சூர்யப் பார்வை
குமரி எஸ். நீலகண்டன்

சூரியனைப் பார்த்து
நாய் வேகமாய்
குரைத்தது.
சூரியனைப் பார்த்து
ஒரு குயில்
மரத்திலிருந்து
கூவிக் கொண்டே இருந்தது.
சூரியனைப் பார்த்து
கடைக்காரன் கடையின்
விளக்குகளை அணைத்தான்.
சூரியனைப் பார்த்து
பெரியவர்
குடையை விரித்தார்.
சூரியனைப் பார்த்து
முடிசூடான்
தனது மொட்டைத் தலையில்
தொப்பியை வைத்தான்.
சூரியனைப் பார்த்து
கண்ணப்பன் கருப்புக்
கண்ணாடியை கௌரவமாய்
அணிந்தான்.
சூரியனைப் பார்த்து
கந்தன் கைக்குட்டையால்
தலைக்கு மகுடம்
சூட்டினான்.
சூரியனைப் பார்த்து
முனியம்மாள்
தலையை முந்தானையால்
மூடிக் கொண்டாள்.
சூரியனைப் பார்த்து
ஜூலியட் துப்பட்டாவால்
முகத்தையே
மூடிக் கொண்டாள்.
சூரியனைப் பார்த்து
பாட்டி வற்றலைக்
காய வைத்தாள்.
சூரியனைப் பார்த்து
ராமலக்ஷ்மி கேமராவைச்
சொடுக்கினார்.
சூரியனைப் பார்த்து
விவசாயி நெற்களை
நிலத்தில் பரத்தினான்.
சூரியனைப் பார்த்து
பூக்காரி பூக்களில்
தண்ணீரைத் தெளித்தாள்.
சூரியனைப் பார்த்து
மைதானத்தில்
சிறுவர்கள் விளையாட
களம் இறங்கினார்கள்.
சூரியனைப் பார்த்து
அந்தப் பெண்
சன்னல் திரையையும்
சன்னலையும் மூடிக்
கொண்டாள்.
சூரியனைப் பார்த்து
சன்னலோரத்திலிருந்த
ரயில்பயணி
கைத்துண்டால்
கண்களைக் கட்டி
இருளில்
நிலாவைப் பார்த்துக்
குளிர்ந்து கொண்டிருந்தான்.
சூரியனைப் பார்த்து
எங்கோ இன்னமும்
நாய் குரைத்துக்
கொண்டே இருந்தது.
பூனைக்குட்டியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
நிலாவை இதுவரைப்
பார்த்திராத பூனைக்குட்டி
திடீரென நிலாவைப்
பார்த்து பயந்தோடியது..
நிலா துரத்த துரத்த
பூனைக்குட்டி
இன்னும் வேகமாய்
ஓடிப் பின்னால்
மேலேப் பார்த்தது,.
நிலா ஒரு மேகத்துள்
மறைந்திருந்து நோட்டம்
விடுவது போல்
பூனைக்குத் தோன்றிற்று.
பூனை வேகமாய்
ஒரு புதரில் மறைந்து
நிலாவைப் பார்க்க
நிலா மீண்டும்
மேகக் குகையிலிருந்து
வெளியே வந்து துரத்த
பூனைக்குட்டி ஓடிஓடி
ஒரு வீட்டிற்குள்
நுழைந்தது.
சீறும் பூனைக்குட்டியைக்
கண்டு பயந்த
மூன்று வயது குழந்தை
ஓடிப்போய்
அம்மாவின் மடியில்
விழுந்து அழ
அம்மா நிலாவைக்
காட்டி குழந்தையை
சமாதானப் படுத்தினாள்...
நிலாதான் குழந்தையின்
அழுகையின் ஆரம்பமென
அறியாது...
தேடலின் எல்லைகள்
குமரி எஸ்.நீலகண்டன்
வலை வீசி
தேடிக் கொண்டே
இருக்கிறோம்.
தேடுவதைத் தவிர்த்து
வேறேல்லாம்
அகப்படுகின்றன.
அகப்படுபவையின்
அசுரக்கரங்களில்
அகப்படும் நாம்
அங்கிருந்து புதிதாய்
இன்னொன்றைத்
தேடிக் கொண்டே
இருக்கிறோம்.
புதிய சுரங்கங்களின்
புதையல்களில்
முகம் புதைத்து
புதை முகங்களின்
புதிய நகல்களைத்
தேடிக் கொண்டிருக்கிறோம்.
தேடலின் பாதையில்
தெரியாத இடங்களை
அடைகிறோம்.
வழியில்
திடீரென பாயும்
வெள்ளத்தின் வீச்சில்
எட்ட முடியாத
எல்லைகளில் சிக்கிய பின்
அதிலிருந்து மீள
தேடலின் ஆரம்பத்தையும்
தேடிக் கொண்டிருக்கிறோம்..
இறுதியில் எதைத்
தேடினோம் எதற்காகத்
தேடினோமென
எல்லாவற்றையும் மறந்து
தேடித் தேடி
தன்னைத் தேடிக்
கொண்டிருக்கிறோம்.
தூரிகையின் முத்தம்.
குமரி எஸ். நீலகண்டன்
எல்லா ஓவியங்களும்
அழகாகவே இருக்கின்றன.
வரைந்த தூரிகையின்
வலிமையும் பலஹீனமும்
நகைப்பும் திகைப்பும்
ஓவியமெங்கும்
பரவிக் கிடக்கின்றன.
பல இடங்களில்
தூரிகை தொட்டுச்
சென்றிருக்கிறது.
சில இடங்களில்
தூரிகை துள்ளிக்
குதித்திருக்கிறது.
சில இடங்களில்
தூரிகை எல்லை தாண்டி
நடந்திருக்கிறது.
இன்னும் சில இடங்களில்
தூரிகையின் கண்ணீர்
அது விழுந்த
இடத்தைச் சுற்றிலும்
கரைந்த மேகமாய்
மிதந்து நிற்கிறது.
தூரிகையின்
ஆயிரம் விரல்களின்
பேரிசை முழக்கம்
விழுந்த ஓவியத்தில்
எழுந்து கேட்கிறது.
எல்லா ஓவியங்களும்
அழகாகவே இருக்கின்றன.
மௌனத்தின் முகம்
குமரி எஸ். நீலகண்டன்
எப்போதும் மௌனமாய்
இருப்பதே உசிதமென
இருந்து விட்டேன்.
யாரிடமும் பேசுவதில்லை.
தவிர்க்க முடியாத
தருணங்களில்
ஓரிரு வார்த்தைகளை
தானமாய் விட்டெறிவேன்..
என் கண்களைக் கூட
பேசவிடாது
குனிந்து விடுவேன்.
வெளியே எல்லோரும்
நானிருக்குமிடம்
அமைதியின் உறைவிடமென
உற்சாகமாய்
சொல்லிச் சென்றார்கள்.
நாட்கள் செல்ல
செல்ல என் மௌன
முகத்தின் அகத்துள்
உச்சமாய் கூச்சல்..
சதா சலசலப்பும்
உச்சந்தலையை குத்தும்
உட்கலவரம்.
காதுகளற்ற
அகத்தின் முகத்துள்
கலவரக் காயங்கள்.
இரக்கமின்றி இன்னும்
இறுகி இருக்கிறது
வெளியே மௌனம்.
காற்றும் நானும்
குமரி எஸ். நீலகண்டன்
ஆழ்ந்த உறக்கத்தினிடையே
அடித்த காற்றில்
வெளியே பறந்த
தெருத்தூசுகளோடு
அடித்து கொண்டிருந்த
சன்னல் கதவின்
அகண்ட வெளிகளோடு
தொலைந்து போயிற்று
தூக்கமும்.
விழிகளை அடைத்து
இருண்ட வெளியில்
புரண்டு புரண்டு
காற்றோடு மிதந்து
போன தூக்கத்தை
இமைகளின் முடிகளால்
கட்டி இழுக்க எத்தனித்தேன்...
என்னையே இழுக்கிற
காற்றில் எதுவுமே
நடக்கவில்லை.
சுழலும் காற்று
சூழ்ந்த இரவில் பற்பல
பகற் கனவுகளோடு
புரளும் நான்...
பசுவும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
பௌர்ணமி இரவின்
பரந்த வெளியில்
கொட்டகைத் தொட்டியில்
கொட்டிய கழனியை
சப்பி சப்பி
குடித்தது பசு.
நிலா மிதந்த
கழனியை மென்று
மென்று சுவைத்தது.
மிகுந்த சுவையாய்
இருந்ததாய் சிலாகித்தது.
மெல்ல மெல்ல
வாய்க்கு பிடிபடாமல்
தொட்டியில் எஞ்சிய
கழனியிலேயே கொஞ்சி
விளையாடியது நிலா.
கன்று வாய் வைத்ததும்
காணாமல் நிலா போக
பசு கன்றைப்
பார்த்தது சந்தேகமாக...
மனவழிச் சாலை
குமரி எஸ். நீலகண்டன்
கவலைகள்
அவ்வப்போது கடுகாகவும்
கடுஞ்சீற்றத்துடனும் வரும்...
அதன் வருகையின்
அடையாளமாய் மனதில்
சிறு குழிகளும்
பெருங்குண்டுகளுமாய்
இருக்கும்...
எதிரே வருபவர்களெல்லாம்
அதில் தடுக்கி விழலாம்.
குழிகளையும் சாலையையும்
பொறுத்து காயங்களும்
ஏற்படலாம்.
மிகச் சிலரே அதில்
தண்ணீர் ஊற்றி
குழிகளை நிரப்பி
செடி வளர்த்து
அதில் ஒரு பூ
பூப்பது வரை கூடவே
இருந்து பராமரிப்பர்...
ஆனாலும் அவனுக்கு
அவன் மனதானது
எப்போதும்
அர்ப்ப ஆயுளுடன்
சீர் செய்யப் படுகிற
தார் சாலையாய்
குண்டும் குழியுமாய்.
ஈர வலி
கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில் குத்திய முள் காயம் பழுத்து அதில் சீழ் வடிந்தது. மனதை அரித்து கொண்டிருக்கும் வலியில் மற்ற வலிகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. மனது திசை தெரியாது சென்று கொண்டிருந்தது. அவன் கால்கள் ஊர் எல்லையைத் தாண்டி நடந்து கொண்டிருந்தன. அவன் செல்லும் திசை மனித நடமாட்டமே இல்லாத பகுதியாக இருந்தது. மழையோடு சேர்ந்து நீர் நிராகரித்த பகுதியானதால் அங்கு விவசாயமும் நடைபெறவில்லை. தாவரங்களும், தண்ணீரும் இல்லாததால் மேய்ச்சல் விலங்குகளைக் கூட அங்கு காண இயலாது. அங்கு நிறைவேற்றப் படாத ஒரு திட்டத்திற்காக வாங்கப் பட்ட பெரிய தண்ணீர் குழாய்கள் விரயமாக இடங்களை ஆக்ரமித்து கிடந்தன. அந்த குழாய்களில் ஒன்றினுள் விச்சு படுத்துக் கொண்டான். அவன் கன்னம் வழியாகப் பாய்ந்த கண்ணீர் அந்த தண்ணீர் குழாயினில் வடிந்து அது உண்டு சேமித்த வெப்பத்தின் வீரியத்தில் ஆவியாகி விட்டது. மனது புகைந்து கொண்டே இருந்தது.
விச்சு எதற்காக அழுகிறான். எப்போதும் அடிக்காத அம்மா அடித்துவிட்டாள். அதுவும் மிக கண்டிப்புடன். பொறுப்பில்லாதவன் என்றும் சொல்லிவிட்டாள். அந்த வார்த்தைகளின் வீரியம் மனதைக் கத்தியாய் அறுத்துக் கொண்டிருந்தது. பல மணி நேரங்கள் உணர்ச்சி பிழம்பாக அழுது அழுது , ஒருவித மயக்கத்தில் அந்த குழாயினுள் உறங்கிப் போனான் பத்து வயது விச்சு.
விச்சு படிக்கிறான். பக்கத்து அரசு பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான். இத்தோடு தினம் காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து ஒரு பூந்தோட்டத்தில் பூ பறிக்க வேண்டும். அவனோடு அந்த கிராமத்து குழந்தைகள் ஏழெட்டுபேர் பூ பறிக்கச் செல்வார்கள். இவர்கள் எல்லோரையும் காலை நான்கு மணிக்கே பத்திரமாக அழைத்துச் செல்வது பதினைந்து வயது லக்ஷ்மியின் பொறுப்பாக இருந்தது. விச்சுவின் அப்பா காச நோயில் இறந்து விட்டார். விச்சுவின் தங்கைக்கு நான்கு வயது இருக்கும். விச்சுவின் அம்மா கூலி வேலைக்குப் போவாள். விச்சு பூ பறிக்கச்செல்வது காசிற்காக அல்ல. தண்ணீருக்காகத் தான். அவர்கள் பறிக்கும் பூவின் அளவைப் பொறுத்து முதலாளி ஒன்றோ இரண்டோ குடங்கள் தண்ணீர் கொடுப்பார். அந்தப் பகுதியில் பல இடங்களில் ஆழ்நீர் குழாய்கள் அமைத்தும் நிலத்தடி நீர் இல்லாமல் இருந்தது. அந்தத் தோட்டத்தில் மட்டும் ஆழ்நீர் குழாயில் ஒரளவு தண்ணீர் வரவு இருந்தது.
அந்த தோட்டத்தின் உரிமையாளரும் பூ பறிப்பதற்கான கூலியினை தண்ணீரைக் கொடுத்தே கழித்து விடுவார். குழந்தைகள் காலையில் பூ பறித்துச் சென்றபின் பெற்றோர்களும் உறவினர்களும் குடங்களோடு வந்து கூலியாக தண்ணீரைப் பெற்றுச் செல்வார்கள். சில நேரங்களில் முதலாளி அவர்கள் பறித்த பூவின் அளவைக் குறைத்துச் சொல்லி தண்ணீரின் அளவைக் குறைத்து ஏமாற்றி விடுவதும் உண்டு. அதை எதிர்த்தால் கிடைக்கிற தண்ணீரும் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் பேசாமல் இருந்துவிடுவதும் உண்டு.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட இந்த பூ வயல் கிராமத்தில் தண்ணீருக்கு அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பக்கத்து நகரங்களில் வயல்களும் தோட்டங்களும் அடுக்குமாடி கட்டிடங்களாக மாற நகரங்கள் வளரவும் விரியவும் தொடங்கின. பெரும்பாலான நிலப்பகுதிகள் காங்கிரீட் சிறைகளுக்குள் முடங்கிக் கிடந்தன. கடந்த வருடங்களில் ஆயிரக் கணக்கில் உருவான ஆழ்நீர் குழாய்கள் நிலத்தின் ஈரத்தை முற்றிலும் உறிஞ்சிவிட, மழையும் பொய்த்துவிட பூ வயல் கிராமம் பொலிவிழந்து வறட்சியின் பிடியில் வாடிக் கிடந்தது. உலகத்தின் எண்பது சதவீதம் நீராய் இருந்தும் நீரின்றி வருந்துகிறது இந்த கிராமம்.
பூ வயல் கிராமம் கூட தற்போது கிராமத்தின் அடையாளங்களை இழந்துதான் வருகிறது. மலையினில் மழைநீரால் பாறைகள் உருட்டப்பட்டு, பல வடிவங்களில் செதுக்கப்பட்டு ஆங்காங்கு கிடக்கும் அழகிய கற்கள் மட்டுமே பூ வயலை கிராமமாக நினைவுப் படுத்தும். மற்றபடி காங்கிரீட் தளங்கள் இங்கும் பூமியின் இதயத்தை மூடத் துவங்கி விட்டன. காங்கிரீட் வீடுகளும் நிறைய வந்து விட்டன. தெருக்கள் சிமென்ட் தளங்களால் மூடப்பட்டு விட்டன. பல குடும்பங்கள் தண்ணீர் கஷ்டத்தால் ஊரைவிட்டு பல இடங்களுக்கு குடி பெயர்ந்து விட்டன. கொஞ்சம் ஏழை குடும்பங்கள் மட்டும் கடும் வறட்சியிலும் ஊரோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
பணத்திற்காக வேலை செய்வார்கள். ஆனால் தண்ணீருக்காக வேலை செய்ய வேண்டியக் கொடுமை இந்த ஊரில்தான். அதிலும் பிஞ்சு குழந்தைகளை பூ பறிக்க அனுப்புவது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது. அதி காலையில் பூ பறிக்க சென்றுவிட்டு பின் பள்ளிக்கும் செல்ல வேண்டும். வீட்டு பாடம் எழுத நேரம் இருக்காது. ஆசிரியரின் பிரம்பால் அடி வாங்க வேண்டி இருக்கும்.
விச்சு அன்று பூ பறிக்கும் போதுதான் கைகளில் வேலியின் முள் தைத்தது. நிறைய பூக்கள் பறித்திருந்தான். ரத்தம் குபீரெனக் கொட்டியது. கொஞ்சம் மண்ணை எடுத்து ரத்தத்தின் பாதையை அடைத்தான். ஆனால் பூக்களெல்லாம் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. பூக்கள் விரயமானதாக்க் கருதி அன்று அவர்களின் கூலியான தண்ணீர் வழங்கப் படவில்லை. ஆனால் மண்ணின் தாக்கத்தால் அவனது கைப்புண் பெரிதானது.
விச்சுவிற்கு இரக்க குணம் அதிகம். சில நேரங்களில் காகங்கள் தாகத்தில் தண்ணீர் குழாயின் வாயைக் கொத்தி கொத்தி பார்க்கும். விச்சு உடனே தான் உழைத்து பிடித்த நீரை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்து அந்த காகத்திற்கு கொண்டு வைப்பான்.
அன்று விச்சுவின் பக்கத்து வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தது. விச்சுவின் அம்மா கூலி வேலைக்காக பக்கத்து ஊருக்குச் சென்றிருந்தாள். விச்சுவும் தங்கையும் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். அந்த இறந்து போன பக்கத்து வீட்டு தாத்தா விச்சுவை தூக்கி பல தடவை கொஞ்சி இருக்கிறார். பெண்களுக்கிடையே ஏற்பட்ட மன வேறுபாடால் இரு வீட்டுக்காரர்களும் இப்போது பேசுவதில்லை. பக்கத்து வீட்டு தாத்தாவின் இறுதி யாத்திரை தயாராகி கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சலசலப்பு. அந்த சலசலப்பு இரு பிரிவினருக்கிடையே சண்டையாக உருவெடுத்தது. சண்டைக்கு காரணம் தண்ணீர். ஒரு சாரார் தாத்தாவை குளிப்பாட்டி இறுதிசடங்குகள் செய்ய வேண்டுமெனவும், இன்னொரு சாரார் எரிக்கும் பிணம்தானே குளிப்பாட்டத் தேவையில்லை எனக் கூற சண்டை வலுத்தது. ஒரு சாரார் பக்கத்து ஊரிலிருந்து தண்ணீர் கொண்டுவந்த பின் சடங்குகளைச் செய்யலாம் என்றனர். எதிரணியினர் நேரமாகிவிட்டதெனக் கூறி சடங்கினை முடிக்கக் கூறினர். வாக்கு வாதம் பெரும் சண்டையாக வலுத்தது.
இதையெல்லாம் கேட்ட விச்சு நேராக சண்டையிடும் கும்பலின் இடையே புகுந்தான். 'மாமா! எங்க வீட்டிலே தண்ணி இருக்கு! எடுத்துக்குங்க!' என்றான். சண்டை ஒரு முடிவிற்கு வந்தது. விச்சுவின் வீட்டு தண்ணீரில் தாத்தா குளிப்பாட்டப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தன.
வேலை முடிந்து வந்தாள் அம்மா. கஞ்சி வைப்பதற்காக அரிசியும் கொஞ்சம் காய்கறிகளும் அவள் கையில் இருந்தன. வீட்டிற்கு வந்ததும் பக்கத்தில் சண்டைக்காரி வீட்டு மரணமும், அங்கு ஏற்பட்ட குழப்பங்களையும் அறிந்தாள். விச்சு வீட்டுத் தண்ணீரை அவர்களுக்கு கொடுத்ததை அறிந்ததும் பூகம்பமானாள். விச்சுவின் முதுகினில் ஓங்கி அடித்தாள்.
' சீ! பொறுப்பில்லாத நாயே!' என்றாள். விச்சு ஏற்கனவே பசியில் துடித்துக் கொண்டிருந்தான். அம்மா வந்த பின் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தான். ஆனால் அம்மாவின் கோபமும் அடியும்தான் அவனுக்கு கிடைத்தது. பக்கத்து வீட்டுக்காரியின் மீதிருந்த விரோதத்தையெல்லாம் விச்சுவிடம் தீர்த்தாள். விச்சு வருத்தத்தில் விறு விறுவென்று வீட்டை விட்டு நடந்துவிட்டான். அவள் வேலை செய்த இடத்திலிருந்து கொண்டு வந்த ஒரு பழம் மட்டும் மகளின் பசியைத் தீர்த்தது. சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் வந்த களைப்பிலும் வருத்தத்திலும் மகளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள்.
தண்ணீர் குழாயில் அரை மயக்கத்தில் உறங்கி கிடந்த விச்சுவின் சிந்தனையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் தண்ணீர்தான். ஒரு தடவை பக்கத்து நகரத்திற்கு அம்மாவோடு சென்றது அவனின் நினைவில் வந்தது. அங்கு ஒரு பொது நீர் குழாய் திறந்திருந்ததும் நீர் விரயமாக தெருவில் வடிந்தோடியதையும் அம்மா அந்த குழாயை அடைத்ததையும் எண்ணி அழுதான். ஹோட்டலில் கை கழுவும் குழாயில் தண்ணீர் விரயமாக ஓடிக் கொண்டிருந்த்தை எண்ணி இப்போது அழுதான். பூமியெங்கும் காங்கிரீட் தளங்களால் மூடியதால் மழைத்தண்ணீர் கடல் நீரில் வடிந்து விடுவதால் பூமித்தாயின் இதயம் வறண்டு போய் இருக்கின்றது என்று அவனுடைய ஆசிரியர் கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது. .
முதுகில் ஏதோ ஒன்று ஊர்வதுபோல் இருந்தது. திரும்பி பார்த்தான். பெரிய பூரான். பயந்து எழுந்தான். பசி வயிற்றை பிய்த்தது. தண்ணீர் தாகம் வேறு. அடுத்த நாள் ஆகி இருந்தது. அம்மாவையும் தங்கையையும் எண்ணி பார்த்தான். அம்மாவும் தங்கையும் சாப்பிட்டிருப்பார்களாயென கவலையாக இருந்தது. வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான். அதற்குள் விச்சுவைக் காணவில்லையென்று ஊரே அல்லோகலப்பட்டது.
அம்மாவும் தங்கையும் அழுது புலம்பினார்கள். அம்மாவின் அழுகை விச்சுவிற்கு அருகில் கேட்டது. அழுதுகொண்டே வேகமாக கால்களை எட்டினான். ஒரு கோணிப் பையின் மேல் கால்களை வைத்தான். அவன் அம்மா எட்டும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அவளின் முன்பே அந்த நூறு அடி குழியினுள் புதைந்து கொண்டிருந்தான். அது ஆழ் குழாய் நீருக்காக போடப்பட்ட குழி. "ஐயோ! என் பிள்ளை! என் பிள்ளை!' எனக் கத்தினாள்.
அந்த குழியைச் சுற்றி ஊரே திரண்டது. விச்சுவைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூறினார்கள். ஊரின் கதறல் விச்சுவிற்கு கேட்டது. பசி, மயக்கம், உடலில் ஏற்பட்ட பயங்கரமான சிராய்ப்பு காயங்கள், உடலை சுதந்திரமாக உதறிக்கூட சாக இயலாத அளவிற்கு சுற்றி இருக்கும் மண்ணின் இறுக்கம் என எல்லா வலிகளையும் விட அம்மா தன்னை பொறுப்பில்லாதவன் எனக் கூறிய வார்த்தைகள்தான் அவனுக்கு இன்னும் வலித்தது. அவனது கண்ணீரும் ரத்தமும் அந்த பூமிக்குள் சில துளி அளவிற்கு ஈரப்படுத்திக் கொண்டிருந்தன.
கண்ணீரின் புனிதம்
குமரி எஸ். நீலகண்டன்
உப்பெல்லாம் கண்ணீரில்
கரைந்து விடுவதால்
உணர்வுகளும் கண்ணீரோடு
கரைந்து விடுமாவெனத்
தெரியவில்லை.
கன்னத்தில் சொட்டுகிற
கண்ணீர் சுத்தமானதா
அசுத்தம் கலந்ததாவென
அறிய இயலவில்லை.
தோண்டி விட்டார்களா
ஊற்றாய் ஊறி
வந்ததாவெனவும்
தெரியவில்லை.
ஆனால் அனுதாப
அலைகளால்
அனைவரையும்
சுனாமியாய் அபகரிக்க
இயல்கிறது சில துளி
சொட்டும் கண்ணீரால்.
இது மருமக்கள் சாம்ராஜ்யம்
குமரி எஸ். நீலகண்டன்

''அம்மா தர்மம்.....''- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்தது. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் 'அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு' எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே அந்தச் சோறும், கூட்டும் அந்தப் பிச்சைக்காரனின் உடலினுள் தெம்பை ஏற்றி அவன் பேச்சுக்கு ஒரு புது சக்தி கொடுத்தது. ''மகராசியா வாழணும்மா''- அவளுடைய வாழ்க்கையே இவன் நாக்கில் இருப்பது போல்தான் வாழ்த்தும் கூறி விட்டான்.
அங்கங்கே சில முணுமுணுப்புகள், ''கண்டவன் காசு கரிக் கட்டையாய் போகுது'' என்று, அக்கம் பக்கத்தார் சொல்லும் அளவுக்கு அது என்ன கண்டவன் சொத்தா? அவளது கணவன் சொத்தில் தானே வாரி வழங்குகிறாள்?
இப்படி நீங்கள் அந்தக் காலத்தில் நினைத்திருந்தால் அப்போதைய சட்டப்படி தவறுதான். இசக்கி அம்மாள் ஊரிலுள்ள அனைவருக்குமே அபிமானி. சிலருக்கு அவள் பாரியின் பரம்பரை, ஆனால் அவளது ஒரே ஒரு எதிரி கணவன் சண்முகப்பிள்ளையின் அக்கா மகன். அதாவது மருமகன் பதினான்கு வயது ரெங்கம் பிள்ளைதான். அவன் சண்முகம் பிள்ளையின் ஐம்பது ஏக்கர் நிலத்திற்கும் அடர்த்தியான தோப்பு ,வீடு யாவற்றிற்கும் வாரிசு ஆயிற்றே, ரெங்கம் பிள்ளை என்ற பெயருடைய எந்தக் குழந்தையையும் கழுத்தை நெரித்துவிடத் தோன்றும் அவளுக்கு. அத்தகைய உணர்ச்சியை அவன் அவளது மனத்தில் ஊன்றிவிட்டான். அவள் நெற்றியெல்லாம் ''சுரீர்! சுரீர்!'' எனக் குத்தியது. சண்முகம் பிள்ளை நேற்று அவளது முடியைப் பிடித்து அடித்த அடிதான் இன்று அவளின் தலைவலிக்குக் காரணம். நாலு நாட்களுக்குப் பின்னால் நேற்றுதான் ரெங்கம் பிள்ளை மாமாவைப் பார்க்க வந்தான். தன் மருமகனைக் கண்டதுமே சண்முகம் பிள்ளை தலை கீழாய்த் துள்ளிக குதிப்பார். அவன் செய்யும் அசட்டையான காரியங்களையும் அசாத்தியமாகப் புகழ்வார். அப்படியிருக்க அவன் செய்யும் சிறிது பயனுள்ள காரியங்களுக்கு மகுடமே சூட்டி விடுவார். ஆனால் தன் சொந்த மகளைக் கண்டும் காணாமலும் வளர்த்து வந்தார்.
''ஏ இசக்கி! வயல்லே தண்ணி நிக்காண்ணு பார்த்துக் கிட்டு வர்றேன். மருமகப் பய வந்திருக்காமுல்லா! மொச்சைக் கொட்டையும் கடலைத் தீயலுமுன்னா அவனுக்கு உசிரு. பய மூக்கு முட்டச் சாப்பிடுவான். மொச்சைக் கொட்டைக் கடலைத் தீயலும், பயறுத் தொவையலும், முட்டையும் , முருங்கைக்காய் அவியலும் முக்கியம். கூட ரெண்டு மூணு வை!'', என இசக்கி அம்மாளிடம் கட்டளை இட்டு விடடு வயலுக்குச் சென்று விட்டார் மாமா.
கணவனின் கட்டளையில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது! பின்வாசலில் கழுவ இட்டிருந்த எச்சில் தட்டத்தை எடுத்தாள். முந்தைய நாள் பழைய கஞ்சியைத் தட்டு நிறைய விட்டாள். காளான் பூத்த அந்தக் கஞ்சியின் புளிச்ச வாடை உடலைக் குமட்டியது. சிறிது உப்பை அள்ளிப் போட்டு, ஒரு நார்த்தங்காத் துண்டையும் இட்டுத் திண்ணுலே'' என மருமகனுக்குக் கட்டளை இட்டாள்.
அத்தையின் அமர்க்களத்தில் அத்தனையும் தின்று விட்டான். பின் அத்தையைக் காணாது தோட்டம் சென்று வாந்தியாகக் கொப்பளித்தும் விட்டான். மாமா மட்டும் அறிந்தால் இன்று அத்தையின் இடத்தில் அடுத்தவள் இருப்பாள்.
ரெங்கம் பிள்ளைக்குப் பசி வயிற்றைப் பிய்த்து எடுத்தது. ஆத்திரமாய் ஆற்றங்கரைக்கு ஓடினான். அரை அடி ஆழத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடந்தான். மாமாவின் தோப்பிற்குள் நுழைந்து தென்னை மரத்தில் ஏறிப்பத்துப் பதினைந்து இளநீரையும், விளையாத தேங்காய்களையும் பறித்து எறிந்தான். ஒரு ஓலையில் தேங்காய்களைக் கட்டி ஈஞ்சப் படப்பில் பத்திரமாக வைத்தான். ஆற்றங்கரையில் ஓலைக் குடிசையில் இருக்கும் இட்லியாச்சியிடம் சென்றான்.
''யாச்சி! கோரங்கால்லே கொஞ்சம் தேங்காயைப்பறிச்சுப் போட்டிருக்கேன். கொஞ்சம் கழிச்சு வருவேன். தேங்காயும், நெய்யும் நெறைய விட்டுத் தோசை சுட்டு வச்சிரு, என்னா?
கிழவிக்குப் பலத்த சந்தோஷம், ருசியுடன் சுட்டுக் கொடுக்கப் போகும் நான்கு தோசைகளுக்காகக் கிடைக்கப் போகும் பதினைந்து தேங்காய்களை எண்ணி, ஒத்தைப் பல்லிலும் அமர்க்களமாய்ச் சிரித்தாள்.
சண்முகம் பிள்ளை வயலுக்குச் சென்றால் குறைந்தது நான்குமணி நேரமாவது ஆகும் என இசக்கி அம்மாளுக்குத் தெரியும். சண்முகம் பிள்ளையின் கட்டளைப்படி தீயல் குழம்பும், பல வகையறாக்களும் வைத்து, தாயும், மகனும் மட்டும் சட்டமாகச் சாப்பிட்டார்கள். சண்முகம் பிள்ளைக்காகச் சாப்பாட்டையும், கூட்டு இருந்த தூக்கு வாளியையும் தனியாக எடுத்து, கைக்கு எட்டாத உயரமான கருப்பட்டி பந்தயத்தின் மேல் வைத்தாள். தெருவில் வாயாடி பண்ணிய இருவர் பேச்சில் ஈயாடிப் போனதிலிருந்து தன் பண்ணையார் கணவரின் வருகையை உணர்ந்தாள். வந்ததும் வராததுமாக, ''பய சாப்பிட்டானா?'' என ஒரு கேள்வி கேட்டார்.
''நீங்க வருகுது வரை அவனைக் காக்க வைப்பேனா. அப்பதே அவன் மூக்கு முட்ட அடிச்சாச்சு'' சமாளித்தாள்?
'' லே! தீயக்குழம்பு எப்படிலே'' மாமா கேட்டார்.
''படு ஷோரு மாமா''- நம்மால் வீட்டில் குழப்பம் எதற்கு? என சமாளித்தான். பசி குடலைப் புரட்டியது. இட்லியாச்சி ருசியாக நெய் தோசைச் சுடடு வைத்திருப்பாள். மாமாவைக் காணாது இட்லியாச்சி வீட்டிற்குச் செல்ல நினைத்தான். அப்போது மாமாவின் வார்த்தை தலையில் இடி இடித்தது போல் இருந்தது.
''லே! ஆற்றிலே தண்ணி துறந்து விட்டிருக்காம்லே! ஆத்துப் பக்கம் போகாதே!''
இட்லியாச்சியைப் பார்க்கணும்ண்ணா ஆற்றைக் கடக்கணுமே! வயிறு குமட்டிக் கொண்டிருந்தது. ஆத்திரத்தில் அவனுக்கு ஒரே வழி தான் தெரிந்தது. அடுக்களையைப் பார்த்தான். அத்தையைக் காணவில்லை, மேல் பலகை மீது ஏணியைச் சாய்த்தான். ஒவ்வொரு கம்புப படிகளிலும் கவனமாகக் காலூன்றி ஏறினான். தீயக்குழம்பையும் சோற்றையும் எடுத்தான். ஏணி சறுக, பானை உடைய டமார்.....டமார்.....என்ன சத்தம்?......என்ன சத்தம்?......
மாமாவின் கேள்விக்கு விடை தோன்றி விஷயத்தை அம்பலப்படுத்த, அத்தையின் தலைமுடி மாமாவின் கையில், ''உலுக் உலுக்கெனக்'' குலுக்கிய குலுக்கலில்தான் அத்தைக்கு இன்று தலைவலி. ''புள்ளே! என் சொத்துக்குக் காரணவஸ்தனுக்கா இப்படித் துரோகம் பண்ணினே!'' எனக் கூறி அத்தையின் உடம்பை மத்தளமாய் அடித்தார்.
மாமாவுக்கு அன்று ரொம்ப சீரியஸ், உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. எலும்பு புடைக்க 'நரைமுடி' சிலிர்த்திருந்தது. ஆனாலும் அவரது மீசை எலுமிச்சைப் பழத்தைக் குத்தி வைக்கும் அளவிற்குக் கூராக இருந்தது. இடை இடையே ''ரெங்கா! ரெங்கா!;;- என உறுமிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் மாமாவின் உடம்பைப் பார்த்து விட்டு ''முகத்திலே சாவுக்குள்ள ஐசுவரியம் வந்தாச்சு! ஒரு வாரம் தேறாது!'' எனச் சொல்லி விட்டார். இதுதான் சமயமென இசக்கி அம்மாள் மருமகனைப் பற்றி நன்றாக 'கோள்' மூட்டினாள். விரல்களைத் தன் கண்களில் குத்திக் கண்ணீரைச் சுரக்க வைத்தாள். எப்படியும் சொத்து சட்டப்படி அவளுக்கு கிடைக்கப் போவதில்லை. எனினும் எப்படியாவது அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையாவது அபகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டாள்.
''ஆனாலும் இந்தப் பய என்னைப் பார்க்க வரல்லியே இசக்கி!''- மாமா.
''ஆமா! எத்தனை பேர் கிட்டே சொல்லி விட்டாச்சு! பாசம் இருந்தாத்தானே''-இசக்கி
''ஆமா! இந்தப் பயலுக்கு ஒரு காசு கொடுக்கக் கூடாது. ஏ இசக்கி, எனக்கு உறைப்பா ஏதாவது திங்கணும்ண்ணு இருக்கு! பாஞ்சாலியம்ம வீட்டில் போய்க் கொஞ்சம் கருக்கலிட்ட நெல்லிக்காய் வாங்கி வாயேன்! அவளோட கைராசி ரெம்ப ருசியா இருக்கும்''.
இசக்கிக்குத் தெரியாமல் சேமித்து வைத்த பணம் தலையில் பொட்டலமாய் இருந்தது. பாஞ்சாலியம்ம வீட்டிற்கு இசக்கி சென்று வர, கால்மணி நேரமாவது ஆகும். அதற்குள் அங்கிருந்த கம்பௌண்டரிடம் மருமகனைக் கூப்பிடச் சொல்லி அனுப்பினார். மருமகனும் பாசத்தோடு ஓடிவந்தான். அதற்குள் இசக்கியும் வந்து விட்டாள்.
மாமா அவசர அவசரமாக ''லேய்! என்னை நீ பார்க்க வரல்லியே! என் சொத்து மட்டும் உனக்குப் போரும் என்னா? ஒளிஞ்சி போ'' எனக் கோபத்தில் திட்டுவது போல் பணப் பொட்டலத்தைக் காரியமாக அவனிடம் எறிந்தார். தன் பொறுப்பு முடிந்த திருப்தியில் மாமா கண்களை மூடிக் கொண்டார்.
ரெங்கன் ''மாமா'' எனக் கதறினான். கணவனென்ற உறவு தூரப்பட்டது போல் ஏமாற்றத்தில் சண்முகம் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இசக்கி.
குறிப்பு - திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரச குடும்பத்தில் ஆட்சிக்கு உரிமையுடையவர் மருமகன் முறையில் வருபவரே என்பது வரலாறு. அதே வழியில் திருவிதாங்கூரில் சில சாதியினரிடமும் தந்தையின் சொத்து மருமகனுக்குச் செல்ல வேண்டுமென்ற நியதி இருந்தது.