Monday, December 20, 2010

தொலைவின் தூரம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

தொலைவின் தூரம்
குமரி எஸ். நீலகண்டன்



அவனின்
கொல்லும் கோபம்
பிடிக்காமல் அங்கிருந்து
விலகினேன்

அங்கும்
இன்னொருவனின் பொய்
என்னை பொசுக்க
அங்கிருந்தும் விலகினேன்

வந்த இடத்தில்
அங்கொரு
பொறாமைப் பேய்
அச்சுறுத்த
விரைந்து விலகினேன்

சிறிதேத் தொலைவில்
இன்னொருவனின்
சுயநலம்
என்னை அங்கே
அண்டவிடவில்லை

அந்த இடமும்
எனக்கு பாதுகாப்பற்ற
பகுதியாய் உணர்த்தியதால்
அங்கிருந்தும் விலகினேன்

சுற்றிச் சுற்றி
இடைவெளிகள்
விரிந்தாலும் போலிகளும்
அதன் கூலிகளும்
கும்மாளமிட
இன்னும் தொலைவில்
விலகிக் கொண்டே
இருந்தேன்

இன்னும் விலகி விலகி
எல்லையற்ற ஒரு வெளியில்
ஒரு புல்லாய்
நடுங்கி இருந்தேன்

அந்த இடத்தில்
என்னைச் சுற்றி
வெட்ட வெளி.
பொய்யர்கள், சுயநலவாதிகள்
பொறாமைக்காரர்கள்
அகங்காரிகளென
ஏதுமற்ற ஒரு சூன்ய வெளியில்
சூன்யமாகவே இருந்தேன்

உயிரற்ற ஒரு வெளியில்
வெறும் புல்லாக
நான் இருக்க
வந்த வழியறியாது
மந்தமாய் நின்றேன்

சுற்றுமுற்றும் பார்த்தேன்
இந்த நிசப்த வெளியில்
தொலைவில் ஒரு
காய்ந்த பட்டமரம்
என்னருகே வந்து நில் 
என என்னை
அழைத்ததுபோல்
இருந்தது.

No comments: