்தது. குருவிகள் இரண்டும் தனியாய் கத்திக் கொண்டிருந்தன. நான் சாமான்களை மாற்றிய பின் அன்று மாலை ஒரு எலக்டிரீஷியனை அழைத்துக் கொண்டு மின் விசிறியை கழற்றுவதற்காக அந்த வீட்டிற்கு மீண்டும் வந்தேன். கதவைத் திறந்ததும் கேட்ட அந்தக் குருவிகளின் சப்தம் என்னுள் இனம் புரியாத ஒரு வருத்தத்தை விதைத்தது. நல்ல வெப்பமாக இருந்ததால் சிறிது நேரம் மின்விசிறி காற்றில் ஓய்வெடுத்து விட்டு படுக்கை அறை மின் விசிறியை கழற்றச் சென்றோம். அந்த அறைகளில் அலைந்து கொண்டிருந்த நான் முன்னறைக்கு வந்த போது கண்ட காட்சியில் என் இதயம் நின்று விடுவது போல் இருந்தது.
சாதாரணமாக ஃபேனின் சிறகுகளுக்குப் பலியாகாமல் கவனமாய்ப் பறக்கும் அந்தச் சின்னக்குருவிகள் இரண்டும் தன் கவனத்தை என் பாசத்திற்குப் பலிகொடுத்துக் கீழே விழுந்து கிடந்தன. கீழே இரத்தத்தில் தோய்ந்து துடித்த அந்தச் சின்ன உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியது போல், பூக்களாய் அந்தச் சாம்பல் சிறகுகள் காற்றில் பறந்து சொரிந்தன. அந்தச் சிதைந்து போன சிறகுகள் மின் விசிறியின் காற்றின் திசையின் அலைந்து கொண்டிருந்தன. சக குருவிகளின் 'கீச்! கீச்' ஒலிகள் பெரிய கதறுதலாய் எங்கள் காதுகளையும் மனத்தையும் கிழித்தன.

2 comments:
மிக அருமையாக விவரித்துள்ளீர்கள் சிட்டுக்குருவிகளுடனான உங்கள் நேசத்தை. சிறுவயதில் எங்கள் வீட்டின் இரண்டு தூண்களுக்கு நடுவே பலகை அமைத்து குருவிகள் கூடுகட்ட வழிசெய்திருந்தார்கள். அந்த நினைவுகளையும் கிளப்பி விட்டது கதை.
முடிவு சோகம்:(!
நல்ல கதை.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி. கதைகள் மூலமாக நம் சிறு வயது நினைவுகளோடு தொடர்வதென்பது அலாதியான ஆனந்தம் அளிப்பது... மிக்க மகிழ்ச்சி..
Post a Comment