Showing posts with label பூனை. Show all posts
Showing posts with label பூனை. Show all posts

Friday, July 22, 2011

பூனைக் குட்டியும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பூனைக்குட்டியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

நிலாவை இதுவரைப்
பார்த்திராத பூனைக்குட்டி
திடீரென நிலாவைப்
பார்த்து பயந்தோடியது..

நிலா துரத்த துரத்த
பூனைக்குட்டி
இன்னும் வேகமாய்
ஓடிப் பின்னால்
மேலேப் பார்த்தது,.

நிலா ஒரு மேகத்துள்
மறைந்திருந்து நோட்டம்
விடுவது போல்
பூனைக்குத் தோன்றிற்று.

பூனை வேகமாய்
ஒரு புதரில் மறைந்து
நிலாவைப் பார்க்க
நிலா மீண்டும்
மேகக் குகையிலிருந்து
வெளியே வந்து துரத்த
பூனைக்குட்டி ஓடிஓடி
ஒரு வீட்டிற்குள்
நுழைந்தது.

சீறும் பூனைக்குட்டியைக்
கண்டு பயந்த
மூன்று வயது குழந்தை
ஓடிப்போய்
அம்மாவின் மடியில்
விழுந்து அழ
அம்மா நிலாவைக்
காட்டி குழந்தையை
சமாதானப் படுத்தினாள்...
நிலாதான் குழந்தையின்
அழுகையின் ஆரம்பமென
அறியாது...

Tuesday, August 10, 2010

பூனைக் காவல், மீனுவும் பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதைகள்

19.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் 21

பூனைக் காவல்

குமரி எஸ்.நீலகண்டன்

என்னை அறியாமலேயே
என்னுள்
ஏழெட்டுப் பூனைகள்
உலாவிக் கொண்டிருக்கின்றன.

எலியைக் கண்டதும்
எட்டிப் பாய்ந்தது
அந்தக் கருப்புப் பூனை.
பாலைக் கண்டு
பதுங்கி வந்தது
அந்த பரம
சாதுப் பூனை.
உருட்டுக் கண்களுடன்
உற்றுப் பார்த்தது
அந்த உளவுப் பூனை
என்னுள் எங்கோ
உறு உறுவென்று
உறுமிக் கொண்டே
ஒளிந்திருக்கிறது
இன்னொரு பூனை

என் மீசையை
தன் மீசையாக்கிக்
கொள்கிறது அந்த
தளர்ந்த பூனை
குதித்து குதித்து
குதூகலித்து
கும்மாளமிடுகின்றன
இன்னும் சில
குட்டிப் பூனைகள்
நான் கோபத்தில்
பதுங்கி பதுங்கிப்
பாய்கையில் யாரும்
என்னைக் கண்டு
பயப்படாமல்
காவல் காக்கின்றன
இந்த பூனைகள்
திருட்டு விழிகளுடன்

13.4.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20





மீனுவும் பூனையும்
குமரி எஸ்.நீலகண்டன்
மீனு அவளது அம்மாவிடம்
அநியாயத்திற்கு
கோபப்படுவாள்.
அம்மாவைப் பற்றியே
அம்மாவைப்
பிடிக்காதவர்களிடம்
ஆயிரம் குசும்பு
சொல்லி இருக்கிறாள்

கணவன் ஏதாவது
சொன்னால் பாம்பாய்
படமெடுப்பாள்
மாமியாரிடம்
மணிக் கணக்கில்
சண்டை போடுவாள்

அவளை யாரும்
குத்தம் சொன்னால்
கொத்துகிற பாம்பாய்
விஷத்தை பீய்ச்சுவாள்

ஆனால் மீனு அவளது
பூனையுடன் மட்டும்
மிகுந்த அன்பு காட்டுவாள்.
அதற்கு நேரம் தவறாமல்
பால் கொடுப்பாள்
அதன் பஞ்சு போன்ற
முதுகைத் தடவிக்
கொடுப்பாள். அதனை
ஷாம்பு போட்டு
நாள் தவறாமல்
குளிப்பாட்டுவாள்.

பூனையோடு கொஞ்சியும்
விளையாடுவாள் பூனையின்
காலில் ஏற்பட்ட
சிறிய காயத்திற்காக
அண்டை அயலாரிடம்
ஐயோ பாவம்
ஐயோ பாவமென
துக்கித்து துவண்டு
போனாள்.

எல்லோரும்
அந்த பூனையை
பதுங்கி பதுங்கி
ஒரு திருட்டுப் பார்வையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும் - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

30.5.10


பூனைகள்...........பூனைகள்................பூனைகள்......25





அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும்
அரசியல்வாதி
ஒரு பூனை வளர்த்தார்
அன்றாடம் பாலுடன்
அனுசரணையாய்
வளர்க்கப் பட்டது
அந்தப் பூனை
அவர் மடியில் கிடந்து
மாமிசம் சாப்பிட்ட
பூனை அது.

அரசியல்வாதி
எம். எல். ஏ ஆனார்.
எம். பி ஆனார்.
மத்திய மந்திரியும் ஆனார்
பூனைக் காவல்படையுடன்
சுற்றும் அவர் அருகே
இன்று அந்த பூனையால்
அண்ட இயலவில்லை

அரசியல்வாதியின் மனைவியாய்
நெடுங்காலம் இருந்த பின்
ஒரே நாளில் திடீரென
முதல் மனைவியாய்
பதவி உயர்வு பெற்ற
அந்தப் பெண்ணின்
சமையல் அடுப்பில்
தூங்குகிறது
இன்று அந்த பூனை


குமரி எஸ்.நீலகண்டன்..

ஆறுதல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

30.3.10


பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......20




ஆறுதல்

விடுமுறையில்
குழந்தைகளுடன் மனைவி
ஊருக்குச் சென்றுவிட்டாள்
குழந்தையின் பூனைக்கத்தல்,
அவனின் சிரிப்பு,
குறும்பு, குதூகலங்களின்
பின்னணியில்
மிக்ஸியின் காட்டுப் பிளிறல்
சமையலறையில்
பாத்திரங்கள் உருள்கிற
விழுகிற
பின்வாசலில்
வாளிகள் மோதுகிற
சப்தம் எதுவுமின்றி
குக்கர் விசில்,
குழாயில் தண்ணீர்
விழும் சப்தம், என
ஏதுமின்றி ஒரே நிசப்தம்.
தனிமையில் அவன்.
உயிர்களற்ற உலகில்
அவன் மட்டும்
தனிமையில்
உலவுவது போல்
ஒரு உணர்வு அவனுள்.
என்னவோ போல்
இருந்தது.
சமையலறையில் திடீரென
பாத்திரங்கள்
உருளும் சப்தம்.
அதிர்ச்சியில் அங்கே
சென்று பார்த்தான்
ஒரே ஆறுதல்.
சமையலறையில்
பதுங்கி வந்தன
எதிர் வீட்டுப் பூனை
அதன் குட்டிகளுடன்.

திருட்டுப் பூனை - நவீன விருட்சத்தில் வெளியானக் கவிதை

பூனைகள் பூனைகள் பூனைகள் 22


திருட்டுப் பூனை

எல்லோருக்கும் உரியது
எல்லாம் என்று
எண்ணி இயங்குகிற
பூனைக்கு கிட்டியப் பெயர்
திருட்டுப் பூனை.

திருடாத பூனைக்கும்
உண்டு இப்பட்டம்.
இன்னொரு இனத்தால்
இடப் பட்ட
ஈனப் பெயர்.

இரையாகிற
எலிகள் கூட
நம்புகிறபோது
இவர்களுக்கு மட்டும்
திருட்டுப் பூனை.

கட்சித்தொண்டனாய்
தீக் குளித்தும்
காட்ட முடியாது அதற்கு
அதன் விசுவாசத்தை.

பாவம் விசுவாச அரிதாரம்
பூசத் தெரியாத
விழிகளுடன்
பதுங்கி பதுங்கி வாழும்
பரம சாதுவாய்
திருட்டுப் பூனை