காலத்தின் கால் நீட்சி
Posted by editor on September 22, 2010 in கவிதைகள் | 0 Comment
குமரி சு. நீலகண்டன்
நொடி, நிமிடம், மணி,
நாள், வாரம், மாதம்,
ஆண்டு, நூற்றாண்டென
சங்கத் தமிழ்ப் பெண்ணாய்
சீர் நடை நடந்தும்
காலம் தனது கால்களை
நீட்டி நடப்பது போல்
தோன்றுகிறது.
ஓடும் ரயிலின்
ஜன்னல் திரையில்
ஓடும் காட்சிகளின்
வேகத்தில்
காலத்தின் பிம்பங்கள்
கடந்து செல்கின்றன.
காலத்தின் கால்
பதிவு அவ்வப்போது
அலங்காரம் செய்யப்பட்டு
அர்ச்சிக்கப்பட்டு
அழிக்கப்பட்டு
இன்னொரு பதிவிற்கு
எப்போதும் தயாராக
இருக்கிறது.
காற்று வீசுகிற
திசைகள் நோக்கி
காலம் இழுக்கப்பட்டு
அலைக்கழிக்கப்படுகிறது.
மிருகங்கள், பறவைகள்…
புழுக்கள்.. பூச்சிகள்..
மரங்கள்… இலைகள்..
செடிகள்… மனிதர்கள்…
மலைகள்…என
எல்லோரின் கோபத்தின்
சாபத்தின் மொழிகளை
கைகளால் ஒதுக்கிக்கொண்டு
வேகமாய்
எதிர் நீச்சலிடுகிறது
காலம்.
காட்சிகள் மாறிக்கொண்டே
இருந்தாலும் சலனமற்ற
சங்கீத ரசிகனாய்
போய்க்கொண்டிருக்கிறது காலம்.
காலத்தைக் கைப்பிடித்து
கடந்து போகாதவர்களைக்
களைந்து விட்டுப்
போய்க்கொண்டிருக்கும் காலம்.
எங்கே போகிறது காலம்?
எது வரைப் போகிறது?
வரம்பற்ற இலக்கோடு
வரலாற்றின் சாட்சியாய்
வளர்கிறது காலம்.
No comments:
Post a Comment