Saturday, September 25, 2010
கவிதையின் ஜனனம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
22.9.10
கவிதையின் ஜனனம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்
படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.
Friday, September 24, 2010
காலத்தின் கால் நீட்சி - வல்லமை இதழில் வெளியானக் கவிதை
Posted by editor on September 22, 2010 in கவிதைகள் | 0 Comment
குமரி சு. நீலகண்டன்
நொடி, நிமிடம், மணி,
நாள், வாரம், மாதம்,
ஆண்டு, நூற்றாண்டென
சங்கத் தமிழ்ப் பெண்ணாய்
சீர் நடை நடந்தும்
காலம் தனது கால்களை
நீட்டி நடப்பது போல்
தோன்றுகிறது.
ஓடும் ரயிலின்
ஜன்னல் திரையில்
ஓடும் காட்சிகளின்
வேகத்தில்
காலத்தின் பிம்பங்கள்
கடந்து செல்கின்றன.
காலத்தின் கால்
பதிவு அவ்வப்போது
அலங்காரம் செய்யப்பட்டு
அர்ச்சிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு
இன்னொரு பதிவிற்கு
எப்போதும் தயாராக
இருக்கிறது.
காற்று வீசுகிற
திசைகள் நோக்கி
காலம் இழுக்கப்பட்டு
அலைக்கழிக்கப்படுகிறது.
மிருகங்கள், பறவைகள்…
புழுக்கள்.. பூச்சிகள்..
மரங்கள்… இலைகள்..
செடிகள்… மனிதர்கள்…
மலைகள்…என
எல்லோரின் கோபத்தின்
சாபத்தின் மொழிகளை
கைகளால் ஒதுக்கிக்கொண்டு
வேகமாய்
எதிர் நீச்சலிடுகிறது
காலம்.
காட்சிகள் மாறிக்கொண்டே
இருந்தாலும் சலனமற்ற
சங்கீத ரசிகனாய்
போய்க்கொண்டிருக்கிறது காலம்.
காலத்தைக் கைப்பிடித்து
கடந்து போகாதவர்களைக்
களைந்து விட்டுப்
போய்க்கொண்டிருக்கும் காலம்.
எங்கே போகிறது காலம்?
எது வரைப் போகிறது?
வரம்பற்ற இலக்கோடு
வரலாற்றின் சாட்சியாய்
வளர்கிறது காலம்.
Tuesday, September 21, 2010
தங்கப் பெண் - நவீன விருட்சத்தில் பிரசுரமான கவிதை
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்
ஃபேன்சி கடையில்
வேலை பார்க்கும் அவள்
அலங்காரமாய் பேசி
கவரிங் நகைகளை
விற்று வீட்டுக்கு
திரும்பும் வழியில்
வழக்கம் போல் அந்த
பெரிய நகை கடையில்
தொங்கும் தங்க
விலைப் பட்டியலைப்
பார்த்தாள். தற்போதெல்லாம்
கிராமின் விலைக்கும்
அவள் எதிர்கால
நம்பிக்கைக்குமான தூரம்
வெகு தொலைவாகி
விட்டதால் அவள்
அந்த கடை வருகிறபோது
குனிந்தே செல்கிறாள்.
அந்த கடையில்
வேலை பார்க்கும்
அந்த பையன்
மிகவும் வருத்தத்தில்
இருக்கிறான் இப்போதெல்லாம்
அவள் தன்னை
பார்ப்பதில்லை என்று.
நவீன விருட்சத்தில் அழகியசிங்கர் அவர்களின் கடிதம்
நவீன விருட்சம் 87-88வது இதழ் தயாராகி விட்டது.
இந்த இதழ் எதிர்பார்த்தபடி 6 மாதம் மேல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணிக்குமேல்தான் இதழ் குறித்து சிந்திக்க முடிந்தது. அதனால் தாமதம்.
இதழில் கீழ்கண்டவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதழ் அனுப்ப முகவரிகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நானும் என் எழுத்தும் ஐராவதம்
கையெழுத்து முத்துசாமி பழனியப்பன்
கவிதை நந்தாகுமரன்
யாவரும் கேளீர் அசோகமித்திரன்
துரோகத்தின் கத்தி ஆதி
கிழிசல் சேலை குமரி எஸ் நீலகண்டன்
இலா கவிதைகள் 6 இலா
பழம் புத்தகக் கடை விட்டல்ராவ்
விக்ரமாதித்யன் நம்பி கவிதைகள்
யாருக்காக ப மதியழகன்
G ராமசாமி 60+ ன் புலம்பல்
மூன்று கவிதைகள் அய்யப்பன் மாதவன்
அவளா இது மீனு
ஆறு கவிதைகள் அழகியசிங்கர்
இரு கவிதைகள் விநாயக முருகன்
தமிழ்ப் பேசும் ஆங்கில படம் தாஜ்
பெண் கவிதைகள் மொழிபெயர்ப்பு குவளைக்கண்ணன்
அம்மா மாதிரி செல்வராஜ் ஜெகதீசன்
குற்றச்சாட்டு நீலமணி
மொழிபெயர்ப்புக் கதை எம்.ரிஷான் ஷெரீப்
ஐயப்பப் பணிக்கர் கவிதை
சில குறிப்புகள் அழகியசிங்கர்
கழைக்கூத்தாடிச் சிறுவன் ப மதியழகன்
மைனஸ் மாத்ருபூதம் உஷாதீபன்
வரம் யோசிப்பவர்
ஐராவதம் புத்தக விமர்சனம்
அரசியல்வாதியும் அவர் வளர்த்த பூனையும் குமரி எஸ் நீலகண்டன்
ஊழிக்காலம் எம்.ரிஷான் ஷெரீப்
மெய்ப்பொருள் மிருணா
கவிதை நந்தாகுமரன் (2 முறை ஒரே கவிதை பிரசுரமாகிவிட்டது)
Monday, September 13, 2010
கவிதைகளின் காலம் - வல்லமை இதழில் வெளியான கவிதை
கவிதைகளின் காலம்
Posted by editor on September 11, 2010 in கவிதைகள் | 0 Comment
குமரி சு. நீலகண்டன்
Kumari_S_Neelakandan
”மா” பூ பூப்பதுபோல்
கவிதையின் காலங்களும்…
கவிதைகள் சில புளிக்கின்றன
இனிக்கின்றன
சில ஊறுகாயாய்
இலக்கியச் சோற்றுடன்
நாக்கை உரசிச் செல்கின்றன…
காலம் மாறி
பூத்த பூக்களும்
வண்டுகள்
வராத பூக்களும்
காற்றோடு
கரை கடந்த பூக்களும்
தரை விழுந்த பூக்களும்
வாடாத பூக்களுடன்
வாசம் பாடாத
பூக்களென
நிறைந்திருக்கிறது
இலக்கியத் தோட்டம்.
Friday, September 10, 2010
முதுமையெனும் வனம் - திண்ணை இதழில் வெளியான கவிதை
முதுமையெனும் வனம்
குமரி எஸ். நீலகண்டன்
முடிகளில் மூத்த
தலைமுடியினை முந்தி
மீசையில் நரை
உறைய ஆரம்பித்தது.
வெண்மை நுரை தள்ள
அசை போட்டுக்
கொண்டிருந்தது முதுமை.
தாடியில் நரை
ஓவியம் வரைந்தது.
இளமை ஆசைகள் மீசையில்
கருப்பு வண்ணத்தை
பீய்ச்சி விளையாடும்.
காலத்தின் பரப்பில்
கனிந்த கோலங்கள்
வரையும்.
தளர்ந்த உடலில்
இளமை நினைவுகள் தழுவும்.
தொடரும் நினைவுகளின்
நரம்புகளில்
இளமை முறுக்கேறும்
தாவிப் பாயும்
ஆடிப் பாடும்
உள்ளுக்குள் ஒரு காடு
பற்றி எரியும் அங்கே
முதுமைக்குள்
இளமை குளிர் காயும்
குமரி எஸ். நீலகண்டன்
Tuesday, September 7, 2010
தாத்தா தந்த கடிகாரம் - நவீனவிருட்சத்தில் வெளியானக் கவிதை
This Blog
Linked From Here
The Web
5.9.10
தாத்தா தந்த கடிகாரம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்
Sunday, September 5, 2010
எஜமான விஸ்வாசம் - வல்லமை இணைய இதழில் எனது கவிதை
Posted on 04 September 2010
குமரி எஸ். நீலகண்டன்
எலியும் பூனையுமாய்
எஜமானனும்
எதிர்வீட்டுக் காரரும்..
சண்டைக்காரன் வீட்டில்
மீனைத் திருடித் தின்றுவிட்டு
பதுங்கி பதுங்கி
பவ்யமாய் வந்த பூனை
எஜமானனை
சந்தேகத்துடன் பார்த்தது
எஜமானனுக்கு தற்போது
தான் எலியா
பூனையா என்று
Monday, August 23, 2010
ஒரு ராஜகுமாரனின் கதை - திண்ணை இதழில் வெளியான கவிதை
EMAIL TO A FRIEND
Sunday August 22, 2010
ஒரு ராஜகுமாரனின் கதை
குமரி எஸ். நீலகண்டன்
கடவுளின் ராஜ குமாரன்
கம்பீரமாய் குதிரையில்
வந்தான்
அழகான தேசத்தை
அவன் பெருமிதத்துடன்
பார்த்தான்
முதலில் அவனைச் சுற்றி
எல்லாம் சுகமாகவும்
சுறுசுறுப்பாகவுமே இருந்தன.
திருட்டு அவ்வளவாகத்
தென்படவில்லை.
சோம்பேரித்தனமாய் யாரும்
தெரியவில்லை.
அவலங்களும் அதிர்ச்சியும்
மனத்தளர்ச்சியுமாய்
எதுவும் படவில்லை.
அவன் பயணத்தில்
சில காலங்களில்
சில தூரங்கள்
கடந்திருப்பான்.
அதிர்ச்சி ஆரம்பமானது.
பசுமை உடுத்திய தாயின் மடியில்
பரிதாபத்துடன் பல உயிர்கள்
ஆடையில்லாமல்
அழுக்குத் துண்டில்
ஆடிக் கொண்டிருந்தன
பல உயிர்கள்
உலக வரைபடங்களெல்லாம்
நெஞ்சில்
நிதர்சனமாய் தெரிந்தன.
வறுமையில் தோய்ந்து
வழிந்தது துயரம்
முதலில் தனது
தலை கிரீடத்தை
எறிந்தான் ராஜகுமாரன்
தன் மேல் சட்டைகளை
அவிழ்த்து எறிந்தான்
தனது உடமைகளைத் திறந்து
அவர்களாகவே மாறி
அவர்களுக்காக
போரிடத் தொடங்கினான்
பருத்தி மரத்தின்
விதைகளைப் பறித்து
அதைப் பிரித்து
நூல் நூற்று
அவர்களுக்காய் ஆடை
நெய்து கொடுத்தான்
சுற்றியிருக்கும்
இயற்கையுடன்
கை கோர்க்க இனிதேக்
கற்றுக் கொடுத்தான்
அன்னியனின் விலங்குக்குள்
அனைவரும்
முடங்கிக் கிடந்தனர்
அவனிடம் கத்தியில்லை
குண்டூசி கூட இல்லை
நிராயுதனாய் சத்தியத்துடன்
சரித்திரப் போர்
தொடங்கினான்
அகிம்சையெனும்
ஆயுதமே அவனுக்கு
ஆரோக்கியமாய் தெரிந்தது.
கோபத்தை
அண்ட விடவில்லை
அவனின் கொள்கை
சிதையாமல் இருந்தது.
அகிம்சையின் வெப்பத்தில்
உருகினான் அன்னியன்
விலங்குகள் முறிய
வீர முழக்கமிட்டனர்
மக்கள்
ஆனந்தத்தின் உச்சத்தில்
ஆரவாரம் செய்தனர் மக்கள்
உற்சாக கோஷத்தில்
உலகமே அதிர்ந்தது
ராஜகுமாரன்
எச்சரிக்கை உணர்வுடன்
ஏதோ கூறினான்
வெறும் விடுதலை
மயக்கத்தில்
விழிக்கவே இல்லை
பல தலைகள்.
மக்களுக்காக
அறிவுறுத்திக் கொண்டே
இருந்தான் அவர்களின்
ஆரவாரத்தில் அவன் குரல்
அமுங்கிப் போனது
தனித்து விடப் பட்டான்
அவன் விடாமல் தனது
எச்சரிக்கை ஒலிகளை
எழுப்ப எழுப்ப
ஆரவார கூட்டத்திலிருந்து
ஒருவனின்
துப்பாக்கி குண்டுகள்
கோழையாய் அவனை
குதறிச் சிதைத்தன
ரத்தத்தின் கொதிப்பினை
அறிய குண்டுகள்
துளைத்திருக்க கூடும்
அகிம்சை சமாதியானது
ஆரவாரித்த மக்களெல்லாம்
இன்னொருவனுக்கு
அடிமையாயினர்.
ராஜகுமாரனை மறக்காத
அவர்கள் அவன்
பிறந்த நாள் இறந்த நாள்
எல்லாவற்றையும்
கொண்டாடினர்
காலங்காலமாய்
கடிதங்களிலெல்லாம்
தபால் தலையாய் அவன்
தலையைப் பதித்து
தவறாமல் அவனைக்
குத்திக் கொண்டே
இருந்தார்கள்
அவனுக்கு பிடிக்காத
மதுக் கடைகளின்
கல்லாப் பெட்டிகளிலெல்லாம்
மொட்டைத் தலையுடன்
அவன் முகங்களெல்லாம்
கொட்டிக் கிடந்தன
கொலை கொள்ளை
கூலிப்படையென
எல்லோர் கைகளிலும்
அவன் தலைகளையே
கூலிகளாய் பரிமாறினர்
அந்த ராஜகுமாரனைப் பற்றி
எல்லோரும் அவர்களின்
குழந்தைகளைக்கு சொல்லிக்
கொடுக்கிறார்கள் அவனையும்
அவனது வாழ்க்கையையும்
படிக்காமல் தெரியாமல்..
அந்த ராஜ குமாரனின்
பெயர் மகாத்மா என்றார்கள்
Copyright:thinnai.com
Sunday, August 22, 2010
ஏக்கம் - தாமரை இதழில் வெளியான கவிதை
குமரி எஸ்.நீலகண்டன்..
வெறும் கண், காது
மூக்கு மட்டுமல்ல
என் உருவம்.
என் தோற்றத்தைக்
காட்ட முயன்று
தோற்றுப் போகிறேன்
அவர்கள்
அவரவர் கண்களில்
என்னைப் பார்ப்பதால்.
அவர்கள் பார்த்த
என் உருவம்
என்னைப் போலவா
அவர்களைப் போலவா..
வரையச் சொல்லுங்கள்
ஓவியமாய்...
அவற்றில் ஒன்றாவது
என்னைப் போல்
நானாய்.
Thursday, August 19, 2010
தொண்டையின் துயரம் நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
நவீன விருட்சம்
17.8.10
தொண்டையின் துயரம்
உப்பில்லா உணவு
கொதிக்கிற தேனீரிலிருந்து
குளிர்ச்சியான ஐஸ் க்ரீம்
எதிர் வீட்டு பால் அப்பம்
எதிரி சுட்ட பணியாரம்
சந்த்ருவின்
பிறந்த நாள் கேக்
ஆஞ்சநேயரின்
வடைமாலையில்
பிரசாதமாய்
எஞ்சிய வடை என
எல்லா உணவு
பதார்த்தங்களையும் தொண்டை
அனுமதித்து விடுகிறது.
திடீரென
வயிற்றில் தள்ளு முள்ளு
கலவரம் அடிதடி என
நடக்கிற போது
வயிற்றிற்காக இரக்கம் காட்டி
கலவரக்காரர்களை
வாய் வழியாக
தண்ணீர் பீய்ச்சி
வெளியேற்றியும் விடுகிறது.
ஆனால் வினோதமாய்
ஒரு உறங்கும்
உண்மை மட்டும்
தொண்டைக்குள் முள்ளாய்
குத்திக் குத்திக் குதறுகிறது
வெளியேற இயலாமல்..
பொய் தவத்தில் புண்ணாய்
தொண்டை நாறிக்
கொண்டிருக்கிறது
பல நேரங்களில்
Wednesday, August 18, 2010
இரண்டும் ஒன்றானால்-வல்லமை இதழில் வெளியான கவிதை
இரண்டு ஒன்றானால்
Posted on 17 August 2010
குமரி எஸ். நீலகண்டன்
திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.
ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.
இடையே பாவம்
இரண்டின் கன்று.
Thursday, August 12, 2010
ஈர்ப்பு - சென்னை ஆன்லைனில் வெளியானக் கவிதை
ஈர்ப்பு
குமரி எஸ். நீலகண்டன்
பற்றுதலுக்குப்
பிடிபடாமல் எல்லாமே
கை நழுவி விடுகிறது.
விழுந்ததில் உடையாத
சிலவற்றை
வழிப்போக்கர்கள்
எடுத்துச் சென்றார்கள்.
உடைந்தவற்றில்
ஒரு பகுதி
குப்பைத் தொட்டிக்குச்
சென்றிருக்க வேண்டும்.
உடைசல்களின்
எஞ்சிய குவியல்களை
ஒன்று சேர்க்கப் பார்க்கிறேன்
கைக்கு லாகவமாய்ப்
பற்றிக் கொள்ள.
பொருளுக்கேற்றாற் போல்
கைகள் வேண்டும்
பற்றிக்கொள்ள.
சத்திய பிரமாணம் - சென்னை ஆன் லைனில் வெளியானக் கவிதை
சத்திய பிரமாணம்
குமரி எஸ். நீலகண்டன்
எனக்குச் சுதந்திரம் வேண்டும்.
ஆனால்
எல்லோரும்
நான் சொல்வதையே
கேட்க வேண்டும்.
எல்லோரும் உழைக்க வேண்டும்.
ஆனால்
எனக்கு வியர்வை ஒவ்வாது.
உதவும் மனதே
உலகை உயர்த்தும்.
எல்லோரும் எனக்கு
உதவுங்கள்.
பாவம்! அவனுக்கு
ஏதாவது கொடுங்கள்!
என்னிடம் மட்டும்
எதுவும் கேட்காதீர்கள்.
உனக்காக உயிரையே
கொடுப்பேன்.
உறுதியாக வாக்கு
தருகிறேன்.
என்னிடம் ஒரு பலஹீனம்
வாக்குறுதிகள் மட்டும்
என் நினைவில்
இருப்பதே இல்லை.
பீல்டு மார்ஷல் மானெக்சா - விகடன் பிரசுரம்
| ஃபீல்டு மார்ஷல் மானெக்சா | ||||||||||
| | ||||||||||
| |
| | ஆசிரியர்: குமரி சு.நீலகண்டன் வெளியீடு: விகடன் பிரசுரம் பகுதி: வாழ்க்கை வரலாறு ISBN எண்: 978-81-8476-139-9 மொத்த பார்வையாளர்கள்: 125 Views விலை: ரூ. 45 அண்டை நாடுகள் பலவற்றிலும், ராணுவ ஆட்சியும் சர்வாதிகார அடக்குமுறையும் இருந்தாலும், எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாரம்பரியம் மிக்க பாரத நாடு இன்றும் வலுவான ஜனநாயகத்தைக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் போக்கும் மக்களாட்சியும் இன்றும் உலக நாடுகள் நம் நாட்டை வியந்து பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்த நிலைக்குக் காரணமாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள், நம் ராணுவ உயரதிகாரிகள் _ குறிப்பாக மானெக்ஷா போன்றவர்கள். பார்ஸி இனத்தைச் சேர்ந்த அமிர்தசரஸில் பிறந்து, நம் தமிழகத்தின் குன்னூரை அதிகம் நேசித்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷாவின் மறைவு, உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்தியா சந்தித்த மூன்று போர்களுக்கு சாட்சியாக இருந்தவர் மானெக்ஷா. அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களில் சில சுவாரஸ்யங்கள் இந்த நூலில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்திரா காந்திக்கும் மானெக்ஷாவுக்கும் இடையில் நிலவிய புரிந்துணர்வு, எப்படி நம் நாட்டை வலுவான நாடாகத் திகழ வைத்தது என்பதை இந்த நூலில் அழகாகக் காட்டியுள்ளார் நூலாசிரியர் குமரி சு.நீலகண்டன். இந்திராகாந்தியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, மானெக்ஷா இந்தியாவில் ராணுவ ஆட்சியை நிறுவி விடுவார் என்று புரளி கிளப்பப்பட்ட போது, மானெக்ஷாவிடம் நேரிலேயே அதைக் கேட்டுவிட்டார் இந்திராகாந்தி. அதற்கு மானெக்ஷா சொன்ன பதில், நகைச்சுவையானது மட்டுமல்ல; இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிக்காட்டுவதாகவும் அமைந்தது. அது என்ன என்பதை இந்த நூலில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். நகைச்சுவை உணர்வு மிகுந்த மானெக்ஷா, நெருக்கடியான தருணங்களை எப்படி எதிர்கொண்டார் என்பதையும், ராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடன் கலந்து பழகிய விதத்தையும் இந்த நூலில் படிக்கும்போது, உண்மையில் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நன்கு அறிய முடியும். | |||||||
மெழுகு குலையாத பழங்கள் - தினமணி தலையங்க பக்கத்தில் ஆகஸ்ட் 31,2009 ல் வெளியான கட்டுரை
வெகு நாட்களுக்கு முன் நாகர்கோவில் செல்லும் வழியில் மணிமேடை சந்திப்பில் காலை வேளையில் அவ் வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருக்கும். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.
அன்று நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.
இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.
வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம்.
பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.
ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.
பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.
இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.
மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.
நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.
சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.
பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.
பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.
மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.
அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.
பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.
சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.
ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.
இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.
இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?
the other bank is always green.though everyone knows this all erring by not realising fault.god gives through nature all what we need in everyones area.if people eat what they get in their ares money,health,nature all will be saved along with their life longevity.
9/2/2009 9:27:00 AM
கறுப்பு நாய் - சென்னை ஆன் லைனில் வெளியான சிறுகதை
கறுப்பு நாய்
கறுப்பு நாய்க்கு முதுகு மிகவும் வலித்தது. முதுகுப் புண் செக்கச் செவேலென்று பார்ப்பவர் கண்களை அருவருக்கச் செய்யும் விதத்தில் இருந்தது. மிளகாய் தூளைப் புண்ணில் தூவியது போலக் காந்தல் எடுத்தது, கறுப்பு நாயின் கண்களிலிருந்து நீர் பொலபொலவென்று கொட்டியது. முதுகுப் புண்ணின் வேதனையை விட மனப்புண் வேதனை மிகவும் வருத்தியது.
காரிலிருந்து வெளியே தள்ளப்பட்டதும் காரைத் துரத்தி வீட்டினை அடைய அது எவ்வளவோ முயன்றது. ஒரு காலத்தில் ''திருடனைத் துரத்தும் போலீஸ் மாதிரி எங்க நாய் கம்பீரமாக ஓடும்'' என்று எசமானனால் வர்ணிக்கப்படட அந்தக் கறுப்பு நாயின் கால்களால் காரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
திருவிழாவில் பெற்றோரைத் தவற விட்ட குழந்தையாய்த் திருதிருவென விழித்தது. தூரத்தில் ஒரு கார் விரைவாக வர, அந்தச் சாலையை அது மெதுவான வேகத்தில் கடந்தது. அதன் நடையோடு அதன் மன நிலையான நிழல்கள் விழுந்து விரைந்து சென்றன. 'இந்த டிரைவர் நம்மைக் கொல்ல மாட்டான்' என்ற மனிதனின் மீது கொண்ட அதன் ஆழ்ந்த நம்பிக்கையும், கார் வருவதற்குள் இந்த நடையின் வேகத்தில் சாலையைக் கடந்து விடலாமென்ற நுண்ணிய மனக் கணக்கீட்டையும், மனச்சோர்வில் 'கார் இடித்து விட்டுப் போகட்டும்' என்ற தற்கொலை மனோபாவமும் அந்த நடையில் சித்திரங்களாய்த் தெரிந்தன.
பார்வைக்கு எட்டிய திசைகளில் எல்லாம் ஓடி ஓடி முயன்றது. ஆனால் அதனால் வீட்டை எட்டவே முடியாமல் போனது. அது போகும் தெருக்களில் எல்லாம், அங்குள்ள வெளிநாட்டு வீட்டு நாய்களும், சில சொறி நாய்களும், கறுப்பு நாயை ஒருவித இன வெறியுடன் தீண்டத் தகாததாய்ப் பார்த்தன. அவை இதை ஏதோ அந்நியனாய்ப் பாவித்துக் குரைத்து நிராகரித்தன.
அது சாலை ஓரத்தில் இருந்த மலத்தை நுகர்ந்தது. ஒரு வெறுப்புணர்ச்சியுடன் அதை நிராகரித்து விட்டு மீண்டும் ஒடியது. கழுத்தில் கிடந்த லைசென்சு அதை முனிசிபாலிட்டிகாரர்களிடமிருந்து காப்பாற்றியது. பசி வயிற்றைப் பிய்த்தது. பசியின் கொடுமையால் முதன்முதலாய் அந்த ஹோட்டலின் எச்சில் இலையை நக்கத் துவங்கியது. அந்த எச்சில் சோறு வயிற்றின் உள்ளே செல்ல மிகவும் தயங்கியது.
அது எப்படியெல்லாம் வளர்ந்த நாய். அது பிறந்த இரண்டாவது நாளிலிருந்து, இன்று காலை வரை எசமானன் நஞசப்பன் வீட்டு உணவை மட்டுமே உண்ட நாய், நஞ்சப்பனின் மூன்றாவது குழந்தையாய் வளர்ந்த நாய். ''நஞ்சப்பன் வீடு'' என்று சொல்லாமல், ''கறுப்பு நாய் வீடு'' என நஞ்சப்பன் வீட்டை அறிமுகப்படுத்தும் அளவிற்குத் தெருவிலுள்ள எல்லோரும் அறிந்த நாய்! அது ஒரு முக்கிய அறிவுஜீவி.
பல வருடங்களுக்கு முன்பு நஞ்சப்பன் வங்கியில் கணக்கராக இருந்தபோது அதிக வசதிகளில்லாத ஒரு நடுத்தர வர்க்கத்து இந்தியனாகவே இருந்தார். அவர் கறுப்பு நாய்க்கு மட்டும் எந்தக் குறையும் வைத்தது கிடையாது.
நஞ்சப்பன் வீட்டைக் கறுப்பு நாயும் சிறந்த காவல் வீரனாகக் காத்திருக்கிறது. அது பல திருடர்களைக் குரைத்து விரட்டியிருக்கிறது. ஆனால் அது தன் வாழ்வில் யாரையும் கடித்ததாய்ச் சரித்திரம் இல்லை. நஞ்சப்பன் கூட அந்தக் கறுப்பு நாயைப் பற்றி வீட்டிற்கு வருபவர்களிடம் எல்லாம் ''இதுக்குக் கண் கழுகுக் கண், இதுக்குக் காது பாம்புச் செவியாக்கும, இதுக்கு மூக்கு அபாரமான நுகர்வுத் திறனுள்ளது. திருடனைத் துரத்தும் போலீஸைப் போலக் கம்பீரமாக இது ஓடும்'' என விதவிதமாக, அதன் அங்கங்களை வர்ணிப்பார். நஞ்சப்பனைத் தேடி வரும் பலர் கறுப்பு நாயைப் புகழ்ந்து பேசி அவரை ஐஸ் வைத்துப் பல காரியங்களும் சாதித்திருக்கின்றனர். இந்தக் கறுப்பு நாய் நஞ்சப்பன் வீட்டுக்கு விருந்துக்கு வரும் விருந்தாளிகளின் குழந்தைகளுக்குக் காட்சிப் பொருளாய் அவர்களின் அழுகையை நிறுத்தி எவ்வளவு சேவை செய்திருக்கிறது!
''கடிக்காத நாய்''என்ற அபார நம்பிக்கையில் நஞ்சப்பன் தைரியமாக நாயின் பக்கத்திலேயே குழந்தைகளை விளையாட விடுவார்.
''ஹாய்! நாயைப் பாரு'' என்றதுமே அடம்பிடிக்கும் குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும். அந்தக் கறுப்பு நாய் மட்டும் இல்லாவிட்டால், குழந்தை அழுதுகொண்டே இருந்திருக்கும். 'சீ! குரங்கு அழுகையை நிறுத்தல்லே கொன்னுடுவேன்' எனத் தாயும் மிரட்டி இருக்கலாம். அழுது அழுது குழந்தையின் உடல் நிலை கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
''என்னடி! அப்பதே சொன்னேன்! குழந்தை கேட்டத கொடுன்னு! குழந்தை அடம்பிடிக்கறதே உன்னாலேதான்'' எனக் கணவன் மனைவியிடையே பிரளயம் ஆரம்பித்து அது பூகம்பமாய் வெடித்திருக்கவும் செய்யலாம்.
இப்படிச் சாதாரணமாக நம் சிந்தனைக்கு எட்டாமலேயே, இந்தக் கறுப்பு நாய் பெரிய பெரிய சேவைகளை நஞ்சப்பன் குடும்பத்திற்குச் செய்திருக்கிறது.. அதுவே பலர் இவருக்குக் கடிதம் எழுதும் போது கறுப்பு நாயைப் பற்றி விசாரிக்கவும் வைத்திருக்கிறது.
நஞ்சப்பனும் கறுப்பு நாயை நாள் தவறாமல் குளிப்பாட்டி, குழந்தை போல் வளர்த்தார். அதன் உடம்பில் உண்ணிப் பூச்சிகள் ஒன்றினைக்கூட அண்ட விடமாட்டார்.
பக்கத்து வீட்டுச் சிறுவன், கறுப்பு நாயின் மேல் கல்லை எறிந்ததற்கு அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் நட்பையே முறித்துக்கொண்டார். ஒரு தடவை அது சைக்கிளில் அடிபட்டுக் கால் ஒடிந்து வ்ந்தபோது, நாய் என்று பாராமல், மூலிகைகளைக் கால்களில் வைத்துக் கட்டிக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்தார். குளிர்க் காலங்களில், பல இரவுகளில், நடு இரவில் விழித்து, ''பாவம்! நாய்க்கு குளிரடிக்கும்'' என்று கூறி நாயை அவிழ்த்து, முற்றத்தில் படுக்க வைத்துக் கோணியால் போர்த்தி விடுவார்.
''நாய் தனியாக இருக்கும்'' என்ற காரணத்தினாலேயே அயலூரில் பல உறவினர்கள், நண்பர்களின் திருமண விழாக்களை நஞ்சப்பன் நிராகரித்திருக்கிறார். பல விழாக்களுக்கு மனைவியையும், பிள்ளைகளையும் மட்டும் அனுப்பி இருக்கிறார். நஞ்சப்பன் கவலையோடு ஏதாவது ஆலோசித்துக் கொண்டிருக்கையில் 'அது ஊர் சுற்றிவிட்டு, கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் காலம் தாழ்த்திப் பெற்றோருக்குப் பயந்து வரும் ஒரு மகனின் தயங்கிய கால்களைப்' 'போல் தன் கால்களை நகர்த்தி நகர்த்தி வரும். நஞ்சப்பன் அதன் தலையினை அன்பாய்த் தடவித் தடவியே தன் கவலைகளை மறந்து போவார்.
ஆண்டுகள் பல ஓட, நஞ்சப்பன் வசதியும் சிறிது பெருகிக் கொண்டே சென்றது. புதுவீடு கட்டினார். ஸ்கூட்டர், கார் வாங்கும் அளவிற்கு அவர் வசதிகள் பெருகின. புதுப் புது நண்பர்கள் வந்தனர். ஒருநாள் நஞ்சப்பன் வீட்டிற்கு விருந்திற்கு வந்த ஒரு பெண், ''என்னங்க! இந்தச் சொறி நாயைப் போய் வீட்டிலே வளர்க்கறீங்களே? நல்ல பொமரேனியன் குட்டி கிடக்குது! ஒண்ணைத் தர்றோம்!'' என்று நஞ்சப்பன் மனைவியிடம் சொல்ல, அன்றுதான் இந்தக் கறுப்பு நாய்க்குக் கெட்ட காலம் தொடங்கியது.
அடுத்த நாள் வெள்ளை நிற பொமரேனியன் நாய், நஞ்சப்பன் மடியில் கொஞ்சி விளையாடியது. கறுப்பு நாயைக் கண்டதுமே பொமரேனியன் விடாமல் வெறுப்புடன் குரைத்தது. முதல் இரண்டு நாட்கள் கறுப்பு நாயைத் தனியாக பின் வாசலில் கட்டி வைத்தார்கள். ஆனால் பொமரனியனோ இந்த நாயைக் கண்டால் விடாமல் தொண்டை கிழியக் குரைத்தது. சப்தம் தாங்கச் சகிக்காமல் பக்கத்து வீட்டுக்காரர்கள், நஞ்சப்பன் வீட்டாரைத் திட்டத் தொடங்கினர். கறுப்பு நாயின் மீது நஞ்சப்பன் குடும்பத்தாரின் அன்பு சிறிது சிறிதாக விலகத் தொடங்கியது நஞ்சப்பன் முன்பு, பரிதாபமாய் வாலை அசைத்து அன்பிற்காக ஏங்கி நிற்கையில் அடித்து விரட்டப்பட்டது. அது வீட்டு வாசலிலேயே சோகமாய்ப் படுத்துக்கொண்டது.
ஒரு நாள் நஞ்சப்பனின் மனைவி தன் கணவனிடம் ''இதோ பாருங்க. இந்த நாயை நம்ம வீட்டிலே வச்சிருந்தோம்னா நம்ம ஸ்டேட்டஸ் குறைஞ்சிடும்'' என்று சொன்னாள். உடனே கறுப்பு நாய் காரில் பக்கத்து ஊரிலேயே விட்டு வரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அலைந்து வீட்டை மோப்பம் பிடித்து வந்துவிட்டது. நன்றியுடன் நஞ்சப்பனிடம் அன்பிற்காக ஏங்கி வாலை ஆட்டிக் கெஞ்சியது. நேற்று வந்த பொமரேனியன் இதைக் குரைத்து விரட்டியது.
அன்று இரவு கறுப்பு நாயை விரட்ட வேறு வழியில்லாமல் ஒரு நண்பரின் ஆலோசனையின் கீழ் நஞ்சபப்னின் மனைவி விஷத்தை மாமிசத்தில் கலந்து அதன் முன் வைத்து விட்டுச் சென்றாள். சில மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் இறந்த ரோஸி என்ற தன் சகநாய் வாந்தி எடுத்த எச்சில் சோற்றின் வாடை இதிலும் வீச, கறுப்பு நாய் அந்த விஷச் சோற்றை வெறுப்புடன் நிராகரித்தது.
அன்று நஞ்சப்பனின் வீட்டிற்கு அவரது அக்கா வந்திருந்தாள் அக்காவின் மூன்று வயதுக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து கறுப்பு நாயின் பக்கம் வந்து அந்தச் சோற்றைத் தின்ன முயல, கறுப்பு நாயும் எச்சரிக்கை உணர்வுடன் தன் கால்களால் குழந்தையின் கையைத் தட்டிவிட்டு ஊளையிட்டுக் காப்பாற்றியது. ஆனால் நாயின் கால் நகம் குழந்தையின் கைகளைச் சிறிது கீச்சிப் புண் ஆக்கிவிட, அதன் அழுகையில், நஞ்சப்பன் குடும்பமே ''நாய் கடிச்சிடிச்சு! குழந்தையை நாய் கடிச்சிடிச்சு!'' எனக் கதறியது.
நஞ்சப்பன் அன்புடன் வளர்த்த அந்தக் கறுப்பு நாயை முட்கள் போல் 'சிரா' நிறைந்த விறகுக் கட்டையால் அடித்துக் கொல்ல முயன்றார் 'ஓ' என்று வலியில் கத்தியது. ''சீ! வளர்த்த நாயை அடிக்காதே! எங்கயாவது கொண்டு விட்டுகிட்டு வா!" எனப் பக்கத்தது வீட்டு வயதான அம்மா சொல்ல, கறுப்பு நாய் காரில் பயணமானது. வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் விடப்பட்டது, அது சுற்றி சுற்றி வந்தது. நஞ்சப்பன் வீட்டை அதனால் எட்ட இயலவில்லை. கறுப்பு நாய் நஞ்சப்பன் வீட்டை விட்டு வெளியேறிச் சுமார் ஆறு மாதங்கள் கழிந்துவிடட்ன. இந்த ஆறு மாதங்களில் அது எவருக்கும சொந்தமில்லாமல், கல்லடி, கம்படியென எல்லாத் துயரங்களையும் பெற்றுகொண்டு ''சொறி'' நாயாகச் சந்தை, தெருவென அலைந்து கொண்டிருக்கிறது. எசமானன் நஞ்சப்பனை மட்டும் அடிக்கடி நினைத்துக் கண்ணீர் விடும்.
அன்று தன் எசமானரின் கார் டிரைவரை வைத்துக் காரை அடையாளம் கண்டு கொண்டது. டிரைவர் காரின் கதவைத் திறந்து போட்டு விட்டு, பூக்கடைக்குள் நுழைய இது தந்திரமாய்க் காருக்குள் நுழைந்து, இருக்கையின் அடியில் ஒளிந்து கொண்டது. காரினுள் பூக்கூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. பூவின் வாசம் நாயின் மூக்கை துளைத்தது.
வீட்டின் முன் கார் நின்றது. ஒரே கூட்டம். காரிலிருந்து வேகமாய்த் தாவிக் குதித்துச் சந்தோஷமாய் எசமானனைக் காணும் ஆசையில் வீட்டிற்குள் ஓடியது. ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தன் சக நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
''பாவம்! நஞ்சப்பன் சார்! ஹார்ட் அட்டாக்லே 'பட்'டுன்னு போயிட்டாரு! இந்தக் கறுப்பு நாய் போனதிலேயிருந்து அவங்க குடும்பம் சீரழிஞ்சு போச்சு! இவரு ஒரு பொமரேனியன் வளத்தாரு! அது பக்கத்து வீட்டுப் பொட்டை நாய் கூட எங்கோ ஓடிப் போச்சு! பாவம் இது நன்றியுள்ள நாய்! அடிச்சுத் துரத்தின பிறகும் எவ்வளவு நன்றியா வீடு தேடி வந்திருக்கு! ”
கறுப்பு நாய் எசமானரின் முகத்தைக் காணும் ஆவலில் கண்ணீர் மல்க நின்றது. திடீரென எங்கிருந்தோ அங்கு ஓடி வந்த பொமரேனியன், கறுப்பு நாயின் அருகில் வந்து சோகத்துடன் அதன் கண்ணீரை நக்கிக் கொண்டிருந்தது.
Tuesday, August 10, 2010
இந்த வேம்புகள் கசப்பதில்லை - உயிரோசையில் வெளியான சிறுகதை
| இந்த வேம்புகள் கசப்பதில்லை | ||||
| ||||
எதிர்வீட்டுக்காரர் அவர் வீட்டு மரத்தை வெட்டப் போகிறார், அவ்வளவுதான். ஆனால் இந்தச் செய்தி விஸ்வநாதனுள் ஒரு தாங்க முடியாத துயரச்சூழலைப் பரவ விட்டு விட்டது. மற்றவர்களைப் பொறுத்தவரை, நாளை வெட்டப் போகும் அந்த மரம் கசந்த இலைகளைக் கொண்ட ஒரு சாதாரண வேப்ப மரமாக இருக்கலாம். ஆனால் விஸ்வநாதனுக்கு, அது அவரைப் போல் நரைத்த தலை, மூளை, இதயம், கை, கால், நரம்பு, ரத்தம் கொண்ட ஒரு மாமனிதரின் உயிர். இவர் வீட்டின் முன்பு நீளமாய் விரித்த விரிப்பாக அமைந்தது ஒரு கறுப்பு தார் சாலை. அதைக்கடந்து எதிர் வீட்டு வளாகத்தில் நெடிதாய் வளர்ந்த அந்த வேப்ப மரத்தோடு அன்றாடம் இவர் வீட்டிலிருந்தபடியே பேசிக் கொண்டேதான் இருக்கிறார். அவரின் நெருங்கிய நண்பரான அப்துல்லா அல்லவா அந்த மரம் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். ஒரே மாதிரி சாயலில் ஒரே நிறத்தில் ஒரே நடை அசைவில் பிரித்தறிய இயலாத அளவிற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதே மாதிரிதான் இந்த இரட்டை மரங்களும். விஸ்வநாதன் வீட்டு முன்புள்ள சாலையில் நின்று பார்த்தால் தெரியும். விஸ்வநாதன் வீட்டு வேப்ப மரமும் எதிர்வீட்டு வேப்ப மரமும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையில் செல்லும் மனிதர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு அதனுருவங்களும் அசைவுகளும் ஒத்திருக்கும். இரண்டு மரங்களுக்கும் ஒரு மாத வயது வித்தியாசம். விஸ்வநாதனுக்கும், எதிர்வீட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு இருந்த அப்துல்லாவிற்கும் ஒரு மாத வயது வித்தியாசம். அப்துல்லா..... விஸ்வநாதன் நட்பு தெய்வீகமானது... 'அனபு' என்னும் கடவுளால் அரவணைக்கப்பட்டது. அப்துல்லா வீடு தேடி நாகர்கோவில் நகரம் முழுக்க அலைந்து கொண்டிருந்தார். அப்போது நகரத்தின் வெளிப்புறத்தில் ஒரு காலனியில் ஆள் அரவமற்ற பகுதியில் ஒரு 45 வயதுமிக்க மனிதர் மயக்கமுற்றுக் கிடந்தார். அப்துல்லா அவசரமாய்த் தன் மிதிவண்டியை மிதித்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றார். உரிய சிகிச்சைக்குப் பின் அவர் நினைவு பெற அவர் 'விஸ்வநாதனா'க அப்துல்லாவுக்கு அறிமுகமானார். விஸ்வநாதன் அப்துல்லாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்துல்லா வீடு தேடும் விபரமறிந்த விஸ்வநாதன் தன் எதிர் வீடு காலியாகும் விபரம் கூற அவர் எதிர் வீட்டிலேயே குடி அமர்ந்தார். அட! எதிர் வீடு என்றதும் ஏதோ ஒரு நபரின் வீடல்ல அது... அதுவும் விஸ்வநாதனுக்குச் சொந்தமான வீடுதான். இருவரது எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருந்ததால் குறைந்த கால அளவில் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். அப்துல்லாவிற்கு விஸ்வநாதன் ஒரு நண்பரென்றால் வேப்பமரம் இன்னொரு நண்பர். "இயற்கை வைத்தியத்தில் எனக்கு பைத்தியம்" என்பார் அப்துல்லா அடிக்கடி. அந்த அளவிற்கு இயற்கை மருத்துவத்தில் அவருக்கு ஈடுபாடு. அதிலும் குறிப்பாக 'வேப்பமரம்' அப்துல்லாவிற்கு மிகவும் பிடித்தமானது. அதன் இலை, தழை, பட்டையென பெரும்பாலான நேரமும் அதைப்பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். ஒரு சமயம் விஸ்வநாதனின் பேரக்குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். அவரின் குழந்தையின் காலில் வந்த சிரங்கு குரங்காய் உடம்பு முழுவதும் தாவிக் கொண்டிருந்தபோது ஆங்கில வைத்தியத்தில் வீட்டில் பல ஆயின்மென்ட் கூடுகள்தான் கூடின. சிரங்கு மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டிருக்க அப்துல்லாவின் வேப்பிலை வைத்தியத்தில் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. விஸ்வநாதன் கொசுத்தொல்லை பற்றிக் கூற 'வேப்பங்காற்றிற்கு கொசு வராது' என அப்துல்லா 'வேப்பம்பா' பாடுவார். விஸ்வநாதனின் பிறந்தநாளைத் தெரிந்து கொண்ட அப்துல்லா அன்று அவருடைய பரிசாய் விஸ்வநாதன் வீட்டு முற்றத்தில் வேப்பமரத்திற்கு வித்திட்டார். ஒருமாதம் கழித்து அப்துல்லாவின் பிறந்த நாள் வந்தது. அதேபோல் அவருடைய வீட்டில் விஸ்வநாதனும் இன்னொரு வேப்பமரத்திற்கு வித்திட்டார். இரண்டு வேப்பமரங்களும் ஒரு மாத வித்தியாசமிருந்தும் உருவத்தில் அதிக வித்தியாசமின்றி நட்போடு வளர்ந்தன. அந்தப் பக்கமாய் இருக்கும் பெரிய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கெல்லாம் இந்த மரங்களைச் சொல்லி அடையாளம் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றன அவை. வீட்டு வளாகத்தைவிட்டு அதன் கிளைகள் வெளிக்கிளம்பி சாலை பாதசாரிகளுக்கும் நிழல் தந்தன. சாலையில் செல்வோருக்கு எதிர் வீடுகளில் இரண்டு ஒரே மாதிரி மரங்கள் எப்போதும் "சல சல" வெனப் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இந்த இரண்டு மரத்தடிகளில்தான் விஸ்வநாதனும் அப்துல்லாவும் பெரும்பாலான நேரங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த இரண்டு மரங்களின் காற்றுகளிலும் இவர்களது கருத்துகளே நிறைந்திருக்கும். விஸ்வநாதன் அடிக்கடி சொல்வார்... "உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்." இப்படியே அப்துல்லாவும் விஸ்வநாதனும் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்படி வளர்ந்த இந்த வேப்பமரங்களுக்கு ஒரு தருணத்தில் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'காகங்கள்' என்ற இலக்கியக் கூட்டத்தை இந்த மரத்தடிகளில் நடத்தி இருக்கிறார். விஸ்வநாதன் ஒரு பெரிய ஆசாரமான குடும்பத்தின் வாரிசாய் இருந்தும் எல்லோரிடமும் சாதி மத பேதமின்றி பழகுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற ஏழை நோயாளிகளைத் தொட்டு சேவை செய்வார். சாதி, மத பேதமற்ற அவரின் ஸ்பரிசமே அவரை அவர்களுள் ஒரு வித்தியாசமான மனிதராக அடையாளம் காட்டியது. அப்துல்லா - விஸ்வநாதனின் நட்பு உருவானபின் இந்த சேவை இன்னும் பேறு பெற்றது. இலை, செடி, கொடி, காய், கனி என இயற்கையே கடவுளாக அவர்களுக்குப் பட்டது. எல்லா உயிர்களின் இயக்கமே கலை அம்சமாகத் தெரிந்தது. தடங்கலில்லாது அந்த உயிர்களின் இயக்கத்திற்கு சேவை செய்வதில் தன் நிறைவு கண்டார்கள் அவர்கள். உலகமே கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை, சிகப்பு என வண்ணமயமாய் இருந்தாலும் எல்லாம் ஒரே மண்ணிற்குச் சொந்தமானவை. விஸ்வநாதன் - அப்துல்லா உறவு சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை பாசம் மிகுந்ததாகக் கருதப்படும். ஆனால் நிஜத்தில் அது 'பாசம்' என்ற சுயநல கயிற்றால் பிணைக்கப்படாத அதற்கு அப்பாற்பட்ட உயர்வான உறவாகும். திடீரென அப்துல்லாவிற்குப் பணி நிமித்தமாக டெல்லிக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. விஸ்வநாதனுக்கும், அப்துல்லாவிற்கும் மிகப்பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. இயல்பான நடைமுறைகளை ஏற்று எதிர்கொள்வதே வாழ்க்கை என்பதில் இருவருக்கும் அதிக நம்பிக்கை உண்டு. அதனால் அப்துல்லா வீட்டைக் காலி செய்துவிட்டுக் குடும்பத்தோடு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றார். ஆனால் விஸ்வநாதனுக்கோ, அவருடைய நினைவுகள் அவர் வீட்டு வளாகத்து வேப்பமரத்தில் இலைகளாய், காய்களாய், கனிகளாய் கனிந்து தொங்கின. வேப்பமரம் அவருக்கு வேப்பமரமாகத் தெரியவில்லை. அரைநரையோடு புன்முறுவல் கொண்ட ஆரோக்கியமான அப்துல்லாவாகவே தெரிந்தது. வீட்டுக்குள் போகாமல் வெளி இடங்கள் சுற்றாமல் தூங்காமல் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும் அப்துல்லாவாகவே தெரிந்தது. காற்றில் மரம் ஆடி அசையும்போது அப்துல்லா கை அசைத்து அசைத்துப் பேசுவதாகவே விஸ்வநாதனுக்குத் தெரிந்தது. அவரின் கொள்கைகள், நடைமுறைகள், அன்பு அனைத்துமே அந்த மரத்துள் ஆழமாய்ப் பதிந்திருந்த்து. அத்தோடு அப்துல்லாவிற்கும் விஸ்வநாதனுக்கும் கடிதத் தொடர்பு அவ்வப்போது இருந்தது. எதிர்பாராமல் ஒருநாள் அப்துல்லாவின் இறப்புச் செய்தியும் வந்தது. விஸ்வநாதன் குடும்பத்திற்குப் பெரிய துயரமாகவே இருந்தது. குடும்பமே புதுடெல்லி சென்று வந்தது. ஆனாலும் அப்துல்லா அந்த இரட்டை வேப்பமரங்களில் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார். அப்துல்லாவின் நினைவுதினத்தில் அங்கு சர்வமதப் பாடல்கள் பாடப்பட்டன. அந்த இரட்டை வேப்பமரங்களில் சில நேரங்களில் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள் கொஞ்சிக் குலாவும்போது விஸ்வநாதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மகளின் திருமணத்தின்போது எதிர்வீட்டுமனையை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விஸ்வநாதனுக்கு வந்தது. அந்த வேப்பமரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்ற நிபந்தனையை வேண்டுதலாய்த் தந்து ஓரு தூரத்து உறவினருக்கே விற்றும் விட்டார். ஆனால் சில மாதங்களுக்குள் எதிர் வீட்டு வேப்பமரம் வெட்டப்படும் செய்தி விஸ்வநாதனை எட்டியது. துடித்தே போய்விட்டார். எதிர்வீட்டு உறவினரிடம் எவ்வளவோ கெஞ்சினார். அவர்களுக்கு அது கேலிக்குரியதாகவே இருந்தது. ''இவருக்கென்ன பைத்தியமா.... ஒரு மரத்தை வெட்டறதுக்கு இவ்வளவு அழறாரு'' என்றார்கள். விஸ்வநாதனுக்கு அது ஒரு பேரிழப்பாய் தெரிந்தது. விஸ்வநாதனின் பேத்தி கூட தாத்தாவை சமாதானப்படுத்தினாள். "கவலைப்படாதீங்க தாத்தா! அந்த வெட்டப்போற மரத்திலே இருந்து ஒரு கொட்டையை எடுத்து நம்ம வீட்டிலே நட்டு மரமாக்கிடலாம்." விஸ்வநாதன் நிதானமிழந்து நிலை குலைந்து நின்றார். அன்றிரவு இடிமழையோடு ஒரு பயங்கர சப்தம்... எதிர்வீட்டுக்காரர்கள் என்னவோ ஏதோவென்று எட்டிக் கதவைத் திறக்க அங்கு 'பிரேக்' இழந்த ஒரு லாரி அதிவேகமாய் வீட்டு வெளிச்சுவரைத் தகர்த்து அந்த மரத்தில் இடித்து நின்றது. அந்தக் குடும்பமே அந்த மரத்தால் காப்பாற்றப்பட்ட நம்பிக்கையில் அந்த மரத்திற்காக எழுதப்பட்ட 'மரண உத்தரவு' தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்தப் பகுதியில் இரட்டை மரங்களின் சலசலப்பு விஸ்வநாதனோடு அளவளாவிக் கொண்டிருந்தது. அதில் விஸ்வநாதனுக்கு அந்தக் குடும்பத்தையும் அப்துல்லாவையும் காப்பாற்றிய மகிழ்ச்சி மணம் பரப்பி நின்றது. உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com | ||||
வல்லமை இணைய இதழில் வெளியான கவிதைகள்
Tag Archive | "குமரி எஸ். நீலகண்டன்"
இருப்பும் இழப்பும்
Posted on 03 August 2010
Tags: குமரி எஸ். நீலகண்டன்
குமரி எஸ்.நீலகண்டன்
இழப்பை இருப்பும்
இருப்பை இழப்பும்
துரத்திக்கொண்டே
இருக்கின்றன.
சிலர் இருப்பது
இழப்பை
ஈடுகட்டவே..
பல இழப்புகளால்
உருவானவையே
சில இருப்புகள்.
இழந்தவை எல்லாம்
எங்கோ
இருந்துகொண்டிருக்கின்றன.
இருப்பவையெல்லாம்
யாரோ இழந்தவையாக
இருக்கலாம்.
இருப்பும் இழப்பும்
சதா இடம் பெயர்ந்துகொண்டே
இருக்கின்றன.
ஒளி
இருட்டை இழப்பதும்
இருட்டு
ஒளியை இழப்பதும்
எதார்த்தம்.
இழந்த ஒளியால்
வீட்டை நிரப்பலாம்
வாசல் திறந்து….
ஹெல்மெட்டின் பாதுகாப்பு - திண்ணை இணைய தளத்தில் எனது கவிதை
Saturday June 26, 2010
ஹெல்மெட்டின் பாதுகாப்பு
குமரி எஸ். நீலகண்டன்
குப்பைப் பெட்டியின்
அருகே பிளாட்ஃபார்மில்
உடைந்து கிடந்த
அந்த ஹெல்மெட்
ஏதோ ஒன்றை சொல்கிறது..
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய்
புரிந்து கொள்கிறார்கள்.
அதைப் பார்த்த கவிஞன்
மூளை இல்லாத
ஏதோ ஒருவனின் தலையை
இந்த ஹெல்மெட் பாவம்
இத்தனை நாள்
பாதுகாத்திருக்கிறது என்று
சொல்லிப் போனான்.
ஒரு பெரியவர்
பொறுப்பில்லாத மனிதன்
குப்பைப் பெட்டிக்கு
வெளியே போட்டதை
உள்ளே போட்டுச்
செல்லக் கூடாதா
என்று அங்கலாய்த்தார்.
தரமற்ற ஹெல்மெட்
தலை நொறுங்கி கிடக்கிறது.
ஹெல்மெட்டின்
சொந்தக் காரன் தலை
தப்பி இருக்குமோ
என்னவோ என
கவலைப் பட்டுப் போனான்
இன்னொருவன்.
கருமி ஒருவன் வாங்கிய
விலை குறைந்த
ஹெல்மெட் என
இன்னொருவன்
சொல்லிப் போனான்.
அதோ உடைஞ்சு கிடக்குதே
அதே வண்ணத்தில்தான்
நான் உங்களிடம்
சேலை வாங்கச் சொன்னேன்
என்று தர்க்கித்தாள்
அந்த வழியாய் சென்ற
அவனிடம் அவள் மனைவி.
இந்த உடைந்த
ஹெல்மெட்டை
சிலையாய் இங்கே
நிறுவ வேண்டும்.
அப்படி வைத்தால்
வேகப்ரியர்களின்
உயிர் தாகம் அடங்க
எச்சரிக்கையாய்
இருக்கும் என்றார்
ஒரு போலிஸ்காரர்.
பல வருடங்களுக்கு முன்பு
தலை கவசம் அணியாமல்
விபத்தில் சிக்கி
உயிரிழந்த தன்
கணவனின் நினைவில்
கண்களில் பொங்கிய
கண்ணீரை துடைத்து
விட்டுச் சென்றாள்
இன்னொரு பெண்.
ஹெல்மெட் அணிந்தும்
முகமூடி கொள்ளையர்கள்
கொள்ளை அடிக்கிறார்களாம்
என்று பைக்கின்
பின்னால் இருந்தவன்
முன்னால் இருந்தவனிடம்
சொல்லிப் போனான்.
அது வாகன
ஓட்டிகளுக்கு மட்டுமல்ல
திருடர்களுக்கும்
பாது காப்பானது.
சாலையில்
இன்னொரு பக்கம்
கண்ணாடித் துண்டுகள்
சிதறி கிடக்க ஒரு சிறுவன்
அந்த ஹெல்மெட்டை எடுத்து
அதை மூடி வைத்துப் போனான்
குமரி எஸ். நீலகண்டன்
Copyright:thinnai.com


