Monday, May 16, 2011

நெய்தல் போர் - திண்ணை இதழில் வெளியான கவிதை

நெய்தல் போர்
குமரி எஸ். நீலகண்டன்.

கனத்த இதயத்தோடு
கடற்கரை வந்த போது
இதமானக் காற்றில்
இதயம் கரைந்தது.

கடலைக் கொரித்து
கடலையேக் குடித்தேன்.

உள்ளிருந்து உறுமிக்
கொந்தளித்த சுனாமி அலைகள்
ஆர்ப்பரித்த கடலைக் கண்டு
அடங்கி ஒடுங்கின.

மணற் பாதுகைகளாய்
உப்பு மணல்கள்
கால்களோடு
ஒட்டிக் கொண்டன.

களைத்து சிறிது
கரையினில்
கண்ணயர்ந்த போது
நிலத்திலிருந்து
ஆயிரமாயிரம்
கொந்தளித்த கடல்கள் வந்து
கடலோடு போரிட்டு
கரைந்து கொண்டிருந்தன.

கடலை விற்பவர்களும்
பட்டம், பஜ்ஜி
விற்பவர்களும்
கடலோடு சேர்ந்து
போரிட்டனர்.

எப்போதும் வென்றானென்ற
நிதர்சனத்தில் கடல்
நெய்தல் பூசூடி
பாடிக் கொண்டிருந்தது.

மௌன சாட்சியாய்
பெருமிதப் புன்னகையுடன்
நிலா கடலில்
முகம் பார்த்துக்
கொண்டிருந்தது.