நவீன விருட்சம்
17.8.10
தொண்டையின் துயரம்
எழுத்து : குமரி எஸ்.நீலகண்டன்..
உப்பில்லா உணவு
கொதிக்கிற தேனீரிலிருந்து
குளிர்ச்சியான ஐஸ் க்ரீம்
எதிர் வீட்டு பால் அப்பம்
எதிரி சுட்ட பணியாரம்
சந்த்ருவின்
பிறந்த நாள் கேக்
ஆஞ்சநேயரின்
வடைமாலையில்
பிரசாதமாய்
எஞ்சிய வடை என
எல்லா உணவு
பதார்த்தங்களையும் தொண்டை
அனுமதித்து விடுகிறது.
திடீரென
வயிற்றில் தள்ளு முள்ளு
கலவரம் அடிதடி என
நடக்கிற போது
வயிற்றிற்காக இரக்கம் காட்டி
கலவரக்காரர்களை
வாய் வழியாக
தண்ணீர் பீய்ச்சி
வெளியேற்றியும் விடுகிறது.
ஆனால் வினோதமாய்
ஒரு உறங்கும்
உண்மை மட்டும்
தொண்டைக்குள் முள்ளாய்
குத்திக் குத்திக் குதறுகிறது
வெளியேற இயலாமல்..
பொய் தவத்தில் புண்ணாய்
தொண்டை நாறிக்
கொண்டிருக்கிறது
பல நேரங்களில்
No comments:
Post a Comment